05 October 2016

அரசியல்

முதல்வர் உடல்நலம் குறித்த ஊகங்கள்

நமது அரசியல் தலைவர்கள் 
உடல்சுகவீனத்தை ஏன் மறைக்கிறார்கள்?
(30-07-2015 புதிய தலைமுறை இதழில் வெளியானது)

ஜெ. ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பற்றித் தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் / ஊகங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை மறுத்து அரசு தரப்பில் இருந்தோ முதல்வர் தரப்பில் இருந்தோ இதுவரை அதிகாரபூர்வமான அறிக்கை எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், “முதலமைச்சர் என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமானவராக இருக்கக்கூடாது. பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதற்கு எதிராக, “ஸ்டாலினின் உடல் நலம் குறித்தும், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருவது குறித்தும் கருணாநிதி அறிக்கை வெளியிடுவாரா’’ எனக் கேள்வி எழுப்புகிறது, அதிமுக. மு.க. ஸ்டாலின் உடல்நலம் பற்றிய ஊகங்கள் பல வருடங்கள் பத்திரிகை செய்தி. ஸ்டாலினும் தனது உடல்நலம் பற்றி வரும் செய்திகளை மறுத்து அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் தெரிவித்ததில்லை. இன்னொரு பக்கம் இரண்டு முறை சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்று திரும்பிய எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தும், சிங்கப்பூரில் தான் மேற்கொண்ட சிகிச்சை என்ன என இதுவரை பேசியதிலை. ஏன் நமது தலைவர்கள் உடல் சுகவீனம் அடையும்போது அதுகுறித்த தகவல்களை மறைக்கிறார்கள்? சென்னையை மருத்துவத் தலைநகரம் எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும் நிலையில், இவர்கள் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெறுவது எதற்காக?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்றுப் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியது முதல், அந்த வழக்கிலிருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்வது வரை, 7 மாதங்கள், வெளியே எங்கும் செல்லாமல் தனது போயஸ் கார்டன் இல்லத்திலேயே இருந்தார், ஜெயலலிதா. விடுதலைக்குப் பிறகு, மே மாதம் 19ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியேற்பு விழா சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தொகுதியில் ஒருநாள் மட்டும் பிரச்சாரம் செய்தார். ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் 4ஆம் தேதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அந்நிகழ்வும் விரைவாக முடிக்கப்பட்டது. 10 நாட்கள் இடைவெளி. பிறகு, தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் மூலம் தேர்வான கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 1,016 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் எனவும் அதில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குவதை துவக்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டது. எந்தக் காரணமும் அறிவிக்கப்படவில்லை.

இம்மாதம் 15ஆம் தேதி தில்லியில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையில், மாநில முதல்வர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்கவில்லை. இது தொடர்பாகப் பிரதமர் மோதிக்கு எழுதியக் கடிதத்தில், “தனக்கு முக்கியமான அரசுப் பணிகள் இருப்பதால் தன்னால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை’’ என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அதிமுகச் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஜெயலலிதா வருகை ரத்து செய்யப்பட்டு, அவரது உரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதில், “கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில், வழக்கம்போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். எனினும், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக, இந்த விழாவுக்கு என்னால் நேரில் வர இயலவில்லை’’ என ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.

தேசிய கீதத்தின் நீளம்கூடக் குறைக்கப்பட்டு முதல்வர் பதவியேற்பு சில நிமிடங்களிலேயே முடிந்தது, இடைத்தேர்தலில் போட்டியிட சென்னைக்குள்ளேயே ஆர்.கே. நகர் தொகுதியை தேர்ந்தெடுத்தது, இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது, மெட்ரோ ரயில் சேவையைத் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே தொடங்கி வைத்தது உள்பட வெவ்வேறு காரணங்கள் சேர்ந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றிய பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தன.

ஊடகங்களில் இதுபற்றி ஆங்காங்கு சில செய்திகள் வெளிவந்த நிலையிலேயே, ஆலந்தூர் கூட்டத்தில், திமுகத் தலைவர் கருணாநிதி, “தயவு செய்து நீங்கள் ஓய்வெடுத்து உங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று வெளிப்படையாக பேசினார்.

