18 August 2008

விவசாயம்

ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

மரங்கள் நடக்கின்றன

உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!

தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...

“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.

அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.

மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.

திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்கசாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.

இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.

நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.

எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.

விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.

மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன்றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட்டை பிடித்து விற்றுவிடுவேன். என்னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”

விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த 'மண்வாசனை' (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில் சந்தித்தேன். மூன்று இலவச இதழ்களுக்குப் பிறகு மண்வாசனை நின்றுவிட்டது.)

நன்றி: மரம் தங்கசாமி படம் - நல்லது நடக்கட்டும் வலைப்பூ.

08 August 2008

ஆல்பம்


பாதல் சர்க்கார் பயிற்சிப் பட்டறை


01.09.1980ஆம் நாள் முதல் ஒன்பது நாள்கள் சென்னை சோழமண்டலக் கலைக் கிராமத்தில் பாதல் சர்க்காரால் நடத்தப்பட்ட வீதி நாடகப் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) அம்ஷன்குமார், (2) மனோகரன், (3) பரஞ்சோதி, (4) ரங்கராஜன், (5) கோவிந்தராஜ், (6) முருகேசன், (7) பழனிவேலன், (8) முத்துராமலிங்கம், (9) பூமணி, (10) அரவிந்தன், (11) சாமிநாதன், (12) ஆல்பர்ட், (13) மீனாட்சிசுந்தரம், (14) ஞாநி,(15) ராஜேந்திரன், (16) சந்திரன், (17) கார்வண்ணன்; உட்கார்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக): (1) பரமேஸ்வரன், (2) விவேகானந்தன், (3) அக்னிபுத்திரன், (4) கே.வி.ராமசாமி, (5) பாதல்சர்க்கார், (6) அந்தனிஜீவா, (7) செல்வராஜ், (8) சம்பந்தன், (9) கே.ஏ.குணசேகரன், (10) மு.ராமசுவாமி, (11) பாரவி, (12) பிரபஞ்சன்.

தகவல்: அரிஅரவேலன்

01 August 2008

சித்திர எழுத்து


எழுத்தாளர்கள் - ஓவியர்கள் கூட்டமைப்பு

ஆதிமூலத்தை முன்வைத்து


உலகப் பிரசித்திபெற்ற தமிழக ஓவியர்களில் ஒருவர் கே.எம். ஆதிமூலம். சென்றவருடம் கடைசியில் லண்டனைச் சேர்ந்த ஒரு பிரபல பதிப்பகம் ஆதிமுலம் பற்றி வெளியிட்ட புத்தகத்தின் மூலம், சர்வதேச ஓவிய சேகரிப்பாளர்கள் கவனம் ஆதிமுலம் பக்கம் திரும்பியது. அவரது குரல், அவரது படைப்புகளைப் போலவே கவனிக்கப்பட்டது. அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடியது. இந்திய அளவில் தனக்கு அங்கீகாரம் கிடைத்தபோது, அதனைப் பயன்படுத்தி தமிழக ஓவியர்களை முன்னிறுத்தியது போல், இப்பொழுது உலக அளவில் தமிழ ஓவியங்களுக்கு தனி அடையாளம் கிடைக்கச் செய்வார் என்னும் நம்பிக்கை தமிழகக் கலைத்துறையில் துளிர்விட்டது. இந்நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் நிகழ்ந்த அவரது இழப்பு, நமக்கு பேரிழப்பு! அடுத்த சில மாதங்களிலேயே, அவரது பெயரில் ஒரு போலி ஓவியத்தை வரைந்து, அதனை மிகப்பெரிய தொகைக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. இது நிச்சயம் படைப்பு - படைப்புரிமை – படைப்பாளிகள் உறவின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல். இதற்கு ஒரு கண்டனமாகவும் இதுபோல் தொடர்ந்து நடப்பவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி விவாதிக்கவும், சென்னை, அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்ட் அரங்கத்தில் ஒரு கூட்டம் இம்மாதம் 9ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஓவியர் ஆதிமூலம், தன் இறுதிகாலம் வரைக்கும் வலியுறுத்தி வந்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் கூட்டுச் செயல்பாட்டை மேலும் வளர்தெடுக்கும் நோக்கத்துடன் ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பும் இக்கூட்டத்தில் தொடங்கப்படுகிறது.

