15 June 2013

பரண்

காகிதமும் பனையோலையும்

ஞானதீபம்

சுகுணபோதினி, சூலை - ஆகட்டு 1888


காகிதமும் பனையோலையும் எழுதுவதற்கு ஏற்றவை. காகிதம் இக்காலத்தில் எங்கும் வழங்குகிறது. இரண்டொரு தலைமுறைக்கு முன் இந்தியாவெங்கும் பனையோலையே வழங்கியது. இக்காலத்திலும் அநேக இடங்களில் கீழ்சாதி சனங்கள் பனையோலையில் எழுதுகிறார்கள்.

பனையோலையை வீட்டுக் காகிதத்தைப் பிரயோகிப்பது எனக்கு முற்றிலும் சந்தோசகரமானதில்லை. பனையோலை அடியோடு எடுபட்டுப் போகாதென்று நம்புகிறேன். அது நம் முன்னோர் அடைந்த நாகரிகத்துக்கு அறிகுறியாக இருக்கிறது. சிற்சில கிராமங்களிலேனும் பனையோலை பிரயோகிக்கப்பட வேண்டும். அவ்வாறு பிரயோகிக்கப்படும் என்றும் நம்புகிறேன்.

பனையோலைக்குப் பதிலாகக் காகிதத்தை உபயோகிக்க ஆரம்பித்தது, சொற்ப காலத்துக்கு முன்தான். நான் பனையோலையில் நூற்றுக்கணக்கான உத்திரவுகள் எழுதிக் கையொப்பமிட்டது நன்றாய் ஞாபகமிருக்கிறது. என் பாலியத்தில் நான் அறிந்த அநேக இடங்களில் பனையோலை காலஞ்சென்று கனனமாய்விட்டது பற்றி அதற்குக் கரும சுலோகம் எழுதிப் படிப்பது தக்கதென்று எனக்குத் தோன்றுகிறது.

பனையேறி தக்க பருவத்தில் ஓலைகளை வெட்டிக் காயவைப்பான். அவை காய்ந்தபின் சகல சனங்களுக்கும் பயன்படும்படி ஓரிடத்தில் சேர்க்கப்படும். என்ன எழுத வேண்டியிருந்தாலும் இவ்வோலையிலேயே எழுத்தாணி கொண்டு எழுதுவார்கள். இக்கருவி எந்தப் பாஷையிலும் எந்த லிபியிலும் லிகிதம் நீடித்திருக்கும் வண்ணம் எழுத உதவும். எழுத மை வேண்டியதே இல்லை. எவனும் எந்தச் சமயத்திலும் எழுத்தாணி தவிர வேறொன்றுமில்லாமல் ஓலையில் எழுதக் கூடும். இவ்வெழுதுகோலுக்குக் கிரயம் அற்பமே. ஓலைக்கோ செலவேயில்லை. ஓலை இவ்வளவு மலிவாயிருந்ததினால்தான் எல்லாரும் எழுதப் பழகினார்கள்.

பனையோலையினால் சர்க்கார் உத்திரவுகள் விடுக்கப்பட்டன. அரசர் தம் சாசனங்களைப் பிரசுரம் செய்தார்கள். குடிகள் தம் குறைகளை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். காதலன் தன்னுள்ளத்தை நாயகிக்கு வெளியிட்டான். வாணிபர் தம் கணக்கு எழுதி வந்தனர். அறிஞர் தாம் கற்றவற்றைச் சேமித்து வைத்திருக்கிறார்கள். ஓலையினாலேயே மதக்கோட்பாடுகள் நிலைபெற்றன. வேதாகமங்கள் நிலைபெற்றன. வேதாகமங்கள் நிலைபெற்றன. சனங்களுடைய தாவர சங்கம சுதந்திரங்கள் நிலையாயின. குடும்பங்களின் வம்சாவழிகளும் அவரவர் சாதகங்களும் குறிக்கப்பட்டன. ஒரு வார்த்தையில் சொல்வோமானால், பனையோலையானது அநந்தம் விதமாய் மனிதனுக்கு உபயோகமுள்ளதாகவும் சிறந்த இன்பமுள்ளதாகவுமான காரியங்களுக்கு ஏதுவாயிருந்திருக்கிறது. பனையோலை இல்லாவிட்டால், முன் எத்தனையோ ஆயிர வருஷமாய் நம் முன்னோர்கள் தாம் அடைந்த சீர்த்திருத்தத்தின் பயன் பிற்காலத்தவருக்கு எட்டாமல் அழிந்துபோயிருக்குமே!

ஓலை, காகிதத்தைக் காட்டிலும் மலிவு. அதிகநாள் நிற்கத்தக்கது. அது இங்கேயே உண்டாவதாகையால் எல்லோருக்கும் எங்கும் கிடைக்கத்தக்கது. மழை, காற்று, கறையான் இவற்றால் எளிதில் சேதப்படாது. மேலும், அதில் எழுதியதை இலேசில் திருத்தி மோசம் செய்வதற்கு அவ்வளவு இடமில்லை.

ஐயோ! பனையோலைக் காலம் போய்விட்டதே! இனி வரப்போகிறதா? அதற்குப் பதிலாகத் தேயிலையும் புகையிலையும் வந்துவிட்டன. இனி, சரசுவதியை எப்படிப் பூசிப்பது! மைக்கூடு, உருக்குப்பேனா, தேநீர்க் கோப்பை, புகைச் சுருட்டு இவற்றை வைத்துப் பூசிப்பதா? என்ன செய்யலாம்! இரக்கமற்ற காலச் சக்கரத்தின் வேறுபாடுகளைச் சகிப்பதைத் தவிர வேறுவகையில்லையே!

பூர்வ இந்து வம்சத்து அரசர்களில் ஒருவரான திருவனந்தபுரம் மகாராசா அவர்கள் தமது முக்கிய உத்தியோகஸ்தர்களுக்கு இன்றும் ஓலையிலேயே சன்னது கொடுத்து வருகிறார்கள். தொன்மை மறவாத இந்தப் பிராசீன அனுஷ்டானத்தைக் கைவிடாதிருப்பீர்களாக. ஓலை, காகிதத்துக்கும் நாய்த்தோலுக்கும் இடம் கொடாதிருக்கட்டுமே!