01 October 2011

உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்

டிராகுலா


ராஜகோபால்

பிராம் அபிராகாம் ஸ்டாக்கர் என்ற அயர்லாந்து எழுத்தாளரின் தனித்துவமான கண்டுபிடிப்பு 'டிராகுலா'. ஸ்டாக்கர் பல நாவல்கள் எழுதியிருந்தாலும், 'டிராகுலா' நாவலை அவர் 1897ஆம் ஆண்டு வெளியிட்ட பிறகுதான் உலகம் முழுக்க ஸ்டாக்கர் புகழ் பரவத் தொடங்குகிறது. அப்போது அவருக்கு 50 வயது. பிராம் ஸ்டாக்கர், அயர்லாந்திலுள்ள டூப்லீன் நகரில் 1847ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலிருந்த நரம்புக் கோளாறு நோய் காரணமாக, அவரது பால்ய காலத்தின் பெரும்பகுதியும் படுக்கையிலேயே கழிந்தது. இருட்டும் தனிமையும் பயமும் அந்நாட்களில் அவரை அலைகழிக்கத்தன. அக்காலகட்டத்தில் அவருக்கு துணையாக நின்ற ஒரே ஆறுதல், அந்த அறையில் உயரத்தில் இருந்த ஒற்றை சன்னலும் அதன் நிழல் அசைவுகளைக் கொண்டு அவர் உருவாக்கிக்கொண்ட கற்பனை உலகமும்தான். வேலையாட்கள் அவருக்காகச் சொன்ன நாட்டுபுறக் கதைகள் அவரது கற்பனைக்கு வளம் சேர்த்தன. சதா அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பதைப் பற்றிச் சொல்லும் போது, "எந்நேரமும் படுக்கையில் கிடப்பது கல்லறைக்குள் சுருண்டு கிடப்பது போலிருக்கும். இரவிலோ தூக்கம் வராது. ஆவியாகவோ, காற்றாகவோ மாறி எங்கேனும் சஞ்சரிக்க முடியாதா என்று மனம் ஏங்கும்'' என்கிறார் ஸ்டாக்கர். இந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் 'டிராகுலா' நாவல். எட்டு ஆண்டுகள் அமானுஷ்ய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து இந்நாவலை எழுதியுள்ளார் ஸ்டாக்கர். டிரான்ஸ்சில்வேனியாவில் புழங்கும் மொழிகளில் ஒன்றான வாலாச்சிய மொழியில் [ஷ்ணீறீறீணீநீலீவீணீ] டிராகுலா என்றால் சாத்தான் என்று பொருள். இந்நாவல் வெளியாகி ஒரு நூற்றாண்டும் பதிமூன்று வருடங்களும் கடந்துவிட்டன. இருப்பினும் டிராகுலா உருவாக்கிய பயம் தேசம், மொழி, இனம் எல்லாவற்றையும் கடந்து இன்றும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

டிராகுலாவின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாவல் இரண்டு பகுதிகளாக விரிகிறது. முதல் பகுதி, பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. டிரான்ஸ்சில்வேனியா நாட்டின் ஒரு பகுதியை டிராகுலா என்னும் அரசன் ஆண்டு வருகிறான். அவனது மனைவி பேரழகி. அவர்கள் ஒருநாள் பிரிந்திருக்க நேர்ந்தாலும், அந்நாளை நரகமாக உணர்வார்கள். அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் பேரன்பும் பெரும் காதலும் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியும் வேடிக்கை விளையாட்டுமாக நகர்கிறது. அப்போது, டிரான்ஸ்சில்வேனியா மீது துருக்கி படையெடுக்கிறது. டிராகுலா நாட்டை காப்பாற்றுவதற்காக யுத்தத்துக்குச் செல்கிறான். அவனது அசாத்திய திறமையையும் கடுமையான பயிற்சியையும் வெளிப்படுத்தி அவன் போரில் வெற்றிவாகை சூடுகிறான். வெற்றிபெற்ற சந்தோஷமும் நீண்ட நாட்களாகப் பார்க்காத மனைவியைக் காணும் ஆவலும் சேர்ந்துகொள்ள வீரர்களோடு வேகமாக அரண்மனைக்குத் திரும்புகிறவனுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அரண்மனையில் நுழையும்போது, டிராகுலாவின் ஆசை மனைவி தற்கொலைச் செய்து தன்னை மாய்த்துக்கொண்டு செய்தி அவனுக்கு சொல்லப்படுகிறது. அவளது மரணம் டிராகுலாவை பித்துகொள்ளச் செய்கிறது. அழுது அரற்றி கதறுகிறான். யுத்தக் களத்தில் டிராகுலா கொல்லப்பட்டு விட்டதாக ஒரு தவறான தகவல் அவன் மனைவிக்கு சொல்லப்பட, அரசி ஆற்றாமையில் அரண்மனை மாடத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைச் செய்துகொண்டாள் என்ற செய்தி அவனுக்குத் தெரிய வருகிறது. அரசியின் தற்கொலைக்கு காரணமனவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கிறான். பிறகு, அரசியின் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால், அரசியின் உடலைத் தூக்கிக்கொண்டு தேவாலயத்திற்குள் நுழையும் டிராகுலாவிற்கு, அங்கே இன்னொரு அதிர்ச்சி!

தற்கொலைச் செய்துகொண்டவர்களை முறையான அடக்கம் செய்யமுடியாது என தேவசபையும் கிறிஸ்தவப் பாதிரியார்களும் டிராகுலாவை நிராகரிக்கிறார்கள். 'தேவசபைக்கும் மக்களுக்கும் நான் செய்த ஊழியத்திற்கு இந்த அவமரியாதைதான் எனக்குக் கிடைத்தப் பரிசா!' என சீற்றம் கொள்கிறான். "இனி நான் கிறிஸ்தவ மதத்திற்கும் மனித இறப்பிற்கும் எதிரி. நித்தியமானவனாக நான் மாறிகாட்டுகிறேன்'' என்று சூழுரைத்து, உடைவாளை உருவி சிலுவையையும் தேவசபை ஊழியர்களையும் வெட்டிச் சாய்க்கிறான். சிலுவையிலிருந்தும் வெட்டுப்பட்டு சாய்ந்தவர்களிடமிருந்தும் ரத்தம் பெருகி வழிகிறது. குருதியில் அரசனும் அரசியும் கரைந்துபோகிறார்கள்.

