26 November 2011

கண்ணதாசன் நினைவுகள்

என் தந்தை

காந்தி கண்ணதாசன்

‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பதித்துக்கொண்டது, வரலாறு. உலகம் முழுக்க தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும், காற்று வெளியில் அவரது பாடல் ராஜாங்கம் கம்பீரமாக நடந்து கொண்டிருப்பது, இன்றைய யதார்த்தம். எதிர்வரும் காலங்களிலும் தமிழர் மனங்களில் வாழப்போகும் அந்த கவிஞன் பற்றிய (தன் தந்தை பற்றிய) நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார், கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன்.
"எனது நண்பர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது அப்பாவைப் பற்றிய நினைவுகளைக் கிளறும்போதெல்லாம் பய உணர்வுதான் முதலில் தோன்றும். அதைத் தொடர்ந்து அப்பா மீதான வெறுப்பு ஞாபகத்துக்கு வரும். அப்புறம்தான் அப்பாவைப் பற்றிய பசுமையான நினைவுகள் மேலெழும். குழந்தைகள் ஒழுங்காக வளர வேண்டும்; பெரிய ஆட்களாய் வர வேண்டும் என்பதற்காக அவர்களது தந்தைகள் விதித்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள், ஆலோசனைகள்.... இவற்றின் விளைவு இது. இதையெல்லாம் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அப்பா செய்தார் என்று, இப்போது அவர்கள் எண்ணினாலும், பய உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. உங்களில்; பலருக்கும்கூட இதே அனுபவம் இருக்கலாம். எனக்குத் தெரிந்து இந்த உணர்விலிருந்து விலகி இருப்பவர்கள் மிகச் சிலர்தான். காரணம் அவர்களது தந்தைகள். ‘குழந்தைகள், அவர்களது எதிர்காலத்தை அவர்களே நிர்ணயித்துக்கொண்டு, இயல்புப்படியே வளர வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் கிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வழி தவறிவிடாமல் இருக்கும்படி பெற்றோர்கள் கண்காணித்துக்கொள்ள வேண்டும்; தங்களது அனுபவங்களிலிருந்து கற்றதைக் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்’ என்று நினைப்பவர்கள் இவர்கள். இந்த மிகச் சிலருள் ஒருவர்தான் என் தந்தை கண்ணதாசன்.

அப்பா என்பதைக் கடந்து எங்கள் அனைவருக்கும் ஒரு நண்பராகத்தான் அவர் நினைவுகளில் தங்கியிருக்கிறார். அவரைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம், முதலில் அவருடன் நாங்கள் செய்த கலாட்டாக்களும் எங்களுடன் அவர் செய்த கலாட்டக்களுமே ஞாபகத்தில் வரும். ஒரு தந்தையாக இல்லாமல் நல்லதொரு நண்பராகத்தான் எங்களுடன் அவர்கள் பழகினார். நாங்கள் மொத்தம் பதினான்கு குழந்தைகள்; அவரையும் சேர்த்து பதினைந்து குழந்தைகள்! எனவே, வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

வெளியில் சென்றுவிட்டு திரும்பும் அப்பா, காரில் வந்து இறங்கும் போது, நாங்கள் வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்போம். “என்ன பிரதர்ஸ், இங்கே நின்னுகிட்டிருக்கீங்க” என்பார். என் தம்பி கமல் கண்ணதாசன், “ஒண்ணுமில்லை பிரதர், சும்மாதான் நின்னுக்கிட்டிருக்கோம்” என்பான். அதற்கு அவர், “நல்லது. ஆனால், ரொம்ப நேரம் சும்மா நின்னுக்கிட்டிருக்காதீங்க பிரதர்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். அந்த அளவுக்கு எங்களுக்கு அவர் முழுச் சுதந்திரம் தந்திருந்தார். ஆனால், அன்பான கட்டுப்பாடுகளும் இருக்கும். அந்த அன்பு, சுதந்திரத்தின் எல்லைகளை எங்களுக்குக் காட்டிவிடும். அன்புக்கு அடுத்தபடியாக ஆலோசனைகள். பொதுவாகப் பெரிய மனிதர்களின் குழந்தைகள், தந்தையின் காலத்திலேயே அவர்களது பெயர்களை நாசம் செய்யும்படி காரியமாற்றுவார்கள். நாங்கள் 14 பேரும் அப்படியில்லாமல் அப்பா பெயரைக் கெடுக்காதபடி இன்றைய வரைக்கும் இருக்கிறோம் என்றால், அதற்கு அவரது அன்பு, ஆலோசனைகள்தான் காரணம்.