“கால்களின் இரண்டு மூட்டுகளும் தீராத வலியால் அவரை வேதனைப்படுத்துகின்றன. அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின் படியும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அதற்கான சில பயிற்சிகளையும் செய்கிறார். ஆனாலும், வலி குறையவில்லை. நாளுக்குநாள் கூடிக்கொண்டுதான் போகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது என்பது மருத்துவர்கள் அறிவுரை. அப்படி உட்கொண்டால், உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர் நடக்க, நிற்க சிரமப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்தான் ஜெயலலிதாவுக்குச் சமீப நாட்களாக இந்த மூட்டு வலி மிக அதிகமானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது கொடநாடு செல்லும் திட்டத்தைக் கைவிட்டதாக’’ ஊடகங்களில் செய்தி வெளியானது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்படப் பல்வேறு அரசியல் கட்சியினரும், முதல்வர் தனது உடல்நிலை குறித்து விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். “முதல்வரின் உடல் நலத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்’’ என்கிறார் தொல். திருமாவளவன். “முதல்வரின் உடல் நலம் குறித்து விமர்சனம் செய்வது அரசியல் நாகரிகமற்றது’’ என்று கூறிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியனும் பிறகு, “பொதுவாக நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் உடல் நலம் குறித்துச் சந்தேகங்கள் எழும்போது, அதை மருத்துவ அதிகாரிகள் மூலமோ உரிய நபர்கள் மூலமோ அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்பது வழக்கம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அன்பு கொண்ட தொண்டர்கள், அவருக்குச் சிறு தண்டனை என்றாலே கோவில்களுக்குச் சென்று மொட்டை போடும் அளவுக்கு அன்பும் பக்தியும் கொண்டவர்கள். அவர்களுக்காக ஜெயலலிதா உடல் நிலை குறித்தும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர் என்கிற முறையில் மக்களுக்காகவும் ஆளும் கட்சியினர் அவரது உடல் நிலை குறித்த தகவல்களைத் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

சுப்பிரமணியன் சுவாமி
இந்நிலையில், "கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர வாய்ப்புள்ளது. எந்த நேரத்திலும் ஜெயலலிதா கிளம்பலாம். அது ஒரு கடினமான ஆபரேசன்" என, பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டிவிட் வெளியிட்டார்.

இவ்வளவுக்குப் பிறகும் அதிமுக கட்சி தரப்பிலோ அரசு தரப்பிலோ முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. மாறாக, முதல்வரின் உடல்நலம் குறித்து தவறாக செய்தி வெளியிட்டதாக ரீடிஃப் இணையத் தளம் மீதும் பத்திரிகையாளர் ராமசுப்பிரமணயன் மீது தமிழக அரசு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை மதியம் தலைமைச் செயலகத்திற்கு வந்த முதல்வர் ஜெயலலிதா ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடிப் பணி நியமன ஆணை பெற்றவர்களில் ஐந்து பேருக்கு மட்டும் நியமன ஆணைகளை வழங்கினார். இதனையடுத்து ஜெயலலிதா உடல்நலம் குறித்த ஊகங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட்து. ஆனால். அடுத்தடுத்த நாட்களில் முதல்வர் கலந்துகொண்டதாக இரண்டு நிகழ்வுகள் குறித்த செய்தி பத்திரிகைகளில் வெளியாக, “இம்மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் நடந்தவை. அரசு ஏன் இப்படி அடுத்தடுத்த நாட்களில் நடந்த நிகழ்வாகக் காட்டுகிறது’’ என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். இதனால், இந்நிகழ்வுகள் முதல்வர் உடல்நிலை பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக மேலும் ஊகங்களை வளர்க்கவே செய்கின்றன. இச்செய்திகளால் அதிர்ச்சியடைந்த கீழகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான 58 வயது வீரராகவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முதல்வர் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலமோ, பத்திரிக்கை செய்தி மூலமோ இந்த விவாதங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஏனோ செய்யவில்லை.

