30 September 2006

சிறுகதை

ராஜராஜசோழன் சாலையில் ஒரு கிழவர்

தளவாய் சுந்தரம்

நான் முதன்முறையாக அவரைப் பார்த்தபோது, எனக்கு பதினான்கு வயது நிறைவடைய மேலும் ஐந்து தினங்கள் மீதமிருந்தன. அப்புறம், பல வருடங்களுக்குப் பின்பு நான் அறிந்துகொண்டபடி, அன்று அவருக்கு நூற்றிப்பதினேழு வயது நிறைவுபெற்று ஒன்பது, பத்து தினங்கள் ஆகியிருந்திருக்க வேண்டும். நான் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் வழியில் ராஜராஜசோழன் சாலையில் எனக்கு முன்னால், தலை சரிந்து தோங்கியவாறு இருக்க, தள்ளாட்டத்துடன், நிதானமாகவும் கவனமாகவும் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். தலைக்கு மேலே உயரத்தில் கருப்புக் குடை தூக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. கூன் விழுந்து முதுகுப் பக்கம் வளைந்திருந்தது. எதாவது ஒரு கணத்தில், அப்படியே சரிந்து விழுந்துவிடுவார் என்கிற எதிர்பார்ப் புடனேயே, நான் அவர் பின்னால் சென்றேன்.

அவர் அணிந்திருந்த கருப்புக் கோட், இளைமையில் செல்வச் செழிப்புடன் இருந்து, பின்பு உடைந்துபோன் ஒருவரை எனக்கு ஞாபகப்படுத்தியது. கோட், கவனமாகவும் நிதானமாகவும் அவர் நடந்துசென்ற நாகரிகம் ஆகியவை அவர் மீது எனக்குள் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நான், அவரை உற்றுக் கவனித்தவாறே பள்ளிக்கூடம் வரைக்கும், அவர் பின்னாடியே நடந்தேன். முதுகில் தொங்கிக் கொண்டிருந்த புத்தகப் பையின் பிடியை தலைக்கு மாற்றிக்கொண்டேன்.

பின்பு, இது தினமும் நடைபெற்றது. காலையில், கிறிஸ்டோபர் நினைவுப் பேருந்து நிலையத்திற்குள் இருந்து, நான் வெளியே வரும்போது, சரியாக எட்டரை மணிக்கு, எனக்கு முன்னால் அவர் நடந்து பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே சென்று கொண்டிருப்பார்; முதல்நாள் இருந்தது போன்று அப்படியே அச்செடுத்தது போல் இருப்பார். காரியங்களும் அப்படியே நிகழும். ராஜராஜசோழன் சாலை வந்ததும் சற்றுத் தயங்கி, இரண்டு பக்கங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்ப்பார். உடனே, திடீரென்று ஞாபகம் வந்தவர் போல் வலதுபக்கம் திரும்பி மெதுவாக நடக்கத் தொடங்குவார். நான் தயங்கிக் தயங்கி அவர் பின்னாடியே நடப்பேன். அவர் நின்றால் நிற்பேன். பின்பு மீண்டும் அவர் நகரத் தொடங்கியதும் தொடர்வேன். சில தினங்களில் சற்று முன்பே வந்து விட்டால், பேருந்து நிலையத்துக்கு வெளியே பெட்டிக்கடை ஓரமாக, பேருந்துக்காக நிற்பவன் போல் மற்றவர்களுக்குத் தோற்றம் தர காத்திருப்பேன். பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த, பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிக்கூடம் வரைக்குமான, கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பிடிக்கும், அலுப்பூட்டும் நடைபயணம், அதற்குப்பின் சுவாரஸ்யமான ஒன்றாக மாறிவிட்டது. ஒருவருக்குத் தெரியாமல், அவரைப் பின் தொடர்வதில் இருக்கும் குறுகுறுப்பும் சேர்ந்து கொண்டது. அதிகாலையில் படுக்கையில் இருந்து அவர் குறித்த ஏதாவது நினைவுகளுடனோ அல்லது கனவுகளுடனோதான் ஒவ்வொரு நாளும் எழுந்தேன். அதன் பிறகும், பள்ளி செலவதுக்கான ஆயத்த வேலைகளில் இருக்கும் போது, அவரைச் சந்திக்கப் போவது குறித்த எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாக இருப்பேன். எங்கே இன்று அவர் முந்திவிடுவாரோ என்று மனம் அலைபாய்ந்தபடி இருக்கும். என்னைப் பள்ளிக்கு தயார் செய்யும் அக்கா, "எங்கடா இருக்கு உன் புத்தி. செய்வதை ஒழுங்கா செய்ய மாட்டியா" என்று இரண்டு, மூன்று முறையாவது என்னைத் திட்டுவாள். இது தினக்கதை.

