ஓவியர்கள்தான் முதல் சிருஷ்டிகர்த்தாக்கள்!
இராம. பழனியப்பன்
முதலில் உங்களது இளமைப் பிராயத்திலிருந்து தொடங்கலாம். அந்தப் பருவத்தில் எது ஓவியத்தை நோக்கி உங்களை ஈர்த்தது? ஒரு ஓவியராக நீங்கள் உருவாக காரணமாக இருந்த சூழல்கள் என்ன?
அப்போது எங்களுக்கு வியட்நாமில் கடைகள் இருந்தன. வியட்நாமில் இரண்டு கோவில்களை நகரத்தார்கள் கட்டினார்கள். ஒன்று மாரியம்மன் கோவில், மற்றொன்று சுப்பிரமணியசுவாமி கோவில். அந்தக் கோவில்களின் திருப்பணிக்கும் வளர்ச்சிக்கும் ஐயா நிறைய உதவிகள் செய்தார். மேலும், கோவில் கட்டுவதற்கு தேவையான கதவு, நிலை, தேர், மணி, அலங்காரப் பொருட்கள் உட்பட பலவும் எங்கள் வீட்டில்தான் தாயாராகி அங்கே சென்றன. கோவிலுக்கு நன்கொடை கொடுக்க விரும்பியவர்கள் ஐயாவிடம் கொடுப்பார்கள். ஒருவர் பெரிய சில்வர் தேர் செய்ய நன்கொடை கொடுத்தார். அந்தத் தேர் ஐயா மேற்பார்வையில் செய்யப்பட்டு வியட்நாம் போனது.
இந்த மாதிரியான வேலைகள் எல்லாம் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, சிறுவனாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நான் வளர்கிறேன். ஐயா ஈடுபட்டிருந்த கோவில்கள் திருப்பணி காரணமாக பல கோவில்களையும் அதன் அமைப்புகளையும் சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பமும் அந்த வயதில் வெகுவாக அமைந்திருந்தது.
அப்போது வைரம் வாங்குபவர்கள், விற்பவர்கள் இரண்டு தரப்பினரும் நடுநிலையாக எங்கள் ஐயாவை நியமித்து, வைரத்தைச் சோதித்துப் பார்ப்பார்கள். இப்படி நிறைய பேர் வீட்டுக்கு வந்து சென்றுகொண்டிருப்பார்கள். ஆசாரிகள் வருவார்கள். ஐயா வைரம் பார்ப்பதற்கு கமிஷன் வாங்கமாட்டார். அவர் வைரம் பார்ப்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருப்போம்.
இதே காலகட்டத்தில் எங்கள் தந்தையார் காலண்டர் ஏஜென்ஸி நடத்தி வந்தார். இதனால் வீட்டில் எப்போதும் ஆல்பம், காலண்டர் போன்றவை கட்டுக்கட்டாக இருக்கும். பிற்காலத்தில் அப்பா டின் பிரிண்டிங் நிறுவனம் ஒன்றையும் மதுரையில் தொடங்கி நடத்தினார். அவற்றையும் பார்த்துக்கொண்டே நான் வளர்கிறேன்.
இவை அனைத்தும், என்னையறிமால், கலையும் ஓவியமும் எனக்குள் செல்வதற்க்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இப்போது நினைத்துப் பார்க்கும் போது, சிறுவயதில், அந்த வயது குழந்தைகள் அனைவரும் கிறுக்குவது போல்தான் நானும் கிறுக்கிக் கொண்டிருந்ததாக ஞாபகம் இருக்கிறது. ஒன்பதாவது படிக்கும் போது, படம் வரையும் திறமை எனக்குள் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தேன். அதனைத் தொடர்ந்து ஒன்பது, பத்தாவது வகுப்புகள் படிக்கும் காலகட்டங்களில் நிறைய படம் வரையத் தொடங்கினேன்.
R.M. Palaniappan, Flying Man Lithograph, 38 cms x 58 cms, 1980 |
ஆனால், அக்காலகட்டங்களிலும் ஓவியன் ஆகவேண்டும் என்ற ஆசை அவ்வளவாக இருந்ததில்லை. சிறுவயதில் கட்டிடக் கலை படிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. கொஞ்சம் வளர்ந்த பிறகு, விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அக்காலகட்டங்களில் ‘மஞ்சரி’ பத்திரிகையைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் படித்தேன். அறிவியல், ஆகாய வெளி, அதற்குப் பிறகு என்ன என்ற கேள்வி இவற்றின் மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது.
பதினொன்றாம் வகுப்பு தேறிய பிறகு பி.யு.சி. சேர்ந்தேன். பி.யு.சி.யில் கணிதத்தில் தொன்னூறுக்கும் அதிகமான மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். ஆனால், தமிழில் தோல்வியடைந்தேன். நான்கு மதிப்பெண்கள் குறைவு. அப்புறம் படித்து, தேறி, கட்டிடக் கலைக்கு விண்ணப்பித்தேன். ஆனாலும், இடம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி உள்மனதில் இருந்துகொண்டே இருந்தது. சரி, ஓவியக் கல்லூரியில் சேர்ந்தால் என்ன என்று அதற்கும் விண்ணப்பித்தேன். ஓவியக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது.
முதல் இரண்டு வருடங்கள் தனபால் சார் முதல்வராக இருந்தார். பின்னர் முனுசாமி வாத்தியார் கல்லூரியின் முதல்வரானார். முனுசாமி வாத்தியார் ஓவியங்கள் அப்பொழுது அவ்வளவாக் புரியாது. ஆனால், வசீகரிக்கக் கூடியதாக இருக்கும். அல்போன்ஸ், கல்லூரியில் எனக்கு நேரடி ஆசிரியர். சந்ரூவும் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவரை எப்போதும் ஆசிரியர் என்று நினைத்ததே கிடையாது. ஒரு சக தோழனாகத்தான் அவருடன் பழகியிருக்கிறேன். அதற்கான சுதந்திரத்தை அவர் மாணவர்களுக்கு, குறிப்பாக எனக்கு தந்திருந்தார்.
ஒரு ஓவியராக உங்களை உருவாக்கியதில் கல்லூரியின் பங்கு என்ன?
கல்லூரியின் பங்கு மிக முக்கியமானது, மறக்க முடியாதது. கல்லூரி எனக்கு ஒரு பெடல் போன்றும் உள்ளுணர்வுகளைத் தூண்டுகின்ற ஒன்றாகவும் இருந்தது. என்னுடைய தனிப்பட்ட ஆர்வமும் என்னை ஒரு ஆளாக்கியிருக்கிறது என்றே நினைக்கிறேன். முதல் இரண்டு வருடங்களில் பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்டு, சைனிஷ் ஓவியங்களைப் பார்த்து அதனை மாதிரி வரைவேன். சில்பியின் ஓவியங்களைப் பார்த்து, மகாபலிபுரம் சென்று பத்து நாட்கள் தங்கி நூற்றுக்கணக்கான ஓவியங்கள் வரைந்துள்ளேன். மூன்றாம், நான்காம் வருடங்களில் தன்னிச்சையாக வெளி, விமானம் பற்றியெல்லாம் நான் வரைவதைப் பார்த்து, அல்போன்ஸ் ஊக்குவித்தார். இரண்டாவது வருடத்தில் நான் மகாபலிபுரம் சென்று வரைந்து வந்த ஓவியங்களை, அடுத்த வருடம் புதியதாக வந்த மாணவர்கள் அனைவருக்கும் காண்பித்து, அவர்கள் முன்னாடி என்னை பாராட்டுவார். அல்போன்ஸை என்னால் மறக்கவே முடியாது. நான் கிராபிக்ஸில் ஈடுபட்ட போது ஆர்.பி. பாஸ்கரன் ஊக்கப்படுத்தினார். ஆதிமூலம் படித்துக் கொண்டிருக்கும் போதே, மாநில லலித்கலா அகாதமி விருதுக்காக என்னைத் தேர்வு செய்தார். நான் உருவாவதற்கு இவர்கள் எல்லோருமே காரணமாக இருந்திருக்கிறார்கள்.