சில நாட்களில், வேலை காரணமாக இரவு நேரமாகி அப்பா வீட்டுக்கு வர நேரும் பொழுது, வந்தவுடன், “எந்திரிங்கப்பா, வாங்க உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்” என்று எல்லோரையும் எழுப்புவார். அப்புறம் இரவு ஒரு மணி வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வோம். ஒருநாள் இரவு பேசிக்கொண்டிருக்கும்போது, “சீக்கிரம் நான் செத்துருவேன் போல் இருக்குப்பா” என்று அப்பா சொன்னார். அதற்கு கமல், “அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. எனவே, நீங்க கவலைப்படாதீங்கப்பா” என்றான். “ஏம்பா அப்படிச் சொல்றே” என்றார் அப்பா. கமல் சொன்னான்: “நல்லவங்கதான் அப்பா சீக்கிரம் சாவாங்க. அதனால உங்களுக்கு வாய்ப்பு குறைவு.” நாங்கள் எல்லோரும் பயங்கரமாகச் சிரித்துவிட்டோம். அப்பாவும் விழுந்து விழுந்து சிரித்தார். அந்தளவுக்கு எங்களுடன் அவர் சகஜமாக இருந்தார்.

ஒருநாள் அம்மா, அப்பாவிடம் போய், “நான் மோதிரம் செய்து போட்டுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன் மோதிரத்தில் அச்சடிக்க பார்வதி கண்ணதாசன்னு உங்க கையெழுத்துல எழுதித் தாங்க’’ என்றாங்க. அப்பாவும் எழுதிக் கொடுத்தார். அம்மா வாங்கிக்கொண்டு திரும்பி விட்டார்கள். கொஞ்சநேரம் கழித்து அப்பா, அம்மாவைக் கூப்பிட்டார். “நான் எழுதியதைப் படித்தாயா” என்றார். அம்மா படித்திருக்கவில்லை. “போய் படித்துப் பார்” என்றார். அம்மா வந்து படித்துப் பார்த்தார்கள். அங்கே, ‘பார் அவதி கண்ணதாசன்’ என்றிருந்தது.
இதுபோல் ஒவ்வொரு இரவும் கலாட்டாக்களும் கும்மாளமுமாக இருக்கும். பேசிக்கொண்டேயிருக்கும் போதே தம்பி கமல் தூங்கிவிடுவான். அவனை எழுப்பப் போனால் வேண்டாம் என்று தடுத்துவிடுவார். “சாப்பிட்டவுடன் ஜீரணமாகிற வயிறுள்ளவனும் படுத்தவுடன் தூக்கம் வருகிறவனும் பாக்கியவான். அது ஒரு கிஃப்ட். அதை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்” என்று கூறிவிடுவார்.

அந்நாட்களில் ஒன்பது மணிக்கே சென்னை அடங்கிவிடும். ஆங்காங்கே ஒரு சில கடைகள் மட்டும் இருக்கும். பன்னிரெண்டு மணிக்கு பிறகு காரில் புகாரி ஹோட்டல் போய் சாப்பாடு வாங்கிக்கொண்டு திரும்புவோம். இரவு ஒரு மணிக்கு எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து நன்றாகச் சாப்பிடுவோம். 

அப்பா, பெரியம்மா - அம்மா இரண்டு பேருக்கும் இடையே வித்தியாசம் பார்த்ததேயில்லை. குழந்தைகளுக்கு இடையேயும் வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்.

கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டது; ஜாமீன் கையெழுத்துப் போட்டு வாங்காத கடன்களுக்கு வட்டி கட்டியது; கூட இருந்தே ஏமாற்றிய நண்பர்கள்; முதுகில் குத்திவிட்டு, அது தெரியாது என்கிற மாதிரி கூட இருக்கும் நண்பர்கள்; என்று எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்லுவார். அவையெல்லாம் எங்களை வடிவமைக்க உதவியிருக்கின்றன.

