10 March 2011

முகங்கள்

காந்திராஜன்

தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்

பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்டுரை தயாரிக்க வேண்டி வரும்போது நான் தவறாமல் இருவரைத் தொடர்புகொள்வேன். ஒருவர், தமிழ்செல்வன் என்ற விஜயவேலன்; இன்னொருவர் காந்திராஜன். இவர்களில் விஜயவேலன் சுலபமாகக் கிடைப்பார். காந்திராஜன் கிடைக்கமாட்டார். நம் வரலாற்று ஆதாரங்களைத் தேடி அலைபவர்களில் இவர்கள் இருவருமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள். இருவருமே முனைவர் பட்ட ஆய்வை பாதியில் விட்டுவிட்டவர்கள். கல்வித் துறை வரையறுக்கும் ஒழுங்குக்குள் வராமல் சதா சுற்றிக் கொண்டிருப்பவர்கள். ஆனால், இந்தத் துறையில், இவர்கள் தலைமுறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அனைவரையும்விட முக்கியமானவர்கள்.

இந்தப் பதிவு காந்திராஜன் பற்றி...

எனக்குத் தெரிந்து, காந்திராஜன் முகவரி, அவரது செல்போன் நம்பர்தான் மட்டும்தான். ஆனால், ''நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்’’ என்ற பதிலைத்தான் பெரும்பாலும் அதில் நான் கேட்டிருக்கிறேன். அப்போது காந்திராஜன், மனித சந்தடியே இல்லாத எதாவதொரு மலைக் காட்டில் பாறை ஓவியங்கள் உள்ள குகைகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பாராக இருக்கலாம். அரசும் கல்வித்துறையும் செய்ய வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமையை, எந்த ஒரு பொருளாதார உதவியும் இல்லாமல் தன்னிச்சையாக செய்துகொண்டிருக்கிறார் காந்திராஜன்.

ஒவ்வொரு முறை காந்திராஜனைச் சந்திக்கும் போதும், அவர் கடைசியாக சென்றுவிட்டு வந்த இடத்தைப் பற்றிய தகவல்கள், புதிய கண்டுபிடிப்புகள் என்று பேசுவார். சுவாரஸ்யமாக இருக்கும். ஒருமுறை, ‘‘தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான பிரச்னைகள் என்பது இன்று நேற்று உருவானதல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்கி நடந்துவரும் யுத்தம் இது. கர்நாடக - தமிழ்நாடு எல்லையில், இரண்டு மாநிலத்தையும் பிரிக்கும் இடத்தில் மோபார் என்ற சின்ன நதி ஓடுகிறது. சமீபத்தில், இந்த நதிக் கரையோரத்தில் உள்ள குகைகளில் அக்கால கர்நாடக - தமிழ்நாடு மன்னர்களுக்கு இடையே நடந்தப் போர்க் காட்சிகளைச் சித்தரிக்கும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைதான் அந்த ஓவியங்கள்’’ என்று பேசியவாரே, தனது லேப் - டாப்பின் பல்வேறு போல்டர்களில் இருந்த பாறை ஓவியங்களை, ஒவ்வொன்றாக திறந்து காட்டினார். இப்படிப் பல...

காந்திராஜன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால பாறை ஓவியங்களை அடையாளம் கண்டுள்ளார். அனைத்துமே வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்தவை. காந்திராஜன் கண்டுபிடித்துள்ளவற்றில் மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்தவை கரிக்கியூர் பாறை ஓவியங்கள். கி.மு. 7000ஆவது ஆண்டைச் சேர்ந்தது. அதாவது கிட்டதட்ட 9000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. குறிப்பாக, காந்திராஜன் அடையாளம் கண்டுள்ளவற்றில் 12, புதிய குகை பாறை ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயரமான மலைகள், அடர்ந்த காடுகள் என இந்தக் குகை பாறை ஓவியங்களை நோக்கிய காந்திராஜன் பயணங்கள் மிகக் கடினமானவை. ஆனால், அவர் அதை மிக விருப்பமுடன் செய்கிறார்.

