18 August 2015

ஈழப் போர் இறுதி தினங்கள்

புலிகளின் சரணடையும் முயற்சி

தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்!

(புதிய தலைமுறை, 25-06-2015 இதழில் வெளியானது.)


ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது; பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன; நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே நீடிக்கிறது. அவ்வப்போது இந்த இருள் பிரதேசம் மீது அடிக்கப்படும் வெளிச்சம் சில விசயங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. சில பல விவாதங் கள், விசாரணைகள்மீண்டும் இருள். தற்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோண மலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் மனைவி அனந்தி, இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணையில் அவர் தெரிவித்த செய்திகளும், 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும், ஈழப் போர் இறுதி தினங்கள் குறித்த சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. உண்மையில் நடந்தது என்ன?

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தம், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட கடைசித் தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சரணடையும் முயற்சி மீது நம்பிக்கை வைத்து, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தனது கணவர் உட்படச் சிலரை காணவில்லை என்று, அனந்தி சசிதரனும் மற்றும் நான்கு போராளிகள் உறவினர்களும் இலங்கை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணையின் போது சாட்சியமளித்த அனந்தி, ‘இறுதி தினங்களில் விடுதலைப் புலிகள் சரணடைவானது இந்தியா மற்றும் சர்வதேச ஏற்பாட்டில் இடம்பெற்றது. அப்போது எனது கணவர் எழிலனும் சரணடைந்தார். அதன்முன்பு, சரணடைவது தொடர்பாகத் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன், தொலைபேசியில் எழிலன் உரையாடினார். அதனை நான் கணவர் அருகில் இருந்து கேட்டேன். மேலும் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்களுடனும் கனிமொழி பேசினார். முள்ளிவாய்க்காலில் வைத்து கனிமொழியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே 2009 மே 16ஆம் திகதி காலை 8 மணியளவில் எனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்தார்எனக் கூறியுள்ளார். அதன்பின்னர் பல ஊடகப் பேட்டிகளிலும் இதனை உறுதிப்படுத்தினார்.

கனிமொழி
அனந்தியின் இந்தப் பேச்சை கனிமொழி மறுத்துள்ளார். 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலோ இந்திய அரசாங்கத்தின் சார்பிலோ சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. மேலும், எனக்குச் சசிதரன் யார் என்றே தெரியாது. இந்நிலையில், நான் தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்று முழுதிலும் தவறானது. யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், ‘கனிமொழி இதனை மறுப்பார் என எனக்கு முன்னரே தெரியும். அவர் கூறியதற்கான சாட்சியம் என்னிடம் இல்லை. அதனை வைத்து அவர் தான் கூறவில்லையெனக் கூறலாம். ஆனால், அவரது மனசாட்சிக்குத் தெரியும். மேலும், இறுதிகட்டப் போரின்போது நடந்தது என்னவென்று சர்வதேசத்துக்குத் தெரியும். பல நாடுகள் இணைந்து இறுதி மோதல்களை முடித்து வைத்தன. ஆனால், இன்று சர்வதேசம் இதிலிருந்து ஒதுங்கப் பார்க்கின்றதுஎன்கிறார் அனந்தி.

விடுதலைப் புலிகள் சரணடைவு புதிய செய்தியல்ல. வெள்ளைக்கொடி பிடித்துக்கொண்டு சரணடைய முன்வந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் போன்றவர்கள் சரவதேச யுத்த நெறிமுறைகளுக்கு மாறாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். சரணடைவு பேச்சுவார்த்தைகளில் யார் யார் ஈடுபட்டனர், இலங்கை அரசு ஏன் தன் உறுதிமொழியை மீறியது என்பது குறித்து ஏற்கெனவே பல செய்திகள் வெளிவந்துள்ளன. சரணடைவு பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பிலிருந்து ஈடுபட்டவர்களில் ஒருவரும், அப்போது புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்தவருமான கேபி எனப்படும் குமரன் பத்மநாபனும் இது குறித்துப் பேசியுள்ளார். தற்போது இலங்கையில் வசிக்கும் குமரன் பத்மநாபனைத் தொடர்புகொண்டோம்.

தற்போதைய சூழலில் தான் பேசுவது பொருத்தமானதல்ல. தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கு முடியும் வரையில் எதையும் பேச வேண்டாம் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாககுமரன் பத்மநாபன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் வசிக்கும் முன்னாள் போராளிகள் இதுகுறித்துப் பேசுவது சாத்தியமற்ற நிலையில், தற்போது பிரான்ஸில் வசிக்கும் எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான சாத்திரியை மின்னஞ்சலூடாகத் தொடர்புகொண்டோம். 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம் கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார். இது கனிமொழியின் தமிழினப் பற்றுத் தொடர்பாக ஈழத் தமிழர்களிடையே நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது. இதனையடுத்து நேரடியாகவும் சுப.வீரபாண்டியன் ஊடாகவும் கனிமொழிக்கு பா.நடேசனால் இரகசிய வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடேசனுக்கும் கனிமொழிக்கும் தொடர்ச்சியான மின்னஞ்சல் தொடர்புகள் இருந்தது. இக்காலகட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்குமான தொடர்பாளராகக் கனிமொழி இருந்தார்என்றார் சாத்திரி.

சாத்திரி
மேலும், ‘இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன், உலக நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு - சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று, 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.

07.04.2009 அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கனிமொழி அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ் வடிவம், ‘நடேசன் அண்ணன், நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களைக் கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவுசெய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதைச் செய்ய முடியாதுவிட்டால் தயவுசெய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும் தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவுசெய்து தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்என்றிருந்தது.

இலங்கை என்ற நாட்டைப் பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரை எம்மால் உதவவும் முடியாது. புலிகள் தற்போதைக்கு அந்த நிலைப்பாட்டைக் கைவிடத் தயாரா என்பதை நடேசனிடம் கேட்டுச் சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளதுஎன்றார் ப.சிதம்பரம்.

இந்தத் தகவல், பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து, விடுதலைப் புலிகள் கிளிநொச்சி மாவட்டத்தையே கைவிட்டு வெளியேறி, முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் மட்டும் இருந்த நாட்கள் அவை. முல்லைத்தீவு மாவட்டத்துக்குள்ளும் நுழைந்த ராணுவம், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைக் கைப்பற்ற நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், தலைவர் பிரபாகரன், பா.நடேசன், தீபன், சூசை மற்றும் சில முக்கியத் தளபதிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது. அப்போது தீபன், ‘ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றாமல் இன்னமும் சில வாரங்களே தடுக்க முடியும். அதன்பின் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள்என்ற நிஜ கள நிலைமையைத் தெரிவித்தார். ஆலோசனையில் கலந்துகொண்ட இரு தளபதிகள் அதை மறுத்து, முல்லைத்தீவை தக்க வைத்துக்கொள்ளும் பலம், புலிகளிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

நீண்ட ஆலோசனையில், ‘எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையைக் கைவிடத் தயார்என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது. இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்என்பது சில தளபதிகளின் கருத்து. இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.

ப. சிதம்பரம்
இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார். மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாதுஎன்பதுதான். சிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லைவிஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார்.

இந்த விஷயங்கள் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தன. அதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன. இந்நிலையில் வைகோ, ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்என்றார். குழம்பிப் போனார் நடேசன்.

நடேசன் அடுத்துப் பழ.நெடுமாறனை தொடர்புகொண்டார். அவரும் வைகோ சொன்னதையே சொன்னார். இவர்கள் இருவரது கருத்தும் பிரபாகரனிடம் சேர்க்கப்பட்டது. அப்போது, இலங்கை ராணுவம் முல்லைத்தீவை கைப்பற்றாமல் இன்னும் சில மாதங்களுக்கு (இந்திய லோக்சபா தேர்தல் முடிவு வரும்வரை) தாக்குப்பிடிக்க முடியும் என்ற கருத்து சில தளபதிகளால் சொல்லப்பட்டது. பிரபாகரன் அதையே நம்பியதாகத் தெரிகிறது. சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டதுஎன எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.

ப. சிதம்பரம் தயாரித்த ப்ரப்போசலின் ஆயுள் அத்துடன் முடிந்தது. இதற்கிடையே அமெரிக்கத் திட்டம் ஒன்றும் ப்ரபோசல் அளவில் இருந்தது. இந்திய திட்டம், ‘ஈழம் கோரிக்கையைக் கைவிட வேண்டும்என்ற அளவில் இருந்தது. அமெரிக்கத் திட்டமோ, ஒரு படி அதிகமாகி, ‘புலிகள் சரணடைய வேண்டும்என்ற வகையில் இருந்தது. அமெரிக்கா கப்பல் கொண்டுவந்து பிரபாகரனையும் தளபதிகளையும் வெளியேற்றும் அந்த அமெரிக்கத் திட்டத்தையும் பிரபாகரன் நிராகரித்திருந்தார்.

யுத்தம் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார்.

வைகோ
26.04.2009 அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர் நிறுத்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். அதனை இலங்கை அரசு நிராகரித்தது. இதற்கிடையே பா.நடேசனுடன் தொடர்பில் இருந்த வைகோ, “இன்னும் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடியுங்கள். மத்தியில் அரசு மாறிவிடும். ஆட்சி மாறினால், மறுநாளே யுத்த நிறுத்தம்என்றார். இரண்டு வாரங்கள் தாக்குப் பிடிப்பதே சிரமம் என்ற நிலை வன்னியில் இருந்தது. இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை. அடுத்த 48 மணி நேரத்துக்குள் மே 18ஆம் தேதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்தது. இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.

இதன்முன்னர், இறுதி நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்கள், தங்களை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பில் உலகத்தில் தங்களுக்குத் தெரிந்தவர்களோடு எல்லாம் தொடர்புகளை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சிலர் கனிமொழியோடும் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

பழ. நெடுமாறன்
புலிகள் சரணடையும் தீர்மானம் எடுத்தபோது முதலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தையும் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய நோர்வே, ஐ.நா. சபையின் தென்கிழக்காசிய பிராந்திய பிரதிநிதி ஆகியோரைத்தான் தொடர்புகொண்டார்கள். புலிகள் தலைமை சரணடையும் முடிவு, 2009 மே 15ஆம் தேதி அன்றைய சர்வதேச தொடர்பாளர் கே.பி. மூலமாக நோர்வேக்குத் தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்கள். ஐநா சபை அதிகாரிகளோடு அலுவலகத்தில் தொடர்புகொள்ள முடியாது; எனவே இந்திய அரசோடு தொடர்புகொள்ளலாம் என நோர்வே அரசு வழங்கிய ஆலோசையின்படி அன்றைய மத்திய அமைச்சர் சிதம்பரத்தோடு தொடர்புகொள்ள முயன்றார்கள். அப்போது புலிகளுக்கும் இந்திய மத்திய அமைச்சருக்கும் இடையில் தொடர்பாளராக கனிமொழி இருந்தார்.

இந்நிலையில் இப்போது சிலர் கனிமொழி சொன்னபடிதான் புலிகள் சரணடைந்தார்கள் என்பது போலச் செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர் புலிகளைச் சரணடையும் படி சொல்லவும் முடியாது. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை. கனிமொழியை நம்பி சரணடையும் முடிவை எடுக்கும் அளவுக்குப் புலிகள் அமைப்பும் இல்லை. ஒரு நாட்டின் உள்நாட்டு யுத்தத்தை அடுத்த நாட்டின் முதலமைச்சரோ அவரின் வாரிசோ அடுத்த நாட்டின் மத்திய அமைச்சரோ தடுத்து நிறுத்திவிட முடியாது. இவையெல்லாம் தெரிந்தும் அனந்தி சசிதரன் அண்மைக்காலமாகப் பேசி வருபவை தேர்தல் அரசியலைக் குறி வைத்ததாகவே தெரிகிறது’’ என்கிறார் சாத்திரி.

யுத்தத்தின் இறுதி நாட்கள் பேச்சுவார்த்தையில் புலிகள், இந்திய அரசு இரண்டு தரப்புக்கும் இடையே தொடர்பில் இருந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன், அருட் தந்தை ஜகத் கஸ்பார் இருவரும்கூட அனந்தி சசீதரன் பேச்சு தேர்தல் அரசியலை மையமாக வைத்தே நகர்த்தப்படுகிறதுஎனப் புதிய தலைமுறையிடம் தெரிவித்தனர்.

சுப. வீரபாண்டியன்
சுப. வீரபாண்டியன், ‘போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளில் என் பங்களிப்பு இருந்தது. கனிமொழி தூண்டுதலில் ப. சிதம்பரம் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். அதனடிப்படையில் ஓர் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு அதில் புலிகள் தரப்பில் கையெழுத்துப் போடுவார்களா என என்னிடம் கேட்டார்கள். அதனை நான் புலிகளுக்குத் தெரிவித்தேன். ஆனால், முயற்சி தொடரவில்லை. பின்னால், தமிழகத்தில் இருந்து சில தலைவர்கள் அதனைத் தடுத்துவிட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். மே 17, 18இல் மீண்டும் 48 மணி நேரத்துக்காவது போர் நிறுத்தம் செய்ய முடியுமா என முயற்சி மேற்கொண்டோம். ஆனால், அந்த முயற்சியும் இப்போது குறிப்பிடப்படுவதுபோல் சரணடைவதற்கான முயற்சி அல்ல, போர் நிறுத்தத்துக்கான முயற்சிதான். மூன்று தலைமுறைகளாக நடைபெற்றுவரும் போராட்டம் அது. அந்தப் போராட்டத்தில் கனிமொழி முடிவு எடுக்க முடியுமா? ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் திமுகவுக்கு எதிராக எதாவது ஒன்று உருவாக்கப்படும். இப்போது அனந்தி மூலம் அது தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்கு இன்னமும் ஈழ அரசியல் பயன்படுகிறது என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறதுஎன்றார்.

ஜெகத் கஸ்பர், ‘ஜனவரி 28, 29, 30 தேதிகளையொட்டியும் மே 17,18 இறுதி நாட்களிலுமாக இரண்டு முறை போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஜனவரி கடைசித் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த முயற்சியில், இரண்டு பக்கமும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களுடன் எனக்கு இருந்த தொடர்புகள் மூலம் ஒரு சிறு பங்களிப்பை நான் செய்தேன். அப்போது, இந்தியத் தரப்பில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான விருப்பம் முன்வைக்கப்பட்டு அதனை இரு தரப்புமே ஒப்புக்கொள்ளப்பட்டு ஒரு வரைவு தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென இந்த முயற்சி மேற்கொண்டு நகராமல் நின்றுவிட்டது. அப்போது, புலிகள் தன்னிச்சையாகப் பேச்சுவார்த்தையைத் துண்டித்துக்கொண்டார்கள் என இந்தியத் தரப்பில் சொல்லப்பட்டது. இதற்கு அனந்தபுரம் சமர் மீது புலிகள் வைத்திருந்த ஒரு நம்பிக்கைக் காரணமாக இருக்கலாம் என நான் அனுமானித்தேன்.

ஜெகத் கஸ்பர்
அனந்தபுரம்தான் இறுதி யுத்தத்தில் கடைசித் திருப்புமுனையாக அமைந்தது. அந்த யுத்தத்தில் இலங்கை ராணுவம் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தியதை புலிகள் எதிர்பார்க்கவில்லை. அந்த யுத்த்த்தில் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் இறந்துவிட்டார்கள். இதனால், அனந்தபுரத்துடன் கிட்டத்தட்ட போர் முடிவுக்கு வந்துவிட்டது. அதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த முயற்சி என்பது அதன்பிறகு புலிகள் சரணடைவதற்கான முயற்சியாக மாறிவிட்டது. ஏனெனில், சண்டையை நிறுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இருக்கவில்லை.

கடைசித் தினங்களில் சரணடையும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பிரபல போர்ச் செய்தியாளர் மேரி கொல்வின், இலங்கை முன்னாள் எம்பி சந்திரா நேரு, விஜய் நம்பியார் உட்படப் பலர் அதில் ஈடுபட்டிருந்தார்கள். அதன் அடிப்படையில்தான், வெள்ளைக்கொடிகளைக் காண்பித்து நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் சரணடைய முன்வந்தார்கள். பொதுவாக இதுபோன்ற சரணடையும் சம்பவங்களில் ஐநா பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும். விஜய் நம்பியார் அப்போது கொழும்பில்தான் இருந்தார். ஆனாலும், ஐநா பிரதிநிதி ஒருவர்கூடக் களத்துக்கு வரவில்லை. ஐநா பிரதிநிதி இல்லாததைப் பார்க்கும்போது இதில் ஒரு சதி இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

இலங்கை அரசைப் பொருத்தவரைக்கும் தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும் புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்த கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் அவர்கள் கணக்குஎன்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.

ஆனால், இந்தியத் தரப்பில் முன்னெடுக்கபட்ட போர் நிறுத்த முயற்சிகளை வைகோ ஆலோசனைபடிதான் புலிகள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை ஏற்கெனவே வைகோ மறுத்துள்ளார். இது குறித்துக் குமரன் பத்மநாபன் கூறியிருந்ததற்கு மறுப்புத் தெரிவித்திருந்த வைகோ, ‘போர் நிறுத்தம் ஏற்பட்டால் என்னைவிட, பழ.நெடுமாறனை விட நிம்மதி அடைகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. எவ்வகையிலாவது போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்று நாங்கள் துடித்தோம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் புலிகள் அமைப்புக்கும், அவர்கள் அங்கே எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி, எந்தக் காலத்திலும் நாங்கள் யோசனை கூறியது கிடையாது. ஈழத்தின் நிலைமைக்கு ஏற்ப, அம்மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளைப் பிரபாகரன் மேற்கொள்வார்என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈழப் போராட்டம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் (பெயர் வெளியிட விரும்பவில்லை), ‘இறுதி யுத்தத்தில் சரணடையும் முடிவை போராளிகளுக்குச் சொன்னது மேரி கொல்வின் தரப்பும் மேற்குலகமும்தான். அப்போது நடைபெற்ற புலிகளுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் பல வழிகளில் நடந்தது. அதில், கனிமொழி தரப்பு மட்டுமல்லாமல் புலிகளின் நெருங்கிய நண்பர்களாகத் தமிழகத்தில் இருந்த பல அரசியல் தலைவர்களும் ஈடுபட்டதோடு சில கடிதப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டனர். அவர்கள் இன்று மவுனமாக உள்ளனர். அவர்கள் மவுனம் கலைத்தால் பல விஷயங்கள் வெளிவரலாம்என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.

தமிழகத் தலைவர்கள் மவுனம் கலைப்பார்களா

--------------------------------------------------------------------------------------------------------------------------


விடுதலைப்புலிகளும் சரணடைவும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியப் பணியாற்றிய ஒருவர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் புலிகள் சரணடைவு குறித்து, தெரிவித்தவை இவை.

புலிகளின் சரணடைவு மூன்று நான்கு வகையில் நிகழ்ந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே உதிரிகளாக ஒரு தொகுதிப் புலிகள் படையினரிடம் சரணடைந்தார்கள். இவர்கள் கடல் மார்க்கமாகவும் தரை வழியாகவும் புலிகளுக்கே தப்பி, படையினரிடம் சரணடைந்தனர். குறிப்பாக, தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த நிலையில் இந்தச் சரணடைவு நடந்தது.

அடுத்தது, யுத்தத்தின் இறுதியின்போது நடந்த சரணடைவு. வெள்ளைக்கொடியுடன் நடந்த இதில் புலித்தேவன், நடேசன், ரமேஸ் என்ற இளங்கோ மற்றும் நடேசனின் குடும்பத்தினர் என ஒரு தொகுதியினர் சரணடைந்தனர்.

மூன்றாவது, யுத்தம் முடிந்த பிறகு அல்லது யுத்த ஓய்வுடன் நடந்த சரணடைவு. இதன்போது புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒரு தொகுதியினர் (ஏறக்குறைய 100 பேருக்கு மேல்) சரணடைந்தனர். இதில்தான் எழிலன், நீதித்துறைப் பொறுப்பாளர் பரா, கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை, அரசியற்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், அரசிற்துறை முக்கியஸ்தர் இளம்பரிதி, விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் பாப்பா, நிதர்சனம் நிறுவனப் பொறுப்பாளர் மிரேஸ், தமிழீழத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் திலகன், தமிழீழப் போக்குவரத்துக் கழகப் பொறுப்பாளர் குட்டி, நகை வாணிபப் பொறுப்பாளர் பாபு, தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளரும் பிரபாகரனின் நெருங்கிய சகாவுமான பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன்), புலிகளின் முக்கியஸ்தர் யோகரட்ணம் யோகி எனப் பலர் சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய எந்த விவரமும் இன்றுவரை இல்லை. இவர்கள் முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் கிறிஸ்தவ மதகுருவான பிரான்ஸிஸ் யோசப்புடன் இணைந்து படையினரிடம் சரணடைந்திருந்தனர். முக்கியமான விடயம் என்னவென்றால், புலிகளின் தலைமைக்குரியவர்கள் - தளபதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டனர். மிஞ்சிய முக்கியஸ்தர்கள்தான் மதகுருவுடன் சென்றனர்.

இதனை அடுத்தத் தொகுதியினர் பொதுவாகவே சரணடைந்தவர்கள். இவர்கள்தான் அதிகம். ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கு மேல். இன்னொரு தொகுதியினர் சரணடையாமல் மக்களோடு மக்களாக அகதி முகாம்களுக்குச் சென்றனர். இவர்களைப் பிற போராளிகளும் மக்களும் காட்டிக் கொடுத்தனர். எப்படியோ இவர்களைப் படையினர் முகாம்களில் வைத்துக் கைது செய்துகொண்டு சென்றனர். மற்றொரு தொகுதியினர் படையினரின் பகுதிக்கு மக்களோடு வந்தனர். ஆனால், படையினரிடம் சரணடையாமல் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிச் சென்றனர். ஏனையவர்கள் இடைநிலையாளர்கள். தப்பிச் சென்றவர்களும் இடைநிலையாளர்களே.

விதிவிலக்காக ஒரு சரணடைவு நடந்தது. ஈரோஸ் இயக்கத்தின் தலைவராக இருந்து பின்னர்ப் புலிகளுடன் இணைந்து கொண்ட வேலுப்பிள்ளை பாலகுமாரனின் சரணடைவு. இவர் தனியாக மக்களுடன் இணைந்து சரணடைந்தார். இவருடன் இவருடைய மகன் சூரியதீபனும் பாலகுமாரனின் உதவியாளரும் கூடவே சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய விவரங்களும் இன்றுவரை இல்லை.

16 July 2015

பருவநிலை மாற்றம்

இன்னும் எத்தனை ஆண்டுகள்?


மனிதன் வாழ முடியாத நிலையை நோக்கி நகரும் பூமி!



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை காலம். ஆனால், ஜூலை மாதம் ஆகியும் சென்னையில் வெயில் தகிக்கிறது. கோடை காலம் நீண்டுள்ளதுடன் வெப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலோ வழக்கத்துக்கு முன்பே தென்மேற்கு பருவமழைத் தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதையும்விட இந்த வருடம் அதிக மழை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 700 கி.மீ.க்குள் எவ்வளவு வித்தியாசம்? தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்க இதுதான் நிலை. பருவநிலை தாறுமாறாகச் சீர்குலைந்து கிடக்கிறது. என்ன செய்வது எனத் திகைத்துத் தடுமாறுகின்றன நாடுகள்!

ஒரு பக்கம் வறட்சியின் கோரப்பிடி, இன்னொரு பக்கம் வரலாறு காணாத மழை. பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் பருவம் தவறிப் பெய்கிறது மழை. இதனால் எப்போது வெள்ளாமையைத் தொடங்குவது என்பதைக் கணிக்க முடியாமல் திணறுகிறார்கள் விவசாயிகள். கடும் வெயில் காரணமாக இரவாகியும் குறையாமல் இருக்கிறது அனல் காற்று. இந்த வருடம் இந்தியாவில் கடும் வெயிலில் 2000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளார்கள். தற்போது பாகிஸ்தானில் அடிக்கும் வெயிலில் பலி எண்ணிக்கை 1300-ஐ கடந்துவிட்டது. என்ன ஆனது பூமிக்கு? பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள இந்தக் கிரகிக்க முடியாத திடீர் திடீர் மாற்றங்களுக்கு என்ன காரணம்? இந்நிலை தொடர்ந்து நீடிக்குமா?

“கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்குப் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதுதான் முக்கியக் காரணம். இது, வெயில் மற்றும் மழை அளவுகளை தாறுமாறாக மாற்றமடையச் செய்திருப்பதுடன் மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது’’ என்கிறார், அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தக அமைவு ஆராய்ச்சி மையப் பேராசிரியர் ராமச்சந்திரன்.

பேரா. ராமச்சந்திரன்
“பூமி வெப்பமடைவதை மனிதனுக்குக் காய்ச்சல் வருவதோடு ஒப்பிடலாம். மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட். இதற்கு மேலே சென்றால் காய்ச்சல் என்கிறோம். அதுவே 101, 102, 103 என்று உயரும்போது கடுமையான காய்ச்சல் ஆகிறது. உடலின் அதிக வெப்பநிலை மனிதனின் சராசரி இயக்கத்தைத் தடுக்கும். உடல்வலி கடுமையாகும். கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் மரணத்தை வரவழைக்கலாம். இதேபோன்றுதான் பூமியும். பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ். பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் கூடுதலாகவும், துருவப் பகுதிகளில் குறைவாகவும் இருந்தாலும் ஒட்டுமொத்த சராசரி வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனைவிட வெப்பநிலை அதிகரிக்கும்போது பூமியின் நிலை மோசமாகும். ஆனால், 15 டிகிரி செல்சியஸை நாம் கடந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. அது மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதன் விளைவுகள்தான் தற்போதைய தாறுமாறான பருவநிலை மாற்றங்கள்’’ என்கிறார் பேரா. ராமச்சந்திரன்.

பூமியின் வெப்பநிலை இப்படி அதிகரித்திருப்பதற்குக் காற்று வெளியில் நாம் ஏற்படுத்திருக்கும் மாசுக்கள்தான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘’பூமியை வட்டமாகக் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர்வை போலக் காற்றுவெளி மண்டலம் சுற்றியிருக்கிறது. இதனை விஞ்ஞானிகள் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என்கிறார்கள். பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பதால் மட்டுமல்ல குறைந்தாலும் பிரச்சினைதான். பூமியைச் சுற்றியிருக்கும் கோள்களில் மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் குளிர் உள்ளது. இந்தக் குளிரில் இருந்தால் நம் நிலை என்னவாகும்? கருகி கருவாடு ஆகிவிடுவோம். மற்ற கோள்களில் உள்ளது போல் மைனஸ் டிகிரியில் குளிர் செல்லாமல், பூமியின் வெப்ப அளவை சமச்சீராக வைத்திருப்பதில், கிரீன் கவுஸ் வாயுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

பூமி, தன் மீது விழும் சூரிய வெப்பத்தை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்பும். இது கிரீன் ஹவுஸ் வாயு மண்டலம் வழியாக விண்வெளிக்குக் கடத்தப்படும். இப்படிக் கடத்தப்பட்டு விட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. இது நடந்தால் சாயங்காலம் ஆனதும் வெப்பக் காற்று குறைந்துவிடும். இரவு 910 மணி ஆகும்போது குளிரத் தொடங்கிவிடும். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே 11 மணிக்கு போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்கியவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று நிலமை தலைகீழாகிவிட்டது.

கார்பன் டை ஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட், மீத்தேன், குளோரா புளோரா கார்பன் ஆகிய வாயுக்கள்தான் கிரீன் ஹவுஸ் வாயுக்கள். இவ்வாயுக்கள் காற்று வளி மண்டலத்தில் அதிகரித்ததன் காரணமாக, பூமியில் இருந்து திரும்ப அனுப்பப்படும் வெப்பத்தை உள்வாங்கி, தேக்கி வைக்கிறது. இதனால், வாயுமண்டலம் வெப்பமாகிறது. இதன் விளைவாக, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது.

15 டிகிரி செல்சியஸ் என்ற சராசரி வெப்ப நிலையைவிட இன்று 27 சதவிகிதம் அதிகமாகிவிட்டது. நடு இரவு ஆகியும் வெப்பச் சலனம் உள்ளதற்கு இதுதான் காரணம். அதிகரித்துள்ள வெப்பத்தை ஏசி போன்ற கண்டுபிடிப்புகள் மூலம் மனிதன் சமாளிக்கிறான். விலங்குகள், தாவரங்கள் உட்பட்ட மற்ற உயிரினங்கள் என்ன செய்யும்? காட்டில் யானைகள் ஈர மண்ணை வாரி தன் மீதே கொட்டுகிறது. ஆனால், இப்படி யானைகளால் எத்தனை வருடங்கள் சமாளிக்க முடியும்? இப்போதே பல உயிரினங்களும் தாவரங்களும் வெப்பத்தைத் தாக்குபிடிக்க முடியாமல் அழிந்துவிட்டன. பல அழிந்து வருகின்றன’’ என்கிறார் பேரா. ராமச்சந்திரன்.

1800ஆம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியில் இருந்தே கிரீன் ஹவுஸ் வாயுக்களில் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்றாலும் 1990க்குப் பிறகுதான் இதன் ஆபத்தை விஞ்ஞானிகள் உணர்ந்தார்கள். அப்போது தொடங்கி இது சம்பந்தமான ஆய்வுகள் உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன. பூமியின் வெப்பநிலை அதிகமாவதற்குப் பெருமளவு காரணம் நாம் பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி உட்பட்ட எரிசக்தியும் காடுகள் அழிக்கப்படுவதும்தான் என்பது விஞ்ஞானிகள் முடிவு.

நிலக்கரி, பெட்ரோல் எரிபொருள்கள் எரிக்கப்படும் போது கரியமில வாயு வெளியாகிறது. காடுகளை அழிக்கும் போது மித்தேன் வாயுக்கள் வெளியாகிறது. நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களை அதிகளவில் பயன்படுத்தும் போது நைட்ரைட் ஆக்சைட் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகிறது. இப்படி இயற்கைக்கு மாறாக அதிக அளவு உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், குளோரா புளோரா கார்பன் போன்ற வெப்ப வாயுக்கள்* காற்று வளி மண்டலத்தில் அதிகமாகி பூமி திருப்பி அனுப்பும் வெப்பத்தைத் தடுக்கின்றன. 

இந்த நான்கு வாயுகளை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுத்துவது என்பதுதான் இன்று நம் முன் உள்ள சவால். இன்றைய நிலையில் உலகின் ஒட்டு மொத்த எரிசக்தித் தேவை நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் எரிவாயுக்களின் மூலமே நிவர்த்திச் செய்யப்படுகிறது. இந்த மூன்றின் பயன்பாடும் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பதுதான் நிஜம். ஆனாலும், இவற்றை இப்பொழுது பயன்படுத்துவது போலத் தொடர்ந்தும் நாம் பயன்படுத்தினால் உலகின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகும் என்பதும் நிதர்சனம். 

பூமி சூடாவதன் பாதிப்புக்கள் முதலில் கடலில் தெரிந்தது. பூமியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மொத்தத்தையும் மதிப்பீடு செய்துள்ள ஆய்வு ஒன்று, பூமி வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக, தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியன் டன்கள் எடையளவுக்கு இக்கண்டம் பனிக்கட்டியை இழந்துவருகிறது என்று தெரிவித்துள்ளது. ஒரு சில நூற்றாண்டுகளில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் எனவும் அஞ்சப்படுகிறது. “அது நிகழ்ந்தால் உலகத்தில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துவிடும்’’ என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தெரிவித்திருந்தது. இதனால், சிறு தீவுகளும் கடற்கரையை ஒட்டிய நகரங்களும் நீரில் மூழ்கும். வெப்பமடையும் போது தண்ணீர் விரிவடையும் தன்மை கொண்டது. அதனாலும் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும்.

‘’பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு, கடல் மட்டம் உயர்வது எல்லாம் இணைந்து பருவநிலைகளில் தாறுமாறான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் போது அவற்றில் ஏற்படும் புயல்களின் தீவிரமும் அதிகரிக்கிறது. தென்மேற்கு பருவமழை ஜூன் - செப்டம்பர் மாதங்களிலும் வட மேற்கு பருவமழை அக்டோபர் - டிசம்பர் மாதங்களிலும் ஆக 6 மாதங்களில் இந்தியாவில் மழை இருக்கும். இப்போது இந்தியாவில் சராசரி மழை அளவு குறையவில்லை. ஆனால், 6 மாதங்களில் 5560 நாட்களில் விட்டுவிட்டுப் பெய்ய வேண்டிய மழை 25 நாட்களில் மொத்தத்தையும் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகிறது. இதனால், அந்தத் தண்ணீரை உறிஞ்ச பூமிக்கு அவகாசம் இல்லாமல் மொத்தமும் கடலுக்குச் செல்கிறது’’ என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதியே தொடங்கிவிட்டது. “இப்படிச் சரியான காலத்தில் மழை பெய்யாமல், பிந்தியோ முந்தியோ பெய்வது விளைச்சலைப் பாதிப்பதுடன் பயிர் வளர்ச்சியையும் பாதித்துள்ளது. இதனால், களைப்பெருக்கம் அதிகமாகி பராமரிப்புச் செலவு அதிகமாகும்’’ திண்டுக்கல் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வேளாண் பொறியாளர் ஜான் பிரிட்டோ ராஜ்.

பருவநிலை மாற்றத்தால், இந்தியாவில் 2030ஆம் ஆண்டு 10 சதவீதம் அளவுக்கு அரிசி உற்பத்தி குறையும்; அடுத்த 20 ஆண்டுகளில் 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை இழக்க நேரிடும். இந்த நூற்றாண்டின் இறுதியில் 48 சதவீதம் உணவு தானிய உற்பத்தி குறையும். கடல் நீர் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் கடல் பகுதியில் இருந்த மீன்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. எனவே, மீன்கள் கிடைப்பதும் தடைபடும். இன்றைய சூழலில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்தால், 50 லட்சம் டன் கோதுமை உற்பத்தியை இழக்க நேரிடும் என்கின்றன புள்ளிவிபரங்கள்.

‘’இந்நிலையில், பூமி வெப்பநிலை அதிகரிப்பு பற்றிச் சும்மா பூச்சாண்டி காட்டுகிறார்கள் எனக் கிண்டல் செய்பர்களும் இருக்கிறார்கள். பூமி வெப்பநிலை அதிகமாவது மெதுமெதுவாக நிகழும் ஒன்றே. அதன் பின்விளைவுகள் படிப்படியாக வேகமடையும். அதை நாம் உணரத் தலைப்படும்போது, எல்லாம் கையை மீறிச் சென்றுவிட்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம். எனவே, இதற்கு மாற்று வழிகளை நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இப்போது உடனடியாக எரிசக்தி சிக்கனம், ஜீரோ கார்பன் எனர்ஜி, கார்பனை உட்கொள்ளுதல், குப்பைகள் மேலான்மை ஆகிய நான்கு வழிகளையும் நாம் செய்தே ஆகவேண்டும்’’ என்கிறார் பேரா. ராமச்சந்திரன்.

உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளும் பருவநிலை மாற்ற விஷயத்தில் கவனம் செலுத்தி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட இலக்கைத் தீர்மானித்துச் செயல்பட்டும் வருகின்றன. இந்தியா தனது பங்களிப்பாக, 2020ஆம் ஆண்டிற்குள் எட்ட வேண்டிய இலக்கை அடைவதற்கான செயல் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் புதிப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மூலம் 1.75 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 350 மில்லியன் டன் கரியமில வாயு வெளியாவது கட்டுப்படுத்தப்படும். இது இந்தியா, உலகிற்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பாகும்.

‘’நாடுகள் பங்களிப்புடன் தனி மனிதர்களின் பங்களிப்பும் இதில் முக்கியமானது’’ என்கிறது ஐ.நா. சபை. எனவே, நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியும் எனத் திட்டமிடுவோம்*; செயல்படுத்துவோம்.


பூமியின் எமனாகும் நான்கு வாயுக்கள்!



கார்பன்டை ஆக்சைட் எனப்படும் கரியமில வாயுதான் பூமியின் வெப்பநிலையை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பூமியைச் சுற்றியுள்ள காற்று வளிமண்டலத்தில் கார்பனின் சராசரி அளவு 274374 பிபிஎம் (PPM). பத்து லட்சத்தில் 274 பங்கு. தொழிற்புரட்சிக்கு முன்னர், அதாவது, 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை பூமியைச் சுற்றியிருந்த காற்று வளிமண்டலத்தில் கார்பனின் அளவு 280 பிபிஎம் மட்டுமே இருந்தது. இது 1957இல் 350 பிபிஎமாக அதிகரித்தது. 2000இல் 400 பிபிஎம் அளவானது. நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் போன்றவை எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை காரணமாகத்தான் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைட் அளவு அதிகரிக்கிறது. இதே நிலை தொடருமானால், 2100ஆம் ஆண்டில் காற்று மண்டலத்தில் கார்பனின் அளவு 540 - 970 பிபிஎம் அளவு உயர்ந்துவிடும் எனக் கணிக்கப்படுகிறது. அந்நிலைக்குச் சென்றால் பூமிக்கு ஏற்படும் அழிவை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கார்பன்டை ஆக்சைடை அடுத்து பூமி வெப்ப அளவு அதிகரிக்கக் காரணமாக இருப்பது, மீத்தேன். வெப்பத்தை உண்டாக்குவதில் இது கரியமிலவாயுவை விட இருமடங்கு சக்தி கொண்டதாகும். தற்போது காற்று மண்டலத்தில் மீத்தேனின் அளவு 1783 பிபிஎம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிஎம் அதிகம். நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் எரிக்கப்படுவதாலும் நெல் வயல்கள், கால்நடை கழிவுகள், அழுகிய நிலையில் இருக்கின்ற குப்பைக் கூளங்கள் ஆகியவற்றில் இருந்தும் 60 சதவிகிதம் மீத்தேன் உற்பத்தி ஆகின்றது. சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கிய ஈரமான நிலம், கரையான்கள் ஆகியவற்றில் இருந்து மீதமுள்ள 40 சதவிகிதம் உற்பத்தியாகின்றது. காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை மீத்தேன் தங்கியிருக்கும்.

கரியமில வாயுவைவிட 200 மடங்கு வெப்பத்தை உண்டாக்கும் தன்மையுடையது நைட்ரஸ் ஆக்சைட். தற்போது காற்று மண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடின் அளவு 318.6 பிபிஎம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட 9 பிபிஎம் அதிகம். வாயுமண்டலத்தில் இதன் ஆயுட்காலம் சுமார் 150 ஆண்டுகள்.

குளேரா புளோரா கார்பன் என்பது ஒரு வகையான வேதியியல் பொருள். இதில் பலவகை உண்டு. இருப்பினும் CFC11, CFC12 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குளிர்சாதனம் மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இவை பயன்படுத்தப்படுகிறது. இவை காற்று மண்டலத்தில் பல ஆண்டுகள் தங்கி கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி படைத்தது. மேலும், ஓசோன் படலத்தை அழித்து, புற ஊதாக் கதிர்களைப் பூமியின் மீது விழச்செய்து, உயிரினங்களுக்கு அதிகப் பாதிப்பையும் உண்டாக்கக்கூடியவை.



நம்மால் முடியும்?


ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன் எரிகற்கள் விழுந்ததில் பூமியின் 96 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. இன்று நாம் சினிமாவில் மட்டும் பார்க்கும் டைனோசர்கள் அழிந்த்து அப்போதுதான். அதற்கடுத்து அதுபோன்ற ஒரு பெரும் அழிவுக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது பூமியில் வெப்பநிலை அதிகரிப்பது. டைனோசர் கதை விரைவில் யானைக்கு நிகழலாம் என்கிறார்கள். இதனைத் தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளில் நம்மால் முடிந்த பங்களிப்புகள்.


  1. சிக்னலில் நிற்கும் போது வாகன என்ஜினை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் எரிப்பதை குறைக்கலாம்.
  2. தேவையில்லாமல் எரியும் லைட்களை ஆஃப் செய்வது, குறைவான வோல்டேஜ் LED லைட்களைப் பயன்படுத்துவது போன்றவை மூலம் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கலாம். தேவைப்படாத நேரங்களில் மின்சாதனங்களை அணைத்துவிட வேண்டும். இதனால், மின்சாரத் தயாரிப்புக்காக நிலக்கரி எரிக்கப்படுவது குறையும்.
  3. நம்மால் முடிந்தளவு மரங்கள் நடலாம். ஒரு மரம் 4 கிலோ கார்பன் டை ஆக்சைடை உட்கொள்ளும். 4 கிலோதானே என நினைக்காதீர்கள். 4 கிலோ கார்பன் டை ஆக்சைட் என்பது உங்கள் பெட்ரூமில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். 
  4. மக்கும் குப்பை, மக்காத குப்பை எனக் குப்பையைப் பிரித்து மேலாண்மை செய்வதன் மூலம் மீத்தேன் வாயுக்கள் உற்பத்தியாவை தடுக்கலாம். 
  5. காகித பயன்பாட்டைக் குறையுங்கள். பிரிண்ட் அவுட் எடுக்கும்போது இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள்.
  6. காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், பயோ டீசல் போன்றவை பயன்பாட்டின் மூலம் ஜீரோ கார்பன் எனர்ஜிக்குப் பங்காற்றலாம். அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லும்போது சைக்கிளிலோ நடந்தோ செல்லலாம்.
  7. முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். கடைகளுக்குச் செல்லும் போது ஒரு பையுடன் செல்லுங்கள். பாலிதின் பொருட்கள் எரிக்கப்படும் போது உருவாகும் கார்பன் டை ஆக்சைட்தான் பூமியின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முதலிடம் பிடிக்கிறது.

(புதிய தலைமுறை, 16 ஜூலை 2015 இதழில் பிரசுரமானது)