 “நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன்பா” என்று ஒருமுறை அவரிடம் ஆலோசனை கேட்டேன். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழ் இலக்கியம் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். தமிழ் இசையிலும் பரிச்சயம் இருக்க வேண்டும். அப்புறம் இருக்கவே இருக்கிறது அனுபவங்கள். இவற்றுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்றார். அவர் சொன்னது பாட்டெழுதுவது சாதாரணமான விஷயம்தான், பயப்பட வேண்டியதில்லை என்பது போல் இருந்தது. ஆனால், இப்போது தெரிகிறது பாட்டெழுதுவது எவ்வளவு சிரமமானது என்று. அது அவருக்குத் தெரியாது என்றில்லை; நம்பிக்கையளிக்கும்படியும் ஊக்கப்படுத்தும்படியும்தான் எங்களுடன் எபோதும் அவர் பேசுவார்.

குழந்தைகள் 14 பேரையும் ஒரே ஸ்கூலில்தான் படிக்க வைத்தார். பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் தருவார். 1960இல் 100 ரூபாய் என்பது பெரிய விஷயம். ஒரு வருடம் ஒரு தம்பி பெயிலாகிவிட்டான். அந்த வருடம் எல்லோருக்கும் 100 ரூபாய் கொடுத்தார்; பெயிலானவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். நாங்கள் எல்லாம் எப்படி அது சரியாகும் என்று கேட்டோம். “சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மன நிலையிலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்” என்றார். என்ன கணக்கிட்டு அப்படிச் செய்தாரோ புரியவில்லை; ஆனால், அவரது கணக்கு சரியாக இருந்தது. பெயிலாகி 200 ரூபாய் பெற்ற அந்தத் தம்பி இன்று டாக்டராக இருக்கிறான்.

நான் பி,ஏ. முடித்ததும் கூப்பிட்டு, “ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் டைரக்‌ஷன் படி. என் தொடர்பால் உனக்கு வருஷத்துக்கு குறைந்தது ஐந்து பட வாய்ப்புகளாவது கிடைக்கும்” என்றார். ஆனால் நான், வக்கீலுக்குத்தான் படிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர் மறுக்கவில்லை. மேலும், “பி,ஏ. வரைக்கும் உங்களிடம் இருந்து காசு வாங்கிப் படித்துவிட்டேன். இனிமேலும், உங்களிடம் காசு வாங்குவது நல்லதல்ல” என்றேன். “சரி சொந்தமாக பிஸினஸ் பண்ணி அதிலிருந்து வரும் காசில் படி” என்று பதிப்பகம் ஆரம்பித்துத் தந்தார். அந்தக் காலம் மாத நாவல்கள் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருந்த நேரம். ஆனால் அப்பா, “நீ அர்த்தமுள்ள இந்து மதத்தைப் போடு; நான் தொடர்ந்து எழுதுகிறேன்” என்றார். எனக்கு விருப்பமில்லை. அவரது ஆலோசனைக்காகத்தான் செய்தேன். அவரது கணக்குதான் கடைசியில் ஜெயித்தது. அர்த்தமுள்ள இந்துமதம் 50 ஆயிரம் வீதம் மாதம்தோறும் விற்றது.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, எனக்கு நிறைய தோழிகள் உண்டு. ஆனால் காதல் கிடையாது. ஒருநாள் போகும் வழியில் இறக்கிவிடச் சொல்லி ஒரு தோழி கேட்டாள். அவளை பைக்கில் பின்னாடி ஏற்றிக்கொண்டேன். ஜெமினி சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் போது அந்தப் பக்கமாக வந்த அப்பா பார்த்துவிட்டார். இரவு அப்பாவும் அம்மாவும் கூப்பிட்டார்கள். அம்மா விசாரித்தார். நானும் காதல் கிடையாது, தோழிதான் என்றேன். அதற்கு அப்பா சொன்னார்: “நான் உன்னை நம்புகிறேன்டா. உன்னை எனக்குத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்குத் தெரியாதில்லையா? எனவே, கண்ணதாசன், பிள்ளையை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பாரு என்பான். இனிமேல் கேர்ள் பிரண்ட்ஸோடப் போகும் போது காரை எடுத்துக்கொண்டு போ” என்றார். இந்த சுதந்திரம்தான் எங்களை வழிதவற விடாமல் செய்தது.

