24 September 2016

முகங்கள்

நான் ஆய்வாளர் ஆனது எப்படி?

ஆ.இரா. வேங்கடாசலபதி
வரலாற்று ஆய்வாளர்நான் பிறந்தது குடியாத்தம். ஆனால், ஒரு வயதில் ஆரம்பித்து அப்புறம் என் முழு வாழ்க்கையும் சென்னைதான். அப்பா, அம்மா இருவரும் நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்பா எம்.பி.பி.எஸ். டாக்டர். இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகளுக்கு நடுவே மூன்றாவது பையனாக நான் பிறந்தேன். சின்ன வயதில் என்னைச் சுற்றி எல்லாருமே ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், எழுதவேண்டும், படிக்கவேண்டும்; அதுதான் நாகரிகமென்று நினைத்து, செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள்தான். டாக்டராகனும், இன்ஜினியராகனும் என்று சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்ட சூழல். என் அண்ணன், தங்கைகள், நண்பர்கள் அனைவருமே அந்தக் கனவுகளோடுதான் வளர்ந்தார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படித்து, எனக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. எழுத்தாளன் ஆகவேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன். சென்ட்ரல் போர்ட் ஸ்கூலில் இருந்து விலகி, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போய்ச் சேர்ந்தேன். 

ஆனால், எழுத்தையே ஜீவனாம்சமாக வைத்துக்கொண்டால் என்ன ஆவோம்ங்கிறதுக்கு உதாரணமாக புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு எனக்கு முன்னாடி இருந்தது. புதுமைப்பித்தன் வாழ்க்கை ஒரு சோக நாடகம். உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை. எனவே, முழு நேர எழுத்தாளனாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பி.காம். படித்து, வங்கி உத்தியோகத்துக்குப் போனால் எழுதுகிறதுக்கு வசதியாக இருக்குமென்று திட்டமிட்டேன். அப்பா, அம்மா இருவருமே இதை விரும்பவில்லை. ஆனால் குழந்தைகளின் உணவு, ஆடை தொடங்கி எல்லாமே தங்கள் தீர்மானம்படிதான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிற பெற்றோர்கள் தலைமுறை அப்போது உருவாகி இருக்கவில்லை. என்னை, என் போக்கில் விட்டுவிட்டார்கள். 

கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் அரை நாள்தான் பள்ளிக்கூடம். அதிலும், பாதி நாள் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். எனவே, எனக்குப் புத்தகங்கள் வாசிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. விளையாட்டில் நான் மிகவும் மோசம். கிரிக்கெட் என்றால் இரண்டாவது பந்திலேயே அவுட்; கில்லியில் பத்துகூட தேறாது. பம்பரம், சொல்லவே வேண்டாம். எந்த விளையாட்டானாலும் எல்லாருமே என்னை தோற்கடித்துவிடுவார்கள். மனசுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இந்த தோல்வியில் இருந்த மீளப் புத்தகங்கள் மிக ஆறுதலாக இருந்தது. ஆனால், வீட்டில் புத்தகம் வாங்குவதற்கு காசு தரமாட்டார்கள். அதனால், சினிமாவுக்கு போகிறேன் என்று சொல்லி, அந்த பணத்தில் புத்தகம் வாங்குவேன். 

‘முகம்’ மாமணி
அப்போது, பள்ளி மாணவர்க ளுக்கான ஒரு வினாடி - வினா போட்டி மூலமாக, ‘இலக்கிய வட்டம்’ என்கிற அமைப்போடு அறிமுகம் கிடைத்தது. ‘முகம்’ மாமணி அதை நடத்திக் கொண்டி ருந்தார். மாதம்தோறும் ஏதேனும் ஒரு அறிஞரை, எழுத்தாளரை, பிரமுகரை அழைத்து வந்து பேசவைப்பார். நான் தொடர்ந்து அந்தக் கூட்டங்களுக்குப் போனேன். அப்படித்தான் புதுமைப்பித்தன், கல்கி, மு.வ. புத்தகங்கள் அறிமுகமானது. மார்க்சிஸ்ட்டுகள், திராவிட இயக்கத்தவர்கள், இவர்களுக்கு எதிரானவர்கள் என்று தமிழ், ஆங்கிலப் புலமையாளர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. எல்லாருமே நாற்பதுக்கு மேல் அல்லது ஐம்பதைத் தொட்டுக்கொண்டு இருந்தவர்கள். நான், ஒன்பதாம் வகுப்பு படிக்கிற அரை நிஜார் பையன். ஆனால், பொடியன் என்கிற உதாசீனம் இல்லாமல், அவர்களுக்கு சமமானவனாகத்தான் என்னை நடத்தினார்கள். ‘‘வாங்க’’ என்று பன்மையில் மரியாதையாக கூப்பிடுவார்கள். “தமிழ், ஆராய்ச்சி, இலக்கியம் எல்லாம் வேலைக்கு ஆகாது. படித்து முன்னேற்கிற வழியைப் பார்” என்று அக்கறையாக, அவர்கள்ப் பட்ட கஷ்டங்களை சொல்வார்கள். 