சங்கீதத்தில் ராஜரத்தினம் பிள்ளை, இலக்கியத்தில் பாரதியார் போல் உன்னதக் கலைஞர்கள் ஒரு கலாசாரத்தில் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் வருவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஓவிய உலகில் அப்படிப்பட்ட வருகை ஆதிமூலம். ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று உலகளவில் தமிழகத்தின் ஓவிய முகமாக உயர்ந்து நிற்கும் ஆதிமூலத்தின் கலைப்பயணம் நாம் பெருமைப்படக்கூடிய ஒன்று. திருச்சி அருகே, துறையூர் ஜமீன் ஆட்சிக்குட்டிருந்த கீரம்பூர் கிராமத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தார் ஆதிமூலம். விவசாயக் குடும்பங்களுக்கு படிப்பு ஒரு பொருட்டாகவே படாத காலகட்டம் அது. பித்தான்கள் இல்லாத சட்டையும் அரைஞான் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் டிரவுஷருமாக பள்ளிக்கூடம் போன பையன்களும் ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை. ஆதிமூலத்தின் பெற்றோர்களுக்கும் அவரைப் படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபூர்வம் போல், தானாகவே போய் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார் ஆதிமூலம். சுற்றிலும் உற்சாகப்படுத்தாத சூழல் இருந்த போதும், படிப்பில் அவருக்கு ஆர்வம் இருந்தது. வகுப்பில் அவர்தான் முதல் 'ரேங்க்'. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒன்றாம் வகுப்பு வாத்தியார் வரவில்லை என்றால் அன்றைக்கு இவர்தான் அந்த வகுப்புக்கு வாத்தியார் என்னும் அளவுக்கு பள்ளியில் ஆதிமூலம் பிரசித்தம். பள்ளிக்கூட நாட்களிலேயே தினமும் 'பிரேயர்' பாடல்கள் பாடுவது, நாடகங்களில் நடிப்பது, சிலேட்டில் படங்கள் போடுவது என ஆதிமூலத்துக்குள் இருந்த கலைமனம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

அந்தக் காலத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை 'ஃபெயில்' என்று எதுவும் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி.யில்தான் முதலில் வடிகட்டும் வேலைகள் ஆரம்பமாகும். ஆதிமூலத்தை அப்படி வடிகட்டி விட்டார்கள். இதனால், படிப்பு தடைபட்ட ஆதிமூலம், அடுத்த மூன்று வருடங்கள் அவரது மாமாவின் மளிகைக்கடையில் வேலை செய்தார். பிறகு, கமர்ஷியல் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்ய முடிவு செய்து சென்னை வந்து, ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது, ஒரு விளம்பரச் சுவரொட்டிப் போட்டியை அரசாங்கம் நடத்தியது. இதற்காக ஆதிமூலம் வரைந்த, மகாபலிபுரத்தில் பேன் பார்ப்பது போல் உட்கார்ந்திருக்கும் குரங்கு படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது; 5000 பிரதிகள் அச்சிட்டு தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அந்தப் படம் ஒட்டப்பட்டது; தொடர்ந்து நிறைய விருதுகள் என மாணவப் பருவத்திலேயே 'பிரபல ஓவியர்' ஆகிவிட்டார் ஆதிமூலம்.