எனக்கு பொண்ணு பார்க்க முடிவானபோது, என்னைக் கூப்பிட்டு கேட்டார்: “உனக்கு ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லு” என்று. “நீங்களும் அம்மாவும் பார்த்து உங்களுக்குப் பிடித்திருந்தால் போதும்” என்று சொல்லிவிட்டேன். என் கேர்ள் ஃபிரண்ட்ஸை மனதில் வைத்துக்கொண்டு, “இல்லை தயங்காமல் சொல்லு” என்றார். நான் விளையாட்டாக, “நீங்க போய் கேட்டு ஒருவேளை மறுத்துவிட்டால் என்னப்பா சொல்வது” என்றேன். “கண்ணதாசன், வீட்டுப் படியேறி பொண்ணு கேட்டால், எவண்டா மாட்டேனென்று சொல்லுவான்” என்றார். அவர்மேல் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது.

இன்று சென்னையில் விருந்து கலாசாரம் பரவலான ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால், 1960களில் விருந்து கலாசாரம் என்பது சினிமா துறை சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டும்தான் இருந்தது. டி.வி.எஸ். போன்ற பெரும்பணக்காரர் வீடுகளில்கூட விருந்துகள் நடப்பதில்லை. சினிமா துறையிலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஏ.எல்.எஸ்., அப்புறம் எங்கள் வீடு... இந்த இடங்களில் மட்டும்தான் அப்போது விருந்துகள் நடைபெறும். ஒவ்வொருவர் வீட்டில் நடைபெறும் விருந்துகள் குறித்தும் தனித்தனி சுவாரஸ்யமான கதைகள் உண்டு. அப்பா, அரசியல் நண்பர்களுக்கு ஒரு நாள், இலக்கிய நண்பர்களுக்கு இன்னொரு நாள், சினிமா நண்பர்களுக்கு மற்றொரு நாள் என்று தனித்தனியாக விருந்துகள் கொடுப்பார். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்கள், விருந்தால் வீடு களைகட்டும். ‘கண்ணதாசன் வீட்டு விருந்து தகவல் எப்போது வரும் என காத்திருப்போம்’ என பின்னாட்களில் சில அப்பாவின் நண்பர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து அப்பாவின் விருந்து அப்போது எவ்வளவு பிரசித்தமானதாக இருந்திருக்கும் என ஊகிக்கலாம்.

அமிதாப்பச்சன், ராஜ்கபூர், சஞ்சீவ்குமார்... போன்ற வட இந்திய சினிமா பிரபலங்களை அப்பாவின் விருந்துகளில்தான் முதன்முதலாக நான் சந்தித்திருக்கிறேன். விருந்துக்கு வரும் பிரபலமானவர்கள் அப்பாவுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும்; அப்பாவைச் சந்திக்க அடிக்கடி வீட்டுக்கு வரும் காமராஜர், அண்ணா போன்ற அரசியல் தலைவர்கள் அக்காலத்தில் தமிழகத்தில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது புரியத் தொடங்கிய போதும்தான்; எங்களுடன் விளையாடி, கலாட்டக்கள் செய்துகொண்டு, சாதரணமான ஒருவராக எங்களுக்கு தோற்றம் தந்துகொண்டிருக்கும் அப்பா, உண்மையில் சாதாரணமான அப்பா இல்லை என்பது உறைக்கத் தொடங்கியது. அது அப்பா அளவுக்கு உயர வேண்டும் என்னும் வெறியை, வைராக்கியத்தை என்னுள் உருவாக்கியது. இன்று அது சாத்தியமானதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

வீட்டில் நடைபெறும் விருந்துகள் தவிர, தனியாக மது அருந்தும்போது உடன் இருக்கவேண்டிய நண்பர்கள் எனச் சிலரை வைத்திருந்தார், அப்பா. மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மா; இசை மேதைகள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன்; ஜி.ஆர்.நாராயணன், சோ ராமசாமி, ஆஷா, நடராஜ், கலீல் சௌத்ரி... என்று அந்த நண்பர்கள் வட்டம் மிகச் சிறியதுதான். இந்த இரண்டு கும்பலிலும் மது அருந்த நான் உட்பட வீட்டில் மூத்தப் பையன்கள் மூன்று பேருக்கு மட்டும் அனுமதி உண்டு. வீட்டில் எப்போதும் பிரிட்ஜில் பியர் பாட்டில்கள் இருக்கும். சில சந்தோஷமான மன நிலைகளின்போது அப்பா எங்கள் மூன்று பேரையும் கூப்பிடுவார். “ஃபிரிட்ஜில் போய் பியர் எடுத்துக்கொண்டு வாங்கடா” என்பார். அப்போது அம்மா, “பிள்ளைகளைக் கெடுக்காதீங்க” என்று கோபித்துக் கொள்வார். “வெயில் காலங்களில் பியர் சாப்பிடுவது உடம்புக்கு எவ்வளவு நல்லது’’ என்று அப்பா, அம்மாவுக்கு விளக்குவார். பிறகு, “என் பிள்ளைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் காலத்துக்குப் பிறகு அவர்கள் என் பெயரைக் கெடுக்கமாட்டார்கள்’’ என்பார். இப்போதும், யோசித்துப் பார்க்கும்போது எங்கள் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை, அவரது புரிதல் எல்லாம் மிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. அவர் காலமான தினத்திலிருந்து தொடங்கி இன்று வரை அவரது குழந்தைகளான நாங்கள் யாரும் மது அருந்தியதில்லை.

அண்ணாத்துரை மேல் அப்பா பெரிய மரியாதை வைத்திருந்தார். அவர் மேல் கொண்டிருந்த மரியாதை காரணமாக, என் தம்பி ஒருவனுக்கு அண்ணாதுரை என்றே பெயர் வைத்தார். ஒருநாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தம்பியை அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார் அப்பா. சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு புறப்படும்போது, வாசலில் அப்பாவிடம் அண்ணாத்துரை சொன்னார்: “உன் பையனுக்கு என் பெயரை ஏன் வைத்திருக்கிறாய் என்பது புரிந்துவிட்டது!’’ அப்பா, “அப்படி என்ன புரிந்துகொண்டீர்கள், சொல்லுங்கள்?’’ என்றார், அப்பா. “என் முன்னாலேயே டேய் அண்ணாத்துரை என்று கூப்பிடுவதற்குத்தானே’’ என்று அண்ணா சொன்னதும், கூடியிருந்த எல்லோரும் பலமாகச் சிரித்துவிட்டோம்.

ஆனால், அண்ணாவுக்கு அப்பாவின் குழந்தைகளில் அவரது பெயர் வைத்த தம்பியைத்தான் மிகவும் பிடிக்கும். அப்புறம், ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் அவனைப் பற்றி விசாரிப்பார். காங்கிரஸூக்கு அப்பா போன பிறகும் அந்தத் தம்பி மீதுள்ள பாசம் அண்ணாவிடம் குறையவில்லை. கடைசியில் மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் போது அப்பாவிடம் சைகையிலேயே, “என் பெயர் வைத்த பையன் எப்படி இருக்கிறான்?’’ என்று கேட்டார். அப்போது அப்பா சத்தம் போட்டுக் கதறி அழுதுவிட்டார்.

காங்கிரஸில் அப்பா சேர்ந்த பிறகு, காமராஜர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார். காமராஜருக்கு எங்கள் வீட்டு அசைவச் சாப்பாடு மிகவும் பிடிக்கும். வீட்டுக்கு வர முடியாத தினங்களில், “கண்ணதாசன் வீட்டிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வா” என்று அவரது உதவியாளர் வைரவனிடம் சொல்லிவிடுவார். காமராஜர் யாரிடமும் இப்படி உரிமையாகக் கேட்கக்கூடிய ஆள் இல்லை. எங்கள் அப்பாவிடம் கேட்கலாம் என்று அவருக்குத் தோன்றியதற்கு அப்பா மீது அவர் வைத்திருந்த அன்பு மட்டும்தான் காரணம். அனேகமாக காமராஜருக்கு நண்பர்கள் வீட்டுச் சாப்பாடு என்று போனது எங்கள் வீட்டுச் சாப்பாடு மட்டுமாகத்தான் இருக்கும்.

வைரவன் தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லி விடுவார். ஆனால், காமராஜருக்கு அசைவம் பல்லில் சிக்கிக்கொள்ளும். எனவே அம்மா, ஆட்டுத் தலைக்கறியை எலும்பை நீக்கி, நன்றாக நைத்து காமராஜருக்கு என்று தனியாகச் செய்து கொடுத்து அனுப்புவார். ஒருநாள் நான் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். காமராஜர் வராண்டாவில் ஈஸி சேரில் கைகளைத் தூக்கி பின் தலையோடு சேர்த்து, விட்டத்தைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தார். நான் போய் நின்றதும், “என்ன?” என்று கேட்டார். “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். வைரவனிடம், “வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். திரும்பும்போது வைரவன், காமராஜரிடம், “சாப்பாடு கொண்டு வந்திருக்கிறது கவிஞரோட பையன்’’ என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் காமராஜர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டு தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போது தான் காமராஜர் கை எவ்வளவு நீளம் என்பதைத் தெரிந்துகொண்டேன். என் உடம்பை ஒரு சுற்றுச் சுற்றி வந்திருந்தது அவர் கை. “எங்கெ படிக்கிறே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “பச்சையப்பன் கல்லூரியில்’’ என்று சொன்னேன்.

”காலேஜ் இருக்கும்போது சாப்பாட்டைத் தூக்கிக்கொண்டு ஏன் அலையிறே. இனிமெல் காலேஜுக்கு மட்டம் போட்டதா நான் கேள்விப்படக் கூடாது. ஒழுங்காப் படி, போ’’ என்றார். நான் புறப்படத் தயாரான போது, திரும்பவும் பக்கத்தில் கூப்பிட்டு அணைத்துக்கொண்டார். “நல்லா படிக்கணும். அனேகமாக உங்கள் அப்பா உங்களுக்கு விட்டுட்டுப் போகப்போறது இந்தப் படிப்பு மட்டுமாகத்தான் இருக்கும்’’ என்று சொன்னார். அன்று காமராஜர் சொன்னது மிகச் சரியாக இருந்தது. அப்பா காலமானபோது கடனில் அவரது சொத்துக்கள் கரைந்துவிட்டன. ஆனால், எல்லா குழந்தைகளும் நன்றாகப் படித்திருந்தோம். மூன்று பேர் டாக்டர்கள், ஒருவன் இன்ஜினீயர், நான் வக்கீல், ஒருவன் படத் தயாரிப்பாளர். அப்பாவுடைய சொத்து என்று, இன்று என்னிடம், வாசலில் நிற்கும் எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் கார் மட்டும்தான் இருக்கிறது. அந்த காரும்கூட காமராஜர் கொடுத்ததுதான். 