சி.ஆர். சரஸ்வதி
இந்நிலையில், “முதல்வர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வரும் கருணாநிதி, முதலில் ஸ்டாலினின் உடல் நலம் குறித்தும், அவர் அடிக்கடி வெளிநாடு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருவது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்’’ என்கிறார் அ.தி.மு.க தலைமை கழகப் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி. “2 வார சுற்றுப் பயணமாக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று இரவு வெளிநாடு புறப்படுகிறார்’’ என்பது கடந்து சில வருடங்களில் அடிக்கடி வரும் செய்தியாகிவிட்டது. இதனையொட்டி ஸ்டாலின் உடல்நலம் குறித்தும் பல்வேறுவிதமான ஊகங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகத் திமுகவில் இருந்து மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்ட போது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, “ஸ்டாலினைப் பற்றி, நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லை அழகிரி சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்தத் தகப்பனாராவது இதுபோன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியுமா?’’ என்றார். ஆனாலும், சி.ஆர். சரஸ்வதி குறிப்பிடுவதுபோல், கருணாநிதியோ திமுகத் தரப்போ ஸ்டாலின் உடல்நலம் குறித்த ஊகங்களுக்கு இன்றுவரை பதில் சொல்லவில்லை.

சென்ற வருடம் டெல்லியில், நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த், தொடர்ந்து நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அப்போது, முதல் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கண்ணில் நீர் வழிந்துகொண்டே இருந்ததால்தான் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு போகவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், சென்னை திரும்பிய சில நாட்களில் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘விஜயகாந்துக்குக் கல்லீரல் பிரச்சனை. அதற்காகத்தான் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார்’ என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

விஜயகாந்த்
சில மாதங்களுக்குப் பிறகு, ‘நெஞ்சு எரிச்சல் காரணமாக’ விஜயகாந்த் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, உடனே மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா மட்டும் சென்றார். விஜயகாந்தின் அப்பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. விமான நிலையத்திற்குத் தொண்டர்கள் யாரும் வரவில்லை. திரும்பி வரும்போதும் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் காரில் ஏறி வீட்டுக்குச் சென்றனர். இன்றுவரை சிங்கப்பூரில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்து விஜயகாந்தோ தேமுதிக கட்சியோ அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இது குறித்து நம்மிடம் பேசிய மனநல மருத்துவர் ருத்ரன், “உடல் சுகவீனம் என்பது யாருக்கும் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். மேலும், அது ஓர் அவமானகரமான விஷயமும் இல்லை. தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரையும் எம்.ஜி.ஆரும் உடல்நலம் குன்றியபோது அதனை வெளிப்படையாக அறிவித்துதான் அயல்நாடு சென்றார்கள். எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோதும் இங்குத் தேர்தலில் வெற்றி பெற்றார். எனவே, இது தமிழகத்துக்குப் புதிது அல்ல. எல்லோருக்கும் வரும் உடல்நல பாதிப்பு, தன் தலைவனுக்கோ தன் அபிமான நடிகனுக்கோ வந்தால், எந்தத் தொண்டனும் ரசிகனும் அவர்களைக் குறைத்து மதித்துவிடப் போவதில்லை. மாறாக, அவர்கள் மேல் வைத்திருக்கும் மயக்கும் அன்பின் வெளிப்பாடாக விரைவில் நலம் பெறவேண்டும் என்றே வேண்டுவான். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்ட போது தமிழகமெங்கும் மக்கள் இப்படித்தான் இருந்தார்கள்’’ என்றார்.

இதற்கு இந்திய அளவிலான மிகச் சிறந்த உதாரணம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் (எய்ம்ஸ்) இரண்டு முறை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் மன்மோகன் சிங். இரண்டும் அவர் பிரதமராக இருக்கும்போது நடைபெற்றது; வெளிப்படையாகத் தெரிவிக்கவும் பட்டது.

ஆனால், அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு என்ன பாதிப்பு என்பது இன்றுவரை காங்கிரஸ் தரப்பில் கூறப்படவில்லை. அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, சினிமா பிரபலங்களும் உடல்சுகவீனம் குறித்த தகவல்களை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். உதாரணம்: ரஜனிகாந்த். சிங்கப்பூரில் ரஜினிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை இன்றுவரை ரகசியம்தான்.

ஏன் நமது தலைவர்கள் / பிரபலங்கள் தங்கள் உடல்சுகவீனத்தை மறைக்கிறார்கள்?

டாக்டர் ருத்ரன்
“தலைவர்களும் பிரபலங்களும் பிம்பங்களின் தாங்குதல்களாலேயே வாழ்வையும் செல்வாக்கையும் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள். நோய் என்பது யாரையும் தாக்கும் என்றாலும், அது தம் அதீத பிம்பத்துக்கு எதிரானது என்று இவர்கள் கருதுகிறார்கள். என்றும் அதே குன்றா இளமையும் வசீகரமும் வலுவும் இருப்பதாகத் தொண்டர்களும் ரசிகர்களும் தம்மைப் பார்க்க வேண்டும் எனும் அவசியமில்லாத உந்துதல்தான், தம் உடலில் சிக்கல் வந்தால் அதை மறைப்பதற்கான அடிப்படை காரணம்.

இவ்வகைப் பிம்பங்கள் பல நேரங்களில் மக்களாலேயே உருவாக்கப்படுபவை, அங்கீகரிப்பினால் வளர்க்கப்படுபவை. ஒரு சாதனையின் அல்லது சின்ன வெற்றியின் கைதட்டல்தான் இதன் ஆரம்பம். கைதட்டல் மனத்துக்கு இதமான ஒரு சுகம். மேலும் மேலும் அது கிடைக்க வேண்டும் எனும் ஏக்கத்தை, தாகத்தைச் சிலருக்கு வெறியையும் உருவாக்கும். இதன் தொடர்ச்சியே தான் ஓர் அதீத மானுடம் எனும் பிரமையை அவர்களுக்குள் அமைய வழி வகுக்கும். இப்படியான அதீத மானுட பிம்பம் சாதாரண மக்கள் முன் ஒரு நோயினால் சரிவதை நம் தலைவர்கள் / பிரபலங்கள் விரும்புவதில்லை. எம்ஜியார் கூடச் சுயநினைவிலிருந்திருந்தால் தன் நோய் குறித்து மக்களிடம் தெரிவித்திருக்க மாட்டார், அவர் அவ்வளவு தீவிரமான நிலைக்குப் போகுமுன் இருந்த, எந்தப் பாதிப்பையும் வெளிக்காட்டியதில்லை. தன் பிம்பம் சரியவில்லை என்பதைக்காட்டும் முயற்சிதான், எம்.ஜி.ஆர். சிகிச்சை முடிந்து திரும்பிய உடன், மேடையில் துள்ளி ஏறியதெல்லாம்.

இது என் உடலின் நிலை; என் சொந்த விஷயம்; அதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனும் வாதம் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளக்கூடியாதக் இருக்கலாம். ஆனால், இது பிரபலங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம், அரசியல் தலைமை ஏற்று நடத்துபவருக்குப் பொருந்தாது. ரசிகன் நடிகனின் நோய் குறித்து வருந்துவானே தவிர அவன் வாழ்வில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால், தலைவன் நோயினால் செயல்திறன் குறையக்கூடும் என்றால் அது தொண்டனின் வாழ்வை செயல்பாட்டை, எதிர்காலம் குறித்த திட்டங்களைப் பாதிக்கும். மாற்றுத் தலைமையை அவன் தேடவேண்டிய அவசியம் மனத்தின் ஓரத்தில் தோன்றும். இப்படி, தம் பிம்பத்துக்கு மட்டுமல்ல, தொண்டனைக் கட்டுப்படுத்தும் தம் அதிகாரத்துக்கும் ஆபத்து எனும் எண்ணமும் அரசியல்வாதிகள் / நடிகர்கள் நோய் குறித்த செய்திகளை மறைக்க ஒரு காரணம், இதுவும் ஒருவித தன்னம்பிக்கையின்மைதான்.

பிரபலமோ அரசியல் தலைமையோ இங்கே தமிழ்நாட்டுக்குள் சிகிச்சை எடுக்கத் தயங்குவது செய்தி வெளியே தெரிந்து விடும் எனும் பயத்தினால்தான்’’ என்கிறார் டாக்டர் ருத்ரன்.

No comments: