01 October 2011

உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்

டிராகுலா


ராஜகோபால்

பிராம் அபிராகாம் ஸ்டாக்கர் என்ற அயர்லாந்து எழுத்தாளரின் தனித்துவமான கண்டுபிடிப்பு 'டிராகுலா'. ஸ்டாக்கர் பல நாவல்கள் எழுதியிருந்தாலும், 'டிராகுலா' நாவலை அவர் 1897ஆம் ஆண்டு வெளியிட்ட பிறகுதான் உலகம் முழுக்க ஸ்டாக்கர் புகழ் பரவத் தொடங்குகிறது. அப்போது அவருக்கு 50 வயது. பிராம் ஸ்டாக்கர், அயர்லாந்திலுள்ள டூப்லீன் நகரில் 1847ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலிருந்த நரம்புக் கோளாறு நோய் காரணமாக, அவரது பால்ய காலத்தின் பெரும்பகுதியும் படுக்கையிலேயே கழிந்தது. இருட்டும் தனிமையும் பயமும் அந்நாட்களில் அவரை அலைகழிக்கத்தன. அக்காலகட்டத்தில் அவருக்கு துணையாக நின்ற ஒரே ஆறுதல், அந்த அறையில் உயரத்தில் இருந்த ஒற்றை சன்னலும் அதன் நிழல் அசைவுகளைக் கொண்டு அவர் உருவாக்கிக்கொண்ட கற்பனை உலகமும்தான். வேலையாட்கள் அவருக்காகச் சொன்ன நாட்டுபுறக் கதைகள் அவரது கற்பனைக்கு வளம் சேர்த்தன. சதா அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பதைப் பற்றிச் சொல்லும் போது, "எந்நேரமும் படுக்கையில் கிடப்பது கல்லறைக்குள் சுருண்டு கிடப்பது போலிருக்கும். இரவிலோ தூக்கம் வராது. ஆவியாகவோ, காற்றாகவோ மாறி எங்கேனும் சஞ்சரிக்க முடியாதா என்று மனம் ஏங்கும்'' என்கிறார் ஸ்டாக்கர். இந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் 'டிராகுலா' நாவல். எட்டு ஆண்டுகள் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து இந்நாவலை எழுதியுள்ளார் ஸ்டாக்கர். டிரான்ஸ்சில்வேனியாவில் புழங்கும் மொழிகளில் ஒன்றான வாலாச்சிய மொழியில் [ஷ்ணீறீறீணீநீலீவீணீ] டிராகுலா என்றால் சாத்தான் என்று பொருள். இந்நாவல் வெளியாகி ஒரு நூற்றாண்டும் பதிமூன்று வருடங்களும் கடந்துவிட்டன. இருப்பினும் டிராகுலா உருவாக்கிய பயம் தேசம், மொழி, இனம் எல்லாவற்றையும் கடந்து இன்றும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

டிராகுலாவின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாவல் இரண்டு பகுதிகளாக விரிகிறது. முதல் பகுதி, பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. டிரான்ஸ்சில்வேனியா நாட்டின் ஒரு பகுதியை டிராகுலா என்னும் அரசன் ஆண்டு வருகிறான். அவனது மனைவி பேரழகி. அவர்கள் ஒருநாள் பிரிந்திருக்க நேர்ந்தாலும், அந்நாளை நரகமாக உணர்வார்கள். அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் பேரன்பும் பெரும் காதலும் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியும் வேடிக்கை விளையாட்டுமாக நகர்கிறது. அப்போது, டிரான்ஸ்சில்வேனியா மீது துருக்கி படையெடுக்கிறது. டிராகுலா நாட்டை காப்பாற்றுவதற்காக யுத்தத்துக்குச் செல்கிறான். அவனது அசாத்திய திறமையையும் கடுமையான பயிற்சியையும் வெளிப்படுத்தி அவன் போரில் வெற்றிவாகை சூடுகிறான். வெற்றிபெற்ற சந்தோஷமும் நீண்ட நாட்களாகப் பார்க்காத மனைவியைக் காணும் ஆவலும் சேர்ந்துகொள்ள வீரர்களோடு வேகமாக அரண்மனைக்குத் திரும்புகிறவனுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அரண்மனையில் நுழையும்போது, டிராகுலாவின் ஆசை மனைவி தற்கொலைச் செய்து தன்னை மாய்த்துக்கொண்டு செய்தி அவனுக்கு சொல்லப்படுகிறது. அவளது மரணம் டிராகுலாவை பித்துகொள்ளச் செய்கிறது. அழுது அரற்றி கதறுகிறான். யுத்தக் களத்தில் டிராகுலா கொல்லப்பட்டு விட்டதாக ஒரு தவறான தகவல் அவன் மனைவிக்கு சொல்லப்பட, அரசி ஆற்றாமையில் அரண்மனை மாடத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைச் செய்துகொண்டாள் என்ற செய்தி அவனுக்குத் தெரிய வருகிறது. அரசியின் தற்கொலைக்கு காரணமனவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கிறான். பிறகு, அரசியின் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், அரசியின் உடலைத் தூக்கிக்கொண்டு தேவாலயத்திற்குள் நுழையும் டிராகுலாவிற்கு, அங்கே இன்னொரு அதிர்ச்சி!

தற்கொலைச் செய்துகொண்டவர்களை முறையான அடக்கம் செய்யமுடியாது என தேவசபையும் கிறிஸ்தவப் பாதிரியார்களும் டிராகுலாவை நிராகரிக்கிறார்கள். 'தேவசபைக்கும் மக்களுக்கும் நான் செய்த ஊழியத்திற்கு இந்த அவமரியாதைதான் எனக்குக் கிடைத்தப் பரிசா!' என சீற்றம் கொள்கிறான். "இனி நான் கிறிஸ்தவ மதத்திற்கும் மனித இறப்பிற்கும் எதிரி. நித்தியமானவனாக நான் மாறிகாட்டுகிறேன்'' என்று சூழுரைத்து, உடைவாளை உருவி சிலுவையையும் தேவசபை ஊழியர்களையும் வெட்டிச் சாய்க்கிறான். சிலுவையிலிருந்தும் வெட்டுப்பட்டு சாய்ந்தவர்களிடமிருந்தும் ரத்தம் பெருகி வழிகிறது. குருதியில் அரசனும் அரசியும் கரைந்துபோகிறார்கள்.

நாவலின் இரண்டாம் பகுதி... நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஜோனதன் ஹார்க்கர் என்பவன் லண்டனிலிருந்து டிரான்ஸ்சில்வேனியாவிற்குப் பயணம் செய்கிறான். டிரான்ஸ்சில்வேனியாவில் இருக்கும் பிரபு ஒருவர், லண்டனில் ஓர் இடத்தை வாங்க விரும்புவதாகவும் அவருக்கு ஆலோசனை தேவைப்படுகிறது என்றும் அவனது அலுவலகம் அவனை அனுப்புகிறது. பயணத்தின் போது அவன் விசித்திரமான சில நிகழ்ச்சிகளை எதிர்கொள்கிறான். நகரத்தில் இருந்து ஒதுங்கி, தனியாக மலை முகட்டிலுள்ள அரண்மனையில் அப்பிரபு வசித்து வருகிறார். அவரது பெயர் கவுண்ட் டிராகுலா என்பதை ஹாக்கர் அறிந்துகொள்கிறான். கவுண்ட் டிராகுலாவின் சாரட் வண்டியில் மலை முகட்டை நோக்கிச் செல்லும் போது, மீண்டும் விசித்திரமான சில நிகழ்வுகளை அவன் பார்க்கிறான். வழியெங்கும் ஓநாய்களையும் விசித்திர ஒலிகளையும் அவன் கேட்கிறான். அரண்மனை வாயிலில் அவனை வரவேற்கும் கவுண்ட் டிராகுலாவின் தோற்றமும் நடத்தையும் அவனை பீதி கொள்ளச் செய்கிறது. அரண்மனையில் தங்கும்போது யாரோ தன்னை உளவு பார்ப்பதாகவும் அமானுஷ்யமான சில விஷயங்களையும் அவன் உணர்கிறான். இரவில் அங்கு ஏதேதோ நிகழ்கிறது. சிறிது நாட்கள் சென்ற பிறகுதான், அரண்மனையில் அவன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதை தெரிந்துகொள்கிறான். ஓரிரவு அவன் அரண்மனையை சுற்றிப் பார்க்கும்போது மூன்று பெண் ரத்தக் காட்டேரிகளிடம் சிக்கிக் கொள்கிறான். அவை அவனை விழுங்க முயலும்போது, கடைசி நொடியில் கவுண்ட் டிராகுலா தோன்றி அவனைக் காப்பாற்றுகிறார். அதற்கு பிறகுதான் டிராகுலா ஒரு ரத்தகாட்டேரி என்பதும், அது இறந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டது என்பதும் ஹாக்கருக்குத் தெரிகிறது. எதன் பொருட்டு தான் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. லண்டனில் இருக்கும் தன்னுடைய காதலியான மினா முர்ரேவுக்கு எல்லாவற்றையும் பற்றி கடிதங்கள் எழுதுகிறான், ஹார்க்கர். நீண்ட போராட்டதிற்கு பிறகு அவன் அங்கிருந்து தப்பி லண்டன் திரும்புகிறான்.

அவனைத் தேடிக்கொண்டு டிராகுலா லண்டலுக்கு கப்பலில் பயணம் செய்கிறது. கப்பலில் வினோதமான விஷயங்கள் நடக்கின்றன. மாலுமிகளில் பலர் காணாமல் போகிறார்கள். கப்பல் கரை சேரும்போது, கேப்டனைத் தவிர எவரும் உயிருடன் இல்லை. ஆள் அரவமற்ற கப்பலைக் கண்டு லண்டன் அதிகாரிகளும் மக்களும் திகைத்து, கேப்டனை விடுவித்துவிட்டு கப்பலை ஆராய்க்கிறார்கள். பிணங்களும் டிரான்ஸ்சில்வேனியாவில் ஏற்றப்பட்ட சில பெட்டிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். பெட்டிகளை உடைத்துப் பார்க்கும்போது பெட்டிகளுக்குள் எலிகளும் மணலும் மட்டும் கிடக்கின்றன. இவற்றிற்கிடையில் டிராகுலா லண்டன் மாநகருக்குள் நுழைந்துவிடுகிறது.

அச்சமயம், ஹாக்கரிடம் இருந்து நீண்ட நாட்களாக கடிதம் எதுவும் வராததால் மினா முர்ரே கலக்கமுற்று இருக்கிறாள். மினா முர்ரேயின் தோழியான லூசியை ஏதோ விசித்திர நோய் தாக்குகிறது. நோய் முற்றிய நிலையில் திடிரென்று ஒருநாள் லூசி காணாமல் போக, அவளைத் தேடும் மினா முர்ரே, லூசியை ஒரு அந்நிய புருஷனோடு கண்டுபிடிக்கிறாள். திரும்பி வந்த லூசியை பரிசோதிக்கும் மருத்துவர் வென்ஹில்சிங்கின் அவளது கழுத்தில் பதிந்து கிடக்கும் இரு பற்களைக் கண்டுகொள்கிறார். லூசியை காப்பாற்றுவதற்காக லூசியின் ரத்தத்தை முழுவதுமாக மாற்ற முயல்கிறார். [நாவலில் இச்சம்பவம் எளிதாக விவரிக்கப்பட்டு இருந்தாலும், நாவல் வெளிவந்து நீண்ட காலத்திற்கு பிறகே ரத்தமாற்று சிகிச்சையை நவீன மருத்துவம் கண்டுபிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.] மருத்துவர் முயற்சி தோற்று லூசி இறந்துபோகிறாள். இதற்கிடையில் வீடு திரும்பும் ஜோனதன் ஹாக்கர், டாக்டர் வென்ஹில்சிங்கிடம் யாவற்றையும் விவரிக்கிறான். எல்லாவற்றையும் அறிந்த டிராகுலா சீற்றம்கொண்டு மினா முர்ரேவின் கழுத்தில் மூன்று முறை பல் பதித்துவிடுகிறது. மேலும், அவளைக் கட்டுபடுத்தும் பொருட்டு தன் ரத்ததையும் மினா முர்ரேவை குடிக்கச் செய்கிறது. பின் அவளை மயக்கி அழைத்துகொண்டு டிரான்ஸ்சில்வேனியா திரும்புகிறது. டாக்டர் வென்ஹில்சிங்கும் அவருடைய நண்பர்களும் டிராகுலாவை பின்தொடர்ந்து விரட்டிச் செல்கிறார்கள். டிராகுலாவிற்கும் டாக்டர் வென்ஹில்சிங்கும் டிரான்ஸ்சில்வேனியாவில் நீண்ட சண்டை நிகழ்கிறது. சூரியன் மறையும் முன்பு டிராகுலாவை கொன்றாக வேண்டும். இல்லையென்றால் டிராகுலாவின் சக்தி மேலும் கூடிவிடும். நீண்ட போரட்டத்திற்கு பிறகு விஷேச கத்தியைகொண்டு டிராகுலாவின் கழுத்தை அறுத்துவிடுகிறார் டாக்டர் வென்ஹில்சிங். டிராகுலா சிறிது சிறிதாக கரைந்து மறைந்து போய்விடுகிறது. மினா முர்ரே மயக்கத்திலிருந்து விழித்தெழுகிறாள். போரட்டத்தில் ஒரிருவர் கொல்லப்பட பிறர் ஊர் திரும்புகிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு ஹாக்கரும் முர்ரேயும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அழகான குழந்தை பிறக்க, சுபமாக முடிவடைகிறது நாவல்.

படிக்கும் போதே பயமும் பீதியும் விறுவிறுப்பும் தொற்றிக்கொள்ளும் ஒரு மொழி நடை. 'டிராகுலா' நாவல் வெளியான பிறகு, நூற்றுக்கணக்கான பேய்க்கதைகளும் பேய் சினிமாக்களும் அதையொட்டி உருவானது. இன்றுவரைக்கும் அதன் திகில் தொடர்கிறது. இத்தனைக்கும் 'டிராகுலா' நாவலின் முதல் பதிப்பு 3000 பிரதிகள்தான் விற்பனையானது. ஆனால், அடுத்தப் பதிப்பு தொடங்கி வேகமாக அதன் புகழ் பரவத்தொடங்கியது. இதுவரை 300க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளது. 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களாக எடுக்கப்பட்டு, வெற்றிபெற்றிருக்கின்றன. தமிழில் நாசர் நடித்து, இயக்கிய 'தேவதை' திரைக்கதை 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான். 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்கு உலக பிரசித்தி பெற்றவை. ஒன்று, ஜெர்மன் மௌன திரைப்பட இயக்குனரான எப்.எம்.முரனே இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. இரண்டு, டொட் பிரானிங் இயக்கிய பிலா லுகோசியின் நடிப்பில் வெளிவந்த 'டிராகுலா'. மூன்று, ஜெர்மன் திரைப்பட இயக்குனரான வெர்னர் ஹெர்சாக் இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. நான்கு, புகழ்பெற்ற இயக்குனரான பிரான்சிஸ் போர்ட் கப்பல்லோவின் 'டிராகுலா'. இந்நான்கு திரைப்படங்களும் மாறுபட்ட கோணங்களில் டிராகுலாவை அணுகுகின்றன். ஓர் இயக்குனரை பொறுத்தமட்டில் டிராகுலா சாத்தான்; மற்றொருவரை பொறுத்தமட்டில் அவனொரு மனநோயாளி; பிறிதொரு இயக்குனருக்கு அவனொரு வீழ்ச்சி பெற்ற காவிய நாயகன்.

உண்மையில் டிராகுலா யார்? ஸ்டாக்கருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தைக் கண்டறியும் பயணத்தில் பல ஆய்வாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் ஈடுபட்டுள்ளார்கள். எழுத்தாளர் ஆஸ்கார் ஓயில்டின் காதலியான பிளாரென்ஸைத்தான் ஸ்டாக்கர் திருமணம் கொண்டார். எனவே, ஸ்டாக்கருக்கு எப்போதும் ஆஸ்கார் ஓயில்டோடு சிறிய பூசல் ஒன்று உண்டு. ஓயில்ட் தன் மனைவியை தன்னிடமிருந்து எப்போதும் அபகரிக்கலாம் என்ற எண்ணம் பிராம் ஸ்டாக்கரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது. அதுதான் நாவலிலும் வெளிப்பட்டுள்ளது என பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சிலர் வேறுவிதமாகச் சொல்லியுள்ளார்கள். 'டிராகுலா, உண்மையிலேயே டிரான்ஸில்வேனியாவை ஆண்ட ஒரு அரசன் என்றும் அவனைப் பற்றிய பலநூறு நாட்டுப்புறக் கதைகளையும் நம்பிக்கைகளையும்தான் ஸ்டாக்கர் இந்நாவலாக எழுதியுள்ளார்' என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். பதினான்காம் நூற்றாண்டில் டிரான்ஸ்சில்வேனியாவில் வாழ்ந்த வாலாசிய அரசனான மூன்றாம் வெல்ட், டிராகுலா என்றே அழைக்கப்படுகிறான். ஸ்டாக்கரின் டிராகுலாவைப் போலவே அவனும் மிதமிஞ்சிய இரத்தவெறி பிடித்தவன். போரில் கைப்பற்றிய பகுதியைச் சேர்ந்த மக்களை வெட்டவெளியில் வைத்து கழுவேற்றுவதும்போது, அதன் அருகில் அலங்காரமான மேடை அமைத்து உணவை ரசித்து ருசித்து உண்பானாம். வரலாற்றில் நூற்றிற்கும் மேற்பட்ட அரசர்களும் அரசிகளும் வெல்ட் போல டிராகுலாக்களாக செயல்பட்டிருக்கிறார்கள். 'டிராகுலா ஒருபோதும் அழிவதில்லை. அவன் நம் மனங்களுக்குள் ஒளிந்திருக்கிறான். நாம் தான் அவனை கண்டுகொள்ளவேண்டும்; அழிக்கவேண்டும்' என்கிறார் பிராம் ஸ்டாக்கர்.

(அம்ருதா, அக்டோபர் 2011 இதழில் பிரசுரமாகியுள்ளது)