அந்தளவுக்கு, எப்படி இந்தத் துறை காந்திராஜனை ஈர்த்தது?

‘‘உயரமான மலைகளும் அடர்ந்தக் காடுகளும் அதற்குள்ளே மறைந்திருக்கும் ரகசியங்களும், இன்று நேற்றல்ல, சின்ன வயசுல இருந்து என் கூடவே வந்துகொண்டிருக்கும் விஷயங்கள். எங்க ஊர் உசிலம்பட்டி பக்கத்துல கவுண்டன்பட்டி என்ற கிராமம். ஊரைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் மலைகள்தான். புரட்டாசி மாசத்தில் பெருமாள் கோவில், ஆடி மாசத்தில் அம்மன் கோவில் என மாதத்துக்கு ஒருமுறை மலையேறி போய் சாமி கும்பிட்டு, பொங்கி சாப்பிட்டுட்டு வருவோம். ஒருநாள், வழக்கமாக மக்கள் ஏறி இறங்குகிற பழகின தடத்திலிருந்து விலகி, காட்டுக்குள்ள நுழைந்து அதன் ரகசியங்களைத் தெரிந்து கொள்ளனும்னு ஆர்வம் உண்டானது. அப்போது, சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறையில், தமிழ்நாட்டு கோயில்களில் உள்ள சுவரோவியங்கள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அதற்காக ஒவ்வொரு ஊராக, கோயில் கோயிலாக பேப்பரும் பென்சிலுமாக அலைந்து கொண்டிருந்த வழியில் ஒருநாள், மதுரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பலியர்கள் என்ற ஆதிவாசிகளைப் பார்த்தேன். ‘சித்தரக் கல் பொடவு’ என்று, அவர்கள் ஊரைப் பற்றி சொன்னார்கள். எனக்கு அந்தப் பெயர் வித்தியாசமாகப்பட்டது. ‘ஏன் இந்தப் பெயர் வந்ததுன்னு பார்க்கலாம்னு’ அவர்களுடன் மலையேறினேன்.

ஆண்டிப்பட்டி கனவாய்க்குப் பக்கத்துல இருந்தது, சித்திரக் கல் பொடவு. மலை மேலே ஏறினா, ஆதிவாசிகள் வாழ்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே பிரமாண்டமான ஒரு குகை. நூறு பேர் வரைக்கும் அதுக்குள் சௌகரியமா வாழமுடியும். உள்ளே மான்கள் மேய்வது, மான்களை வேட்டையாடும் புலிகள், எறிவேள் வீசி யானைகளைப் பழக்கப்படுத்துவதுன்னு திரும்பின பக்கமெல்லாம் பாறைகளில் பிரமாதமான ஓவியங்கள். யார் இதையெல்லாம் வரைந்ததுன்னு விசாரித்தால், ''எங்களுக்குத் தெரியாது சாமி. காலம் காலமாக இது இருக்கிறது"ன்னாங்க. நான் பார்த்த முதல் குகை பாறை ஓவியம் அதுதான். 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது அது. அதன்பிறகு சுவரோவியங்கள் பற்றின என் ஆராய்ச்சியை மூட்டைக்கட்டி நட்டாத்துல விட்டுட்டு, பாறை ஓவியங்கள் பக்கம் வந்துட்டேன். 1998இல் தொடங்கி கடந்த 12 வருஷமா குகை பாறை ஓவியங்களைத் தேடி அலைவதுதான் என் ஒரே வேலை. சென்னை ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்ரு மற்றும் என் ஓவிய நண்பர்கள்தான் என் பலம்’’ என்கிறார் காந்திராஜன்.