நாவலின் இரண்டாம் பகுதி... நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஜோனதன் ஹார்க்கர் என்பவன் லண்டனிலிருந்து டிரான்ஸ்சில்வேனியாவிற்குப் பயணம் செய்கிறான். டிரான்ஸ்சில்வேனியாவில் இருக்கும் பிரபு ஒருவர், லண்டனில் ஓர் இடத்தை வாங்க விரும்புவதாகவும் அவருக்கு ஆலோசனை தேவைப்படுகிறது என்றும் அவனது அலுவலகம் அவனை அனுப்புகிறது. பயணத்தின் போது அவன் விசித்திரமான சில நிகழ்ச்சிகளை எதிர்கொள்கிறான். நகரத்தில் இருந்து ஒதுங்கி, தனியாக மலை முகட்டிலுள்ள அரண்மனையில் அப்பிரபு வசித்து வருகிறார். அவரது பெயர் கவுண்ட் டிராகுலா என்பதை ஹாக்கர் அறிந்துகொள்கிறான். கவுண்ட் டிராகுலாவின் சாரட் வண்டியில் மலை முகட்டை நோக்கிச் செல்லும் போது, மீண்டும் விசித்திரமான சில நிகழ்வுகளை அவன் பார்க்கிறான். வழியெங்கும் ஓநாய்களையும் விசித்திர ஒலிகளையும் அவன் கேட்கிறான். அரண்மனை வாயிலில் அவனை வரவேற்கும் கவுண்ட் டிராகுலாவின் தோற்றமும் நடத்தையும் அவனை பீதி கொள்ளச் செய்கிறது. அரண்மனையில் தங்கும்போது யாரோ தன்னை உளவு பார்ப்பதாகவும் அமானுஷ்யமான சில விஷயங்களையும் அவன் உணர்கிறான். இரவில் அங்கு ஏதேதோ நிகழ்கிறது. சிறிது நாட்கள் சென்ற பிறகுதான், அரண்மனையில் அவன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதை தெரிந்துகொள்கிறான். ஓரிரவு அவன் அரண்மனையை சுற்றிப் பார்க்கும்போது மூன்று பெண் ரத்தக் காட்டேரிகளிடம் சிக்கிக் கொள்கிறான். அவை அவனை விழுங்க முயலும்போது, கடைசி நொடியில் கவுண்ட் டிராகுலா தோன்றி அவனைக் காப்பாற்றுகிறார். அதற்கு பிறகுதான் டிராகுலா ஒரு ரத்தகாட்டேரி என்பதும், அது இறந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டது என்பதும் ஹாக்கருக்குத் தெரிகிறது. எதன் பொருட்டு தான் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. லண்டனில் இருக்கும் தன்னுடைய காதலியான மினா முர்ரேவுக்கு எல்லாவற்றையும் பற்றி கடிதங்கள் எழுதுகிறான், ஹார்க்கர். நீண்ட போராட்டதிற்கு பிறகு அவன் அங்கிருந்து தப்பி லண்டன் திரும்புகிறான்.

அவனைத் தேடிக்கொண்டு டிராகுலா லண்டலுக்கு கப்பலில் பயணம் செய்கிறது. கப்பலில் வினோதமான விஷயங்கள் நடக்கின்றன. மாலுமிகளில் பலர் காணாமல் போகிறார்கள். கப்பல் கரை சேரும்போது, கேப்டனைத் தவிர எவரும் உயிருடன் இல்லை. ஆள் அரவமற்ற கப்பலைக் கண்டு லண்டன் அதிகாரிகளும் மக்களும் திகைத்து, கேப்டனை விடுவித்துவிட்டு கப்பலை ஆராய்க்கிறார்கள். பிணங்களும் டிரான்ஸ்சில்வேனியாவில் ஏற்றப்பட்ட சில பெட்டிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். பெட்டிகளை உடைத்துப் பார்க்கும்போது பெட்டிகளுக்குள் எலிகளும் மணலும் மட்டும் கிடக்கின்றன. இவற்றிற்கிடையில் டிராகுலா லண்டன் மாநகருக்குள் நுழைந்துவிடுகிறது.

அச்சமயம், ஹாக்கரிடம் இருந்து நீண்ட நாட்களாக கடிதம் எதுவும் வராததால் மினா முர்ரே கலக்கமுற்று இருக்கிறாள். மினா முர்ரேயின் தோழியான லூசியை ஏதோ விசித்திர நோய் தாக்குகிறது. நோய் முற்றிய நிலையில் திடிரென்று ஒருநாள் லூசி காணாமல் போக, அவளைத் தேடும் மினா முர்ரே, லூசியை ஒரு அந்நிய புருஷனோடு கண்டுபிடிக்கிறாள். திரும்பி வந்த லூசியை பரிசோதிக்கும் மருத்துவர் வென்ஹில்சிங்கின் அவளது கழுத்தில் பதிந்து கிடக்கும் இரு பற்களைக் கண்டுகொள்கிறார். லூசியை காப்பாற்றுவதற்காக லூசியின் ரத்தத்தை முழுவதுமாக மாற்ற முயல்கிறார். [நாவலில் இச்சம்பவம் எளிதாக விவரிக்கப்பட்டு இருந்தாலும், நாவல் வெளிவந்து நீண்ட காலத்திற்கு பிறகே ரத்தமாற்று சிகிச்சையை நவீன மருத்துவம் கண்டுபிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.] மருத்துவர் முயற்சி தோற்று லூசி இறந்துபோகிறாள். இதற்கிடையில் வீடு திரும்பும் ஜோனதன் ஹாக்கர், டாக்டர் வென்ஹில்சிங்கிடம் யாவற்றையும் விவரிக்கிறான். எல்லாவற்றையும் அறிந்த டிராகுலா சீற்றம்கொண்டு மினா முர்ரேவின் கழுத்தில் மூன்று முறை பல் பதித்துவிடுகிறது. மேலும், அவளைக் கட்டுபடுத்தும் பொருட்டு தன் ரத்ததையும் மினா முர்ரேவை குடிக்கச் செய்கிறது. பின் அவளை மயக்கி அழைத்துகொண்டு டிரான்ஸ்சில்வேனியா திரும்புகிறது. டாக்டர் வென்ஹில்சிங்கும் அவருடைய நண்பர்களும் டிராகுலாவை பின்தொடர்ந்து விரட்டிச் செல்கிறார்கள். டிராகுலாவிற்கும் டாக்டர் வென்ஹில்சிங்கும் டிரான்ஸ்சில்வேனியாவில் நீண்ட சண்டை நிகழ்கிறது. சூரியன் மறையும் முன்பு டிராகுலாவை கொன்றாக வேண்டும். இல்லையென்றால் டிராகுலாவின் சக்தி மேலும் கூடிவிடும். நீண்ட போரட்டத்திற்கு பிறகு விஷேச கத்தியைகொண்டு டிராகுலாவின் கழுத்தை அறுத்துவிடுகிறார் டாக்டர் வென்ஹில்சிங். டிராகுலா சிறிது சிறிதாக கரைந்து மறைந்து போய்விடுகிறது. மினா முர்ரே மயக்கத்திலிருந்து விழித்தெழுகிறாள். போரட்டத்தில் ஒரிருவர் கொல்லப்பட பிறர் ஊர் திரும்புகிறார்கள். சிறிது நாட்களுக்கு பிறகு ஹாக்கரும் முர்ரேயும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு அழகான குழந்தை பிறக்க, சுபமாக முடிவடைகிறது நாவல்.

படிக்கும் போதே பயமும் பீதியும் விறுவிறுப்பும் தொற்றிக்கொள்ளும் ஒரு மொழி நடை. 'டிராகுலா' நாவல் வெளியான பிறகு, நூற்றுக்கணக்கான பேய்க்கதைகளும் பேய் சினிமாக்களும் அதையொட்டி உருவானது. இன்றுவரைக்கும் அதன் திகில் தொடர்கிறது. இத்தனைக்கும் 'டிராகுலா' நாவலின் முதல் பதிப்பு 3000 பிரதிகள்தான் விற்பனையானது. ஆனால், அடுத்தப் பதிப்பு தொடங்கி வேகமாக அதன் புகழ் பரவத்தொடங்கியது. இதுவரை 300க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளது. 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களாக எடுக்கப்பட்டு, வெற்றிபெற்றிருக்கின்றன. தமிழில் நாசர் நடித்து, இயக்கிய 'தேவதை' திரைக்கதை 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டதுதான். 'டிராகுலா' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்கு உலக பிரசித்தி பெற்றவை. ஒன்று, ஜெர்மன் மௌன திரைப்பட இயக்குனரான எப்.எம்.முரனே இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. இரண்டு, டொட் பிரானிங் இயக்கிய பிலா லுகோசியின் நடிப்பில் வெளிவந்த 'டிராகுலா'. மூன்று, ஜெர்மன் திரைப்பட இயக்குனரான வெர்னர் ஹெர்சாக் இயக்கிய 'நோஸ்வ்வெருத்து'. நான்கு, புகழ்பெற்ற இயக்குனரான பிரான்சிஸ் போர்ட் கப்பல்லோவின் 'டிராகுலா'. இந்நான்கு திரைப்படங்களும் மாறுபட்ட கோணங்களில் டிராகுலாவை அணுகுகின்றன். ஓர் இயக்குனரை பொறுத்தமட்டில் டிராகுலா சாத்தான்; மற்றொருவரை பொறுத்தமட்டில் அவனொரு மனநோயாளி; பிறிதொரு இயக்குனருக்கு அவனொரு வீழ்ச்சி பெற்ற காவிய நாயகன்.

உண்மையில் டிராகுலா யார்? ஸ்டாக்கருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தைக் கண்டறியும் பயணத்தில் பல ஆய்வாளர்கள், இலக்கிய விமர்சகர்கள் ஈடுபட்டுள்ளார்கள். எழுத்தாளர் ஆஸ்கார் ஓயில்டின் காதலியான பிளாரென்ஸைத்தான் ஸ்டாக்கர் திருமணம் கொண்டார். எனவே, ஸ்டாக்கருக்கு எப்போதும் ஆஸ்கார் ஓயில்டோடு சிறிய பூசல் ஒன்று உண்டு. ஓயில்ட் தன் மனைவியை தன்னிடமிருந்து எப்போதும் அபகரிக்கலாம் என்ற எண்ணம் பிராம் ஸ்டாக்கரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது. அதுதான் நாவலிலும் வெளிப்பட்டுள்ளது என பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சிலர் வேறுவிதமாகச் சொல்லியுள்ளார்கள். 'டிராகுலா, உண்மையிலேயே டிரான்ஸில்வேனியாவை ஆண்ட ஒரு அரசன் என்றும் அவனைப் பற்றிய பலநூறு நாட்டுப்புறக் கதைகளையும் நம்பிக்கைகளையும்தான் ஸ்டாக்கர் இந்நாவலாக எழுதியுள்ளார்' என விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். பதினான்காம் நூற்றாண்டில் டிரான்ஸ்சில்வேனியாவில் வாழ்ந்த வாலாசிய அரசனான மூன்றாம் வெல்ட், டிராகுலா என்றே அழைக்கப்படுகிறான். ஸ்டாக்கரின் டிராகுலாவைப் போலவே அவனும் மிதமிஞ்சிய இரத்தவெறி பிடித்தவன். போரில் கைப்பற்றிய பகுதியைச் சேர்ந்த மக்களை வெட்டவெளியில் வைத்து கழுவேற்றுவதும்போது, அதன் அருகில் அலங்காரமான மேடை அமைத்து உணவை ரசித்து ருசித்து உண்பானாம். வரலாற்றில் நூற்றிற்கும் மேற்பட்ட அரசர்களும் அரசிகளும் வெல்ட் போல டிராகுலாக்களாக செயல்பட்டிருக்கிறார்கள். 'டிராகுலா ஒருபோதும் அழிவதில்லை. அவன் நம் மனங்களுக்குள் ஒளிந்திருக்கிறான். நாம் தான் அவனை கண்டுகொள்ளவேண்டும்; அழிக்கவேண்டும்' என்கிறார் பிராம் ஸ்டாக்கர்.

(அம்ருதா, அக்டோபர் 2011 இதழில் பிரசுரமாகியுள்ளது)

10 March 2011

முகங்கள்

காந்திராஜன்

தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்

பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்டுரை தயாரிக்க வேண்டி வரும்போது நான் தவறாமல் இருவரைத் தொடர்புகொள்வேன். ஒருவர், தமிழ்செல்வன் என்ற விஜயவேலன்; இன்னொருவர் காந்திராஜன். இவர்களில் விஜயவேலன் சுலபமாகக் கிடைப்பார். காந்திராஜன் கிடைக்கமாட்டார். நம் வரலாற்று ஆதாரங்களைத் தேடி அலைபவர்களில் இவர்கள் இருவருமே கொஞ்சம் வித்தியாசமானவர்கள். இருவருமே முனைவர் பட்ட ஆய்வை பாதியில் விட்டுவிட்டவர்கள். கல்வித் துறை வரையறுக்கும் ஒழுங்குக்குள் வராமல் சதா சுற்றிக் கொண்டிருப்பவர்கள். ஆனால், இந்தத் துறையில், இவர்கள் தலைமுறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அனைவரையும்விட முக்கியமானவர்கள்.

இந்தப் பதிவு காந்திராஜன் பற்றி...

எனக்குத் தெரிந்து, காந்திராஜன் முகவரி, அவரது செல்போன் நம்பர்தான் மட்டும்தான். ஆனால், ''நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். சிறிது நேரம் கழித்து டயல் செய்யவும்’’ என்ற பதிலைத்தான் பெரும்பாலும் அதில் நான் கேட்டிருக்கிறேன். அப்போது காந்திராஜன், மனித சந்தடியே இல்லாத எதாவதொரு மலைக் காட்டில் பாறை ஓவியங்கள் உள்ள குகைகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பாராக இருக்கலாம். அரசும் கல்வித்துறையும் செய்ய வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமையை, எந்த ஒரு பொருளாதார உதவியும் இல்லாமல் தன்னிச்சையாக செய்துகொண்டிருக்கிறார் காந்திராஜன்.

ஒவ்வொரு முறை காந்திராஜனைச் சந்திக்கும் போதும், அவர் கடைசியாக சென்றுவிட்டு வந்த இடத்தைப் பற்றிய தகவல்கள், புதிய கண்டுபிடிப்புகள் என்று பேசுவார். சுவாரஸ்யமாக இருக்கும். ஒருமுறை, ‘‘தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான பிரச்னைகள் என்பது இன்று நேற்று உருவானதல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்கி நடந்துவரும் யுத்தம் இது. கர்நாடக - தமிழ்நாடு எல்லையில், இரண்டு மாநிலத்தையும் பிரிக்கும் இடத்தில் மோபார் என்ற சின்ன நதி ஓடுகிறது. சமீபத்தில், இந்த நதிக் கரையோரத்தில் உள்ள குகைகளில் அக்கால கர்நாடக - தமிழ்நாடு மன்னர்களுக்கு இடையே நடந்தப் போர்க் காட்சிகளைச் சித்தரிக்கும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைதான் அந்த ஓவியங்கள்’’ என்று பேசியவாரே, தனது லேப் - டாப்பின் பல்வேறு போல்டர்களில் இருந்த பாறை ஓவியங்களை, ஒவ்வொன்றாக திறந்து காட்டினார். இப்படிப் பல...

காந்திராஜன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால பாறை ஓவியங்களை அடையாளம் கண்டுள்ளார். அனைத்துமே வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்தவை. காந்திராஜன் கண்டுபிடித்துள்ளவற்றில் மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்தவை கரிக்கியூர் பாறை ஓவியங்கள். கி.மு. 7000ஆவது ஆண்டைச் சேர்ந்தது. அதாவது கிட்டதட்ட 9000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. குறிப்பாக, காந்திராஜன் அடையாளம் கண்டுள்ளவற்றில் 12, புதிய குகை பாறை ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயரமான மலைகள், அடர்ந்த காடுகள் என இந்தக் குகை பாறை ஓவியங்களை நோக்கிய காந்திராஜன் பயணங்கள் மிகக் கடினமானவை. ஆனால், அவர் அதை மிக விருப்பமுடன் செய்கிறார்.

அந்தளவுக்கு, எப்படி இந்தத் துறை காந்திராஜனை ஈர்த்தது?

‘‘உயரமான மலைகளும் அடர்ந்தக் காடுகளும் அதற்குள்ளே மறைந்திருக்கும் ரகசியங்களும், இன்று நேற்றல்ல, சின்ன வயசுல இருந்து என் கூடவே வந்துகொண்டிருக்கும் விஷயங்கள். எங்க ஊர் உசிலம்பட்டி பக்கத்துல கவுண்டன்பட்டி என்ற கிராமம். ஊரைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் மலைகள்தான். புரட்டாசி மாசத்தில் பெருமாள் கோவில், ஆடி மாசத்தில் அம்மன் கோவில் என மாதத்துக்கு ஒருமுறை மலையேறி போய் சாமி கும்பிட்டு, பொங்கி சாப்பிட்டுட்டு வருவோம். ஒருநாள், வழக்கமாக மக்கள் ஏறி இறங்குகிற பழகின தடத்திலிருந்து விலகி, காட்டுக்குள்ள நுழைந்து அதன் ரகசியங்களைத் தெரிந்து கொள்ளனும்னு ஆர்வம் உண்டானது. அப்போது, சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறையில், தமிழ்நாட்டு கோயில்களில் உள்ள சுவரோவியங்கள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அதற்காக ஒவ்வொரு ஊராக, கோயில் கோயிலாக பேப்பரும் பென்சிலுமாக அலைந்து கொண்டிருந்த வழியில் ஒருநாள், மதுரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பலியர்கள் என்ற ஆதிவாசிகளைப் பார்த்தேன். ‘சித்தரக் கல் பொடவு’ என்று, அவர்கள் ஊரைப் பற்றி சொன்னார்கள். எனக்கு அந்தப் பெயர் வித்தியாசமாகப்பட்டது. ‘ஏன் இந்தப் பெயர் வந்ததுன்னு பார்க்கலாம்னு’ அவர்களுடன் மலையேறினேன்.

ஆண்டிப்பட்டி கனவாய்க்குப் பக்கத்துல இருந்தது, சித்திரக் கல் பொடவு. மலை மேலே ஏறினா, ஆதிவாசிகள் வாழ்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே பிரமாண்டமான ஒரு குகை. நூறு பேர் வரைக்கும் அதுக்குள் சௌகரியமா வாழமுடியும். உள்ளே மான்கள் மேய்வது, மான்களை வேட்டையாடும் புலிகள், எறிவேள் வீசி யானைகளைப் பழக்கப்படுத்துவதுன்னு திரும்பின பக்கமெல்லாம் பாறைகளில் பிரமாதமான ஓவியங்கள். யார் இதையெல்லாம் வரைந்ததுன்னு விசாரித்தால், ''எங்களுக்குத் தெரியாது சாமி. காலம் காலமாக இது இருக்கிறது"ன்னாங்க. நான் பார்த்த முதல் குகை பாறை ஓவியம் அதுதான். 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது அது. அதன்பிறகு சுவரோவியங்கள் பற்றின என் ஆராய்ச்சியை மூட்டைக்கட்டி நட்டாத்துல விட்டுட்டு, பாறை ஓவியங்கள் பக்கம் வந்துட்டேன். 1998இல் தொடங்கி கடந்த 12 வருஷமா குகை பாறை ஓவியங்களைத் தேடி அலைவதுதான் என் ஒரே வேலை. சென்னை ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்ரு மற்றும் என் ஓவிய நண்பர்கள்தான் என் பலம்’’ என்கிறார் காந்திராஜன்.

”ஆதிகால தமிழர்களின் பண்பாடு, நம்பிக்கைகள் முதலியவற்றை அறிந்துகொள்வதற்கு இன்று நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரம் இந்தக் குகை பாறை ஓவியங்கள்தான். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், இலக்கிய ஆதாரங்கள் போன்றவை மூலம் வரலாற்றில் 3000 ஆண்டுகள் வரைதான் நம்மால் பின்னோக்கிச் செல்லமுடியும். ஆனால், குகை ஓவியங்கள் அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் நம்மை அழைத்து செல்லும். மொழியும் எழுத்தும் உருவாவதற்கு முன்னால் மனிதனின் மொழியாக இருந்தவை இந்த ஓவியங்கள்.

ஆதிகால மனிதன் எதையெல்லாம் கண்டு பயந்திருக்கிறானோ, அதையெல்லாம் முதலில் வரைந்திருக்கிறான். அடுத்த காலகட்டம், விலங்குகளுடன் சண்டை போட்டு ஜெயித்ததைச் சொல்லும் படங்கள். அப்புறம், வேட்டையாடிய மிருகங்கள். அதன்பிறகு ஆடு, மாடுகளைப் பழக்கப்படுத்துதல். அந்தக் காலகட்டத்தில் ஒருவரது சொத்து என்பது அவரிடம் இருக்கும் பழக்கப்படுத்தப்பட்ட ஆடு, மாடுகள்தான். இதற்காக கொள்ளைகளும் மிகப்பெரிய சண்டைகளும் நடந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் இந்த பாறை ஓவியங்களில் வரைந்திருக்கிறார்கள். காட்டுக்குள்ளே என்னவெல்லாம் ஆபத்துகள் இருக்கின்றன என்பதை வருங்கால சந்ததிகளுக்கு தெரிவிக்கும் விதமாய் சிலதை பதிவு செய்திருக்கிறார்கள். அடர்த்தியான காட்டுக்குள்ள வாழ்பவர்களுக்கு காலநிலை மாற்றங்கள் தெரியாது. பறவைகள், விலங்களின் நடமாட்டத்தை வைத்துதான் பருவ மாற்றங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். கொக்கு வந்தால் அடுத்த ஒரு வாரத்தில் மழை பெய்யும், காடு செழிக்கும் என்பது கணக்கு. இதைக் கொக்கு பக்கத்தில் ஒரு மரமாக வரைந்திருக்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பழமையான குகை ஓவியங்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்களை விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாக அவை இருக்கலாம். கருப்பு, சிவப்பு, வெள்ளை என மூன்று விதமான குகை பாறை ஓவியங்கள் தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ளன. இதில் கருப்பாக உள்ளவை மரக் கட்டைகளை எரித்து, அதைக் கொண்டு வரையப்பட்டவை. இந்த ஓவியங்களின் காலத்தை கார்பன் டேட்டிங் முறை மூலம் கண்டுபிடித்து விடலாம்” எனக்கூறும் காந்திராஜனின் குகை ஓவியங்களைத் தேடி செல்லும் ஒவ்வொரு பயணமும் ஒரு சாகச அனுபவம்.

அவரே சொல்லக் கேட்போம்:

“ஆதிவாசிகளின் கிராமங்களுக்குச் சென்று பாறை ஓவியங்களின் படங்களைக் காட்டி, ‘‘இதுமாதிரி எங்காவது பார்த்திருக்கிறீர்களா’’ எனக் கேட்போம். இப்படி ஆனைமலை தொடங்கி விருதுநகர் வரைக்கும் 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறித்து வைத்திருக்கிறோம். இனி ஒவ்வொன்றாக அவற்றைத் தேடிப் போகவேண்டும். 100 இடங்கள் சென்றால் பத்து இடங்களில் தான் ஓவியங்கள் இருக்கும். காட்டுக்குள்ளப் போகும்போது ஆதிவாசிகள்தான் வழிகாட்டிகள். காட்டு விலங்குகளால் எந்த நேரமும், எந்த திசையில் இருந்தும் தாக்கப்படலாம் என்பதால் அவர்களின் கண் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். மலைப் பாம்புகள் குறுக்கே கிடந்தாலும் அசராமல் அனாயசமாக தாண்டிச் செல்வார்கள். சில குகைகள் காட்டுக்குள் மிகவும் உள்ளே தள்ளி இருக்கும். ஒரே நாளில் போய்விட முடியாது. ஆங்காங்கே, பாறைகளில் இரவு தங்கி ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் நடப்போம். இரவு மிருகங்கள் வராமல் இருக்க தீ மூட்டுவோம். கொண்டு போகும் உணவு ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் வராது. அப்போது காட்டில் கிடைக்கும் கிழங்குகளை தோண்டி எடுத்து சாப்பிட்டுவோம். பெரும்பாலும் பாறைகள் நேராக இல்லாமல் வளைந்து, உள்வாங்கி என சமன் இல்லாமல்தான் இருக்கும். எனவே, அதிலுள்ள ஓவியங்களை புகைப்படம் எடுக்க முடியாது. எனவே, டிரான்ஸ்பரன்ஸி ஸீட் எடுத்துக்கொண்டு போய் பாறைகளுக்கு மேலே ஒட்டி வைத்து அப்படியே பென்சிலால் வரைந்து எடுப்போம்.

1837ஆம் ஆண்டு, சர்.ஜார்ஜ் கிரே என்ற ஆய்வாளர் ஆஸ்திரேலியாவில் சிட்னிக்கு அருகே முதன்முதலில் பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு உலகம் முழுக்க குகை பாறை ஓவியங்கள் பற்றிய ஆர்வம் உருவானது. ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா நாடுகளில் பாறை ஓவியங்கள் ஆராய்ச்சிக்காக பல்கலைக்கழகங்களில் தனித்துறையே இருக்கிறது. ஆனால், நம்மூரில் மத்திய அரசும் மாநில அரசும் பாறை ஓவியங்கள் பற்றி பெரிய அக்கறையே இல்லாமல் இருக்கின்றன. மத்திய, மாநில தொல்லியல் துறையினர் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், கோயில்களைத் தேடி ஊர் ஊராகப் போகும் வழியில் ஆங்காங்கே ஒன்றிரண்டு முற்கால பாறை ஒவியங்களைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவ்வளவுதான், மற்றபடி அரசாங்கம் எந்த வரலாற்று தேடலும் இல்லாமல் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாழை, செந்தவரை, ஆலம்பாடி ஆகிய இடங்களில் நாங்கள் கண்டுபிடித்துள்ள பாறை ஓவியங்களின் குறியீடுகளுக்கும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இவ்வளவு முக்கியமான வரலாற்று ஆதாரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வரலாறுகளை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் இந்த வரலாறுகளை மாற்றி எழுதவேண்டியிருக்கும்’’ என்கிறார் காந்திராஜன்.

(ஆனந்த விகடன் பத்திரிகையில் காந்திராஜன் பற்றி எழுதிய கட்டுரையில் சிறு மாற்றங்கள் செய்திருக்கிறேன்.)

14 September 2010

ஆவணக்காப்பகம்

சென்னை இலக்கிய சங்க நூலகம்
(Madras Literary Society Library)

தளவாய் சுந்தரம்

சென்னையில் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமணைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தினுள் நுழைந்து, சிறிது தூரம் சென்றதும், இடதுபக்கம் அந்த கட்டிடம் தென்படும். மிகவும் புராதனமான கட்டிடம். இந்தோ - பிரேசியன் கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு முன்னால் வந்து நின்றால், கால இயந்திரத்தில் பயணம் செய்து, தற்காலத்தில் இருந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின்னால் போய்விட்டது மாதிரி இருக்கிறது. அந்த புராதனமான கட்டிடம், புதுப்பிக்கப்படாமல் இருக்கும் அதன் பழமையான தோற்றம், சுற்றிலும் உள்ள மரங்கள், மண் தரை. . . நிச்சயம் சென்னையில் இருக்கிறோம் என்ற உணர்வை அந்த இடம் தராது. எதற்கு இவ்வளவு பீடிகை, அந்த கட்டிடத்துக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா? இருக்கிறது. இந்த கட்டிடம்தான் இப்போது நாம் பேசப்போகும் விஷயத்தின் மையம். இங்கேதான் மிகவும் புகழ்பெற்றதும் இந்தியாவிலேயே மிகவும் பழமையான வாடகை நூலகமுமான சென்னை மாகாண இலக்கிய சங்க நூலகம் இயங்கி வருகிறது.

நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற விழுமியங்களுள் ஒன்று என்றும் இந்த நூலகத்தைச் சொல்லலாம். ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதுக்கு சாட்சியாக, அடுத்துவரும் தலைமுறைகளுக்கு அந்த கதையை சொல்லும் விதமாக இந்த நூலகம் இப்போது இருக்கிறது. நமது நாட்டிலிருக்கும் மிகவும் பழமையான வாடகை நூலகம் (lending library) இதுதான். 1812ஆம் ஆண்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு பழமையான வாடகை நூலகம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. இந்த நூலகம் தமிழகத்தில் இருக்கிறது என்பதே தமிழகத்திற்கு பெருமைதான்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, சென்னை மாகாணத்தில் இருந்த சில கிழக்கிந்திய கம்பெனி படை வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்திருந்த மதபோதகர்கள் சிலர் ஆகியோர் இணைந்து சென்னை இலக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ராயல் ஏசியாடிக் சொசைட்டி என்ற ஆங்கிலேயர்களின் அமைப்பு பம்பாய், கல்கத்தா, சென்னை என்று அக்காலத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் இருந்திருக்கிறது. இதில் சென்னையிலிருந்த ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஒரு பகுதிதான் சென்னை இலக்கிய சங்கம். இச்சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ராயல் ஏசியாடிக் கழகத்தின் துணையுடன்தான் நடைபெற்று வந்துள்ளன.

சென்னை இலக்கிய சங்கத்தை உருவாக்கியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் ஒரு நூலகம் வேண்டும் என்ற எண்ணம். இரண்டாவது காரணம் அந்த நூலகத்தில் கூடி தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது மற்றும் பகிர்ந்து கொள்வது, கலந்து பேசி விவாதிப்பது. இவை எல்லாவற்றுக்குமான ஒரு சங்கமாக இதனை திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களின் பொழுது போக்குக்காகவும் பயனுள்ள வழியில் அறிவை செலவழிப்பதுக்காகவும் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர வாசிப்புத் தன்மையுடைய ஆங்கிலேயர்கள் தங்களுக்கிடையே நுட்பமான தகவல்களை பரிமாரிக் கொள்வதுக்கான களமாகவும் இந்நூலகம் இருந்துள்ளது. மாண்டீத், மில்லர், அன்னிபெசன்ட் அம்மையார் போன்றவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். மொத்தத்தில் அனைவருமே ஐரோப்பியர்கள்தான். இரண்டே இரண்டு இந்தியர்கள்தான் தொடக்கத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். இரண்டு பேர்தான் உறுப்பினராக இருந்த இந்தியர்கள் என்றதும் இந்தியர்களுக்கு அறிவைப் பெருக்குவதில் நாட்டம் இல்லை என்று கருதிவிட வேண்டாம். அதற்கு காரணம் இருக்கிறது. அக்காலத்தில் எல்லோரும் நினைத்தவுடன் சென்னை இலக்கிய சங்க உறுப்பினராகிவிட முடியாது. அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகள் இருந்திருக்கிறது. அந்த நூலகமே வெள்ளைக்காரர்களுக்காக உருவாக்கப்பட்டதுதானே. எனவே இந்தியர்கள் உறுப்பினராவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.

தங்கள் சொந்த தேசத்தில் இருந்து நீண்ட தூரத்தில் இருந்த பிரிட்டீஷ்காரர்களின் ஹோம் சிக்க்கும் இந்த நூலகம் உருவாக ஒரு காரணம் என்று சொல்லலாம்.

தொடக்கத்தில் சென்னை கோட்டையின் பின்பகுதியில் (பழைய தலைமைச் செயலகம் அமைந்திருந்த இடம்) இருந்த இடத்தில் இந்த நூலகம் இருந்திருக்கிறது. அதன்பிறகு 1875ஆம் ஆண்டு சென்னை கோட்டையின் பின்பகுதியில் இருந்த நூலகத்தை இப்போது கன்னிமாரா நூலகம் இருக்கும் பகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள். 1906ஆம் ஆண்டு, டி.பி.ஐ. வளாகத்தில் இப்போது நூலகம் இருக்கும் கட்டிடம் கட்டப்பட்டு நூலகம் இங்கே இடம்பெயர்ந்திருக்கிறது. சென்னை அரசின் பொதுப்பணித்துறை இந்த கட்டிடத்தைக் கட்டி நூலகத்துக்காக அர்ப்பணித்துள்ளது. இந்நூலகத்திற்கென்றே சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இப்போதுள்ள வாடகை நூலகங்களைப் போல் வீட்டிலேயே புத்தகங்களைக் கொண்டு கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் அதனைப் பின்பற்றுகிறார்கள். நீங்கள் உங்களுக்குத் தேவையான புத்தகத்தை குறிப்பிட்டு விட்டீர்கள் என்றால் போதும். புத்தகத்தை உங்கள் வீட்டிலேயே கொண்டு வந்து தருகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆங்கிலேயர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் விதிகள் தளர்த்தப்பட்டு இந்தியர்கள் அதிகமாக உறுப்பினராக வகை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது இந்தியர்கள் பலர் இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள். 1868ஆம் ஆண்டு உள்ள பதிவேட்டில் திருவாங்கூர் மகாராஜா, ரங்கநாத முதலியார் ஆகியோர் இந்த நூலகத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுபாஷ் சந்திரபோஷ், நீதிக்கட்சியைச் சேர்ந்த வரதராஜ முதலியார், ராஜமன்னார், எழுத்தாளர் எஸ்.பாலாம்மாள், டாக்டர் சுப்பராயன், நாட்டியக் கலைஞர் ருக்மணி தேவியின் கணவர் ஜி. எஸ். அருண்டேல், ஏ.எல்.ராமசாமி முதலியார் ஆகியோர் உறுப்பினராகியிருக்கிறார்கள். இவர்கள் உறுப்பினராக இருந்ததுக்கான ஆவணங்களை இப்போதும் நூலகத்தில் பார்க்கலாம். சுபாஷ் சந்திரபோஷ் இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்த கடிதம் அவர் கையெழுத்தில் இன்னும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பிரிட்டீஷ்காரர்கள் ஒவ்வொருவராக தங்கள் நாட்டுக்குத் திரும்பத் தொடங்கினார்கள். அப்படி திரும்பியவர்களின் இந்த நூலகத்தின் உறுப்பினராக இருந்தவர்களும் உண்டு. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நூலகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த நூலகத்தின் பொற்காலமும் கொஞ்சம் கொஞ்மாக மங்கத் தொடங்கியது. இப்போது இந்த நூலகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பார்த்தாலே அதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 180 பேர்!

என்றாலும் இப்போதும் இது ஒரு சிறப்பு வாய்ந்த நூலகம் என்பதில் சந்தேகம் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் சென்னை இலக்கியச் சங்கத்தின் செயலாளராக இருந்த மாண்டித் மெக்பைல் என்ற ஆங்கிலேயர் சென்னை இலக்கிய சங்கம் குறித்தும் இந்த நூலகம் குறித்தும் ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதனை படித்தால் ஆச்சர்யத்தில் நம் கண்கள் விரிந்து விடும். அவ்வளவு பெருமைகள் கொண்டது இந்த நூலகம். 1906ஆம் ஆண்டு அந்த சிறு வெளியீடு வெளியாகியுள்ளது. மாண்டீத் அக்காலத்தில் சென்னை மாகாண முக்கியஸ்தர்களில் ஒருவர். சென்னையில் ஒரு சாலைக்கு மாண்டீத் பெயர் வைக்கப்பட்டது. இப்போதும் சென்னையில் அந்த சாலை மாண்டீத் சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே அவரது முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

மாண்டீத் வெளியிட்டது சிறுகுறிப்புதான் என்றாலும் சென்னை இலக்கிய சங்க நூலகத்தைப் பொறுத்தவரைக்கும் மிக முக்கியமான ஒரு ஆவணம் அது. அக்குறிப்பேட்டில் உள்ள தகவல்கள்தான் இந்த நூலகத்தின் ஆரம்ப செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ள இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி. 1812ஆம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்ட போது நூலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் புத்தகங்கள், நூலகத்தைப் பராமரிக்க ஒரு ஆண்டுக்கு செலவாகும் மூவாயிரம் ரூபாய், உறுப்பினர்கள் கடைபிடிக்கக்கூடிய விதிமுறைகள், சந்தா விபரங்கள் உட்பட எல்லாவற்றையும் பற்றி இந்த குறிப்பேட்டில் மாண்டீத் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலகத்தின் இன்னொரு சிறப்பு, அறிஞர் தோட்டக்காடு ராமகிருஷ்ணபிள்ளை இந்த நூலகத்தின் நூலகராக இருந்திருக்கிறார் என்பது.

‘MADRAS JOURNAL OF LITRATURE AND SCIENCE' என்ற பருவ இதழையும் சென்னை இலக்கிய சங்கம் நடத்தி வந்துள்ளது. சென்னை பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது சமஸ்கிருத வகுப்பில் அதிகமும் ஜெர்மன்காரர்கள்தான் சேர்ந்திருக்கிறார்கள். அந்த ஜெர்மன்காரர்கள் இந்த பத்திரிகையின் வெளியீட்டில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். 1833ஆம் ஆண்டு இந்த இதழின் முதல் பிரதி வெளியாகியுள்ளது. அன்று முதல் 1984ஆம் ஆண்டு வரை சுமார் அறுபது வருடங்கள் தொடர்ந்து இந்த இதழ் வெளியாகியுள்ளது. அக்காலகட்டத்தில் வெளிவந்த முக்கியமான இதழ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இதழில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ‘LAND CRABS IN MADRAS' (நண்டுகளின் கூடாரம் சென்னை), ‘சேலம் மாவட்டத்திலுள்ள முற்காலத்திய நடுகல்கள்', ‘மலபார் மாவட்டம் - வயநாடு' போன்ற ஆராய்ச்சி கட்டுரைகள் மிக முக்கியமானவை. இந்த இதழின் தொகுப்பு இந்த நூலகத்தில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் சென்னை இலக்கிய சங்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆவணமும் இங்கே இருக்கிறது. அது அழகிய கையெழுத்தில் கைப்பட எழுதப்பட்டு, பிறகு தட்டச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டு ஆவணப்படி, அப்போது ஒன்றரை இலட்சம் புத்தகங்களுக்கு மேல் இந்த நூலகத்தில் இருந்திருக்கிறது. இப்போது சுமார் 80,000 புத்தகங்கள், 1000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள், பல அறிய புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் இங்கு உள்ளன. இவை எல்லாமே கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஆவணங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், ஆராய்ச்சி நூல்கள், தத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள், ஆன்மீக நூலகள், புவியியல் நூல்கள் எல்லாம் இங்கே உள்ளன.

ஜெனே ஆஸ்டின், பால்ஸாக், செர்வாண்டிஸ், வில்லியம் பிளேக், மேத்திவ் அர்னால்ட், ராபர்ட் லூயிஸ், வால்ட் வில்ட்மன், மார்க் ட்வைன், தாமஸ் கார்டி, ஸ்டீவன்ஸன், டென்னிசன், ரஸ்ஸல், வெல்ஸ் போன்ற முக்கிய ஆசிரியர்களின் அனைத்து புத்தகங்களும் இங்கே உள்ளது. குறிப்பாக இந்த புத்தகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இந்த எழுத்தாளர்களின் வாழ்நாளிலிலேயே வெளிவந்த முதல் பதிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள விதம், புத்தக அலமாரிகள் ஆகியவையற்றை இப்போது வேறு எந்த நூலகத்திலும் பார்க்க முடியாது. 20அடி உயரமுள்ள 10 உயரமான புத்தக அலமாரிகள் 8க்கும் மேற்பட்ட அடுக்குகளில் ஒன்றன்மீது ஒன்றாக உள்ளன. மேலே இருக்கும் புத்தக அலமாரியில் இருந்து புத்தகத்தை எடுக்க ஏணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒன்றரை லட்சம் புத்தகங்கள் என்பதாயிரம் ஆனதில் இருந்து பல புத்தகங்கள் சிதைந்து போயிருக்கின்றன என்று தெரிய வருகிறது. இப்போதும் கூட பல புத்தகங்கள் சிதைந்த நிலையில்தான் உள்ளன. புத்தகங்களின் நிலையைப் பொறுத்து, மிகவும் மோசமான நிலையில் இருப்பவை, பரவாயில்லாமல் இருப்பவை, நல்ல நிலையில் இருப்பவை என்று அவற்றை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். இதில் மிக மோசமான நிலையில் இருக்கும் புத்தகத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதனை பாதுகாப்பதா அல்லது வெளியே கொடுத்து விடுவதா என முடிவு செய்கிறார்கள். இப்படி தேவையில்லை என்று கழிக்கும் புத்தகங்களை எதாவது கல்லூரி அல்லது பள்ளி நூலகங்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். சமீபத்தில் கூட இப்படி சென்னை ஐ.ஐ.டி. நூலகத்திற்கு அதிக புத்தகங்களை கொடுத்திருக்கிறார்கள். இப்படி கொடுக்கும் போது அந்த புத்தகத்தின் ஆசிரியரின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதற்கு மாற்றுப் பிரதி வாங்கி வைக்கவும் செய்கிறார்கள்.

இப்போது இந்த நூலகம் கணினிமயப்படுத்தப் பட்டும் வருகிறது. கணினியில் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒறு புத்தகத்தை தேடி எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த நூலகத்தில் ஒரு தமிழ் புத்தகங்கள் இல்லை என்பது கொஞ்சம் சங்கடத்துக்குறிய விஷயம்தான். எல்லா புத்தகங்களும் பிரஞ்சு, ஜெர்மன், இலத்தின், ஆங்கிலம் ஆகிய மொழி புத்தகங்கள்தான். ஆங்கிலேயர்கள் அவர்களுக்காக உருவாக்கிய நூலகம் என்பதால், அவர்களுக்குப் பயன்படக்கூடிய புத்தகங்களை மட்டுமே வாங்கி வைத்துள்ளார்கள். ஆனால் இனிமேல் தமிழ் புத்தகங்கள் வாங்கி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக நூலகர் உமா மகேஸ்வரி சொல்கிறார். யாராவது நன்கொடையாக புத்தகங்கள் கொடுக்க முன்வந்தாலும் அதனையும் பெற்றுக் கொள்வார்களாம்.