அந்த காலகட்டத்தில், உங்கள் சமகாலத்தவர்களின் படைப்புகளில் யார், யாருடைய படைப்புகள் உங்களை கவர்ந்தன?
முனுசாமி, சந்தானராஜ், ஆதிமூலம், ஆர்.பி. பாஸ்கரன், அல்போன்ஸ், விஜய்மோகன், மூக்கையா இவர்கள் அனைவரது ஓவியங்களும் அப்போது என்னைக் கவர்ந்தன.
கல்லூரி படிப்பு முடிந்து இரண்டு வருடம் சென்றுதான் லலித்கலா அகாதமியில் வேலைக்கு சேர்கிறீர்கள். இடைப்பட்ட காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
கல்லூரி முடிந்ததும் தேவகோட்டை சென்று, அங்கே என் சகோதரரின் அச்சகத்தில் அவருக்கு உதவிகள் செய்து வந்தேன். அங்கே ஜெர்மன் காலண்டர்கள் நிறைய இருந்தன. நான் அதன் மேலே ஓவியம் வரைந்தேன். பிறகு அதன் மேலேயே டைப் மிஷின் வைத்து டைப் செய்தேன். அதற்கும் மேலே பிரிண்டிங் செய்தேன். இதுபோல் பல்வேறு காலண்டர்களை எடுத்து அதை ஓவியமாகச் செய்தேன்.
சிறுவயதிலேயே லித்கலா அகாதமியில் பணி கிடைத்துவிட்டது, ஒரு ஓவியராக உங்கள் வாழ்வைத் தொடர நிச்சயம் பெரிய உதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறோம்.
உண்மைதான். லலித்கலா அகாதமியில் வேலை கிடைத்தது, ஓவியராக என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை. அகாதமி ஓவியர்கள் அனைவரும் வந்துபோகிற இடம். அவர்களது மனநிலைகளை, அறிவுகளை பகிர்ந்துகொள்கிற இடம். கண்காட்சிகளும் கருத்தரங்குகளும் தொடர்ந்து நடக்கும் இடம். அவற்றைவிட முக்கியமானது, பொருளதாரா ரீதியான என்னுடைய தேவைகளுக்காக யாரிடமும் செல்லவேண்டியதில்லை என்றானது. என் வயிற்றுத் தேவைக்காக படம் பண்ணவேண்டும் என்னும் நிலை இருந்திருந்தால், மற்றவர்களது தேவைக்காக வரைய வேண்டிய சூழ்நிலையில்தான் இருந்திருப்பேன். இதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தவேண்டும். ஒருவருக்குச் சூழல் அமைவது மிகவும் முக்கியமானது. அறிவுஜீவிகளும் கலைஞர்களும் கூடுமொரு இடத்தில், அதுவும் கல்லூரி முடித்த மறு வருடமே எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. இது பெருமைக்குறிய ஒரு விஷயமும்கூட.
Rm. Palaniappan, Document NRC Print Making, Mixed media on paper, 44.7 x 44.7 cm, 1984 |
நான் ஓவியனாக மாறிய பிறகு, எதை படம் போட வேண்டும் என்னும் யோசனையில் எனக்கு ஆர்வத்தை உண்டு பண்ணியவை சுவிட்ச்போர்டு. அந்த காலங்களில் நான் கொண்டாட வேண்டும் என்று நினைத்த விஷயங்கள் இயந்திரம், சுவிட்ச்போர்டு போன்றவைதான். எனவே, இயந்திரங்களின் பாகங்கள், எண்கள், ஒயர்கள், சாமண்டரி இவற்றையெல்லாம் ஓவியத்தில் வரைந்து கொண்டிருந்தேன்.
உங்கள் ஆரம்பகால படைப்புகளில் பரவலாக தெரிந்தது, ‘FLYING STEPS ON MY BIRTHDAY’. அதனை எப்போது வரைந்தீர்கள், அதற்கு பின்புலமாக இருந்த மனநிலை என்ன?
கல்லூரியில் மூன்றாம் வருடம் படிப்பது வரைக்கும் என்னுடைய சிந்தனை எல்லாம் ‘ஓல்ட் மாஸ்டர்கள்’ மாதிரி ஆகவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு, ‘இல்லை இது ஓவியம் கிடையாது. ஓவியம் என்பது காலம், இடம், பொருள், சூழ்நிலைகளையும் ஓவியனின் தனிப்பட்ட உணர்வுகளையும் பிரதிலிக்க வேண்டும்’ என்று என் உள்மனம் அவ்வப்போது சொல்ல ஆரம்பித்தது. ‘ஓவியம் நேரத்தை, அதன் வெளியை சொல்லவேண்டும்’ என்று எனக்குள்ளேயே கற்பித்துக்கொண்ட விஷயம், உள்ளே ஆழப் பதிந்துவிட்டது. ‘கலை என்பது கண்ணுக்குப் புலனாகாத ஒரு விஷயம். அது சொல்லிக் கொடுத்து வரமுடியாது. உனக்குள் நீனாகவே கற்பித்துக் கொள்ளவேண்டியது’ என்று தோன்றியது.
1978இல் ஒருநாள், பிக்னிக் ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திருப்பதியில் மொட்டை அடித்துவிட்டு, ஆந்திராவில் இருந்து வந்திருந்தவர்கள் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தார்கள். சுற்றி சுற்றி ஏறும் படிக்கட்டு அது. ‘கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லாமல் இப்படி படபடவென்று ஏறுகிறார்களே’ என்று சொல்லிக்கொண்டே, ‘இந்த படிக்கட்டுகளுக்கு இடையேயுள்ள தொடர்பு இல்லையென்றால்’ என்று யோசித்தேன். அப்போது என்னை அறியாமலேயே ஓவியம் வரைகிறேன். அனிச்சையாக நடக்கிற ஒரு விஷயம் மாதிரி அது நடக்கிறது. படிக்கட்டுகளையெல்லாம் மிதக்கிற மாதிரி போடுகிறேன். அடர்த்தி இல்லையென்றால், காற்றுவெளியில் அது எப்படி மிதக்கும்? என்னுடைய முதல் படைப்பு அது. ‘DANCING STEPS ON MY BIRTHDAY’ என்று அதில் எழுதினேன்.
அதன்பிறகு நீங்கள் வரைந்த ‘விமானம்’ தொடர் வரிசை ஓவியங்கள் தொடங்கி சமீபகால பெர்லின் தொடர் வரிசை ஓவியங்கள் வரை உங்கள் படைப்புகளில் காணப்படும் தொடர்ச்சியும் மாற்றமும், அதன் பின்னால் இருக்கும் மனநிலையையும் பற்றி சுருக்கமாக சொல்லமுடியுமா? குறிப்பாக, உங்கள் படைப்புகளில் அறிவியலும் கணிதமும் பிரதானமானதாக ஏன் இருக்கிறது என்பதற்கான காரணத்தையும்.