1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோற்றதும் காமராஜர் மிகவும் நொடிந்து போய்விட்டார். “இந்த மக்களுக்காக நான் நிறைய செய்ய வேண்டும் என்றிருந்தேன். ஆனால், இப்படி என்னை முடக்கிப்போட்டு விட்டார்களே” என்று நண்பர்களிடமெல்லாம் சொன்னார். எனவே, 1967ஆம் ஆண்டு கடைசியில் வந்த நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காமராஜரை நிறுத்த காங்கிரஸ் ஆட்சி கமிட்டி முடிவு செய்தது. ஆனால், காமராஜர் சம்மதிக்கவில்லை. விண்ணப்பிக்கவோ, வாக்கு சேகரிக்கவோ வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர் வராவிட்டாலும் பரவாயில்லை, நிற்க சம்மதித்தால் போதும் என்று ஆகிவிட்டது. அவரைச் சம்மதிக்கச் செய்து, ஜெயிக்க வைக்கும் பொறுப்பை அன்று அவருடன் நெருக்கமாக இருந்த இரண்டு இலக்கியவாதிகள் எடுத்துக்கொண்டார்கள். ஒருவர் அப்பா, மற்றொருவர் ஜெயகாந்தன். காங்கிரஸ் இவர்களை ஏற்றுக்கொண்டது. இருவருக்கும் உதவியாக அப்பா என்னை அழைத்துக்கொண்டார். 
நாங்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துத் தந்த விமான டிக்கெட்டுடன் நாகர்கோவில் போனோம். அங்கு நாங்கள் தொகுதியை சுற்றிவர திருச்சி காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவர் அவருடைய அம்பாஸிடர் காரை அனுப்பித் தந்தார். அந்த காரில்தான் நாங்கள் தேர்தல் வேலைகளைப் பார்த்தோம். கடைசி வரைக்கும் காமராஜர் தொகுதிப் பக்கமே வரவில்லை. ஆனாலும், காமராஜர் அமோக வெற்றி பெற்றார். சில தினங்கள் சென்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலர் கட்சி உங்களுக்கு இதைத் தரச் சொல்லியது என்று கார் சாவியை அப்பாவிடம் தந்தார்கள். அந்த கார், தேர்தல் வேலைக்காக நாங்கள் உபயோகப்படுத்திய எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர். திருச்சி கட்சிக்காரரிடமிருந்து விலைக்கு வாங்கி அப்பாவுக்கு அன்பளிப்பாக கட்சி கொடுத்தனுப்பியது. ஆனாலும், “காமராஜர் கொடுத்த கார்” என்றுதான் அப்பா சொல்லுவார்.

எம்.டி.ஜி. 140 அம்பாஸிடர் காரைத்தான் அப்பா நீண்ட நாட்கள் உபயோகித்து வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் அரசவைக் கவிஞர் பதவியை அப்பாவுக்குக் கொடுத்தார். ரூபாய் 1000 சன்மானமும் ஒரு காரையும் அரசாங்கம் கொடுத்தது. அதன்பிறகு, அந்த காரை அப்பா பயன்படுத்தத் தொடங்கினார். நாங்கள் எம்.டி.ஜி. 140ஐ பயன்படுத்தினோம்.

முதலில் அரசவைக் கவிஞர் பதவியை ஏற்க அப்பா மறுத்து விட்டார். வற்புறுத்திதான் அந்தப் பதவியை அவரை ஏற்கச் செய்ய வேண்டியிருந்தது. அன்று எனக்கு பெண் பார்ப்பதற்காக காரைக்குடி போய்விட்டு, அப்படியே புதுக்கோட்டை, திருச்சி என்று ஒரு சுற்று போய் நண்பர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று திருச்சியில் தங்கியிருந்தோம். திருச்சியிலிருந்து வீட்டுக்கு போன் செய்தபோது, அப்பாவின் உதவியாளர் உ.அஞ்செமுத்து, “முதலமைச்சர் வீட்டிலிருந்து இரண்டு நாட்களாக உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உடனே பேசுங்கள்” என்றார். அப்பா, “சென்னைக்கு வந்தபிறகு பேசுகிறேன்” என்றார். ஆனால், சிறுது நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார். “உடனே உங்களை முதலமைச்சர் வரச்சொன்னார்” என்றார். அப்பா என்னிடம், “என்னை ஏண்டா முதலமைச்சர் தேடணும்” என்று கேட்டார்.