ராஜராஜசோழன் சாலையில் இருந்து ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளிக்குப் பிரியும் மூன்றாவது குறுக்குத் தெருவைக் கடந்தும், நகரின் எல்லையை நோக்கி, அவர் சென்று கொண்டேயிருப்பார். இங்கே, எனக்கு மேலும் அவரைத் தொடர முடியாத நிலை. இந்த இடத்தில், மூன்றாவது குறுக்குத் தெரு சந்திப்பில், அவர் உருவம மறையும் வரை நின்றுகொண்டேயிருப்பேன். சில தினங்களில் அவர் உருவம் மறைந்த பிறகும், பள்ளியில் முதல் மணி அடிக்கும் வரைக்கும் அவர் சென்று மறைந்த திசையைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குப் பின்னாடி இருக்கும், ஒருநாள், நான் மூன்றாவது குறுக்குத் தெருவில் திரும்பாமல் தொடர்ந்து அவர் பின்னாடியே சென்றேன். வில்லியம்ஸ் மருத்துவமனையை நாங்கள் கடந்து கொண்டிருக்கும் போது பள்ளிக்கூடத்தில் முதல் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. முதலிலேயே திட்டமிட்டிருந்தால் அசெளகரியமாக உணர்ந்த புத்தகப் பையை எங்காவது விட்டிருந்திருக்கலாம் என்று அப்போது எண்ணினேன். நகரின் எல்லையைக் கடந்த பின்பும், சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு மேலே நடந்து, கடற்கரைச் சாலையில் சின்னப்ப நாடார் பெட்ரோல் பங்குக்குச் சிறிது தள்ளியிருந்த, தேசிகவிநாயகம் பிள்ளை நூல்நிலையம் முன்பு வந்து அவர் நின்றார். பிறகு தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்திருந்த குடையை மடித்து தரையில் சாய்த்து வைத்தார். அதன்பிறகு, கால்சட்டை பையிலிருந்து சாவியை எடுத்து, பலமாகப் பூட்டைப் பிடித்து திறந்தார்; உள்ளேப் போனார். அவருடைய எல்லாச் செய்கைகளும் பிசிறாத ஒழுக்கத்துடன் ஒரு நாகரிக சீமானுடையதைப் போலிருந்தன. நூல்நிலையத்தின் பக்கச் சுவர்களில் கடல் அலைகளின் இறைச்சல் மோதி எதிரொலித்தபடியிருந்தது. வாசல் வழியே உள்ளே எட்டிப் பார்த்தேன். வாதை, நம் முன்னால் நின்று வழி மறிக்கும் போது இருப்பதைப் போன்ற இருட்டு. கிழவரும் கரைந்து இருட்டாக ஆகியிருந்தார். ஆனால், உள்ளேயிருந்து தாள்கள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் சத்தம் சன்னமாகக் கேட்டபடியிருந்தது. நான் திரும்பி சின்னப்ப நாடார் பெட்ரோல் பங்குக்கு வந்தேன்.