பத்தாம் வகுப்பு படிக்கும் போது, வ.உ.சி. பற்றி கேள்விப்பட்டு, அவர் மீது ஒரு ஈடுபாடு வந்தது. வ.உ.சி. செய்த தியாகங்களுக்கும், வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த வெற்றிக்கும் இடையே இருந்த இடைவெளி என்னைக் கவர்ந்தது. அவரைப் பற்றி படிக்க வேண்டும் என்று தேடினபோதுதான், வ.உ.சி. பற்றிச் சிறந்த புத்தகங்களே இல்லை என்பது தெரிந்தது. அதை நாமே செய்யலாமே என்று அவர் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். தூத்துக்குடி சென்று, பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியனைச் சந்தித்தேன். சென்னையில் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் போனேன். ஆனால், “பள்ளிக்கூட பசங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள். அதனால், ஒரு வருடம் காத்திருந்து, கல்லூரியில் சேர்ந்ததும் முதல் வேலையாக ஆவணக் காப்பகம் போனேன். ஆறு மாசம் ஆய்வு செய்து, 1984இல் வ.உ.சி. கடிதங்களைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது, எனக்கு 17 வயசு. தொடர்ந்து என் ஆங்கிலக் கவிதைகள் புத்தகமாக வெளிவந்தது. இதே காலகட்டத்தில் சங்க இலக்கியம், ஆண்டாள், ஈழத்து எழுத்தாளர் சேரன் என்று எனக்குப் பிடித்த தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். 

ஆ. சிவசுப்பிரமணியன்
வ.உ.சி. பற்றின என் ஆய்வு, மேலும் மேலும் தமிழ் சமூகம், தமிழ்ப் பண்பாடு சார்ந்த நூல்களைப் படிப்பதற்கான பாதைக்கு என்னை இட்டுச் சென்றது. ஆவணக் காப்பகத்தில் பழைய வரலாற்று ஆவணங்களை எல்லாம் பார்க்க பார்க்க, எந்த அளவுக்கு ஆதாரப்பூர்வமற்று வரலாறுகள் இங்கே எழுதப்படுகின்றன எனத் தெரிந்துகொண்டேன். ஆவணங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, சுவாரஸ்யம் வரலாற்றுத் துறைக்கு போகவேண்டும் என்கிற எண்ணத்தை உண்டாக்கியது. ஆனால், பல்கலைக்கழக விதிமுறைப்படி பி.காம். படித்தவர்கள் எம்.ஏ. வரலாறு சேர முடியாது. எனவே, அஞ்சல் வழியில் எம்.ஏ. வரலாறு படித்தேன். “வரலாறு படிக்கிறதே உருப்படாத காரியம். அதையும் அஞ்சல் வழியிலா” என்று சுற்றி இருந்தவர்கள் வருத்தமாக பார்த்தார்கள். அப்போது, சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் எனக்கு வேலைக் கிடைத்தது. அங்கு, உலகம் முழுக்க இருந்து நிறைய ஆய்வாளர்கள் வருவார்கள். அதில் பலர், “தமிழ்நாட்டில் வரலாற்றுக் கல்வி மிகவும் பின்தங்கி இருக்கிறது; சிறப்பான மேற்படிப்பும் ஆய்வுப் பயிற்சியும் கிடைக்க வேண்டும் என்றால் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு போங்கள்” என்று சொன்னார்கள். ரொமிலா தாப்பர், கே.என். பணிக்கர் போன்ற சமூகத்தில் அந்தஸ்தோடு இருந்த மிகச் சிறந்த ஆசிரியர்கள் அப்போது ஜே.என்.யூ.வில் இருந்தார்கள். 

கே.என். பணிக்கர்
தமிழ்நாடு நவீனமாக மாறிய, 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் பாதி வரைக்குமான காலகட்டம்தான் என் ஆராய்ச்சியின் மையம். ஆய்வை முடித்ததும், ‘‘என்ன செய்யப் போகிற’’ என்று பணிக்கர் கேட்டார். ‘‘தமிழ்நாட்டுக்குப் போகிறேன்’’ என்று சொன்னேன். ‘‘வௌங்கமாட்ட. அங்கே வரலாற்று ஆய்வுகளே இல்லை’’ என்றார். ‘‘அப்ப, அங்கதான நான் போகவேண்டும்’’ என்று சொன்னேன். திரும்ப தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்தேன். ஆனால், அந்த நேரத்தை என் வ.உ.சி., பாரதி பற்றின ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினேன். ‘பாரதியின் கருத்துப் படங்கள்’, ‘வ.உ.சி.யும் பாரதியும்’ இரண்டு புத்தகங்களையும் கொண்டு வந்தேன். ஆய்வுலகில் எனக்கு ஒரு கவனிப்பை ஏற்படுத்திய புத்தகங்கள் இவை. பிறகு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. ‘காலச்சுவடு’ பத்திரிகை தொடர்பு ஏற்பட்டது. அவர்கள், நான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் எல்லாவற்றையும், பக்க அளவுகளைப் பற்றி கவலைப்படாமல் பிரசுரித்தார்கள். இது ஆய்வு வட்டத்தைத் தாண்டி, வாசகர்கள் மத்தியில் எனக்கு ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது. ‘புதுமைப்பித்தன் கதைகள்’, ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’ முதலான ஆய்வுக் கட்டுரைகள் வந்தபோது, வெகுஜன பத்திரிகைகளும் என்னைக் கவனித்தன. 

தமிழ்நாட்டு வரலாறு பெருமளவில் இலக்கியப் பதிவுகளை அடிப்படையாகத்தான் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியமும் இலக்கணமும் படிக்காதவர்கள், தமிழக வரலாற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியாது. மேலும், வரலாறு அடிப்படையில் கணக்கு கிடையாது; அது எழுதப்பட வேண்டும். சமகால எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தால்தான் எழுத்தாற்றல் வளரும். இது என் பலம். என் ஆய்வுக் கட்டுரைகளை சுவையாகவும் தெளிவாகவும் எழுத, என் இலக்கிய வாசிப்பு உதவுகிறது. 

நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழ்நாடு, திராவிட இயக்கத்தைப் பற்றிய சித்திரம் வெளிநாடுகளில் மிகவும் மோசமானதாகத்தான் இருந்தது. திரைப்பட கலாசாரம், பிராமண துவேசத்தை மட்டும்தான் திராவிட இயக்கம் வளர்த்தது என்கிற கருத்தை, ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர்கள் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். அதற்கு மாற்றான கருத்தை அங்கே முன்வைக்க வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று ஆங்கிலக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். அக்கட்டுரைகள் வெளிநாட்டு ஆய்வாளர்கள் கவனம் என் மீது திரும்ப காரணமானது. சிகாகோ, கேம்பிரிட்ஜ், லண்டன், பாரிஸ், கொலம்பியா என்று உலகளவில் பல முக்கியமான பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருக்கிறேன். 

நம் பழம் புராதனச் சின்னங்கள் எதையுமே நாம் பாதுகாக்கவில்லை. இதில் பழங்கால நூல்களும் அடங்கும். வ.உ.சி. சம்பந்தமான நூல்களைப் பார்க்க தூத்துக்குடிக்குப் போனதுபோது, அங்கே எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. டில்லி நேரு மெமோரியல் லைப்ரரியில் எல்லாம் இருக்கும் என்று கேள்விப்பட்டு அங்கே சென்றேன். டில்லியில், பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிகை கல்கத்தாவில் இருக்கிறதென்று அறிந்து அங்கே போனேன். டில்லி, கல்கத்தாவிலும் இல்லாத முக்கியமான சில பழைய நூல்கள், வெளிநாட்டு நூலகங்களில் இருக்கின்றன. கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்க, வெளிநாடு செல்லும் ஒவ்வொரு வாய்ப்பையும் இந்த புத்தகங்களைத் தேடுவதற்காக நான் செலவிடுகிறேன். அப்படித்தான் பாரதியாரின் ‘விஜயா கட்டுரைகள்’ லண்டனில் எனக்குக் கிடைத்தது. 

திருநெல்வேலி, சென்னை என்று இரண்டு பல்கலைக்கழகங்களில் நான் வேலை பார்த்திருக்கிறேன். முழுக்க தகவல் பிழை, மொழிப் பிழை, வரலாறு என்றால் என்ன என்பது பற்றிய தவறான புரிதல் - இவற்றின் ஒட்டுமொத்த கூட்டணிதான் நமது பல்கலைக்கழகங்களின் வரலாற்றுப் புத்தகங்கள். நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதுக்கான காரணத்தை, கடந்த காலத்தைக் கொண்டு விளக்குவதுதான் வரலாறு. ஆனால், இங்கே மன்னர்களின் பெயர்கள், காலம் சம்பந்தப்பட்டதுதான் வரலாறு என்ற்ய் புரிந்து வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மோசமான நிலை வேற எங்கேயும் இல்லை. இந்த மாதிரியான ஒரு சூழலில் தொடர்ந்து வேலை பார்ப்பதில் ஏற்படும் இயல்பான சலிப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே, பாடம் நடத்தும் வேலையை விட்டுவிட்டு, ஆராய்ச்சி நிறுவனமான சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். 

இன்றைக்கு எல்லோருமே சாப்ட்வேரை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மருத்துவமே இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. ஆனால், இது தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கிறது. சுத்தமான அறிவியலென்று சொல்லப்படுகிற வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கான தேவை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதே மாதிரி வரலாறு, சமூக அறிவியல் பாடங்களுக்கும் மீண்டும் கவனிப்பு அதிகமாகும். இனி உலகம் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தொழில்நுட்பத்தால் தீர்க்கப்படும் பிரச்சினைகள் இல்லை. தொழில்நுட்பத்தால் உருவான பிரச்சினைகள்தான். உலகம் எந்தப் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது, என்ன நடக்கிறது, அதைப் புரிந்துகொள்வது எப்படி என்கிற பார்வையை சமூகவியல், வரலாறு படிப்புகள்தான் கற்றுக் கொடுக்கும். இன்னொரு பக்கம், எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்காக, எப்போதும் முதல் இடம் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிறந்தவர்களாக, உங்களை நீங்கள் ஆக்கிக்கொண்டால் அந்த இடம் உங்களுக்குத்தான்.
உங்கள் சாதனை? 

என் வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் ஆராய்ச்சிகளைப் பாராட்டி, ‘குட்டி உ.வே.சா’ன்னே பத்திரிகைகள் எழுதினார்கள். இது என் தகுதிக்கு மீறி கிடைத்த பெரிய அங்கீகாரம்!

ரோல் மாடல்?

‘முகம்’ மாமணி, தா. கோவேந்தன், ஆ. சிவசுப்பிரமணியன். இவர்கள் மூவரும்தான் தமிழ் வாழ்க்கையை எனக்கு காண்பித்தவர்கள்.

பொழுதுபோக்கு? 

அப்படியொன்றைக் கண்டுபிடிக்க முடியலைங்கிறதுதான் பிரச்சினை. ரிலாக்ஸுக்காக சினிமா பார்க்கப் போய், அதைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கிவிடுவேன். 

பிடித்த மேற்கோள்? 

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய் - திருக்குறள்

கெட்டபழக்கங்களை விட்டது எப்படி? 

என் தலைமுறையில்தான் எல்லோரும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், புத்தகங்கள் வாங்குவதற்கே காசு குறைவாக இருந்ததால் சிகரெட் பக்கமே நான் போகவில்லை. 

மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது?

மாணவர்கள், குழந்தைகளை அவர்கள் விருப்பத்துக்கு விடுங்கள். சாப்பிடுவது, உடுத்துவது தொடங்கி படிப்பு வரைக்கும் எல்லாத்தையும் நீங்களே தீர்மானித்து அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

(2007இல் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியான ‘முதல் தலைமுறை’ தொடருக்காக ஆ.இரா. வேங்கடாசலபதியைப் பேட்டி கண்டு எழுதியது.)