எனக்கு பதிமூன்று வயது இருக்கும் போது, நான் ஒரு திரைப்படம் பார்க்கிறேன். ‘FALL OF BERLIN’ என்பது அந்த படத்தின் பெயர். இரண்டாம் உலக யுத்தத்தைப் பற்றிய படங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற படம். ஆங்கிலத்தில் ‘சப்டைட்டில்’ உள்ள ரஷ்யன் படம். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடும். படம் முழுக்க சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். இரவு கட்டிடத்தை நோக்கிச் சுடுவார்கள். இருட்டில் குண்டுகள் போய்க்கொண்டே இருக்கும். கட்டிடத்தின் பெரிய தூண்களில் போய் அந்தக் குண்டு மோதும். விடிந்த பிறகு கட்டிடத்தை நெருக்கத்தில் காண்பித்தால் தூண்களில் ஓட்டை, ஓட்டையாக இருக்கும். பிறகு, பகலில் மறுபடியும் கட்டிடத்தை நோக்கிச் சுடுவார்கள். இடைவேளைக்குப் பிறகு ஒரு கட்டிடத்தைக் கைப்பற்றுவார்கள். அத்துடன் யுத்தம் முடிவுக்கு வந்துவிடும். அந்த படத்துக்குப் பிறகு, ஏதோ ஒரு ஆர்வத்தில் முப்பதற்கும் மேற்பட்ட இரண்டாம் மற்றும் முதலாம் உலகப் போர் படங்களைப் பார்த்தேன்.
போர் மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்றைக்கு வரைக்கும் இருக்கிறது. நீங்கள் நினைக்கிற விஷயத்தை ஸ்தாபிதம் பண்ணவேண்டும் என்று நினைக்கும் போதே யுத்தம் தொடங்கிவிடுகிறது. செய்திகளை அனுப்புவதில், தொடர்புகொள்வதில் ஏற்பட்ட சிக்கல்களால் உருவான யுத்தம் தவிர, உலகில் நடந்த மற்ற அத்தனை யுத்தங்களிலும் அடிப்படை, “நான் சொல்வதுதான் சரி, நீ சொல்வது சரியல்ல” என்பதுதான். “உன்னை விட மக்களை நன்றாக ஆளக்கூடியவன் நான்; மக்களுக்கு உபயோகமாக இருக்கக்கூடியவன் நான்தான்” என்று சொல்லும் யுத்தங்கள்தான் எல்லாமே. ஹிட்லர் கோடிக்கணக்கான மக்களை கொன்றிருக்கிறார். ஆனால், அவருக்காக எவ்வளவு பேர் உயிரை விட்டிருக்கிறார்கள். இதில் எது சரி?
யுத்தம் மனிதனுக்குள் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அது இருப்பதால்தான் அவன் மனிதனாகவும் இருக்கிறான். சினிமாவில் சண்டை வரும் போது எவ்வளவு ஆர்வமாக அதனைப் பார்க்கிறார்கள். அந்த சண்டை அவர்களுக்குள் இருக்கும் சண்டைதான். ஆனால், என்னை யுத்தப் படங்களை நோக்கி ஈர்த்தது விமானங்கள்.
யுத்தப் படங்களில் பிரதானமானது போர் விமானங்கள்தான். ‘கமெண்டர்கள்’ வரைபடங்களை விரித்துவைத்து, அதனைச் சுற்றி நின்றுகொள்வார்கள். ‘அவர்கள் இந்த பக்கமாக வருவார்கள். நாம் இங்கிருந்து குண்டு எறியவேண்டும்’ என்பதுமாதிரி அந்த படத்துக்கு முன்னால் நின்று விவாதித்துக்கொண்டே இருப்பார்கள். இப்படியே ஓரே பேச்சாக போய்க்கொண்டே இருக்கும். அதன்பிறகு விமானம் பறக்கும். ஓரு திசையில் பத்து விமானங்கள் சென்றால் இன்னொரு திசையில் இருபது விமானங்கள் செல்லும். திரையில் விமானங்கள் அங்கும் இங்குமாக செல்வது, எனக்கு ஓவியம் மாதிரிதான் பட்டது.
பறக்கும் பொருட்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். விமானத்தைப் பின்தொடரும் போது, அதன் இயக்கம் ஒரு ஓவியத்தை திரையில் உருவாக்குவதைப் பார்த்தேன். என்னுடைய ஓவியங்களின் சாராம்சமே இதுதான். விமானம் அல்ல, விமானியின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதில்தான் என் ஆர்வம். எந்த கட்டிடத்தின் மீது குண்டு போடவேண்டும் என்பதைக் ‘கமெண்டர்’ சொல்லிவிட்டான். புகைப்படம் அல்லது குண்டு போடவேண்டிய கட்டிடத்தின் அமைப்பிடம் எதையாவது ஒன்றை அவன் விமானியிடம் காண்பிப்பான். ஆனால் நாம், இப்போது குண்டுபோடப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் போது, குண்டை எறியாமல் விமானத்தை திருப்பிக்கொண்டு வந்துவிடுவார் விமானி.
ஒரு உதாரணத்துடன் இதை விளக்க முயற்சிக்கிறேன். இப்போது நான் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நான் பேசிக்கொண்டே, உள்ளே என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் பார்க்க முடியுமா? முடிந்தால், அது நான்காவது பரிமாணமான நகர்வுக்கும் அப்புறம் உள்ள ஐந்தாவது பரிமாணம். நான் பேசிக் கொண்டிருப்பது அரூபமானதுதான்; நிச்சயம் தெளிவானது இல்லை. ஆனால், ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று நீங்கள் அனுமானம் செய்கிறீர்கள். என் மனதிற்குள் நிகழும் சிந்தனையோட்டம் உங்களுக்கு எப்படித் தெரியும்? இது அரூபமானதாகி விடுகிறது. இதை ஒரு படமாக பண்ணவேண்டும் என்று நான் நினைக்கிறேன். தீர்க்கமாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் தீர்க்கமாகச் சொல்ல வேண்டும்.
விமானத்தின் இயக்கம், அதனை ஓட்டும் விமானியின் மனநிலை, அவன் தப்பித்து திரும்பி வருவது இவை அனைத்தையும் நான் பார்க்கிறேன். 1978-79 காலகட்டம் அது. விமானத்திற்குள்ளிருக்கும் இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை படம் போடவேண்டும் என்று விரும்பினேன். தொடக்கத்தில், எனக்கு அது ஒரு பிரச்னையாகவே இருந்தது. விமானத்தின் வரைபடம், உதிரி பாகங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு தொடர்வரிசை ஓவியங்கள் செய்தேன்.
‘விமானங்களும் ஏவுகனைகளும் எனக்கு வேண்டும், இந்த பிரபஞ்சத்தில் ஒவியம் வரைய’ என்று அப்போது ஒரு பேட்டியில் குறிப்பிட்டேன். ஒரு நூலிலைத் தொடர்பு அந்த காலகட்ட படைப்புகளில் இருந்து உருவாகி, இன்றைக்கு நான் செய்து கொண்டிருக்கும் ஓவியங்கள் வரைக்கும் தொடர்கிறது.
அடுத்த காலகட்டத்தில் இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்று காட்டுவதற்கு, ஓவியத்துக்குள் எண்களைக் கொண்டுவரத் தொடங்கினேன்.
இந்தவகையில் உங்களுக்கு முன்மாதிரியாக யாராவது இருந்திருக்கிறார்களா?
1919இல் தாதா குரூப் எண்கள், இயந்திரங்களை ஓவியத்தில் உபயோகித்திருக்கிறார்கள். 1920க்குப் பிறகு அது குறைந்து, அப்புறம் நின்றுவிட்டது. 1950 - 1960களில் சிலர் எண்களை ஓவியத்தில் உபயோகித்திருக்கிறார்கள். மற்றபடி யாரும் இல்லை.
கே.சி.எஸ்.பணிக்கர் ஓவியங்களில் எண்களை எழுதியதையும், நீங்கள் எழுதியதையும் ஒப்பிட்டு, உங்களிடம் பணிக்கரின் பாதிப்பு இருக்கிறது என்று விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அவற்றிற்கான உங்கள் பதில் என்ன?
இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்று காட்டுவதற்கு, நான், எண்களை கொண்டுவரத் தொடங்கினேன். உடனே, கே.சி.எஸ். பணிக்கர் ஓவியங்களில் எண்களை எழுதினார் என்பதை வைத்துக்கொண்டு, என்னிடம் கே.சி.எஸ். பணிக்கரின் பாதிப்பு இருக்கிறது என்கிற மாதிரி எழுதத் தொடங்கிவிட்டார்கள். கே.சி.எஸ். பணிக்கர் படைப்புகள் எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த விமர்சனங்கள், ‘நாம் எதையோ செய்து கொண்டிருக்கிறோம்; இவர்கள் எதையோ எழுதுகிறார்கள்’ என்று கோபத்தைதான் உண்டு பண்ணின. ‘என்னை எங்கேயோ கொண்டுபோய் சாத்துகிறார்கள்’ என்று தோன்றியது. நான் நினைப்பது சரியா, தவறா என்பது அல்ல இங்கு பிரச்னை. நான் இதைத்தான் நினைக்கிறேன் என்று கருதிக்கொண்டு அவர்களாக எதனையோ எழுதிக் கொண்டிருந்தார்கள். எனவே, நான் என்ன செய்கிறேன் என்பதை அவர்களுக்கு உணர வைக்க, அடுத்த காலகட்டத்தில் நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் ஒவியத்திற்குள் எழுதத் தொடங்கினேன். அப்போது எனக்கென்று ஒரு பாதையை நான் நிர்ணயித்துக் கொள்கிறேன்.
விமானங்களைத் தொடர்ந்து ‘பறக்கும் மனிதன்’ தொடர்வரிசை ஓவியங்கள் உருவான போதிருந்த உங்கள் மனநிலை என்ன?
RM. Palaniappan, Document x 23 Etching Mixed Media on Paper, 22 x 30, 1985 |
ஒரு அறைக்கு வெளியே வந்து நிற்கிறீர்கள்; உள்ளேயிருந்து ஒரு இயந்திரம் இயங்கும் சத்தம் வந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு என்ன அர்த்தம்? உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பதுதானே. அதுபோல் விமானம் இயங்கிக் கொண்டிருந்தால், உள்ளே மனிதன் இருக்கிறான் என்பது காட்சியாகவே நமக்குத் தெரிகிறது. விமானத்தை ஒரு மனிதன்தான் ஓட்டுகிறான். அவன் – விமானி - இயக்கும் போதுதான் அது விமானம். அவன் இல்லாத விமானம், ஒரு பொருள்தான். இப்போது விமானி, அந்த விமானத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறான். அவன்தான் விமானம். அப்படியானால் விமானம் என்பது மனிதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பொருள் என்ற சிந்தனை எனக்கு ஏற்பட்டது. இன்னும் ஆழமாகப் பார்த்தால், அதுவும் ஒரு மனிதன்தான். இப்போது மனிதன் இல்லாமலேயே மனிதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றாக அது இருக்கிறது. இதை எப்படி படத்தில் பிரிதிபலிப்பது என்ற சிந்தனையோட்டத்தின் பின்னணியில் உருவானவைதான் ‘பறக்கும் மனிதன் வரிசை’ ஓவியங்கள்.
விமானத்தின் தலையை மனித தலையாக மாற்றி, தலையை ஒட்டி இறக்கைகள் வரைந்தேன். மனிதனை பிரதிபலிக்க தலை, விமானத்தை பிரதிபலிக்க இறக்கை; இந்த இரண்டையும் வைத்து பல்வேறு படங்களை வரைந்தேன். 1980இல் பண்ணினது இந்த வரிசை. 1981-82 வரைக்கும் ‘பறக்கும் மனிதன்’ வரிசை ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தேன். அதன்பிறகு, எனக்கே அவை ஆடம்பரமாகத் தெரிந்தன. மேலும், அது நான் இல்லை என்பது மாதிரி இருந்தது.
உள்ளே ஒரு தத்துவம் இருக்கிறது. அந்த தத்துவம் நான் இல்லை என்பது ஓவியம் மிகவும் டெகரேட்டிவாக, ஆர்ணமெண்டாக போய்விட்டது என்பதுமாதிரி இருந்தது. ஒரு மனிதனை பிரிதிபலிக்க இயந்திரங்களைப் போடவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.
கட்டிடக் கலை எப்படி உங்கள் ஓவியத்துக்குள் வந்தது?
இதை என்னுடைய படத்தில் நான் கொண்டுவந்தேன். படத்தில் ராணுவம் மனிதனை, சிப்பாயை பிரதிபலிக்கிறது. படத்தில் உள்ள எண்கள் இயந்திரம் இயங்குவதை பிரதிபலிக்கிறது. ராணுவ வாகனங்களில் உள்ள குறியீடுகளை அதன் மேல் வரைந்தேன். அவை ராணுவ விமானங்கள் செல்வதைக் குறிக்கின்றன. விமானம் சிப்பாயை தரையில் இறக்கிவிட்டுவிட்டு போய்விடுகிறது. அதன்பிறகு ஏற்கெனவே திட்டமிட்டபடி சிப்பாய் கட்டிடத்துக்குள் நுழைகிறான். இந்த விளக்கங்கள் எல்லாம் இப்போது நான் செல்பவைதான். வரையும் போது இவை என்மனதில் இல்லை.
இதற்கு அடுத்த காலகட்ட ஓவியங்கள், ‘பட்டறைகள்’ வரிசை. இதில் மனிதனின் இடுப்பு இயக்கத்தை எப்படி காண்பிக்கலாம் என்று யோசனை செய்தேன். மனிதனின் இடுப்பு பகுதியில் இருந்து ஒரு பறவை பறந்து வருவது மாதிரி வரைந்தேன். பறவையின் இறக்கைக்குப் பதிலாக மனிதன் உருவாக்கிய விமானத்தின் இறக்கையை வைத்தேன். பறவையின் இறக்கையைப் பார்த்துதான் மனிதன் விமானத்தின் இறக்கையை உருவாக்கினான். நான் விமானத்தின் இறக்கையை பறவையின் இறக்கையாக்கினேன். இடுப்பின் இயக்கத்தை சொல்ல அப்பறவை இடுப்புப் பகுதியில் இருந்து வருவது மாதிரி செய்தேன். அடுத்த படத்தில் மனிதனை தூங்கச்செய்து கனவில் விமானத்தில் பறக்கிற மாதிரி கனவை பக்கத்தில் வரைந்தேன்.
ஒரு படம் இன்னொரு படத்துக்கு தொடர்ச்சியாகத்தான் வரும். எப்போதும் என்னுடைய படமே அடுத்து நான் வரையப்போகும் புதிய படத்துக்கான எழுச்சியைத் தருவதாக இருக்கிறது.
விமானம், விமானத்தின் இறக்கை இவற்றுக்கு அடுத்தபடியாக எண்கள் அதிகம் உங்கள் ஓவியங்களில் இடம்பெற்றுள்ளது. ‘NUMBER PSYCHOLOGY’ என்று ஒரு தொடரே செய்திருக்கிறீர்கள்.
1988க்குப் பிறகு எண்கள் மனோதத்துவ தொடர் ஓவியங்களை வரைந்தேன். விஞ்ஞானக் கதைகளை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் அதிகம் வந்த நேரம் அது. அதன் தாக்கம் என்னிடம் அதிகமிருந்தது. பறக்கும் மனிதன் வரிசை ஓவியங்களை செய்துகொண்டு இருக்கும் போதே, திரைப்படங்களின் பாதிப்பு என்னிடம் வந்துவிட்டது என்று உணர்ந்து அதை ஒமிட் செய்தேன். தலையையும் இறக்கையையும் போட்டு எதைச் சொல்கிறேன்? பறத்தலைதான் சொல்கிறேன். பறப்பது என்பது என்ன? அடிப்படையில் இயக்கம்தான். அதனை காண்பிக்க தலையும் இறக்கையும் வேண்டுமா?
இயக்கம் என்றால் என்ன? ஒரு மனிதன் நடந்து வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் என்ன செய்கிறான்? அங்கே இங்கே என்று அலைந்து வரும்போது, தரையில் ஒரு கோட்டோவியத்தை உருவாக்கிக்கொண்டே வருகிறான். இதனடிப்படையில் நான் அந்த இயக்கத்தைக் கோடாக பிரதிபலிக்கிறேன். குழந்தைகள் கிறுக்கின மாதிரி கோடுகள். ஆனால், அதனை அப்படியே வரைந்திருந்தால் என்னைச் செருப்பால் அடித்திருப்பார்கள். என்னை அறியாமல் அப்போது ஒரு காரியம் செய்தேன். கோடுகளின் இயக்கத்தை பிரதிபலிக்க பின்னணியில் ஒரு நிலக் காட்சியை வைத்தேன். ஓவியக் கல்லூரியில் படித்தவனுக்கு நிலக்காட்சியை வரைவதா சிரமம்.
அந்த இயக்கத்தை விமானம்தான் என்று சொல்ல எதை வைப்பது? அப்போது எனக்கு எண்கள்தான் தீர்க்கமாக இருந்தது. விமானத்தின் வேகம், பரிமாணம், எல்லாவற்றையும் குறிப்பிட்டுக் கீழே ஒரு சார்ட் போட்டேன். அதனை கையால் எழுதினால் நம்ப மாட்டார்கள் என்று உண்மையான ஆவணம் எப்படி இருக்குமோ, அது மாதிரி டைப்போகிராப்பியில் பண்ணி, கம்யூட்டரில் டைப் செய்து அதனை சேர்த்து பிரிண்ட் எடுத்தேன். அதனை பார்க்கும் போது நிஜமான ஒரு ஆவணத்தைப் பார்ப்பது மாதிரி இருந்தது. அதில் நான்காவது பரிமாணம், ஐந்தாவது பரிமாணம் என்று எழுதினேன். ஒருவன் நினைவு நான்காவது பரிமாணம். அவன் என்ன நினைக்கிறான் என்பது எனக்கு தெரிவது ஐந்தாவது பரிமாணம்.
1982இல் இந்த வரிசை ஓவியங்களை மற்றவர்களது ஓவியங்களுடன் சேர்த்து கண்காட்சிக்கு வைத்தேன். ஓவியத்தைப் பார்க்கிறார்கள்; அதிலுள்ளவற்றை படிக்கிறார்கள்; என்னிடம் வந்து ஊர் அம்புட்டு கேள்விகள் கேட்கிறார்கள். ‘பழனியப்பன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மற்ற அனைவரது படைப்புகளும் புரிகிறது. ஆனால், உங்களதை புரிந்துகொள்ள முடியவில்லையே.’
கேட்டவர் ஒரு இன்ஜினியர். அவரை ஓவியத்துக்கு முன்னால் அழைத்து சென்றேன். ‘42’, ‘நீலநிறம்’, ‘கட்டிடம் தெரிகிறது’. . . என்று ஓவியத்தில் நான் ஒவ்வொன்றாக காண்பித்துக்கொண்டே வர, அவர் சொல்லிக்கொண்டே வந்தார். ‘உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது; பிறகு தெரியவில்லை என்று சொல்கிறீர்களே’ என்றேன் அவரிடம்.
இது தெரிந்தது என்ன, தெரியாதது என்ன என்பது குறித்து சிந்திக்கச் செய்தது. தெரியும் என்று நினைத்துப் பார்த்தால் தெரியும். தினமும் செய்தித்தாள் படிக்கிறோம். அதில் தெரிந்த விஷயமும் இருக்கிறது, தெரியாத விஷயமும் இருக்கிறது. பல விஷயங்கள் அரூபமாகத்தான் இருக்கும். ஆனால், தெரிந்தது மாதிரியே கற்பனை செய்துகொண்டு படிக்கிறோம்.
இந்த சிந்தனையின் தொடர்ச்சியாக வரைந்த ஓவியங்களில், எழுத்து உள்ள பகுதியை தலைகீழாக வைத்துவிட்டேன். படங்களை அதற்கு கீழே வைத்தேன். தையல் இயந்திரத்தால் தைத்து அதன்மேல் சீல்வைத்து ரப்பர் ஸ்டாம்பு குத்தினேன்.
RM. Palaniappan, Energy - Land - Architecture Collage, 30x22, 1993 |
இதன் தொடர்ச்சியாக ‘ஆவணம்’ தொடர் வரிசை ஓவியங்களை வரைந்தேன். நீங்கள் ஒரு நிலம் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் ஆவணம் உங்களிடம் இருக்கிறது. அந்த ஆவணத்தை நீங்கள் படிக்கும் போது, பல்வேறு நினைவுகள் உங்கள் மனதில் தோன்றும். அந்த நிலத்தை வாங்க யார் பணம் கொடுத்தார், வாங்குவதில் இருந்த பிரச்னைகள், கொடுத்தவர் பற்றிய நினைவுகள் இப்படி பல. இன்னொருவர் படிக்கும் போது, அவர் ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவராக இருந்தால் அவருக்கு ஏதோ ஒன்று புரிந்த மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும். ஆங்கிலமும் தமிழும் தெரியாத மற்றொருவர் பார்த்தால் அவருக்கு ஏதோ சத்தம் மாதிரிதான் இருக்கும். மற்றொருவருக்கு படம் மாதிரி தெரியும். விஷயம் ஒன்றுதான். அதற்கு நம் கண்ணுக்கு தெரிந்து நான்கு விஷயம் இருக்கிறது. இதனை படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். இதுதான் ‘ஆவணம்’ வரிசை ஒவியங்கள்.