ஆதிமூலத்தின் பூத உடலுக்கு முன்னால் நின்று ஓவியர் ராஜான், "ஆதி... ஆதி... ஆதி... பல விஷயங்களில் எங்களுக்கு வழிகாட்டியா இருந்தியேப்பா'' என்று கதறியதைப் போல, பலவற்றில் முன்னோடி ஓவியர் ஆதிமூலம். கே.சி.எஸ்.பணிக்கருடன் சேர்ந்து, சோழமண்டலம் ஓவியர்கள் கிராமத்தை உருவாக்கியதில் தொடங்கி, பத்திரிகைகளுக்கும் நவீன ஓவியத்துக்கும் இடையே ஒரு உறவுப் பாலத்தை அமைத்தது வரை எல்லாவற்றிலும் தமிழக ஓவியர்களுக்கு சிறந்த வழிகாட்டி ஆதிமூலம்தான். சின்ன வட்டமாக சில நண்பர்கள் இணைந்து கொண்டுவந்த 'கசடதபற்' சிறுபத்திரிகை குழுவில் ஆதிமூலம் முக்கியப் பங்காற்றினார். 'கசடதபற' நண்பர்களுக்கு பத்திரிகை அச்சிடுவதற்கான செலவை சமாளிப்பதே பெரிய விஷயம். எனவே, ஓவியங்கள் போடுவது, அதற்கான 'பிளாக் மேக்கிங்’குக்கு செலவு செய்வதெல்லாம் அவர்களால் இயலாத காரியம். இதனால், ஆதிமூலமே 'பிளாக் மேக்கிங்' செய்து ஒவ்வொரு சிறுபத்திரிகைகளுக்கும் கொடுப்பார். ஆதிமூலம் முதன் முதலில் செய்த புத்தக அட்டை ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பு. அக்காலகட்டத்தில் அது ஒரு புரட்சி. சிறுபத்திரிகைகள் மற்றும் புத்தக அட்டை வடிவமைப்பு மூலம், பழங்கால கல்வெட்டுகளின் பாதிப்புடன் உருவாக்கிய புதிய எழுத்துவகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, எழுத்தின் வரி வடிவத்தையே ஓர் ஓவிய அனுபவமாக்கினார் ஆதிமூலம். எழுபதுகளில் சிற்றிதழ்களின் பக்கங்களையும் புத்தகங்களையும் அலங்கரித்த இந்த எழுத்துக்கள் இன்று சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள், சினிமா தலைப்புகள் வரை பரந்து விரிந்திருக்கிறது.

அறிவுஜீவிகளுக்குத்தான் புரியும் என்றிருந்த நவீன ஓவியத்தை, தனது உயிரோட்டமான கோடுகள் மூலம் எல்லோரும் ரசித்து அனுபவிக்கும்படி செய்ததிலும் ஆதிமூலம்தான் முன்னோடி. 'ஜூனியர் விகடன்' இதழில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய 'கரிசல் காட்டுக் கடுதாசி' தொடருக்கு ஆதிமூலம் வரைந்த கோட்டுச் சித்திரங்கள் வாசகர்களின் நெஞ்சில் இன்றும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருப்பவை. வாரம்தோறும் அழகும் எளிமையும் மிளிரும் அவரது சித்திரங்கள் கி.ரா.வின் எழுத்துக்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்கின.

நேர்மையான கலை ஈடுபாடு, சமரசங்கள் இல்லாத உயிருள்ள கோடுகள், கவித்துவமான அழகியல் மொழி, மண்ணுடன் இணைந்த தமிழ் அடையாளம் என கோட்டோவியத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் ஆதிமூலம். உயிரும் உணர்வும் உள்ள நரம்புகள் போன்ற அவரது கோடுகள் தமிழர்களின் அடையாளமாகக் கொள்ளத்தக்கவை. ஆதிமூலத்தைப் பொருத்தவரைக்கும் ஓவியம் என்பது ஓர் அனுபவத்தை அல்லது காட்சியை சித்தரிக்கும் படமல்ல. அதுவே ஓர் அனுபவம். கிராமியக் கலைவடிவங்களும் சோழர்கால வார்ப்பு சிலைகளும் கண்ணாடி ஓவியங்களும் தேவாரமும் தெருக்கூத்தும் தமிழகத்தின் வாழ்பனுவங்களின் அடிப்படை இஸத்தை, இசையை, அழகை எவ்வாறு அழகுணர்வுடன் பகிர்ந்தனவோ அதைப் போலவே ஆதிமூலத்தின் ஓவியங்களும் ஆத்மார்த்தமான ஈடுப்பாட்டுடன் வெளிப்படுகிறது.

ஆதிமூலத்தின் காந்தி, மகாராஜா வரிசை கோட்டோவியங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் ஒருவரை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. 1969இல் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி ஆதிமூலம் வரைந்த காந்தி வரிசை ஓவியங்கள் இன்றும் உலகம் முழுக்க பேசப்படுகின்றன. ஒரு கோணத்தில் புத்தர், மற்றொரு கோணத்தில் இயேசு என பல முகங்களை நினைவுக்கு கொண்டு வருபவை இவரது காந்தி ஓவியங்கள். மிகக் குறைவான, எளிமையான கோடுகள் மூலம் காந்திஜியின் முதுமையின் தளர்வை தோற்றத்திலும் உள்ளக் கனிவையும் தாய்மையின் கரிசனத்தையும் உணர்விலும் தந்துவிடுகிறார் ஆதிமூலம். ஒரு வெற்றிப் பார்முலா கிடைத்தவுடன் அதிலேயே பயணம் செய்து சுருங்கிவிடும் கலைஞர்கள் போல் இல்லாமல், தொடர்ந்து தன்னைக் கலைத்துப் போட்டுக்கொண்டே புதிய புதிய தேடல்களுடன் நகர்ந்தவர் ஆதிமூலம். கோட்டோவியங்களின் தனித்துவமான வெற்றிக்குப் பிறகு, கோடுகளுடன் வண்ணங்களை இணைத்து புதிய முயற்சிக்குத் தாவினார். அதன் வெற்றிக்குப் பிறகு, அதை அப்படியே நிறுத்திவிட்டு கனவுலக சித்தரிப்புகள் போன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார். பிறகு அரூப வண்ண ஓவியங்கள் வரைந்தார். ஆரம்பகால கோட்டோவியங்கள் தொடங்கி, அரூப வண்ண ஓவியங்கள் வரைக்குமான ஆதிமூலத்தின் பயணம் இளம் தலைமுறை சித்திரக்காரர்களுக்கு ஒரு பாடம்.

1998 முதல் ரத்தப் புற்றுநோயால் தாக்கப்பட்ட ஆதிமூலம், சில நெருக்கமான நண்பர்கள் தவிர வேறு யாருக்கும் அந்தத் தகவலை கடைசிவரை சொல்லாமலே இருந்திருக்கிறார். மரணம் தன்னை நெருங்கிவிட்ட அனுதாபப் பார்வை தன் மீது விழுவதை அவர் விரும்பவில்லை. அது தன்னை மட்டுமின்றி, தன்னைச் சுற்றியும் உள்ளவர்கள் மகிழ்ச்சியைக் குலைத்துவிடும் என்று அவருக்குள்ளேயே போட்டு புதைத்துவிட்டார். ஆனால், புற்றுநோயால் அவரது உடல் உறுப்புகளைத்தான் வெற்றிகொள்ள முடிந்ததே தவிர அவரது தேடலையும் ஓவியம் வரையும் வேகத்தையும் குறைக்க முடியவில்லை. விடாத கடுமையான முயற்சிகள் மூலம் உலக பிரசித்திபெற்ற ஓவியராக ஆதிமூலம் அடையாளம் காணப்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான்.

சமூகத்தில், ஓவியர்களுக்கு மரியாதையும் அங்கிகாரமும் இல்லாத காலகட்டத்தில் தன் ஓவியப் பயணத்தை தொடங்கியவர் ஆதிமூலம். வறுமையும் நீண்ட நாள் தாடியுமே ஓவியர்களின் முகங்களாக இருந்த நாட்கள் அவை. ஓவியர் என்பதாலாயே பெண் கொடுக்க மறுத்ததால் பலமுறை அவரது திருமணம் தள்ளிப்போயிருக்கிறது. அந்தச் சூழ்நிலையை மாற்றி, ஓவியர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியதில் ஆதிமூலத்தின் பங்கு மிக அதிகம். இன்றும் கிராமங்களில் இருந்து கலைதாகத்துடன் சென்னைக்கு வண்டி ஏறும் இளம் ஓவியர்களுக்கு ஆதிமூலம் ஒரு லட்சியக் கனவுதான். ஒரு பேட்டியில், ''இளம் ஓவியர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?'' என்ற கேள்விக்கு ஆதிமூலம் சொல்கிறார்: ''வைராக்கியத்தோட செயல்படணும். வண்ணங்களைப் பார்த்தா அது பாம்பு மாதிரி சீறிகிட்டு வரணும். தன்னை உணர்ந்து, தன் பிறப்பை உணர்ந்து ஒரு ஓவியனாக வேண்டும் என்ற லட்சியத்தில் வாழணும். எனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க; அவங்களைக் கட்டுக்கொடுக்கணும். அதனால என்னால ஓவியம் பண்ண முடியலைன்னெல்லாம் சொல்லக்கூடாது. நீ, இல்லைன்னா, அவங்க என்ன பண்ணியிருப்பாங்க? சாக்கு சொல்லி தட்டிக்கழிக்கக் கூடாது. ஓவியம் மீது உண்மையான பக்தி வேணும். நாம நினைச்சா ஜெயிக்கலாம்.'' சொன்னது மட்டுமல்லாமல், சொல்லியது போல் வாழ்ந்து வழிகாட்டியும் சென்றிருக்கிறார் ஆதிமூலம்.

(ஆதிமூலம் காலமானதும் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையை விரிவுபடுத்தி எழுதியது.)