இங்கே இருக்கும் அரிய ஆவணங்கள் பற்றி பேசத் தொடங்கினால் நாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன. எனவே நாம் சில மிக முக்கியமான ஆவணங்கள் பற்றி மட்டும் பேசலாம். முதலில் இங்கே இருக்கும் 1858ஆம் ஆண்டு வெளியான உலக வரைபடம் பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த உலக வரைபடம் மிகவும் பிரசித்திப் பெற்றது. பல்வேறு மடிப்புகளாக உள்ள அந்த வரைபடம் விரித்தால் மிகவும் பெரியதாக இருக்கிறது. இரண்டு பேர் படுப்பதுக்கான பாய் மாதிரி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது போல் முப்பதுக்கும் மேற்பட்ட வரைபடங்கள் உள்ளன. 1898ஆம் வெளியான ‘HISTORY OF BUCKINGHAM CANELS PROJECT' என்ற ஒரு பெரிய புத்தகம் உள்ளது. இரண்டு பேர் சேர்ந்துதான் அதனை தூக்கிவைத்து விரித்து பார்க்க வேண்டும். பஞ்சகாலத்தில் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம், பக்கிங்காம் கால்வாய் திட்டம். அந்த திட்டம், கால்வாயின் வரைபடம் எல்லாம் இந்த புத்தகத்தில் உள்ளன. இங்கே இருக்கும் கங்கை கால்வாய் வரைபடமும் ஒரு முக்கியமான ஆவணம். இதுபோல் முப்பதுக்கும் மேற்பட்ட அரிய வரைபடங்கள் உள்ளன.

அரிய புத்தகங்களைப் பொறுத்தவரைக்கும் ‘ARISTOTELIS OPERATMNIA' என்ற புத்தகம் இங்கே இருப்பதிலேயே மிக பழமையான புத்தகம். 1509ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகியுள்ளது. கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழியில் உள்ள இந்த புத்தகம் மேற்கத்திய கலைகள் பற்றி முனைவர் பட்டத்துக்காக அளிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை. லியார்னார்டோ டாவின்ஸி, மைக்கலாஞ்சலோ போன்ற முக்கியமான மேற்கத்திய கலைஞர்களின் படைப்புகள் குறித்து இதில் உள்ளது. ‘TRAVELS IN INDIA AND TREATIES IN FAR EAST' என்ற புத்தகம் இங்கே இருக்கும் அடுத்த பழமையான புத்தகம். JOHN BAPLISTA என்பவர் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். 1680ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகியுள்ளது. வேறும் பல புத்தகங்கள் தேட தேட கிடைத்துக் கொண்டே இருக்குமாக இருக்கலாம்.

புத்தகங்கள், வரைபடங்கள் மட்டுமல்லாமல் அந்தகால புகைப்படங்களும் இங்கே உள்ளன. இதில் ஆங்கிலேய கேப்டன் டி. டிரைட் எடுத்த புதுக்கோட்டை, மதுரை புகைப்படங்கள் முக்கியமானவை. 1858ஆம் ஆண்டைச் சேர்ந்தவை அந்தப் புகைப்படங்கள். அவற்றைப் பார்ப்பது ஒரு பிரமாதமான அனுபவம். மிகவும் அறிய காட்சிகள். அந்த காலத்தில் மதுரையும் புதுக்கோட்டையும் எப்படி இருந்திருக்கும் எனத் தெரிந்தகொள்ள இன்றைக்கு இருக்கும் மிக முக்கியமான ஆவணங்கள் இவை. இவ்வகையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலகம் இது. பல முனைவர் பட்டத்துக்கான விஷயங்கள் இந்த நூலகத்தில் தூங்கிக்கொண்டிருக்கின்றன.

சரி, இவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலமா?

பார்க்கலாம். அதற்கு உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினராவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும் உறுப்பினராக சேரலாம். தனிநபர் வருட சந்தா ஐநூறு ரூபாய். உறுப்பினர் ஒரே நேரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். நிறுவன உறுப்பினர் சந்தா 1500 ரூபாய். உறுப்பினராகும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் நான்கு புத்தகங்கள் வீதம் எட்டு புத்தகங்கள் எடுத்துக் கொள்ளலாம். இப்போது 180 தனிநபர்களும் நான்கு நிறுவனங்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

என்.எஸ்.ராமஸ்வாமி அவர்கள் எழுதிய ‘MADRAS LITRARY SOCIETY: A HISTORY 1812 - 1984' என்ற புத்தகம் இந்த நூலகம் மற்றும் சென்னை இலக்கிய சங்கம் பற்றி மிகவும் விரிவாக பதிவு செய்துள்ள ஒரு புத்தகம். 148 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம்தான் இது. இப்போது அச்சில் இந்த புத்தகம் இல்லை. சென்னை இலக்கிய சங்க நூலகத்தில் மட்டும் ஒரு பிரதி இருக்கிறது. தேவைப்படுபவர்கள் இங்கே சென்று நகல் எடுத்துக்கொள்ளலாம்.

2000த்தில் நான் சென்ற போது, முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் எம்.கோபால கிருஷ்ணன், சென்னை இலக்கிய சங்கத்தின் சேர்மனாக இருந்தார். மோகன்குமார் செயலாளராக இருந்தார். மேலும் ஹேமலதா ராமமணி, சி.ராமகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அதிகார்¢கள் வி.கிருஷ்ணன், கே.ஹரிபாஸ்கர் மற்றும் பி.எஸ்.சோமசுந்தரம், கே.ஆராவமுதன், ஹெச்.சி.ரேட்டன், வி.கே.மோகன், எம்.ராமன் ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தார்கள். மொத்தம் ஆறு பேர் வேலை பார்த்தார்கள். உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடையின் மூலம்தான் இந்த நூலகம் இன்னும் மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து வருகிறது. உறுப்பினர்கள் சந்தாவிலிருந்து வரும் வருமானத்தில் இருந்துதான் இங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள். பொதுப்பணித்துறையின் கீழ் இருக்கும் நூலக கட்டிடத்துக்கு மிகவும் குறைந்த அளவிலான வாடகையை மட்டுமே அரசாங்கம் பெற்றுக்கொள்கிறது. அது ஒருவகையில் இந்த நூலகத்திற்கு பெரிய ஆறுதல். உமா மகேஸ்வரி என்பவர் நூலகராக இருக்கிறார். 1994 முதல் இவர் இந்த நூலகத்தில் வேலை பார்க்கிறார். ”சென்னை இலக்கிய சங்கம் நூலக கட்டிடத்தை புணரமைக்கவும் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள அறிய புத்தகங்களுக்கு மாற்று புத்தகங்களை வாங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், சிறப்பான ஒரு நூலகமாக இதனை மாற்ற வேண்டுமானால், நிறைய தெரிந்து கொள்ளவேண்டும், நமது பெருமையாக இருக்கும் இந்த நூலகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மவர்களுக்கு வரவேண்டும். இன்னும் நிறைய பேர் இந்த நூலகத்தை பயன்படுத்த முன்வர வேண்டும்” என்றார் உமா மகேஸ்வரி.

(பழ.அதியமான் அவர்கள் கேட்டுக்கொண்டதால், ‘சென்னை, ஆல் இந்தியா ரேடியோ’வில் வாசிக்க இந்தக் கட்டுரையை 2002இல் எழுதினேன். வாசித்து கேட்கும்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டக் கட்டுரையில் இப்போது மிகச் சிறு மாறுதல்கள் செய்திருக்கிறேன். கறுப்பு வெள்ளைப் படங்கள்: மதுரை)