தேசிக விநாயகம் பிள்ளை நூல்நிலையம், நீளமாக நான்கு பக்கமும் உயர்ந்து அடைத்துக் கொண்டிருக்கும் சுவர்களையுடையதாக இருந்தது. முன்பக்கமிருந்த ஒரு வாசல் மட்டும்தான். திடீரென்று உள்ளே நுழையும் ஒருவர், இருட்டுக்குக் கண் பழக சிறிதுநேரம் காத்திருக்க வேண்டும். பின்பு ஒவ்வொன்றாக உருக்கொண்டுக் கொண்டே வரும்; அழுது வடிந்து கொண்டிருக்கும் நாற்பது வாட்ஸ் மின்விளக்கு, மணல் போல் குவிக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள், அடைத்துக் கொண்டிருக்கும் நான்கு பக்கச் சுவர்கள், கடைசியில் கதவையொட்டி சுவரோரமாக உட்கார்ந்திருக்கும் கிழவர். எழுதிக் கொண்டிருக்கும் அல்லது குனிந்து டிராயருக்குள் எதையாவது தேடிக் கொண்டிருக்கும் அவர், நிமிர்ந்து மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டே வருபவர்களை உற்றுப் பார்ப்பார். ஆனால், எப்போதும், எவருடனும் அவர் உரையாடி நான் கேட்டதில்லை. அவர் முன்பு, மேஜையின் மேல் பழுப்பேறிய காகிதக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நூல்நிலைய நிர்வாகம் தொடர்பான கணக்குகளையும் மற்ற விஷயங்களையும் அக்காகிதக் கட்டுகளில் அவர் குறித்துக்கொண்டு வருகிறார் என்று சொன்னார்கள். எனக்குத் தெரிந்து என்னையும் சேர்த்து ஐந்து பேர் மட்டும்தான் நூல்நிலையத்தை உபயோகித்து வந்தோம். நாங்கள் எடுத்துக்கொண்டு போகும் அல்லது திருப்பித்தரும் புத்தகங்கள் தொடர்பாக எப்போதும் எவருடனும் அவர் பேசியதில்லை. ஆனால், மிகச் சரியாக அவற்றை அவர் குறித்துக்கொண்டு வந்திருக்கிறார்.

ஆரம்பத்தில், நான் நூல்நிலையம் நகரிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால்தான் மற்றவர்கள் வரத் தயங்குகிறார்கள் என்று எண்ணினேன். ஆனால், வயதானவர்கள் நூல்நிலையம் முதலில் நகருக்குள்தான் இருந்தது என்றும், பிறகு நகரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இப்போது இருக்கும் நிலைக்கு வந்துவிட்ட போது நூல்நிலையம் மட்டும் அங்கேயே தங்கிவிட்டது என்றும் சொன்னார்கள். உண்மையில் நூல்நிலையத்தை நகருக்குள் கொண்டு வருவதிலும் எவருக்கும் விருப்பம் இருக்கவில்லை. "அந்தக் கிழவந்தான் கங்கனம் கட்டிக்கொண்டு அதனைப் பார்த்து வருகிறான். இன்னும் இரண்டு, மூன்று வருடத்தில் அவன் மணடையைப் போட்டதும் அதன் கதையும் அவனோடு முடிந்து போகும்" என்று ஒருவர் சொன்னார். ஆனால், அவ்வளவு சுலபத்தில் அது நடக்காது என்பதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார்கள். நான் இன்னும் மிகப் பின்னாடிதான், அனேகமாக எல்லோருக்குமே நூல்நிலையம் தொடர்பாக ஒரு இனம்புரியாத பீதி இருப்பதை உணர்ந்தேன்.

தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வீதம் நான் நூல்நிலையத்துக்கு சென்று வந்துகொண்டிருந்த பத்து வருடங்களில்கூட, முன்பு நான் குறிப்பிட்ட ஐந்து பேர்களின் நிழலை மட்டும்தான் நூல்நிலையக் கட்டிடத்துக்குள் பார்த்திருக்கிறேன். என்னைத் தவிர்த்த மற்ற நான்கு பேர்களில் ஒருவர் பெண்; சோடாப்புட்டிக் கண்ணாடி அணிந்து உயர் அதிகாரிகளுக்கான தேர்வில் வெற்றிபேறத் தயார் செய்துகொண்டிருக்கும் ஒருத்தியைப் போன்று அவள் இருந்தாள்.

ஒருநாள், உயர்ந்த குன்று மாதிரியிருந்த புத்தகக் குவியலின் உச்சியில் தலைகீழாகப் படுத்துக்கொண்டு, நான் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தபோது, அவள் கீழே உட்கார்ந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள். எனக்கு கொஞ்சம் அவமானமாகப் போய்விட்டது. நான் கிடக்கும் நிலையைப் பார்த்து என்னைப் பற்றி அவள் என்ன நினைப்பாள். ஆனால், அவள் என்னைக் கவனிக்கவில்லை. கிழவருடைய நடவடிக்கைகளை நினைவுறுத்தும் ஒரு ஒழுங்கு அவளிடம் இருந்தது. அவள் ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்ப்பதும், பின்பு அதே இடத்தில் அதே நிலையில் வைப்பதுமாக இருந்தாள்.

இது நிகழ்ந்தது, நான் பள்ளி இறுதியாண்டு தேர்வெழுதி முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருந்த நேரம். திடீரென்று, ஏதோவொரு பெயரைச் சொல்லி அந்தக் கிழவரை அவள் அழைத்தாள். அவர் மெதுவாக எழுந்து, அவள் பக்கத்தில் வந்து, இன்னும் நன்றாக குனிந்தார். பிறகு அவள் பக்கத்தில் உட்கார்ந்து, அவளுடன் சேர்ந்து ஒவ்வொரு புத்தகமாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிதுநேரம் சென்றதும், அவள் கைகாட்டிய இடத்திலிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக உருவியெடுத்து உள்பக்கமாக ஒரு பொந்தை அவர் உருவாக்குவதைக் கண்டேன். பிரமாண்டமான அந்தப் புத்தகக் குவியலின் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அவளுக்குத் தேவைப்படும் புத்தகம் இருக்கிறது என்கிற தீர்மானத்துடன் அல்லது ஒரு அற்புதத்தை நிகழ்த்திவிட முடியும் என்பதுபோல் அவர் நடந்துகொள்வதாக எனக்குப் பட்டது. ஆனால், சிறிது சென்று, இரண்டு கால்களையும் நன்றாக நீட்டிப் படுத்துக்கொண்டு ஒரு பாம்பைப் போல் நெளிந்து முன்னேறி, அவர் பொந்துக்குள் நுழைந்தார். அவர் பாதங்கள் மறைவது வரைக்கும் பீதியுடன் நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். பக்கத்தில் சோடாப்புட்டிக் கண்ணாடிப் பெண் எந்த சலனமுமின்றி இருந்தாள். நான் வேகமாக சறுக்கிக் கொண்டே கிழே வந்தேன். நான் இறங்கிய வேகத்தில், உருண்டு கிழே விழுந்த புத்தகங்கள், கிழவர் நுழைந்த பொந்து பக்கத்தில் விழுந்து, பின்பு அதன் மேலே விழுந்து பொந்தை அடைத்துக் கொணடன. கண்ணாடிப் பெண் திரும்பி என்னைப் பார்த்து முறைத்தாள். நான் விரைந்து வெளியே வந்தேன்.

நூல்நிலையம் குறித்த மற்றவர்களின் பீதிக்கு சரியான ஏதோவொரு காரணம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அதன்பிறகு நான் அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்; என்றாலும் அந்தக் கிழவரையும் நூல்நிலையத்தையும் நோக்கி புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்வு என்னைத் தூண்டி இழுத்துக் கொண்டேயிருந்தது. அதனையும் மீறிய ஒரு பீதி, குறிப்பாக இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னாலும் படுக்கையில் தூக்கமின்றி புரண்டு கொண்டிருக்கும் போதும், நூல்நிலையம் பற்றி ஞாபகம் வரும் ஒவ்வொரு சமயமும் என் உடலினூடே பரவிச் சிலிர்த்தது.

நான்கு வருடம் சென்று வேலை கிடைத்து ஊரைவிட்டு நான் வெகுதூரம் வந்தேன்; வேறு தேசம். ஊர் என் நினைவில் மட்டும்தான் இருந்தது. புதிதாக பிறந்த குழந்தைகள், இறந்து போனவர்கள், புதிதாகப் போடப்பட்ட சாலை, ஊர் எல்லையை விரித்துக் கொண்டே வளர்ந்த வீடுகள், முத்தாரம்மன் கோவிலுக்கு கோபுரம் கட்டியது எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால், ஊரிலிருந்து தூரத்திலிருந்த போதும், நூல்நிலையம் என் நினைவிலிருந்தது. நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு ஊருக்குச் சென்றபோது, ஒருநாள் சோடாப்புட்டிக் கண்ணாடிப் பெண்ணை நான் பார்த்தேன். பேக்கரியிலிருந்து அவள் திரும்பிக் கொண்டிருந்தாள். பிரட் வங்கிக்கொண்டு போவதாக கடைக்காரர் சோன்னார். நான் கிழவரை நினைத்துக் கொண்டேன். அவர் என்ன ஆனார் என்று எனக்குத் தெரியாது. அடுத்தநாள் நூல்நிலையம் போய் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டேன். அது நடக்கவில்லை. பல்வேறு வேலைகளுக்கு இடையே தள்ளிப் போய்கொண்டேயிருந்தது. கடைசியில் நான் பணி விடுப்பு முடிந்து மீண்டும் வந்து வேலையில் சேர்ந்துகொன்டேன்.

ஆனால், இரண்டாவது முறை நான் ஊருக்குச் சென்றபோது அவரைப் பார்த்தேன். சரியாகக் காலையில் எட்டரை மணிக்கு கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்துக்குள்ளிருந்து அவர் வெளியே வந்து கொண்டிருந்தார். அதே கோட், கூன் விழுந்த முதுகு, ஊன்றுகோல், தொப்பி. அப்போது என் நினைவிலிருந்து அனேகமாக அவர் மறைந்துவிட்டிருந்தார். காலமாகிப் பல வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த அவர், திடகாத்திரத்துடன் ராஜராஜசோழன் சாலையில் வலதுபக்கம் திரும்பி, மெதுவாகவும் நிதானமாகவும் நடந்து சென்று கொண்டிருப்பதை, வியந்து பார்த்துக்கொண்டே நான் நின்றேன்.

பிறகு நான் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் மீண்டும் தேசிக விநாயகம் பிள்ளை நூல்நிலையம் செல்லத் தொடங்கினேன். அப்போதே அதன் முன்பு இருந்த தேசிக விநாயகம் பிள்ளை நூல்நிலையம் என்னும் பெயர்பலகை இற்றுத் தொங்கிக் கொன்டிருந்ததாக ஞாபகம். பெயர்பலகைக்கு மட்டுமல்ல எனக்கும் மற்றவர்களுக்கும்கூட வயது ஏறிக் கொண்டே வந்தது. ஆனால், அவரோ எந்த மாற்றமுமின்றி, சற்று வளைந்த அதே முதுகுடன், கவனமான நாகரிகமான நடையுடன் அப்படியே இருந்தார். ஊர் அவரை வியந்து பார்த்துக் கொண்டிருந்தது. அவர் மற்றும் நூல்நிலையம் தொடர்பான இரகசியக் கதைகளும் புதிர்களும் நிறைய உலாவத் தொடங்கின. நான் அவற்றை குறித்து சிந்திக்கக்கூட நேரமின்றி வாழ்வும் அதன் நெருக்கடிகளும் என் மேல் கவிழ ஓடிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய அறுபதாவது வயதில், 1984ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி, அலுவலகத்திலிருக்கும் போது எனக்கு ஊரிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. தொடக்கப் பள்ளியிலிருந்து பள்ளி இறுதியாண்டு வரை என்னுடன் படித்த டைட்டஸ் நிர்மல் குமார், ஒரு அரசியல் தலைவரின் சிலையை வைப்பதில் எற்பட்ட தகராறில் தேசிக விநாயகம் பிள்ளை நூல்நிலையத்தை எறித்துவிட்டார்கள் என்றும், எரியும்போது அந்த வயதானவர் உள்ளேதான் இருந்திருக்கிறார் என்றும் சொன்னான். நான் விடுமுறை எடுத்துக் கொண்டு அன்றே ஊருக்கு வந்தேன். ஆனால், நான் வந்து சேர்வதற்குக்குள் எல்லாம் முடிந்திருந்தது. ஊர் கலவரத்திலிருந்து மீண்டிருந்தது. கருகருவென்று ஒரு பிரமாண்ட சிதைபோல் இருந்தது நூல்நிலையம். தீ வாடை அப்போதும் அப்பகுதியைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தது. உண்மையில் சின்னப்ப நாடார் பெட்ரோல் பங்கை கொழுத்துவதுதான் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்றும், மாறிவிட்டது என்றும் சொன்னார்கள். சிலர் கிழவர் உள்ளேதான் இருந்தார் என்றும், சிலர் அவர் நான்கைந்து நாட்களாகவே நூல்நிலையத்தை திறக்கவில்லை என்றும் சொன்னார்கள். கிழவரின் வீட்டைக் கண்டுபிடித்து அவர் இருக்கிறாரா எனத் தெரிந்துகொள்ள முயற்சித்தேன். அவரது வீடு எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

நூல்நிலையம் எறிக்கப்பட்டு ஐந்து தினங்கள் சென்று, நான் முன்பு குறிப்பிட்ட சோடாப்புட்டிக் கண்ணாடிப் பெண்ணின் எழுபத்திரண்டு வயது கணவரை, 'நூல்நிலையத்தின் மீது தீ வைத்தக் குற்றத்துக்காக' காவல்துறையினர் கைது செய்தார்கள். செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வந்திருந்தது. எனக்கு நூல்நிலையம் எறிக்கப்பட்டதுக்குப் பின்னால் கிழவரை கொல்லும் சதி இருந்திருக்க வேண்டும் என்று பட்டது. ஆனால், கிழவர் இருக்கிறாரா அல்லது நூல்நிலையத்தோடு எரிந்து சாம்பலாகிவிட்டாரா என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை. அது தொடர்பான குழப்பங்களுடனேயே, இன்னும் எனக்குப் புரிந்துகொள்ள முடியாத அதன் இரகசியங்களை எல்லாம் எனக்குள் புதைத்துவிட்டு, என் அன்றாட அலுவல்களுக்கு நான் திரும்பினேன்.

இவைகள் எல்லாம் நடைபெற்று எத்தனையோ வருடங்கள் சென்றுவிட்டன. எனக்கும் வயதாகிவிட்டது. ஊருக்குத் திரும்பிவிட்டேன். இப்போது நினைவுகள் சரியாக இல்லை. என் காலத்து ஆட்கள், நண்பர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். நானும் மரணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

நேற்று எனக்கு அதிகாலையில் நான்காவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. உடனேயே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே நிலைமைக் கவலைக்கிடமாக இருக்கிறது, உடனே பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்றுவிட்டார்கள். ஆம்புலன்ஸிற்கு கொண்டு செல்லும் போது, வழியில், "இந்தமுறை பெரிசு தாங்காது" என்று யாரோ சொல்வதைக் கேட்டேன். நினைவு தப்பித் தப்பி வந்துகொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தை கடக்கும் போது, உள்ளுணர்வு உந்த, சாலையைப் பார்த்தேன்.கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த அவர், சற்று வளைந்த முதுகும் அதே கருப்புக் கோட்டுமாக ராஜராஜசோழன் சாலையில், ஆரம்பத்தில் என்னுடைய பதினான்காவது வயதில் பார்த்தபோதிருந்த அதே திடகாத்திரத்துடன், சாலையின் இரண்டு பக்கமும் மாறிமாறிப் பார்த்துவிட்டு பின்பு வலதுபக்கம் திரும்பி மெதுவாக நடக்கத் தொடங்கினார்.

(எஸ். ராமகிருஷ்ணன் நடத்திய 'அட்சரம்' (2002) பத்திரிகையின் முதல் இதழில் இக்கதை வெளியானது.)

16 September 2006

சிறுபத்திரிகை

மீண்டும் புனைகளம்


2007 ஜனவரி முதல் 'புனைகளம்' இதழ் மீண்டும் வெளிவர இருக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த 'சிலேட்' இதழில் சி. மோகன் இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

"சிறு பத்திரிகை இயக்கம் அதன் சுழற்சியில் ஒரு இருண்ட கட்டத்தை அடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. இது ஒரு தறகாலிக ஸ்திதியே தவிர வேறில்லை. மீட்சிக்கான பாதைகளில் எந்த ஒன்றையும் இழந்து போக நாம் விட்டுவிட மாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அறங்களுக்குப் பதிலாக அதிகார மிடுக்குகள், தார்மீகங்களுக்குப் பதிலாக சாதுர்யங்கள், அர்ப்பணிப் புகளுக்குப் பதிலாக வியாபார உத்திகள் என இன்றைய கலை இலக்கிய வியாபாரச் சந்தை கொழித்துக் கொண்டிருக்கிறது. முந்தைய தலைமுறைகளின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பை ஆதாய முதலாக்கி வியாபாரம் கன ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சந்தை வியாபாரிகள் தங்கள் யானைக் கால்களால் பாதையை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊதிப் பெருத்து கரடு தட்டி விகாரமான யானைக் கால்களைப் புறக்கணித்துவிட்டோ, உதைத்துத் தள்ளிவிட்டோ தொடரும் நம்பிக்கைகுரிய பயணங்களில் ஒன்றாகப் புனைகளம் அமையும்" என்று சி. மோகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்