25 December 2015

சென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்

எந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது?

(புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது)


கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் பற்றிய பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக ஆறுகள் பக்கம் வசிப்பவர்கள், தன் வீட்டுக்குள் பெருக்கெடுத்த மழை நீர் எங்கெல்லாம் இருந்து வந்தது? சென்னைக்குள் மட்டுமல்லாமல் சென்னைக்கு வெளியேயும் எங்கெல்லாம் மழை பெய்யும்போது தாங்கள் கவனமாக இருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகிறார்கள். சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சிறிய, பெரிய ஏரிகள் எத்தனை? எந்தந்த ஏரிகளின் உபரி நீர் எந்த ஆறுகள் வழியாக செல்கிறது? அந்த ஆறுகள் சென்னைக்குள் எந்தந்தப் பகுதிகள் வழியாகச் செல்கிறது? ஒரு பருந்துப் பார்வை.

சென்னையைச் சூழ்ந்துள்ள ஏரிகள்


செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி, புழல், மதுராந்தகம் போன்ற பெரிய ஏரிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் 3 மாவட்டங்களிலும் சிறியதும் பெரியதுமாக கிட்டத்தட்ட 4000 ஏரிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 1995, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1823 ஏரிகள் தவிர மற்றவை சென்னைக்குள்ளேயே உள்ளன.

இந்த மூன்று மாவட்டங்களில் பெய்யும் மழை மட்டுமல்லாமல் வேலூர் மாவட்டம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்யும் மழை நீரும் பாலாறு உள்பட பல்வேறு ஆறுகள், ஓடைகள் வழியாக இந்த ஏரிகளுக்கு வருகிறது. ஆனால், இந்த எல்லா ஏரிகளின் உபரி நீரும் சென்னை நோக்கி வருவதில்லை. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் வட்ட ஏரிகளின் உபரி நீர், தென்னேரியில் கலந்து, அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாய் வழியாகச் சென்று, பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. சங்கிலி தொடராக இணைக்கப்பட்டுள்ள உத்திரமேரூர், கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளின் நீர், கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது. மதுராந்தகம் ஏரி உபரி நீர் மீண்டும் கிளியாற்றுக்கு சென்று ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. பாலாற்றில் கலப்பவை அப்படியே கடலுக்குச் செல்கிறது. இதுபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1000 ஏரிகளின் உபரி நீர் கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. மீதமுள்ள சுமார் 2000 ஏரிகளின் உபரி நீர் சென்னைக்குள் நுழைந்தும் சென்னையை ஒட்டி உரசியும் சென்று கடலுடன் கலக்கிறது.

அடக்கமான அடையாறு


அடையாறு பாதை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாகாணியம் மலையம்பட்டு ஏரியில் உற்பத்தியாகும் அடையாறு காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் 42.5 கிமீ தூரம் பயணித்து பட்டினப்பாக்கம் அருகிலும் முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது. தமிழகத்தின் மற்ற ஆறுகளைவிட வித்தியாசமான ஆறு இது. மேட்டிலிருந்து சரிவை நோக்கி பாயும் ஆறுகளின் ஓட்டத்துக்கு மாறாக பெரும்பாலான பகுதிகளில் ஒரே தளமாக உள்ளது அடையாறு. இதன் காரணமாக இந்த ஆற்றில் ஓடும் நீர் மற்ற ஆறுகள் போல் இல்லாமல் நின்று நிதானித்து மெதுவாகவே கடலுக்குச் சென்று சேரும்.

அடையாறுக்கு அதிகளவு தண்ணீர் கொடுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி கடல் மட்டத்திலிருந்து 62 அடி உயரத்தில் உள்ளது.  அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து, சென்னை வெளிவட்டச் சாலையை தொடும்போது, கடல் மட்டத்திலிருந்து 35 அடிக்கு இறங்குகிறது. தொடர்ந்து மேலும் சரிந்து மீனம்பாக்கம் அடையும்போது கடல் மட்டத்திலிருந்து 12 அடி இறங்கிவிடுகிறது.