”ஆதிகால தமிழர்களின் பண்பாடு, நம்பிக்கைகள் முதலியவற்றை அறிந்துகொள்வதற்கு இன்று நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரம் இந்தக் குகை பாறை ஓவியங்கள்தான். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், இலக்கிய ஆதாரங்கள் போன்றவை மூலம் வரலாற்றில் 3000 ஆண்டுகள் வரைதான் நம்மால் பின்னோக்கிச் செல்லமுடியும். ஆனால், குகை ஓவியங்கள் அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் நம்மை அழைத்து செல்லும். மொழியும் எழுத்தும் உருவாவதற்கு முன்னால் மனிதனின் மொழியாக இருந்தவை இந்த ஓவியங்கள்.

ஆதிகால மனிதன் எதையெல்லாம் கண்டு பயந்திருக்கிறானோ, அதையெல்லாம் முதலில் வரைந்திருக்கிறான். அடுத்த காலகட்டம், விலங்குகளுடன் சண்டை போட்டு ஜெயித்ததைச் சொல்லும் படங்கள். அப்புறம், வேட்டையாடிய மிருகங்கள். அதன்பிறகு ஆடு, மாடுகளைப் பழக்கப்படுத்துதல். அந்தக் காலகட்டத்தில் ஒருவரது சொத்து என்பது அவரிடம் இருக்கும் பழக்கப்படுத்தப்பட்ட ஆடு, மாடுகள்தான். இதற்காக கொள்ளைகளும் மிகப்பெரிய சண்டைகளும் நடந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் இந்த பாறை ஓவியங்களில் வரைந்திருக்கிறார்கள். காட்டுக்குள்ளே என்னவெல்லாம் ஆபத்துகள் இருக்கின்றன என்பதை வருங்கால சந்ததிகளுக்கு தெரிவிக்கும் விதமாய் சிலதை பதிவு செய்திருக்கிறார்கள். அடர்த்தியான காட்டுக்குள்ள வாழ்பவர்களுக்கு காலநிலை மாற்றங்கள் தெரியாது. பறவைகள், விலங்களின் நடமாட்டத்தை வைத்துதான் பருவ மாற்றங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். கொக்கு வந்தால் அடுத்த ஒரு வாரத்தில் மழை பெய்யும், காடு செழிக்கும் என்பது கணக்கு. இதைக் கொக்கு பக்கத்தில் ஒரு மரமாக வரைந்திருக்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பழமையான குகை ஓவியங்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்களை விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாக அவை இருக்கலாம். கருப்பு, சிவப்பு, வெள்ளை என மூன்று விதமான குகை பாறை ஓவியங்கள் தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ளன. இதில் கருப்பாக உள்ளவை மரக் கட்டைகளை எரித்து, அதைக் கொண்டு வரையப்பட்டவை. இந்த ஓவியங்களின் காலத்தை கார்பன் டேட்டிங் முறை மூலம் கண்டுபிடித்து விடலாம்” எனக்கூறும் காந்திராஜனின் குகை ஓவியங்களைத் தேடி செல்லும் ஒவ்வொரு பயணமும் ஒரு சாகச அனுபவம்.

அவரே சொல்லக் கேட்போம்:

“ஆதிவாசிகளின் கிராமங்களுக்குச் சென்று பாறை ஓவியங்களின் படங்களைக் காட்டி, ‘‘இதுமாதிரி எங்காவது பார்த்திருக்கிறீர்களா’’ எனக் கேட்போம். இப்படி ஆனைமலை தொடங்கி விருதுநகர் வரைக்கும் 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறித்து வைத்திருக்கிறோம். இனி ஒவ்வொன்றாக அவற்றைத் தேடிப் போகவேண்டும். 100 இடங்கள் சென்றால் பத்து இடங்களில் தான் ஓவியங்கள் இருக்கும். காட்டுக்குள்ளப் போகும்போது ஆதிவாசிகள்தான் வழிகாட்டிகள். காட்டு விலங்குகளால் எந்த நேரமும், எந்த திசையில் இருந்தும் தாக்கப்படலாம் என்பதால் அவர்களின் கண் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். மலைப் பாம்புகள் குறுக்கே கிடந்தாலும் அசராமல் அனாயசமாக தாண்டிச் செல்வார்கள். சில குகைகள் காட்டுக்குள் மிகவும் உள்ளே தள்ளி இருக்கும். ஒரே நாளில் போய்விட முடியாது. ஆங்காங்கே, பாறைகளில் இரவு தங்கி ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் நடப்போம். இரவு மிருகங்கள் வராமல் இருக்க தீ மூட்டுவோம். கொண்டு போகும் உணவு ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் வராது. அப்போது காட்டில் கிடைக்கும் கிழங்குகளை தோண்டி எடுத்து சாப்பிட்டுவோம். பெரும்பாலும் பாறைகள் நேராக இல்லாமல் வளைந்து, உள்வாங்கி என சமன் இல்லாமல்தான் இருக்கும். எனவே, அதிலுள்ள ஓவியங்களை புகைப்படம் எடுக்க முடியாது. எனவே, டிரான்ஸ்பரன்ஸி ஸீட் எடுத்துக்கொண்டு போய் பாறைகளுக்கு மேலே ஒட்டி வைத்து அப்படியே பென்சிலால் வரைந்து எடுப்போம்.

