03 June 2007

நகுலன்


முன்னோடி'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் 'செல்'பேசியில் அதிகம் பரிமாறிக் கொள்ளப்பட்ட குறும்செய்தி இதுதான். அன்று காலையில் 6.22-க்கு என் 'செல்'பேசிக்கு முதல் குறும்செய்தி வந்தது. என்.ஸ்ரீராம் அனுப்பி இருந்தார். அந்தச் செய்தியை நான் சில நண்பர்களுக்கு 'பார்வர்ட்' செய்தேன். நான் ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருக்க, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் என் 'செல்'பேசிக்கு அந்தக் குறும்செய்தி வந்துகொண்டே இருந்தது. எல்லாவற்றிலும் அட்சரம் பிசகாமல் ஒரே வாசகங்கள். 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' யாரோ ஒருவரிடம் இருந்து புறப்பட்டச் குறும்செய்தி, 'பார்வர்ட்' செய்யப்பட்டு அன்று முழுவதும் பயணப்பட்டு கொண்டே இருந்திருக்கிறது.

நாகர்கோவிலில் கல்லூரியில் படிக்கும்போது, பிறகு 'குமுதம்' பத்திரிகை நேர்காணலுக்காக, அதன்பிறகு நண்பர்களுடன் ஒருமுறை என மூன்றுமுறை நகுலனை நான் நேரில் சந்தித்து இருக்கிறேன். திருவனந்தபுரத்தில், கெளடியார் என்னும் பகுதியில் கோல்ப் லிங் ரோடு என்ற தனித்த சாலையில் மிகப் பழமையான, சுண்ணாம்பு பெயர்ந்துவிட்ட சுவர்களை உடைய ஒரு வீட்டில் நகுலன் வசித்து வந்தார். ஏதோவொரு கிராமத்தில் இருந்து முற்றத்தோடு பெயர்த்து எடுத்து வந்து வைத்ததைப் போல் இருக்கும் அந்த வீடு. முற்றம் செடி, கொடிகள் படர்ந்து சிறு தோட்டமாக இருந்தது. ''இந்த வீடு எனது பெற்றோர்கள் காலத்தில் இருந்து வாழ்ந்து வரும் பூர்வீகமான வீடு" என்று நகுலன் சொன்னார். கடைசி வரை அந்த வீட்டில்தான் நகுலன் வாழ்ந்தார். மூன்று முறையும் வெள்ளைக் கை வைத்தப் பனியன், மடித்துக் கட்டிய கைலியுடன்தான் நகுலன் இருந்தார். ''எப்போதும் அவர் அப்படித்தான் இருப்பதுண்டு'' என அவரை வாரம் இரண்டு முறையாவது சந்திக்கும் நீலபத்மநாபன் குறிப்பிட்டார். வழுக்கைத் தலையில் இரண்டு பக்கமும் காதோரம் அடர்த்தியான வெள்ளை முடிகள்; புருவங்கள் கண்ணாடிக்கு மேலே குத்திட்டு நின்றன; கூன் விழுந்த முதுகு. ''எனது அம்மாவுக்கு பூர்வீகம் கும்பகோணம். அப்பாவுக்குத் திருவனந்தபுரம். என்னுடன் சேர்த்து இவர்களுக்கு ஆறு குழந்தைகள். இரண்டு பெண்கள், நான்கு ஆண்கள். எனது இரண்டு சகோதரிகளில் ஒருவர்தான் கவிஞர் திரிசடை'' என்று சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார் நகுலன். அவரது இயற்பெயர் டி. கே. துரைசாமி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிந்திருக்கிறார். திருவனந்தபுரத்தில் ஆங்கிலப் பேராசியரியராக முப்பது வருடங்கள் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.

நகுலனது ஆளுமையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவர் க.நா.சுப்பிரமணியம் என்று அவருடன் பேசியதில் இருந்து தெரிந்தது. க.நா.சு. பற்றி கேட்டதற்கு... "க.நா.சு.தான் என்னை எழுதத் தூண்டியவர். ஒரு முறை பாண்டிச்சேரி போயிருந்தேன். துரைசாமி நீ பாண்டிச்சேரி வந்திருக்கே! இதைக் கொண்டாட வேண்டாமா எனக் கேட்டார். நான் குடிப்பேன் என்று அவருக்குத் தெரியும். நான் அப்போது மாணவன். என்னைப் பொறுத்தவரைக்கும் அன்றையத் தேதியில் அவர் பெரியவர். ஆனால், அன்று அவரே கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்தார். அந்த அளவுக்கு அவருக்குப் பெருந்தன்மை உண்டு. 'துரைசாமி பணம் தேவைன்னா என்னிடம் கேளு. நான் தருகிறேன்' என்பார்'' என்றார்.

நகுலனது குடிப்பழக்கம் அனைவரும் அறிந்தது. எனவே, அவரைப் பார்க்கச் செல்லும் அனைவரும் ஒரு 'குப்பி'யுடன் தயாராகவே செல்வார்கள். மூன்றாவது முறை நான், லஷ்மி மணிவண்ணன், என்.டி.ராஜ்குமார் மூன்று பேரும் சென்றிருந்தோம். அன்று அக்டோ பர் 2-ம் தேதி; மகாத்மா காந்தி பிறந்த தினம். திருவனந்தபுரத்தில் எல்லா மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. தேடி அலைந்துவிட்டு 'குப்பி' இல்லாமலே நகுலன் வீட்டுக்குச் சென்றோம். லஷ்மி மணிவண்ணன், ஏதோ தவறு செய்துவிட்டு தலைமை ஆசிரியரைப் பார்க்கச் செல்லும் பள்ளி மாணவனைப் போல் புலம்பிக்கொண்டே நகுலன் வீட்டு படியேறினார். பேசத் தொடங்கி கொஞ்ச நேரத்தில், தயங்கியவாறே ''நீங்கள்லாம் குடிப்பீங்களா" என்று கேட்டார் நகுலன். அவரைப் புரிந்துகொண்டவராக, தேடி அலைந்தது, எல்லா இடத்திலும் மதுக்கடைகள் அடைத்திருப்பதை லஷ்மி மணிவண்ணன் சொன்னார். நகுலன் சிரித்தார். ''அது ஒன்றும் பிரச்னை இல்லை. நீங்கள் குடிப்பீங்கன்னா எங்கே கிடைக்கும் என்பதைச் சொல்கிறேன்" என்றார்; உங்களுக்காகத்தான் என்பதுபோல். பிறகு, அவர் குறிப்பிட்ட இடத்து ஆட்டோ வில் சென்று வாங்கிக்கொண்டு திரும்பினோம்.

நகுலன் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடைசி வரைக்கும் பெண்ணை அறிந்ததும் இல்லை. 'குமுதம்' நேர்காணலில், ''ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை" என்றக் கேள்விக்கு ''அவசியம் இல்லைன்னு தோணித்து" என முடித்துக் கொண்டார். சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு, ''கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாயர் பெண்ணைக் காதலித்தேன். சரீர சம்பந்தம் கிடையாது. திடிரென்று அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது" என்றார்.

''தங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை; விருதுகள் கிடைக்கவில்லை. பிரான்ஸில் நான் பிறந்திருந்தால் நான்தான் பிரதமர்; கேரளாவாக இருந்தால் கல்லூரி மாணவிகள் ஆட்டோ கிராப் வாங்க என்னை மொய்த்திருப்பார்கள்" எனக் கடைசி காலங்களில் புலம்பத் தொடங்கும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் விருதுகள், அது தரும் அதிகாரம், போதை ஆகியவற்றில் இருந்து மிகவும் விலகி நகுலன் இருந்தது ஆச்சரியமானது. 'குமாரன் ஆசான் விருது'ம் 'விளக்கு விருது'ம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவைகள் பற்றி அவருக்கு பெரிய பூரிப்புகள் இல்லை. 'குமுதம்' நேர்காணலுக்காக நகுலனைப் பார்க்கச் சென்றிருந்த போது, 'விளக்கு விருது' அவருக்கு வழங்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. ''விளக்குன்னு ஒரு விருது எனக்குக் கொடுத்திருக்காங்க. ஏன் எனக்கு அந்த விருதைக் கொடுத்தாங்கன்னு எனக்குத் தெரியலை. அவங்களுக்கும் தெரியலை. உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். இதனாலேயே, கடைசி வரைக்கும் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு, குறிப்பாகக் கவிஞர்களுக்கு ஆதர்ஷமாக இருந்தார் நகுலன்.

நகுலனது பிரபலமான கவிதைகளில் ஒன்று...
'ராமச்சந்திரனா
என்று கேட்டேன்.
ராமச்சந்திரன்
என்றார்.
எந்த ராமச்சந்திரன்
என்று கேட்கவுமில்லை.
அவர் சொல்லவும் இல்லை'

நகுலன் எங்களிடம் கேட்டார்... ''உங்களுக்கு இந்தக் கவிதையில் என்ன புரிகிறது?"

''நீங்களே சொல்லுங்களேன்"

''எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவர் சொல்லியிருக்க வேண்டாமா?"

முதல் முறை நான், நகுலனைப் பார்க்கும் போதே அவருக்கு 75 வயது கடந்திருந்தது. நான், சங்கர ராமசுப்பிரமணியன், அய்யனார் மூன்று பேரும் சென்றிருந்தோம். அய்யனார், நகுலனை 'புதியபார்வை' பத்திரிகைக்காக நேர்காணல் செய்யும் திட்டத்தோடு வந்திருந்தார். அப்போது, நகுலன் பேசிக் கொண்டிருந்தவர் ''இன்னும் நான்கு வருடத்தில் நான் இறந்துவிடுவேன். நான் இறந்த பிறகு எனக்கு இரங்கல் கூட்டங்கள் எதுவும் போடக்கூடாது" என்றார். ''ஏன்" என்றார் அய்யனார். ''ஏன்னா... என்னால வரமுடியாது" எனச் சொன்னார் நகுலன். நாங்கள் சிரித்தோம். நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை, தீவிரமாகத்தான் சொல்கிறேன் என்பதுபோல் மெளனமாக இருந்தார் நகுலன். பிறகு, ''சாவறதுன்னா எனக்குப் பயம். எல்லாத்துக்கும் பயம். என்னுடைய சகோதரி ஒருத்தி கான்சரில் இறந்துபோனாள். அதன்பிறகு ஒருநாளும் கனவில்கூட என் சகோதரி வந்ததில்லை. அப்புறம் பக்கத்துவீட்டுப் பையன் ஒருநாள் இறந்து போனான். செத்தவங்க எல்லாம் என்ன ஆகிறாங்க?" என்றார்.

இதனை அன்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்... ''செத்தவங்க எல்லாம் என்ன ஆகிறாங்க?"

படங்கள்: காஞ்சனை ஸ்ரீனிவாசன்