இனிமேல்தான் பிரச்சினை. மீனம்பாக்கத்துக்குப் பிறகு கடலைச் சேர்வது வரைக்குமான அடையாறு பயணம் மிகச் சிரமமானது. மீனம்பாக்கத்துக்குப் பிறகு பல இடங்களில் 10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது அடையாற்றின் படுகைகள். இதனால், தங்கு தடையின்றி செல்ல வேண்டிய தண்ணீர், பல இடங்களில் தேங்கி அப்பகுதிகளை நிறைத்த பின்னரே அடுத்த இடத்திற்கு நகர்கிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 12 அடிக்குத் தாழ்ந்த அடையாறு, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்புகையில், அதிக தண்ணீர் வரும் போது, 35 அடி உயரம் வரை தேங்கிய பின்பே வழிய நேர்கிறது. விமான நிலையத்தைவிட்டு வெளியேறி நந்தம்பாக்கம் வரும்போது 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. ஆனால், அடுத்துவரும் ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாறு படுகை 30 அடி உயரமாக இருக்கிறது. எனவே, நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து காசி தியேட்டர் பாலம் வரும்போது, ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாறு படுகை உயரம் வரை நின்று தேங்குகிறது. காசி தியேட்டர் பாலம் தாண்டி திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி 12 அடி, அன்னை வேளாங்கண்ணி பள்ளி மற்றும் கல்லூரியை ஒட்டி வரும்போது 28 அடி, சைதாப்பேட்டை பாலத்தை நெருங்கும் முன் 12 அடி, பாலத்தைக் கடந்து ‘டர்ன்பல்ஸ் சாலைபாலத்தை அடுத்து மீண்டும் 28 அடி என ஏறி இறங்கியே இருக்கிறது அடையாற்றுப் படுகை. இதனால் உயரமான இடங்களில் எல்லாம் தேங்கியே நகர வேண்டும். திடீர் நகரில் கடல்மட்டத்திற்கு சமமான நிலையை அடையும் அடையாறு, அங்கிருந்து கடல்வரை முழுக்க தேங்கியே வழிகிறது.

அடையாற்றின் சராசரி கொள்ளளவு 39,000 கன அடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 70,000 கனஅடி. அடையாற்றின் ஏற்ற இறக்கப் பயணம், ஆக்கிரமிப்பால் ஆற்றின் கொள்ளளவு குறைந்துள்ளது புரிந்துகொள்ளப்படாமல் அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதான் இந்த வருடம் சென்னையை அடையாறு மூழ்கடிக்க காரணம் என சில நீரியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சென்னையில் அடையாறு வழித்தடம்


குன்றத்தூர்அனகாபுத்தூர்மதனந்தபுரம்பொழிச்சலூர்மீனம்பாக்கம் விமான நிலையம்ராணுவப்பகுதி, மணப்பாக்கம், ராமாவரம், கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், அடையார்

அடையாறுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது?


ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், இரும்புலியூர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், கண்ணந்தாங்கல், மாம்பாக்கம், வெங்காடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், சீக்கராயபுரம், சோமங்கலம், அமரமேடு, குன்றத்தூர், கோவூர், மாங்காடு, பெரியபணிச்சேரி, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, காவனூர், பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் அடையாறு வழியாகச் சென்றுதான் கடலில் கலக்கிறது. மேலும் பாப்பான் கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம் இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், ஒரத்தூர் ஓடை ஆகிய கால்வாய்கள் வழியாக வடியும் நீர்களும் அடையாறுக்கு வந்து சேர்கின்றன.

கூவம் ஆற்றின் வழியிலுள்ள ஜமீன்கொரட்டூர் அணைக்கட்டு, கூவம் நீர் எப்போதும் கடலுக்கு செல்லும் வகையிலும்ஷட்டர்கள் திறந்தால் பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆக கூவத்திலிருந்து ஒரு பகுதி தண்ணீரும் அடையாறுக்கு வரும்.