1837ஆம் ஆண்டு, சர்.ஜார்ஜ் கிரே என்ற ஆய்வாளர் ஆஸ்திரேலியாவில் சிட்னிக்கு அருகே முதன்முதலில் பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு உலகம் முழுக்க குகை பாறை ஓவியங்கள் பற்றிய ஆர்வம் உருவானது. ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா நாடுகளில் பாறை ஓவியங்கள் ஆராய்ச்சிக்காக பல்கலைக்கழகங்களில் தனித்துறையே இருக்கிறது. ஆனால், நம்மூரில் மத்திய அரசும் மாநில அரசும் பாறை ஓவியங்கள் பற்றி பெரிய அக்கறையே இல்லாமல் இருக்கின்றன. மத்திய, மாநில தொல்லியல் துறையினர் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், கோயில்களைத் தேடி ஊர் ஊராகப் போகும் வழியில் ஆங்காங்கே ஒன்றிரண்டு முற்கால பாறை ஒவியங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவ்வளவுதான், மற்றபடி அரசாங்கம் எந்த வரலாற்று தேடலும் இல்லாமல் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாழை, செந்தவரை, ஆலம்பாடி ஆகிய இடங்களில் நாங்கள் கண்டுபிடித்துள்ள பாறை ஓவியங்களின் குறியீடுகளுக்கும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இவ்வளவு முக்கியமான வரலாற்று ஆதாரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வரலாறுகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் இந்த வரலாறுகளை மாற்றி எழுதவேண்டியிருக்கும்’’ என்கிறார் காந்திராஜன்.

(ஆனந்த விகடன் பத்திரிகையில் காந்திராஜன் பற்றி எழுதிய கட்டுரையில் சிறு மாற்றங்கள் செய்திருக்கிறேன்.)

4 comments:

தி.பரமேசுவரி said...

தளவாய் சார். மிக மிக முக்கியமான பதிவு. நண்பர் காந்திராஜன் சொல்வது ரொம்ப சரி. வரலாறுகளை நிச்சயமாக மாற்றி எழுத வேண்டியிருக்கும். நம் தொன்மை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் முன் செல்லும். அரசு செய்ய வேண்டிய வேலையை எப்போதும் தனி மனிதர்களே செய்து வந்திருக்கிறார்கள். அதுவே நம் பலமும் பலவீனமும். காய்தல், உவத்தலின்றி இவர்களால் செய்ய முடிகிறது. நம் சொல்லப்பட்ட வரலாறுகளில் இருக்கும் இடைவெளிகளில் இருந்தே இவற்றை நாம் புரிந்து கொள்ள முடியும். காந்திராஜனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Shanmuganathan said...

ஹலோ சார்,
மிகவும் நன்றாக இருந்தது பதிவு.... காந்திராஜனின் பயணம் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இது போல் பயணம் செய்பவர்களை கண்டால் மிகவும் பொறாமையாக இருக்கிறது.

Santhini said...

Very useful site. Thank you for sharing.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.