அப்புறம் போனில் என்.ஜி.ஆருடன் அப்பா பேசினார். எம்.ஜி.ஆர், “உடனே சென்னை வாருங்கள். விரிவாகப் பேச வேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். எனவே, உடனே புறப்பட்டு சென்னை வந்தோம். சென்னையில், “உங்களை அரசவைக் கவிஞராக நியமிப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றார் எம்.ஜி.ஆர். அந்த நேரம் அப்பா, எம்.ஜி.ஆரை அதிகம் திட்டிக் கொண்டிருந்த நேரம். எனவே அப்பா, “வேண்டாம்பா, உன்னை நான் தொடர்ந்து திட்டிக்கொண்டு வருகிறேன். எனவே, என் வாயை அடைக்கத்தான் அரசவைக் கவிஞர் பதவி தருகிறாய் என்று மக்கள் பேசுவார்கள்” என்று மறுத்துவிட்டார். ஆனால், எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்துவிட்டார். “மக்கள் பேசுவைதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் தான் அரசவைக் கவிஞர்” என்று சொல்லிவிட்டார். வீட்டில் எல்லோரும் மருமகள் வந்த நேரம் பதவி வந்திருக்கிறது என்று என் மனைவியைப் புகழ்ந்தார்கள். கல்யாண மேடையில், “நீ வந்த நேரம்தான் எனக்கு பதவி வந்திருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள் அம்மா” என்று சொன்னார் அப்பா. கல்யாணம் கீழ் திருப்பதியில் நடந்தது. எம்.ஜி.ஆர். கல்யாணத்துக்கு வந்து கல்யாண மேடையிலேயே அப்பாவை அரசவைக் கவிஞராகத் தேர்த்தெடுத்திருக்கும் விஷயத்தைச் சொன்னார்.
அப்பாவுக்கு மிகவும் பிடித்தமன விஷயங்கள் உணவு. மிகவும் விரும்பி விரும்பிச் சாப்பிடுவார். “பறப்பதில் எரோப்பேளனும் ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று அப்பா சொல்லுவார். நாங்கள் எல்லாம் கல்யாணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சாப்பிடும்போது எங்களுக்கு ஊட்டிவிடுவார். அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளை, அவர் ஊட்டி நாங்கள் சாப்பிட வேண்டும் என்று அவருக்கு ஆசை. “நீங்கள் குழந்தைகள் பெற்றால் என்ன, இப்போதும் எனக்கு நீங்கள் குழந்தைகள்தான்பா” என்று சொல்லுவார். 

அப்புறம் பிடித்தது பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டை, துண்டு. அப்பாவுக்கு பிடிக்குமென்பதால் ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று அப்பாவுக்குப் பட்டு வேஷ்டி, சட்டை, துண்டு, கொடுத்து அனுப்புவார் எம்.ஜி.ஆர். அப்புறம் அப்பாவுக்கு பிடித்தது பேச்சு. நண்பர்களுடன் உட்கார்ந்து மணிக்கணக்காகப் பேசுவார். இரவு வீட்டுக்கு வந்தபிறகும் தொலைபேசியில் பேசிக் கொண்டேயிருப்பார். எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி, எம்.எஸ்.விஸ்வநாதன்... என்று அதிகாலை வரை அரட்டை தொடரும். இப்பொழுது சில நாட்களில் இரவு முழுவதும் தொலைபேசி மணி அடிக்காமல் சும்மாயிருப்பதைப் பார்க்கும் போது அப்பா நம்முடன் இல்லை என்பது தோன்றும். மற்றபடி அப்பா எப்போதும் எங்களுடனேயே இருக்கிறார்.

ஜனாதிபதி அப்துல்கலாமின், ‘அக்னி சிறகுகள்’ ஒரு லட்சம் பிரதிகள் விற்றதையொட்டி நடந்த விழா மேடையில் ஜனாதிபதி பக்கத்தில் சமமாக எனக்கு இருக்கை தரப்பட்டிருந்தது. அப்போது எனக்கு, அப்பாவின் 'யார் தருவார் இந்த அரியாசனம்’ என்ற பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த அரியாசனம், அப்ப எனக்குத் தந்தது. அப்பாவும் அம்மாவும் தந்த ஆசிர்வாதத்தால் கிடைத்தது.’’

ஒரு சிறிய மௌனத்துக்குப் பிறகு, “பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்” என்ற காந்தி கண்ணதாசன் கண்கள் கலங்கியிருந்தன. பையிலிருந்து கர்ச்சீப்பை வெளியில் எடுத்தார்.

சந்திப்பு: தளவாய் சுந்தரம்

4 comments:

Rathnavel Natarajan said...

திரு கண்ணதாசனைப் பற்றிய ஒரு அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மிக்க நன்றி ஐயா.

Anonymous said...

Great Man.

Natarajan venkatraman. said...

அப்பா அப்பாதான்.கண்கள் பனித்தன.நன்றி.

Natarajan venkatraman. said...

அருமையான பதிவு. அப்பா அப்பாதான்.கண்கள் பனித்தன.நன்றி.