அடுத்ததாக இன்னும் ஒருபடி மேலே போய், ஸ்பைரல் பைண்ட் செய்து காலண்டர் மாதிரி சுவற்றில் தொங்கப் போட்டேன். அதன்மேல் பிலிம் ஒட்டினேன். இந்த பிலிம் அதில் என்னமோ இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இந்த எதிர்பார்ப்புக்குள் ஒரு படம் இருக்கிறது. அந்த படம் உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறது, எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த விஷயத்தைதான் நான் டீல் பண்ணிக்கொண்டு வருகிறேன். ஒரு விஷயத்துக்கு இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று பௌதீகமான அம்சம், மற்றொன்று சைக்கலாஜிக்கல் பரிமாணம். பௌதீகமானது படம், சைக்கலாஜிக்கல் அம்சம் படம் இல்லாதது. ஆனால், சைக்கலாஜிக்கலாக இருக்கும் விஷயத்துக்கும் படம் உண்டு. அது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். நேரத்துக்கு நேரம் வித்தியாசப்படும். ஒன்று மறைந்து அதற்குள்ளிருந்தே இன்னொன்று வந்துகொண்டிருக்கும்.
ஒரு நாற்காலியைப் பார்க்கிறீர்கள். அப்போது இதே மாதிரி நாற்காலியை வேறு எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றுகிறது. உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் அதுமாதிரி நாற்காலியை பார்த்திருப்பீர்கள். ஆனால், அங்கு அவர்கள் வீட்டின் பரிமாணத்தோடு அதை பார்ப்பீர்கள். அதில் ஒருவர் உட்கார்ந்திருப்பார் அவருடன் சேர்த்து அதனை பார்த்திருப்பீர்கள். ஆக ஒரு விஷயத்துக்கு பல்வேறு விதமான பொருள் விளக்கங்கள், பல பரிமாணங்கள், பல பார்வைகள் இருக்கிறது. பௌதீகமான அம்சத்தையும் சைக்கலாஜிக்கல் அம்சத்தையும் பிரித்து பார்க்க முடியாது. இதனை, இதற்குள் இருக்கும் பிரச்னைகளைதான் நான் எனது படங்களுக்குள் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
அடுத்த காலகட்டம், ‘கிரகங்கள்’. மைலாப்பூர் கோவிலுக்கு நான் அடிக்கடி போவேன். தெய்வ நம்பிக்கை, நம்பிக்கை இல்லாமை எதுவும் எனக்கு பிரச்னை இல்லை. நான் கோவிலுக்கு போவது ஒரு பழக்கம். முரளிதரனும் என்னுடன் வருவார். நவக்கிரகங்களைச் சுற்றி வந்து, அதற்கு எதிர்த்தார் போல் உட்கார்ந்துகொள்வேன். அங்கிருந்து நவக்கிரங்களை சுற்றிவரும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன். நவக்கிரகங்களைச் சுற்றி வந்தால் ஒன்பது கிரகங்களையும் சுற்றி வந்ததாக அர்த்தம். பழைய காலத்தில் ஒன்பது கிரகங்களையும் ஒன்பது பக்கம் பார்த்து திருப்பி வைத்திருப்பார்கள். இப்போது ஒன்பதையும் ஓரே அளவில், ஒரே பக்கம் பார்த்து வைத்திருக்கிறார்கள். அவற்றிற்கு இடையேயான இடைவெளியும் ஒரே அளவில் இருக்கும். ‘JOURNEY TO NINE PLANETS’ வரிசை ஓவியங்களை அந்த காலகட்டத்தில்தான் செய்தேன். இன்றைய விஞ்ஞான அறிவுடன் ஒன்பது கிரகத்துக்கும் நான் போவது மாதிரி சிந்தனை. அதனை படம் பண்ணுகிறேன். அந்த படம் இப்போது பிரிட்டீஷ் மியூசியத்தில் இருக்கிறது.
அடுத்த காலகட்டத்தில், தெரிந்த விஷயம், தெரியாத விஷயம் இரண்டையும் பற்றிய என்னுடைய சிந்தனைகளை வரைந்தேன். தெரிந்த விஷயத்தை நிறத்தோடும், தெரியாத விஷயத்தை நிறமற்றதாகவும் செய்தேன்.
ஒரு கட்டத்தில் கிரகங்களை வரைவதை விட்டுவிட்டேன். ஊர் அம்பூட்டு விஷயங்களையும் தெரிந்த மாதிரி பேசிக் கொண்டிருப்போம். தெரியாத விஷயங்களையும் தெரிந்த மாதிரி பேசிக் கொண்டிருப்போம். இதனை படம் பண்ணவேண்டும் என்று விரும்பினேன். இங்கேதான் கிரகங்கள் வரிசை தொடர்ச்சியாக ஏலியன் கிரகம் என்று தெரிந்த மாதிரி தலைப்பு கொடுத்து கலர்புல்லாக வரைந்தேன். அதன்பிறகு அதனை வரையறுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு விபத்து நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், நான் பார்க்கவில்லை. உங்களிடம் இருந்து தெரிந்துகொண்டதை இன்னொருவரிடம் சொல்லும்போது நான் பார்த்த மாதிரியே சொல்லுவேன். என்னிடம் கேட்டவர் இன்னொருவரிடம் சொல்லும்போது அவர் பார்த்த மாதிரியே சொல்லுவார். அவரும் கொஞ்சம் கதைகள் சேர்ப்பார். நடந்து முடிந்த விஷயமோ ஒன்று. ஆனால், இப்படி பலர் வழியாக அது திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொருத்தர் மனதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு மாதிரி நடந்து கொண்டிருக்கிறது. இதை வரைந்தேன்.
இதற்கு அடுத்த காலகட்டம்தான் நீங்கள் குறிப்பிடும், ‘NUMBER PSYCHOLOGY’. 1985இல் என்னுடைய இந்த ஓவியக் கண்காட்சியைப் பார்த்தவர்கள், ‘என்னைய்யா, எப்போது பார்த்தாலும் எண்கள்; போதாதென்று அதற்கு நூறு கதைகள் வேறு சொல்கிறேயேப்பா’ என்றார்கள். ‘எண்களை வெறும் படமாகவும் உயிரற்றதாகவும் பார்ப்பீர்கள் என்றால் பிரச்னை என்னிடம் இல்லை, உங்களிடம்தான். மனிதனை ஓவியமாக வரைந்த ஒன்றைப் பார்த்து, ‘தத்ருபமாக வரைந்திருக்கிறார், உயிர் மாதிரி இருக்கிறது’ என்பார்கள். நான் கிண்டலாக, ‘எங்கேயா உயிர் இருக்கு, அதனை எடுத்துக்கொண்டு வாய்யா’ என்பேன்.
நேரம் பார்க்கிறோம், பணத்தை எண்ணிக் கொடுக்கிறோம். எல்லாமே கணக்கில்தான் இருக்கிறது. இதனடிப்படையில்தான் ‘எண்கள் மனோதத்துவம்’ தொடர் வரிசை ஓவியங்களை உருவாக்கினேன். 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 0என்று வைத்துக்கொள்வோம். படிக்கிறவன் மனது இதில் 4 இல்லை என்பதை உடனே உணரும். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்று சொல்லிக்கொண்டே இருங்கள். இதில் என்ன நடக்கிறது? சுற்றி, சுற்றி வந்துகொண்டே இருக்கிறோம். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1-இது ஸ்பிரிங். 1, 2, 3, 4, 5, 5, 5, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 5, 5, 5, 6, 7, 8, 9 இதில் 5 வரும் இடத்தில் எதோ ஒரு பிரச்னை இருக்கிறது என்று தோன்றுகிறது. எண்களில் இவ்வளவு சொல்லமுடிகிறது.
இதன் அடுத்த கட்டமாக சதுரம், வட்டம், செவ்வகம் ஆகியவற்றைப் போட்டு, அதற்குள் 7 வைத்தேன். இந்த ஓவியத்தில் 7 ஒரே எண்தான் என்றாலும் இது இருக்கும் இடத்தைப் பொறுத்து, அதன் மதிப்பு மாறுகிறது. அது ஒன்றல்ல என்ற எண்ணம் பார்ப்பவர்களிடம் உருவாகிறது. வீட்டில் இருக்கும் பழனியப்பன், ஓவியர் பழனியப்பன், உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பழனியப்பன், லலித்கலா அகாதமி செகரட்டரி பழனியப்பன் எல்லாம் வேறுவேறு. உங்களிடம் இப்போது பேசிக் கொண்டிருப்பவற்றை வீட்டில் பேசிக் கொண்டிருந்தால் உதைப்பார்கள். கிறுக்கு புடித்துவிட்டது என்பார்கள். ஓவ்வொருவரிடமும் ஓரு பழனியப்பனாக இருக்கிறேன். இதை வரையவேண்டும் என்று திட்டமிட்டேன். அதுதான் இந்த ஓவீயம்.
அடுத்தது, ‘DOCUMENT – ALIEN PLANETS’ வரைந்தேன். அறுபத்திமூன்று நாயன்மார்கள் கதை நூற்றுக்கு தொன்னூறு பேருக்குத் தெரியாது. தெரிந்த பத்து பேருக்கும் நான்கு நாயன்மார் கதைதான் தெரியும். அந்த நான்கும் நான்கு வித்தியாசமான கதைகள். இவர்கள் எல்லோரையும் நவக்கிரகம் சுற்றி வந்தது மாதிரி சுற்றி வந்துவிடுகிறோம். எல்லா நாயன்மார்களும் ஒரே உயரத்தில் இருக்கிறார்கள். கோவிலுக்கு வருபவர்கள் எல்லா நாயன்மார்களையும் பார்த்துக்கொண்டே, போய்க்கொண்டே இருப்பார்கள். இதை படமாக செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். 63 படம் பண்ணவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். பதினாறு பண்ணுவதற்கே இரண்டு வருடம் ஆகிவிட்டது. அந்த பதினாறையும் காட்சிக்கு வைத்தேன். மும்பையிலும் டில்லியிலும் 16 படத்தை வரிசையாகவும் ஒரு படத்தை மட்டும் தனியாகவும் வைத்தேன். மக்கள் என்னுடைய படத்தை பார்த்து நகர்ந்துகொண்டே இருந்தார்கள். எதையுமே உணராமல், நாயன்மார்களை சுற்றி வருவது மாதிரி வந்தார்கள். ஆனால், தனி படம் பக்கத்தில் வந்து நின்று உற்றுப் பார்த்தார்கள். ‘மிக அழகான படம்’ என்றார்கள். அதே படம்தான் பதினாறில் ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால், அதனை அவர்கள் பார்க்கவில்லை. இந்த சைக்கலாஜிக்கல் அனுபவத்தைப் பார்க்கவேண்டும் என்றுதான் அப்படி செய்தேன். வரிசையாக ஒரே அளவில் ஒரே இடைவெளியில் வைத்தால் மக்கள் பார்க்க மாட்டார்கள்.
உங்களது சமீபத்து படைப்புகளான ‘NEW BERLIN – ON PROCESS’க்கான உந்துதல் எங்கேயிருந்து வந்தது?
RM. Palaniappan, A Negotiated Settlement Conte crayon on treated paper, 76.2 x 55.88 cm, 2006 |
ஊருக்கு வந்த பிறகு பிரிண்ட் போட்டு பார்த்தபோது, நான் எப்படி புகைப்படம் எடுத்தேன் என்பதை நினைத்தேன். யுத்தத்தில் சிப்பாய்கள் கட்டிடத்தை நோக்கி சுட்ட மாதிரிதான் நானும் என் கேமிராவில் சுட்டுத் தள்ளியிருக்கிறேன். அதன் பிறகு அந்த படங்களை வைத்து கிராபிக்ஸ் பண்ணினேன். கட்டிடத்தை சுற்றி நிறைய பேர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு இடையே புகுந்து அங்கே இங்கே நுழைந்து நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதையும் ஆவணப்படுத்தினேன். ஓவியத்தில் சிகப்பு கோடு என்னுடைய இயக்கம். கருப்புக் கோடு புகைப்படம் எடுத்துகொண்டிருந்த மற்றவர்களுடைய இயக்கம். இந்த படைப்பின் வழி அந்த கட்டிடக் கலையையும், அந்த இடத்தில் என்னுடைய இருப்பையும், 50 வருடத்துக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு பாராளுமன்றமாகும் நிகழ்வையும் நான் கொண்டாடுகிறேன்.
அதனை வரைந்து கொண்டிருக்கும் போது, இவ்வளவு வருடமும் நாம் தேடிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் இதுதாண்டா என்று தோன்றியது. தெளிவாக முடிவு செய்துவிட்டேன். அதன்பிறகு கோடுகளை மட்டும் வரைந்தேன். அதற்கான தலைப்புகளை தத்துவார்த்தமானதாக வைத்தேன். எனக்கு ஓவியங்களைவிட ஓவியங்களுக்கு வைக்கும் தலைப்புகள் முக்கியம்.
என் வாழ்க்கையில் இருக்கும் விஷயங்களைத்தான் நான் என் ஓவியங்களில் வைக்கிறேன். இப்போது செய்துகொண்டிருக்கும் படைப்புகள் அதற்கு நான் வைக்கும் தலைப்புகளும் மிக என் வாழ்வுடன் மிக நெருக்கமானவை. அமெரிக்காவில் உலகவர்த்தக மையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் டெலிவிஷனைவிட்டு நான் எழுந்திருக்கவே இல்லை. புஷ் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி ஆகிவிட்டார். என்னுடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக அது இருந்தது. அல்லது நான் சம்பந்தப்படுத்துகிறேன். கடைசி காலத்தில் நான் வரைந்த ஓவியங்களுக்கு கொடுத்த தலைப்புகள் அந்த நேரத்தில், செய்தித்தாள் அல்லது டெலிவிஷன் பேட்டிகளில் இருந்து எடுத்தவைதான்.
உங்கள் படைப்புகளுக்கான எதிர்வினைகள், விமரிசனங்கள் எப்படி இருந்தது. அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டீர்கள்?
தொடக்கத்தில் என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. என் ஓவியங்களையும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும், உள்ளூர எனக்கு அதில் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று பட்டது. எனவே, அதைத் தொடர்ந்து செய்தேன். அதன்பிறகு ஒரு சிலர் இவன் நம்மை விட்டுப் போகமாட்டான், நம்மை புரிந்துகொள்ளவும் மாட்டான். நாமாவது இவனை புரிந்துகொள்வோம் என்று புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள்.
தான் யாருக்காக படைக்க வேண்டும் என்ற கேள்வி எப்போதும் கலைஞர்கள் முன்னால் இருக்கிறது. உலக அறிவின் மொத்த களஞ்சியமும் நாம் கிடையாது. மொத்த களஞ்சியத்தில் ஒரு சிறு பூச்சி அவ்வளவுதான். அந்தச் சிறு பூச்சியை நூறு சதவிகிதமாக பெருக்கி, அது உங்கள் அறிவு என்று வைத்துக்கொள்வோம். அந்த அறிவுடன் நீங்கள் சொல்கிற விஷயத்தை, சொல்கிற மாதிரி புரிந்துகொள்வதற்கான அறிவு, ஒருவனுக்கு ஐந்து சதவிகிதம் இருக்கும், இன்னொருவனுக்கு நூறு சதவிகிதம் இருக்கும். இரண்டு பேருமே சமூகத்தில்தான் இருக்கிறார்கள். இதில் யாருக்காக நீங்கள் படம் பண்ணுவீர்கள். நூறு சதவிகித அறிவு கொண்டிருப்பவர்களுக்குத்தான்.
அந்த நூறு சதவிகித அறிவுகொண்டவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்னும் நிலையில், சமூகத்தைப் பொருட்படுத்தாமல் ஓரு கலைஞன் எப்படி எக்ஸிஸ்ட் ஆகமுடியும்?
நான் செய்யும் அனைத்தும் அல்டிமேட்டிலி சமூகத்திற்குதான். ஆனால், அந்த சமூகத்தின் எந்த பகுதிக்காக செய்யவேண்டும் என்பதுதான் என் கேள்வி. நானே சமூகத்தின் ஒரு பகுதிதானே. சமூகத்தின் ஒரு பகுதியான எனக்காக செய்ய யார் இருக்கிறார்கள்? என்னுடைய சிந்தனைக்காக செய்ய யார் இருக்கிறார்கள்? என்ன நினைக்கிறேனோ அதனை செய்யவேண்டும். எனக்காகத்தான் நான் வாழவேண்டும். சமூகத்தில் இருக்கிற எனக்காக நான் செய்யும் போது, அது சமூகத்துக்குதான்.
நம்முள்ளே பல்லாயிரம் வருட மனிதன் இருக்கிறான். நம்மிடம் இருக்கும் மனிதனை வெளியே எடுத்துக்கொண்டு போடவேண்டும். உலகம் உருவானது தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இருக்கும் மனிதனின் பிரதிநிதி. சிருஷ்டி நடக்கும் நேரத்தில் அவன் அவனாக இல்லாமல் அவனுக்குள்ளே இருக்கும் மனிதனைப் பிரதிநிதித்துவம் செய்தானானால் அவன் இந்த மொத்த உலகத்தையும் பிரதிநிதித்துவம் செய்வான். இதனை உணர்ந்துகொண்டவன் சகமனிதனை மதிப்பான். அதன் பிறகுதான் சிருஷ்டி தொடங்குகிறது. இதை உணராதவர்களால் எதனையும் சிருஷ்டிக்க முடியாது.
கலையையும் அறிவியலையும் எப்படி இணைக்கிறீர்கள்?
விஞ்ஞானம் எனக்கு சந்தோஷமான ஒரு விஷயம். விஞ்ஞானிகள் மற்றவர்கள் விளையாடுவதற்காக கம்யூட்டர் உட்பட பல்வேறு பொருட்களை விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். நாமும் இந்த உலகத்திலிருந்து செல்லும் போது நம் குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பொருளை விட்டுவிட்டு செல்லவேண்டும். ஓவியர்கள்தான் முதல் சிருஷ்டிகர்த்தாக்கள். எனவே அவனும் விஞ்ஞானிபோல் அடுத்த விஷயத்தை சொல்வதற்கு விட்டுவிட்டு போகவேண்டும். அப்படி விட்டுவிட்டு போகவில்லை என்றால் அவன் கலைஞனே கிடையாது. கலைஞனாக இருக்கவும் முடியாது.
கலைஞனாக இருக்க தன் சுயத்தை உணரவேண்டும். அதன்பிறகு சுற்றுச்சூழலை உணரவேண்டும். சுற்றி இருக்கும் எல்லா விஷயத்தையும் உணரும் சக்தி வேண்டும். சென்ஸ்ஸிபிளிட்டிக்குள்ளே தத்துவம், அரசியல், காற்று எல்லாமே இருக்கிறது. இவையெல்லாவற்றையும் உணர முடியாதவன் ஓவியனாக முடியாது. ஒரு விஞ்ஞானி ஒன்றை உருவாக்கும் போது, சிருஷ்டி நடக்கும் இடத்தில் அவன் கலைஞன்தான். ஒரு தத்துவவாதியோ, அரசியல்வாதியோ அரசியல் சாசனத்தை எழுதும் சமயத்தில் அவன் ஒரு கலைஞன்தான். கலை, அறிவியல், கணிதம், அரசியல் இவை அனைத்துக்குள்ளும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. எந்த ஒன்றும் தனியாக இல்லை. கலையும் பகுதி அரசியல்தான்.
ஓவியம் சமகாலத்தில் நடக்கும் விஷயங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். தொடர்புபடுத்த வேண்டும் என்று சொல்லவில்ல. தொடர்புபடுத்த வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு முயற்சிக்க வேண்டும் என்றாகிறது. நான் சொல்வது தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதைத்தான். அப்போது பத்தாயிரம் வருடம் கழித்தும்கூட அந்த படம் ஒரு குறிப்பிட்ட காலத்தை பிரதிபலிக்கும்.
ஒன்று உள்ளே இருந்து வருகிறது; இன்னொன்று வெளியே இருந்து வருகிறது. இந்த இரண்டும் கலக்கிறது. கலக்காமல் இருக்க முடியாது. ஏனெனில், நீங்கள் இந்த சமூகத்தின் ஒரு பகுதி. உங்களை அரியாமலேயே பல விஷயங்களின் பாதிப்பு உங்களிடம் வரும். சில நேரங்களில் பிரக்ஞையுடனேயே வரும். இதனை எடுத்துக்கொள்ளலாம் என்று நாம் விரும்பி வரும். நீங்கள், உங்களின் சிந்தனை, படைப்புகள் எல்லாம் தனி பாதையில் போய்கொண்டிருக்கும். இன்னொன்று தாக்கம். அந்த தாக்கத்தை நாம் உணரவேண்டும். அதனை உணரவில்லை என்றால் உங்களை நீங்கள் மறந்துவிடுவீர்கள். அப்போது உங்களுக்குள் இருக்கும் மனிதனையும் மறந்து விடுவீர்கள். அப்படியானால் உங்களிடமிருந்து புதியதாக ஒரு விஷயம் வராது.
2005ஆம் ஆண்டு தீராநதி இதழில் வெளியானது; சந்திப்பு: வெங்கட், தளவாய் சுந்தரம்; பழனியப்பன் புகைப்படம்: ஆர். சண்முகம்
No comments:
Post a Comment