இவை தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறு வாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 19 சதவிகிதமும் அடையாற்றில் கலக்கும்.

பெருமைக்கார கூவம்


கூவம் பாதை
வேலூர் மாவட்டத்தில் ஓடும் கல்லாறு, சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் கூவம், கொசஸ்தலை என இரு ஆறுகளாகப் என பிரிகிறது. இதில் கூவம் திருவள்ளூர் மாவட்டத்தில் 40 கி.மீ. பயணம் செய்து பருத்திப்பட்டு அணையைக் கடந்து சென்னைக்குள் நுழைகிறது. சென்னைக்குள் 32 கிமீ பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் கலந்ததால் இதற்கு கூவம் என்னும் பெயர் வந்தது. 

‘தென்னிந்தியாவின் தேம்ஸ்’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பெருமை வரலாறு உடையது கூவம். இரண்டாயிரம் ஆண்டுகளாக கூவம் ஆற்றில் வாணிகம் நடந்து வந்திருக்கிறது. ரோமானியர்கள் இந்த ஆற்றில் பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்வளவு கலாச்சார புகழை தாங்கி நிற்கும் கூவம், 1960-க்குப் பிறகுதான், நமது தவறான நீர் மேலாண்மைக் காரணமாக சீர்கெடத் தொடங்கியது.

கூவத்தின் சராசரி கொள்ளளவு 19,500 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 22,000 கனஅடி. அடையாறு அளவுக்கு இல்லாவிட்டாலும், சென்னையின் ஏற்ற இறக்கமான நிலமட்டம் காரணமாக கூவமும் நின்று நிதானித்துதான் கடல் நோக்கி செல்கிறது.

சென்னையில் கூவம் வழித்தடம்


பருத்திப்பட்டு(ஆவடி)பூவிருந்தவல்லி, திருவேற்காடு, வானகரம்நெற்குன்றம்பாடிக்குப்பம், என்.எஸ்.கே. நகர்செனாய் நகர்சேத்துப்பட்டுஎழும்பூர், ஸ்பர்டேங்க், சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பாலம்

கூவம் நதிக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது?


திருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் உபரி நீரும், கூவத்தின் தாய் நதியான கல்லாறு நீரில் ஒரு பகுதியும் கூவத்தில் செல்லும். இது தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 27 சதவிகிதம் கூவம் ஆற்றில் கலக்கும்.

கூவத்தின் சகோதரி கொசஸ்தலை


கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் பாதை
வடசென்னையில் ஓடும் ஆறு கொசஸ்தலை. ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகிவேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கம் வழியாகத் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழைந்து, எண்ணூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது கொசஸ்தலை ஆறு. ஒரு பகுதி தண்ணீர் சீமாவரம் ஆற்றின் வழியாகவும் கடலுக்குச் செல்கிறது. இதன் நீளம் சுமார் 136 கிமீ.

கேசாவரம் அணைக்கட்டில் இரண்டாகப் பிரியும் கல்லாறு கிளைகளில் இதுவும் ஒன்று, மற்றொன்று கூவம். கொசஸ்தலை ஆற்றின் பாதையில்தான் பூண்டி நீர்த்தேக்கம் உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டலம், ஞாயிறு, சடையங்குப்பம், பூண்டி உள்ளிட்ட 550 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆறு வழியாகத்தான் கடலுக்குச் செல்கிறது. இந்த ஆற்றின் சராசரி கொள்ளளவு 1,10,000 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 1,25,000 கனஅடி.

சென்னையை உரசி செல்லும் ஆரணி


வடசென்னையை ஒட்டியும் உரசியும் பாய்வது ஆரணி ஆறு. ஆந்திர மாநிலத்தில் நகரி மலையடிவாரத்தில் உருவாகிறது. தமிழகத்துக்குள் நுழைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 131 கிமீ பயணித்துப் பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செழியம்பேடு, எளாவூர், காட்டேரி உள்ளிட்ட 461 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆற்றில்தான் செல்லும்.

சென்னையின் வடிநீர் கால்வாய்கள்


பக்கிங்காம் கால்வாய்
அடையாறு, கூவம், கொசஸ்தலை தவிர ஓட்டேரி நல்லா, பக்கிங்காம், விருகம்பாக்கம் – அரும்பாக்கம், கொடுங்கையூர், வீராங்கல், கேப்டன் காட்டன், வேளச்சேரி உள்ளிட்ட 9 பெரிய கால்வாய்களும் சுமார் 500 சிறிய கால்வாய்களும் சென்னைக்குள் ஓடுகின்றன.
கடல் கொந்தளிக்கும்போது வெளியேறும் தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாக வந்து விடுவதை தடுக்கவும், மழைநீர் வடிகாலாகவும், நீர் வழி போக்குவரத்துக்காகவும் பிரிட்டீஷார் ஆட்சியில் செயற்கையாக அமைக்கப்பட்டது பக்கிங்காம் கால்வாய். ஆந்திராவின் நெல்லூர் தொடங்கி, தமிழகத்தில் கடலூர் வரை, கடற்கரையில் இருந்து ஓரிரு கிலோமீட்டர் உள்வாங்கி, சென்னை வழியாக இந்தக் கால்வாய் செல்கிறது. சென்னையில் மட்டுமே 48 கி.மீ தூரம் பக்கிங்ஹாம் கால்வாய் பயணிக்கிறது. ஆரணி, கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகிய ஆறுகள், ஓட்டேரி நல்லா கல்வாய் தவிர திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள் உபரிநீரும் பக்கிங்காம் கால்வாயை கடந்துதான் கடலுக்குச் செல்கின்றன. இவை தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 29 சதவிகிதமும் பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது.

மறைந்துபோன பாடி, வில்லிவாக்கம் ஏரிகளிலிருந்து தொடங்கும் ஓட்டேரி நல்லா கால்வாய் அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், புரசைவாக்கம், ஒட்டேரி, வியாசர்பாடி, புலியந்தோப்பு வழியாக பக்கிம்காம் கால்வாய் வரை சென்னைக்குள் 10.2 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. மறைந்துபோன விருகம்பாக்கம் ஏரியிலிருந்து தொடங்கும் விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய் நுங்கம்பாக்கம் கூவம் ஆறு வரை சென்னைக்குள் 6.36 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. கொடுங்கையூர் கால்வாய், கொளத்தூர் ஏரி முதல் பங்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வீராங்கல் ஓடை, ஆதம்பாக்கம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.78 கி.மீட்டரும்; கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி ஏரியிலிருந்து தண்டையார்பேட்டை பக்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வேளச்சேரி கால்வாய், வேளச்சேரி ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.14 கி.மீட்டரும் சென்னைக்குள் ஓடுகிறது.

சென்னையைக் காப்பாற்றிய ஆறுகள்


கடல் மட்டத்திற்கு கிட்டத்தட்ட சம்மாக இருக்கும் சென்னையின் நில மட்டம் இந்த வருடம் சென்னை மழையில் பாதிப்புகள் பற்றிய விவாதங்களில் அச்சத்துடன் பார்க்கப்பட்டது. இது எப்போதும் ஆபத்தானதுதானா? ஆனால், இதே காரணம்தான் சென்னையை ஒருமுறை பேரழிவில் இருந்து காப்பாற்றவும் செய்துள்ளது. 2004 டிசம்பர் சுனாமியில், மற்ற தமிழக கடலோரப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது சென்னை குறைவான பாதிப்புகளையே அடைந்தது. அதற்குக் காரணம் சென்னைக்குள் ஓடும் ஆறுகள் வடிகாலாகச் செயல்பட்டதுதான். சென்னையைக் காப்பாற்றிய ஆறுகளை பத்தே வருடத்தில் சென்னையைக் கொல்லும் ஆறாக மாற்றியது யார் தவறு?



No comments: