02 July 2008

தமிழ்நாடு

நதிநீர் பிரச்னைகள்

பூனைக்கு யார் மணி கட்டுவது?


காவிரி தென்பண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருநைநதி என
மேலிடும் ஆறு பல ஓடி திரு
மேனி செழித்த தமிழ்நாடு
- பாரதி

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. ''கர்நாடகாவில் தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைந்த பிறகு பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என தமிழக முதல்வர் கருணாநிதியால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இந்த ஒரு மாதத்தில் எந்த முன் னேற்றமும் இல்லை. கர்நாடகாவின் புதிய முதல்வர் எடியூரப்பா, இந்த பிரச்னை தொடர்பாக அவ்வப்போது உதிர்த்த ஒன்றிரண்டு வார்த்தைகளும் அவ்வளவு நம்பிக்கையளிக்கும் படியாக இல்லை. இன்னொரு காவேரி பிரச் னையாக இதுவும் வருடக் கணக்காக இழுத்தடிக்கப்படும் என்றே தெரிகிறது.

தாமிரபரணி தவிர்த்து காவிரி, தென்பண்ணை, பாலாறு, கொரட்டலையாறு என தமிழகத்தின் எல்லாப் பெரிய நதிகளும் அண்டை மாநிலங்களில் உற்பத்தி யாகிதான் தமிழ்நாட்டுக்குள் ஓடுகின்றன. வைகை தமிழகத்திலேயே உற்பத்தி யாகிறது என்றாலும், தண்ணீருக்கு கேரளாவின் பெரியாற்றைதான் நம்பி இருக்கிறது. மழை பரவலாகவும் சம அளவிலும் பெய்யாததால் பக்கத்து மாநிலங்களில் இருந்து இந்த ஆறுகளில் வரும் தண்ணீரையே தமிழகம் பெருமளவில் நம்பி இருக்கிறது. இந்நிலையில், கடைமடை பாசனக்காரர் களுக்கே உரிய பிரச்னை... முந்தியவர்கள் விட்டால்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் என்னும் நிலை. இப்படி, கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக் கும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். இந்நிலையில் கர்நாடகம், கேரளா, ஆந்திரா என எல்லா பக்கத்து மாநிலங்களுடனும் நதி நீர்ப் பகிர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

காவேரியில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் பிரச்னை தீர்ந்த பாடில்லை. இன்னொரு பக்கம் வற்றாத ஜீவநதியான பாலாற்றின் பாதையில் கர்நாடகம் புதிய பல ஏரிகளை உருவாக்கியதன் விளைவு, பாலாறும் வறண்டு விட்டது. இப்போது, மழைக் காலங்களில் பாலாற்றில் ஓடும் மூன்று நாள் தண்ணீருக்கும் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திரா வின் முயற்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலும் சிக்கல்; ஒப்புகொண்டபடி 12 டி.எம்.சி. தண் ணீரை எந்த வருடத்திலும் ஆந்திரா தந்ததில்லை. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், நெய்யாற்றில் கேரளா உருவாக்கும் பிரச் னைகள் என தமிழகம் மிகப்பெரிய ஒரு தண்ணீர் பிரச்னையை எதிர்நோக்கி உள்ளது.

காவேரி:

''ஒரு நீர் ஆதாரத்தை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பின்னர் அதன் பயன்பாட்டு உரிமை அவர்களுக்குதான் சொந்தம்' என்கிறது சர்வதேச நதிநீர் ஒப்பந்தம். அதன்படி காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். இரண்டாம் நூற்றாண்டில் கரிகாற்சோழன் கல்லணை கட்டியது தொடங்கி, பத்தொன்பது நூறாண்டுகளாக காவிரியைப் பயன்படுத்தி வருகிறார்கள் தமிழக விவசாயி கள். ஆனால், இன்று தங்களுக்குச் சொந்தமான நதியையே மற்றவர்களிடம் பிச்சைக் கேட்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

காவேரியின் மீதான உரிமைப் பிரச்னை இன்று நேற்று தொடங்கினதல்ல. கி.பி.1146ஆம் ஆண்டு மைசூரை ஆண்டு வந்த போசாள மன்னன் நரசிம்மன் காவிரியின் குறுக்கே தடை ஏற்படுத்த முயல, அதற்கு எதிராக இரண்டாவது ராஜராஜன் தமிழகத்தில் இருந்து படையெடுத்து சென்ற அன்றே தொடங்கிய பிரச்னை இது. 1892ஆம் ஆண்டு சென்னை மாகாண பிரிட்டீஷ் அரசாங்கம் ஒரு ஆணை பிறப்பித்தது. சென்னை மாகாண எல்லைக்குட்பட்ட பகுதியில் பாயும் நதிகளின் குறுக்கே அணை கட்டவேண்டுமானால், அதற்கு சென்னை மாகாண அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என்கிறது அந்த ஆணை. அதன்பிறகு, 1924ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசாங் கத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் 93 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையும் மைசூரில் 44 டி.எம்.சி. கொண்ட புல்லம்பாடி அணையும் (பிறகு இது கிருஷ்ணராஜசாகர் என பெயர் மாற்றப்பட்டது) கட்டிக்கொள்ள முடிவானது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில், ‘ஐம்பது ஆண்டு களுக்குப் பிறகு எதாவது மாற்றம் இருந்தால் இரண்டு அரசுகளும் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்' எனச் சொல்லப்பட்டிருந்தது. இதனைப் பிடித்துக் கொண்டு, ஐம்பது வருஷம் கடந்ததும் 1974ஆம் ஆண்டு, ‘‘1924 ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது'' என பிரச்னை செய்யத் தொடங்கியது கர்நாடகம். ஆனால் உண்மை நிலை, இன்று வரைக்கும் ஒப்பந்தம் காலாவதி ஆகவில்லை என்பதுதான். ‘தேவைப்பட்டால் மாற்றம் செய்துகொள்ளலாம்’ என்றுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு நீதிமன்றம் சென்றது. பிறகு, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் வழக்கை வாபஸ் வாங்கியது. ஆனால், இந்திராகாந்தி சொன்னதை கர்நாடகம் கேட்கவில்லை. எனவே, மீண்டும் நீதிமன்றம் சென்றது தமிழகம். 1990ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்கச் சொன்னது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தான், பதினாறு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு வெளி யானது.

இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கச் சொன்ன நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. தண்ணீரைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறது. ‘’இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி'' என தமிழ் ஆர்வலர்கள் பலரும் கொதித்து எழுந்தார்கள். ஆனால், இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. தண்ணீரை மேட்டூரில் கொடுக்கச் சொல்லியிருந்தார்கள். இறுதித் தீர்ப்பில், பிலிகுண்டுவில் 192 டி.எம்.சி. கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிலிகுண்டு மேட்டூருக்கு மேல்புறத்தில் 60 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேட்டூரில் அளவெடுப்பதைவிட அங்கே துல்லியமாக அளவெடுக்க முடியும் என்பதால் பிலிகுண்டுவைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பிலிகுண்டுவுக்கும் மேட்டூ ருக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்யும் மழை நீரின் அளவு தோராயமாக ஆண்டுக்கு 25 டி.எம்.சி. எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக 192ம் 25ம் சேர்த்து 217 வருகிறது. எனவே, இடைக்காலத் தீர்ப்புக்கும் இறுதித் தீர்ப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. அதைவிட இப்போதுள்ள முக்கியமான பிரச்னை, இறுதித் தீர்ப்பில் கொடுக்கச் சொல்லியுள்ள தண்ணீரையாவது கர்நாடகம் கொடுக்குமா என்பதுதான்.

மத்திய அரசு, நீதிமன்றம், நடுவர் மன்றம் - யார் சொன்னாலும் கேட்பதில்லை என்னும் போக்கைத்தான் கர்நாடகம் கடைபிடித்து வருகிறது. இடைக்காலத் தீர்ப்பில் சொல்லப்பட்ட அளவு தண்ணீரை எப்போதுமே கர்நாடகம் கொடுத்ததில்லை. அதிகம் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் வருடங் களில் உபரி நீரினை கழித்துவிடும் ஒரு வடிகால் பகுதியாகத்தான் தமிழ்நாட்டைக் கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறது. மேலும், கர்நாடகத்தில் 5 லட்சம் ஏக்கராக இருந்த விவசாயப் பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 12 லட்சம் ஆக்கியிருக்கிறார்கள். இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது விவசாயப் பரப்பை மேலும் அதிகரித்துக்க்கூடாது எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அதனையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை. இப்போது, 12 லட்சம் 24 லட்சம் ஆகியிருக்கிறது. இப்படி, இடைக்காலத் தீர்ப்பை உதாசீனம் செய்ததைப் போல இறுதித் தீர்ப்பையும் அவர்கள் உதாசீனம் செய்யலாம். அப்போது நம்மால் என்ன செய்யமுடியும்?

இதற்காகத்தான், தீர்ப்பை அமல்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நடுவர்மன்றத்திடம் கேட்டது தமிழகம். அதுகுறித்த எந்த விபரமும் இறுதித் தீர்ப்பில் இல்லை. இந்நிலையில், அப்போது சென்னை வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ‘‘அமல்படுத்தும் அமைப்பு ஏற்படுத்தப்படும்'' எனக் கூறினார். இன்றுவரைக்கும் அந்த அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை!

முல்லைப் பெரியாறு, நெய்யாற்றுத் திட்டம்:

கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான காவிரி பிரச்னை தொடர்கதை மாதிரி சமசரச பேச்சு, நீதிமன்றம் என கேரளாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே இழுத்தடிக்கப்படும் பிரச்னை முல்லைப் பெரியாறு.

1886ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருவாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையில் தேங்கும் நீரினை ஒரு சுரங்கம் மூலமாகத் திருப்பி மதுரை, இராமநாதபுரம் ஜில்லாகளின் வறண்ட பகுதிகளில் பாசனத்துக்குப் பயன்படுத்த வகை செய்த இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் குறிக்கப்பட்டது. அணை கட்டுவ தால் நீரில் மூழ்கும் 8000 ஏக்கர் நிலத்துக்கும் வாடகையாக ஆண்டு தோறும் ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் மொத்தம் 40,000 ரூபாயை பிரிட்டீஷ் நாண யமாக சென்னை அரசாங்கம் திருவிதாங்கூர் மன்னருக்குத் தரவேண்டும் எனவும் ஒப்புகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம்படி 1895ஆம் ஆண்டு பெரியாற் றின் குறுக்கே அணை கட்டி முடிக்கப்பட்டது. சென்னை மாகாணம் தமிழ் நாடாகவும் திருவிதாங்கூர் சமஸ்தானம் கேரளாவாகவும் ஆனபிறகும் முல்லைப் பெரியாறில் சிக்கல்கள் எதுவும் இன்றி, அறுபது ஆண்டுகள் வரைக் கும் பாசனம் நடந்து வந்தது.

1955ஆம் ஆண்டு பெரியாறு தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின்உற்பத்தி செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டு பழைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக புது ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் நீரில் மூழ்கும் நிலத்துக்கான வாடகை ஏக்கருக்கு ஐந்தில் இருந்து முப்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்படி 2,40,000 ரூபாயை ஆண்டுதோறும் தமிழக அரசு கேரளாவுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில், 1963ஆம் ஆண்டு முதன்முதலாக ‘அணை பல வீனமாகிவிட்டது. கேரள மக்களுக்கு ஆபத்து. எனவே, அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கவிட மாட்டோம்'' எனப் பிரச்னையை எழுப்பியது கேரள அரசாங்கம்.

முல்லைப் பெரியாறின் முழு கொள்ளளவான 152 அடி நீர் இருக்கும் போதும் மிக உயர்ந்த நில நடுக்கம் ஏற்பட்டால்கூட உடையாத பலத்துடன்தான் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக் கட்டப்பட்ட பிறகு இப்பகுதியில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அணையில் ஒரு விரிசல்கூட விழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், கேரளா பயத்தைப் போக்க மத்திய அரசின் நிபுணர் குழு அணையைப் பார்வையிட்டது. அந்தக் குழு 152 அடி வரை நீரைத் தேக்கக்கூடிய பலத்துடன் அணை பலமாகத்தான் இருக்கிறது என அறிக்கைத் தந்தது. என்றாலும், கேரள மக்களின் அநாவசி யமான பீதியைப் போக்க சில எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் அறிவுரை கூறியது. இதன் அடிப்படையில் 26 கோடி ரூபாய் செலவில் அணையைப் பலமூட்டும் பல நடவடிக்கைகள் தமிழகத்தால் எடுக்கப்பட்டன. கேரளா ஏற்படுத்திய இடையூறுகளுக்கு இடையே மிகுந்த பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும்தான் தமிழக பொறியாளர்கள் இந்தப் பணிகளை செய்து முடித்தார்கள்.

இத்தனைப் பணிகளுக்குப் பின்னரும், 1978ஆம் ஆண்டு மீண்டும் அணை பற்றிய புகாரை எழுப்பிய கேரளா, ‘‘அணை உடைந்துவிடும், 30 லட்சம் கேரள மக்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவார்கள்'' என்றது. இதனையொட்டி அணையைப் பார்வையிட்ட மத்திய அரசின் பாசன கமிஷன் அதிகாரிகள், அணை நல்ல நிலையில்தான் இருக்கிறது எனவும் என்றாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்கள். தமிழ அரசு அதனை ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தை 145 அடியாகக் குறைத்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரச்னை செய்தது கேரளா. இப்போது, அணையின் நீர்மட்டம் 152இல் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால், நீரில் மூழ்கும் நிலப்பகுதி 4677 ஏக்கராக குறைந்தது. இப்பகுதியில் சுற்றுலா கேளிக்கை சாதனங்களை நிறுவி சம்பாதிக்கிறது கேரளா. ஆனாலும், இன்றும் தொடர்ந்து இந்தப் பகுதிக்கும் சேர்த்து முதலில் தீர்மானித்தபடி 8000 ஏக்கருக்கான வாடகையையே கொடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும், நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 10.4 டிம்சியில் இருந்து 6.4 டிஎம்சியாக குறைந்துவிட்டதால் பாசனப்பகுதியில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது. 140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின்நிலயத்தில் 40 சதவிகிதம் உற்பத்திக் குறைந்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில் வழிந்துபோகும் தண்ணீரை இடுக்கி அணையில் தேக்கி மின் உற்பத்தி செய்து அதனை தமிழ்நாட்டுக்கே விற்றது கேரளா. முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் இவ்வளவு நஷ்டங்களைத் தாங்கி வருகிறது தமிழகம். நிலமை இவ்வாறு இருக்க தமிழ்நாடுதான் ஏதோ குற்றம் செய்துவிட்டதாக பேசி வருகிறது கேரள அரசு. இது முழுக்க முழுக்க அரசியல் காரணங் களுக்காக சொல்லப்படும் புரளியே தவிர, தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு சதவிகிதம்கூட இதில் உண்மையில்லை என்பது ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் புரியும்.

2006ஆம் வருடம் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறில் முழு நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தாலாம் என உத்தரவு கொடுத்தப் பிறகு, ‘‘பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம். நீங்கள் வேண்டுமானால் 152 அடிக்கு புது அணை கட்டிக்கொள்ளுங்கள்'' என்றார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். இது, காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர இது வேறு ஒன்றும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேச்சிப்பாறை அணையும் கட்டப்பட்டது. இந்த அணை இப்போதும் பலமாகத் தான் இருக்கிறது. 2000 வருடம் பழமையான கல்லணையும் பல பெரிய ஏரி களும் தமிழகத்தில் உள்ளன. இவைகள் உடைந்துவிடும் என யாரும் இதுவரை கூக்குரல் எழுப்பியதில்லை.

முல்லைப் பெரியாறில் கேரளா பிரச்னை செய்வதன் உண்மையான நோக்கம் அதன் கீழ்பகுதியில் இருக்கும் இடுக்கி அணைதான். முல்லைப் பெரியாறு அணையைவிட 34 மடங்கு பெரியதாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரத்தான் முல்லைப் பெரியாற்றில் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள். இடுக்கி அணைக் கட்டப்பட்ட பிறகே அவர்கள் பிரச்னையை ஆரம்பித்தார்கள் என்பதை கவனிக்கலாம்.

தமிழ்நாட்டுக்கு கேரளாவோடு சிக்கலிலுள்ள இன்னொரு திட்டம் நெய்யாற் றுத் திட்டம். இத்திட்டத்தின்படி நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட் டத்துக்கு விநாடிக்கு 150 கன அடி நீரை கேரளம் தரவேண்டும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் பிரிந்த பிறகு தொடங்கி இன்று வரைக்கும் இந்தத் தண்ணீரை தர மறுத்து வருகிறது கேரளம். இத்தனைக்கும் கேரளாவின் மொத்த நீர்வளத்தில் 88 சத விகிதம் கடலில் கலக்கிறது என்பதுதான் வேதனையானது.

கிருஷ்ணா நதி நீர் திட்டம், பாலாறு:

கர்நாடகம், கேரளாவுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டம் தொடங்கி பாலாற்றின் குறுக்கே கட்டும் அணை வரைக்கும் ஆந்திரா இன்னொரு பக்கம் பிரச்னை செய்கிறது.

சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துவர, சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் குடிநீர் பிரச்னை பூதாகரமாகத் தலைதூக்கியது. எனவே, அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாயும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை சென்னைக்கு கொண்டுவர திட்டமிட்டார். 1976இல் இந்திரா காந்தி முன்னிலையில் கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, தமிழ்நாடு முதல்வர்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி கர்நாடகா, மகராஷ் டிரா, ஆந்திரா மூன்று மாநிலங்களும் தலைக்கு 5 டி.எம்.சி. நீரை ஒவ்வொரு ஆண்டும் சென்னையின் குடிநீர் தேவைக்கு வழங்கவேண்டும். இந்த நீர், ஆந்தி ராவிலுள்ள சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்து கண்டலேறு நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தெலுங்கு - கங்கா கால்வாய் வழியாக ஆந்திரா, தமிழ்நாடு எல்லையிலுள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப் படும். மூன்று மாநிலங்களும் வழங்கும் 15 டி.எம்.சி. தண்ணீரில் விரயம் போக 12 டி.எம்.சி. தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும். இந்த தெலுங்கு - கங்கா கால்வாயைத்தான் சமீபத்தில் சாய்பாபா டிரஸ்ட் சீரமைத்துத் தந்தது.

ஆனால், கிருஷ்ணா நதி நீர் திட்டத்துக்கு செலவிடப்பட்ட மதிப்புடன் ஒப்பி டும்போது வரும் தண்ணீரின் அளவு மிகக்குறைவு. 1996இல் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வேலைகள் முடிந்த பிறகு தொடங்கி, இன்றைக்கு வரைக்கும் ஒப்பந்தபடி ஒரு வருடம்கூட 15 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கிய தில்லை. வேண்டா வெறுப்பாக 1/2, 1. 2. 3 என மிகக் குறைவான தண்ணீரையே திறந்துவிட்டிருக்கிறது. இதில் மண் உறிஞ்சுவது, இடையில் விவசாயிகள் பைப் போட்டு திருடுவது, கால்வாய் உடைத்துக் கொண்டு போனது போக மிகச் சொற்பமான தண்ணீரே பூண்டியை வந்தடைந்திருக்கிறது. இடையில் தண்ணீரை எடுத்த விவசாயிகளை கட்டுப்படுத்த ஆந்திரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த பன்னிரண்டு வருடத்தில் அதிகமாக தண்ணீர் வந்தது 2007ஆம் ஆண்டுதான். அந்த வருடம் 6 டி.எம்.சி. தண்ணீர் பூண்டிக்கு வந்திருக்கிறது. இதற்கு சாய்பாபா டிரஸ்ட் கால்வாயை செப்பனிட் டது ஒரு காரணம் என்றாலும், முக்கியமான காரணம் அதிக மழை பெய்தது தான். போதுமான தண்ணீர் இருந்ததன் காரணமாக இடையில் விவசாயிகள் தண்ணீரை பைப் போட்டு எடுக்கவில்லை. ஆனால், மழை குறைவான வருடங் களில் இதுமாதிரி அவர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. வரும் காலங்களில் அவர்கள் தண்ணீரை எடுத்தால், இதுவரைக்கும் எப்படி பார்த்துக் கொண்டிருந்ததோ அதுமாதிரிதான் ஆந்திரா பார்த்துக் கொண்டு இருக்கும்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி திருப்ப திட்டமிடும் ஆந்திராவின் முயற்சி வெற்றிபெற்றால் பாலாறும் செத்த ஆறாக ஆகிவிடும். பாலாற்றில் இப்போது மழைக்காலங்களில் மட்டும்தான் தண்ணீர் வருகிறது என்றாலும் அதனால் பாலாற்றின் பாதையில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ஊற்றுக்கால் மிக நன்றாக உள்ளது. இதனால் பாலாறை பூமிக் கடியில் பாயும் ஆறு என்பார்கள். மழைக்கால பாலாற்று தண்ணீரை இம்மா வட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப முடியும். காவிரி மாதிரியே காட்டு மழை பெய்து வெள்ளம் வந்தால்தான் பாலாற்றிலும் தண்ணீரைப் பார்க்கமுடியும் என்னும் நிலை விரைவில் ஏற்படும். நாம் அதைப் பார்க்கத் தான் போகிறோம்.

இப்படி கர்நாடகம், கேரளா, ஆந்திரா என மூன்று பக்கமும் அடிவாங்கும் நிலை உருவானதுக்கு தமிழகத்தின் மிதமான போக்கும் அரசியல்வாதிகளின் அக்கறையின்மையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. மீண்டும், மீண்டும் நீதிமன்றம், போராட்டம் என நதிநீர்ப் பிரச்னைகளை இழுத்தடித்தால் கேரளா - தமிழ்நாடு, கர்நாடகா - தமிழ்நாடு, ஆந்திரா - தமிழ்நாடு மக்களுக்கு இடையே மனக்கசப்பும் பகைமையுணர்ச்சியும்தான் வளரும். மேலும், நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு அதிகாரத்தின் மூலமும் தீர்வுகாண முடியாது என்பதும் ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. எனவே, மாநிலங்களுக்கு இடையே யான நதி நீர் பகிர்வை சமரச முயற்சிகள் மூலம்தான் முடிவு செய்யமுடியும். அது எப்படி என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை.

இதற்கு அவர் முன்வைக்கும் ஒரே தீர்வு, ‘இந்திய நதிகள் இணைப்பு'. கங்கை - காவிரி இணைப்புத் திட்டம், தென்னக நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவை நீண்ட காலமாக பேசப்பட்டுவரும் திட்டங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந் திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இவற்றைச் செயல்படுத்துவது இயலாத ஒன்றல்ல என்கிறார்கள் பொறியியலாளர்கள். பெரியாறு - வைகை இணைப் பும், காவிரி - வெள்ளாறு - வீராணம் இணைப்பும் இப்போது சாத்தியமாகி இருக்கிறது. இதுபோல் பிரம்மபுத்ரா, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிக ளையும் திருப்பி மற்ற ஆறுகளில் விடுவதுதான் பிரதான நோக்கம். இதில், பிரம்மபுத்ராவின் குறுக்கே சைனா அணை கட்டிக்கொண்டிருக்கிறது. அந்த அணை வேலைகள் முடிந்தால் அந்த நதியில் தண்ணீர் வராது. இப்போது ஒரிஸாவில் வளர்ச்சி இல்லை. பின்னால் அங்கே வளர்ச்சி திட்டங்கள் தொடங்கும் போது அவர்களும் தண்ணீர் தரமாட்டேன் என்பார்கள்.

இன்னொரு பக்கம், நதி நீர் இணைப்பு சாத்தியமற்ற திட்டம் என்கிறார்கள் சூழலியலாளர்கள். நதிகளை திருப்பிவிடுவது இயற்கையின் சுழற்சியின் பல மாற்றங்களை உருவாக்கும். சுற்றுப்புறச்சூழல் சார்ந்தும் மற்றும் பலவிதங் களில் இதன் பக்க விளைவுகள் இருக்கும். புதிய பிரச்னைகள் உருவாக்கும். எனவே, இயற்கையின் சுழற்சிக்குத் தக்க செயல்பட்டு நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் சிறந்தது என்கிறார்கள் அவர்கள். ஆக, நதிகள் இணைப்பு திட்டம் இப்போதைக்கு கானல் நீர்தான்!

இதுவரைக்கும் நாம் பார்த்தது, தமிழகம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்னை யில் மிகப் பரவலாக கவனத்தைப் பெற்றவற்றை மட்டும்தான். சமீபத்தில், ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திடீரென விஸ்வரூபமம் எடுத்தது போல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பல சின்ன சின்ன திட்டங்கள் வெடிக்கக் காத்திருக்கின்றன. கொந்தளிப்பான நேரங்களில் அரசியல்வாதிகளும் சினிமாகாரர்களும் பிரச்னைகளை கையில் எடுத்து மேலும் சிக்கலாக்காமல், விவசாயிகளும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் சூமுகமான தீர்வு நோக்கி நகர முடியும்.

ஒரு மனிதனுக்கு சராசரியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்த டாக்டர் மாலின்சல் கென்மார்க்கின் ஆய்வு உலகம் முழுக்க எல்லா நாடுக ளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிறார்... ‘ஒரு மனிதனின் வளமான வாழ்வுக்கு 1700 – 2000 கனமீட்டர் தண்ணீர் போதுமானது. 1000 கனமீட்டருக்கும் கிழே சென்றால் அங்கு பற்றாக்குறை என அர்த்தம். இதனால் அந்நாட்டில் மோசமான சமூகப் பிரச்னைகள் உதயமாகும் வளர்ச்சி தடைபடும்’ என்கிறார். தமிழகத்தில் நிலத்தடி நீராதாரத்தையும் சேர்ந்து பார்த்தாலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1000 கனமீட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்றுநீர் தடைபட்டால் இது 600 கனமீட்டராகக் குறையும். மிக மோசமான ஒரு அபாயக் கட்டத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது.

எதிர்கால சந்ததியைக் காப்பாற்ற உடனடி தேவை மக்கள் விழிப்புணர்வுதான். வெளிமாநிலங்களில் இருந்து வரும் தண்ணீர் உரிமையைக் கேட்டுப் பெறுவதுடன் ஏரி, குளம் என நமது நீராதாரங்களையும் காப்பாற்ற வேண்டும். அண்டை மாநிலங்களுடன் பேசி தீர்ப்பதைவிட நம்மால் உடனே செய்ய முடிவது ஏரி, குளங்களைக் காப்பாற்றுவதுதான். முக்கியமான பெரிய ஏரிகளை குடியிருப்புகளாக மாற்றுவதை நாம் உடனே நிறுத்த வேண்டும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

(தகவல்கள் உதவி: பொறியாளர்கள் கோமதிநாயகம், குப்புராஜ் மற்றும் தியடோர் பாஸ்கரன்)

30 April 2008

நேர்காணல்

நாஞ்சில் நாடன்
எழுத்தாளனின் அச்சமும் கவலையும்

முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார்! ஆறு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், விவாதங்களை எழுப்பிய பல கட்டுரைகள் என தமிழ் மொழிக்கு செழுமை சேர்த்த தனித்துவமான எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனா இவர் என ஆச்சரியம்.

மாறிவரும் சமூக மதிப்பீடுகள் முன் மனிதர்களும் மண் சார்ந்த உறவுகளும் என்னவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை நுட்பமாகவும் அழகாகவும் எடுத்துரைப்பவை நாஞ்சில்நாடன் படைப்புகள். நகரங்களுக்கு குடிபெயரும் படித்த கிராமத்து இளைஞர்களின் தவிப்பை இவர் அளவுக்கு இயல்பாக பதிவு செய்வதர்கள் யாரும் இல்லை. இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலே தங்கர்பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா, குடி எனப் பல்வேறு விஷயங்கள் குறித்த நாஞ்சில் நாடனுடனான மிக நீண்ட சந்திப்பின் ஒரு பகுதி இங்கே....

"பொங்கல், தமிழர்கள் பண்டிகை. ஆனால், நாம இப்போ தீபாவளியைக் கொண்டாடுவது மாதிரி பொங்கலில் ஆர்வம் காட்டுவதில்லையே?”

“பொங்கல் தமிழர்களுக்கான பண்டிகை எனச் சொல்வதுடன் எனக்கு முரண்பாடு இருக்கு. பொங்கல், விவசாயிகள் பண்டிகை. தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்டவர்கள் விவசாயிகள். விவசாயத்தையும் இயற்கையையும் மதிக்காத ஒரு சமூகம், எப்படி அவர்கள் பண்டிகையை மட்டும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாட முடியும்? தமிழ்நாடு தவிர, எனக்கு தெரிந்து வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் வேறு பெயரில், வேறு வடிவத்தில் இந்தப் பண்டிகை விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. எனவே, பொங்கலை தமிழ்நாட்டுக்கு மட்டுமான ஒரு பண்டிகையாக எடுத்துக்கொள்ள முடியாது.

"திராவிட அரசியலுக்குப் பிறகுதான், தைப் பொங்கலுக்கு தமிழர்கள் பண்டிகை என்ற சாயம் ஏற்றப்பட்டது. சரி, தமிழர்கள் பண்டிகை என்றே வைத்துக்கொள்வோம்; எல்லாத் தமிழர்களும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா என்ன? தமிழினத்தில் இருபத்தைந்து சதவிகிதமான கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை. நகரத்தில் வாழ்பவர்கள், விவசாயம் சம்பந்தப்படாதவர்கள் ஆகியோருக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களைப் பொறுத்தவரை பொங்கல் என்பது டி.வி. நிகழ்ச்சிகளும் புதிய சினிமாக்களும் மட்டும்தானே.

"ஃபேஷன் என்கிற பெயரில் நம் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்பட்டிருக்கு. நம் நிலத்துல வெளைகிற தானியங்களைக் கொண்டே செய்கிற பண்டிகைப் பலகாரங்கள் பல இருக்கு. அரிசி, தேங்காய், சர்க்கரை மூன்றும் இருந்தா சர்க்கரைக் கொழுக்கட்டை; சர்க்கரைக்குப் பதிலா உப்பு சேர்த்தா உப்பு கொழுக்கட்டை. இதுல எதையும் வெளியே இருந்து வெலைக்கு வாங்கலை. இப்படி நூற்றுக் கணக்கானப் பலகாரம் செய்து சாப்பிட்டுருக்காங்க நம்ம தாத்தாவும் பாட்டியும். அறுபது வருஷத்துக்கு முந்தி நாஞ்சில் நாட்டுக்காரன் ஜிலேபி, அல்வா, லட்டுன்னு எதையாவது கண்டிருப்பானா. ஆனால், இன்னைக்கு எந்த ஊரு ஸ்வீட் ஸ்டாலாக இருந்தாலும் அங்கே குறைந்தது இருபத்தைந்து வகையான ஸ்வீட்களைப் பார்க்கலாம். அதில ஒன்னு கூட தமிழ்நாட்டு பலகாராம் கிடையாது. எல்லாமே வடநாட்டில் இருந்து இறக்குமதி ஆனவை. கொஞ்ச நாளைக்கு முன்னால வரைக்கும் சில கடைகள்ல அதிரசம் பார்க்கலாம். இப்போது அதுவும் கிடையாது. நம்ம நாட்டுப் பலகாரங்கள் மறக்கடிக்கப்பட்டு, இந்த ஸ்வீட்கள் எல்லாம் ஏன் நம்மீது திணிக்கப்பட்டிருக்கிறது? கிராமத்து வாசலுக்கு புரோட்டா கடை வந்தாச்சி. கிராமத்து மனுஷனுக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட வேண்டிய அளவுக்கு என்ன நெருக்கடி வந்தது? இதெல்லாம்தான் நாகரிகம், வளர்ச்சின்னு பேன்ஸியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இவை நமக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது? இந்த மாற்றங்கள் ஆரோக்கியமான மாற்றங்கள் இல்லை.”

"சுதந்திரத்துக்குப் பிறகு, கடந்த அறுபது வருஷத்துல எமர்ஜென்ஸி உட்பட எவ்வளவோ பெரிய அரசியல் மாற்றங்களை தமிழ்நாடு சந்திச்சிருக்கு. ஆனால், இதற்கான எதிர்வினை, பதிவுகள்ங்கிறது நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவு. நவீன இலக்கியப் படைப்பாளிகளில் பலர் அரசியல், சமூக பிரச்னைகளைப் பற்றி கருத்து சொல்வது மிகக் குறைவு. ஏன் படைப்பாளிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புறாங்க?”

"உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்? ஓவியன், சிற்பி, இசைக் கலைஞன் எல்லோரையும்விட கூடுதல் சமூகப் பொறுப்பும் அக்கறையும் உள்ளவன் எழுத்தாளன்.

"தேனியில இருந்து ஆண்டிப்பட்டி வழியா மதுரைக்கு வர்ற வழியில இருந்த ஒரு மலையை இப்போ காணோம். கிரானைட்டா எக்ஸ்போர்ட் ஆயிடுச்சு. அந்நியச் செலாவணி, தேசிய வருமானம்னு வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொந்தமான, நிரந்தரமான ஒரு இயற்கைச் செல்வத்தை இல்லாம ஆக்குவதற்கான உரிமையை உனக்கு யார் தந்தான்னு அவர்களை எழுத்தாளன் கேட்க வேண்டாமா?

"முப்பது வருஷத்துக்கு முன்னாடி திருவனந்தபுரம் கோவளம் பீச்சுக்குப் போனா, எல்லாப் பகுதிக்கும் என்னால போயிட்டு வரமுடியும். அதன் அழகை ரசிக்கலாம்; உட்கார்ந்து இளைப்பாறலாம். ஒரு சாதாரண குடிமகனா என் இந்த உரிமை, இப்போது பறிக்கப்பட்டு பத்து சதமானம் மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. என் பாக்கெட்டுல பத்தாயிரம் ரூபாயும் ஸ்டார் ஹோட்டல்ல அறையும் போட்டிருந்தா மட்டும்தான் இப்போ அந்தக் கடலை நான் ரசிக்க முடியும். நான் ஒன்னும் அந்த இடத்தை வெட்டி வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடப் போவதில்லையே. ஒரு அரை மணி நேரம் அந்த இடத்தைப் பார்ப்பதற்கான உரிமை சாதரண குடிமகனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் மறுக்கப்படுகிறது. ஒரு பொதுச்சொத்தை செல்வந்தர்கள் கூறுபோட்டிருக்கிறார்கள். என் நாட்டின் இயற்கையில் எனக்குப் பங்கு இல்லையான்னு ஒரு எழுத்தாளன் கொதிச்சு எழுந்திருக்க வேண்டாமா?

"ஒரு நாள்ல, ஒவ்வொரு டிராபிக்கிலயும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு? என்னுடைய அரை மணிநேரம், உங்கள் அரை மணி நேரம், இன்னும் லட்சக்கணக்கான மக்களின் அரை மணி நேரங்கள் பாழாய்ப் போயிட்டு இருக்கு. எவ்வளவு சத்தம், எவ்வளவு தூசி? இதுக்கெல்லாம் யார் பொறுப்புங்கிற கேள்வி ஒரு எழுத்தாளனுக்கு வரணும் இல்லையா? வரும்; ஆனால், அதை எழுத்துல வெளிப்படுத்தப் பயப்படுகிறான்.

"நான் எழுத்தாளனை நேரடி அரசியல்ல ஈடுபடுன்னு சொல்லலை. இந்த சமூகத்துக்கு நீ கடமைப்பட்டவனா, இல்லையான்னுதான் கேட்கிறேன். இப்படி உங்களையும் உங்க சமூகத்தையும் பாதிக்கிற, உங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கண்டுக்காம எப்படி எழுத முடியும்? படைப்புகளின் அர்த்தம் என்ன? சமூக ரீதியாகவும் மத ரிதியாகவும் வர்க்க ரீதியாகவும் எந்த வகையில் அநியாயம் நடந்தாலும் அதைச் சொல்றதுதானே படைப்பு. வங்காளம், மகாராஸ்டிரா, கேரளா மாநில எழுத்தாளர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பு தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கான்னு கேட்டால் இல்லைன்னுதான் சொல்வேன்.

"இன்னொரு பக்கம், எதுக்கு அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவங்களைப் பகைச்சிக்கனும்? நாளைக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கும்ங்கிற ஒரு எதிர்பார்ப்பு இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகி இருக்கு. எனக்கோ, என் முந்தின தலைமுறை எழுத்தாளர்களுக்கோ இல்லாத எதிர்பார்ப்பு இது. முப்பது வருஷத்துக்கு முன்னாடி... முப்படைகளுக்கான ஒரு நிகிழ்ச்சி. அதில், அல்லா ரக்கா தபேலா, பிஸ்மில்லாகான் ஷெனாய் கச்சேரி. பிஸ்மில்லாகான் வாசித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது, முன்றாவது தளங்களில் இருந்து ஒரு சலசலப்பு. பிஸ்மில்லா கான், ‘’சுப்ரகோம்‘ (‘அமைதியாக இருங்கள்) என்று இரண்டு முறைக் கேட்டுக்கொள்கிறார். சலசலப்புக் குறையவில்லை. மூன்றாவது முறை, ஷெனாயைத் தூக்கி பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்து போய்விட்டார். அல்லா ரக்கா, தபேலாவை மூடுகிறார். இந்திய அரசின் மூப்படை தளபதிகளும், மகாராஸ்டிரா கவர்னரும் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிற ஒரு அரங்கத்தில் அவர்களை நிராகரித்துவிட்டு செல்கிற ஒரு கர்வம் அந்தக் கலைஞர்களுக்கு இருந்தது. ‘’நீ யாரா இருந்தால் எனக்கென்ன; என்கிட்ட இருப்பது சரஸ்வதி; வித்தை, அதுக்கு முன்னால நீ பணிந்துதான் ஆகணும்‘’ என்கிறார் பிஸ்மில்லாகான். அமெரிக்காவுக்கு வந்து செட்டிலாகிருங்கன்னு பிஸ்மில்லாகானைக் கூப்பிடுறாங்க. அங்கே விஸ்வநாதர் ஆலயமும், கங்கா நதியும் இருக்கான்னு கேட்கிறார், அவர்.

"நம் மரபிலும் கலைஞர்களுக்கு இந்த செம்மாந்த நிலை இருந்திருக்கிறது. கிழிந்த துணியை உடுத்திக்கொன்டு, அரசனுக்கு முன்னாடி, ‘வளநாடும் உனதோ, மன்னவனும் நியோ; உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்‘’ என்கிறான் கம்பன். அரசன் நினைச்சா ‘லக்கலக்க’ன்னு கம்பன் தலையை சீவி இருக்க முடியுமே. அரசன் செய்யலை; சதாரண கிழிஞ்ச துணி உடுத்தியக் கம்பனைக் கண்டு அவன் பயந்திருக்கிறான். இப்போதுள்ள கவிஞர்கள், ‘’நீ எழுதுவதுதான் தமிழ். உன் முன்னாடி பேனா எடுக்கவே எனக்குக் கூசுது” என்கிறார்கள். இப்படி எதிர்பார்ப்போடு இருக்கிறவன் எப்படி கலைஞன்ங்கிற கர்வத்தோட அநியாயத்தை எதிர்க்க முடியும்? பிஸ்மில்லாகானுக்கும், அல்லா ரக்காவுக்கும், கம்பனுக்கும், ஜெயகாந்தனுக்கும் இருந்த கர்வம் இல்லைன்னா இலக்கியத்துல எதுவுமே செய்ய முடியாது.

"சரி, அவ்வளவு கர்வமா இருக்கும்படியா தமிழ் சமூகம் எழுத்தாளனை வெச்சிருக்கா என்றால் தயக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆக, தமிழ் எழுத்தாளனின் பயத்துக்கு நியாயம் இருக்குங்கிறதை மறுக்க முடியாது. இந்த சமூகத்தில் எழுத்தாளனுக்கு என்ன மரியாதை இருக்கு? சினிமாவுக்குப் பாட்டு எழுதுகிறவங்களும், அரசியலிலும் அதிகாரத்திலும் பெரிய பதவிகளில் இருப்பவங்களும்தானே இங்கே உலக மகா கவிஞர்கள். ஒரு தேசிய ஆங்கிலப் பத்திரிகையில் லா.ச.ராமாமிருதம் பற்றிய ஒரு கட்டுரைல, அவர் படத்துக்குப் பதிலா லா.சு.ரங்கநாதன் படத்தைப் போட்டுருக்காங்க. பத்திரிகை ஆசிரியருக்கே லா.ச.ராமிருதம் யாருன்னு தெரியலை. இந்த லட்சணத்துல வாசகர்களுக்கு எப்படி லா.ச.ரா.வைத் தெரியும்? ஹங்கேரியில் பிரேக் ஏர்போர்ட்ல இறங்கி வெளியே வந்ததும், பெரிய விளம்பரப் பலகை ஒன்னு நம்மை வரவேற்கிறது. ‘நீங்கள் மொசார்ட்டும் காஃப்காவும் பிறந்த ஊருக்கு வருகை தருகிறீர்கள்’ என்றிருக்கு அதுல. சென்னையில அதுமாதிரி ஒரு போர்ட வச்சா, என்ன எழுதுவாங்கங்கிறதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நியாயமா ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மரியாதை எல்லாவற்றையும் இங்கே யாரோ பறிச்சுகிட்டுப் போறாங்க. கேரளாவிலோ, கர்நாடகத்திலோ மகாராஸ்டிராவிலோ இது நடக்குமா? ஒரு கொத்து வேலை, தச்சு வேலை செய்கிறவனுக்குக் கிடைக்கிற கூலிகூட, ஒரு சிறுகதைக்குப் செலவழித்த உழைப்புக்காக எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை. மனைவி, குழந்தைகளுக்கான எவ்வளவு நேரத்தை செலவழித்து அந்தக் கதையை அவன் எழுதியிருப்பான். மாதம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பான்.

"ஒரு எழுத்தாளன் எதிர்மறையான கருத்தைச் சொன்னா, அவன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கு. ஒரு டிவிஎஸ் 50-ல வந்துகூட அவனை இடிச்சு கொன்னுட முடியும். அந்த அளவுக்கு பலமில்லாத தனி ஆள் அவன். வெளியில உள்ள ஆபத்துகளைவிட இலக்கியத்துக்குள்ளேயே இருக்கும் ஆபத்து இன்னும் மோசம். பெண்ணியத்துக்கும் தலித்தியத்துக்கும் பொதுவுடமை தத்துவத்துக்கும் ஆதரவா எழுதுவது சுலபம். முற்போக்கானவனா உங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். ஆனால், இவற்றை விமர்சனம் பண்ணி எழுதுவது சிரமம். மீறி எழுதினா பயங்கரமான எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த எதிர்ப்புகளை தன்னால சந்திக்க முடியுமா என்ற அச்சம் எழுத்தாளனுக்கு இருக்கு. ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எழுதியதுக்காக ஒரு பகுதியினரால் இன்றும் ஜெயமோகன் காழ்ப்புடன் பார்க்கப்படுகிறார். ஏன் ஒரு படைப்பாளி, ஒரு அரசியல் கட்சியை விமர்சித்து எழுதக்கூடாது? இதனாலதான் யாரையும் காயப்படுத்தாம, புண்படுத்தாம, நிரந்தரமான ஒரு வேலை, குடும்பம்னு சர்வ நிச்சயங்களோட வாழ்ந்துட்டு போயிருவோம்னு படைப்பாளி நினைக்கிறான்.

"அச்சமும் கவலையும் உள்ள எழுத்து தன் ஜீவனையும் ஆற்றலையும் இழந்துவிடுகிறது. எழுத்தாளன், தான் சரின்னு நினைப்பதை சொல்ல முதல்ல இந்த சமூகம் அவனை மதிக்கனும்.”

"ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சின்னு நவீன இலக்கியவாதிகள் அரசியலுக்கு வருகிறாங்களே?”

"படைப்பாளிகள் அரசியலுக்கு வர்றது நல்லதுதான். நடைமுறை அரசியல்வாதிகளைவிட நடைமுறை சமூகப் பிரச்னையை இவங்க அதிகம் உணர்ந்திருப்பாங்கதான. ஆனால், படைப்பாளியா எந்தளவுக்கு சமூகப் பொறுப்புணர்வோடு இருந்தாங்களோ, அப்படியே அரசியல்லயும் இருக்காங்களா என்பதுதான் முக்கியம். இருந்தாதான் அவர்கள் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கு. இப்போதான் இவங்க எல்லோரும் வந்திருக்காங்க. எனவே, பொறுத்திருந்து பார்த்துதான் இவங்களை மதிப்பீடு செய்யமுடியும்.”

"சினிமாவில் சிகரெட் காட்சிகளைத் தடைசெய்யணும்‘னு அன்புமணி ராமதாஸ் சொல்லி வருகிறார். விஜய், ‘என் படங்களில் இனிமே சிகரெட் காட்சிகள் இடம்பெறாது’ன்னு சொல்கிறார். இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாதா?”

"சினிமாவில் சிகரெட் குடிக்கலாமா, கூடாதா என்பதை கதையும் காட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். புகை பிடிப்பது தவறு, அதைத் தடுக்கனும்னா, சினிமாவில சிகரெட் காட்சிகளை இல்லாமல் செய்து, சிகரெட் பாக்கெட்டுல சின்னதா ‘சிகரெட் உடல்நலத்துக்கு தீங்கானது’ன்னு குறிப்பிட்டா மட்டும் போதுமா? புகையிலைப் பயிர்செய்வதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரணும். சிகரெட் கம்பெனிகளின் லைசன்ஸைக் கேன்சல் செய்யனும். ஆனா, அதைச் செய்யமாட்டாங்க. ஏன்னா, அதன் மூலம் வரும் வருமானத்தை இழக்க இவங்கத் தயாரா இல்லை. அரசு மதுபானக் கடைகளால் மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. அதை வாங்கி பாக்கெட்டுல போட்டுட்டு, ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு யாருக்கு இவங்க போதிக்கிறாங்க.

"கள், நம்ம ஊர் சரக்கு; உணவும் மருந்தும் சேர்ந்த இயற்கையான போதைப் பொருள். ஆனா, அதைத் தவறுன்னு தடை பண்ணியிருக்காங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மாநிலங்கள்லயும் கள் இறக்கலாம், குடிக்கலாம். அந்த மாநிலங்கள்ல சரியா இருக்கிற ஒரு விஷயம் நம்ம மாநிலத்துல மட்டும் எப்படி தப்பா போச்சி? கள் இறக்க அனுமதிச்சா ஏழாயிரம் கோடி வருமானம் பாதியாக ஆயிரும். கள் இறக்கினா ஒரு சமூகமே வாழும். 150 ரூபாய்க்குக் குடிக்கிறவன், 50 ரூபாயில் திருப்தியா குடிச்சிட்டு மிச்ச 100 ரூபாயை வீட்டுல கொண்டு போய் கொடுப்பான். அந்த 100 ரூபாயை அவனிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கத்தான் கள்ளைத் தடை செய்து, ஐ.எம்.எஃப் சரக்குகளை அரசாங்கமே விற்குது.

"சரி, ஏழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வருமானம் தருகிறவங்கன்னு குடிமகன்களை இந்த அரசாங்கம் மரியாதையா நடத்துதான்னா அதுவும் இல்லை. மூன்று ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் போது கிடைக்கிற மரியாதை டாஸ்மாக் பார்களில் கிடைப்பதில்லை. டீ கடையில், போன உடனே ‘வாங்க’ங்கிறான்; டேபிளைத் துடைக்கிறான்; தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறான்; லைட், ஸ்ட்ராங், சுகர் கம்மி, சூடு குறைவான்னு நாம சொல்றதுக்கு தக்கபடி போட்டு தர்றாங்க. ஆனா அரசாங்கம் நடத்துற டாஸ்மாக் பார்ல... உலகத்துல உள்ள மொத்த சாக்கடை ஈக்களும் அங்கதான் இருக்கு. டேபிளைத் துடைப்பதேயில்ல; குடிச்சி போட்ட பாட்டில் அங்கேயே கிடக்கும். எலி, பெருச்சாளி, குப்பைக்கு குறைவே கிடையாது. கொசுக் கடி இருக்க முடியாது. பாட்டில், சைடு டிஸ் சேர்த்து இவன் கொடுக்கிற தொன்னூறு ரூபாய்க்கு அரசாங்கம் தருகிற பரிசு இவ்வளவு துன்பங்களும். வேற எந்தத் தொழில்லயாவது வாடிக்கையாளனை இவ்வளவு கேவலமா நடத்த முடியுமா? மூன்று ரூபாய் மதிப்புள்ள சைடு டிஸை பத்து ரூபாய்க்கு விற்கிறான்; ஏழு பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்பு ஒரு ரூபாய். தண்ணீர் இலவசம் கிடையாது. ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு பிரசாரம் செய்கிற அரசாங்கமேதான் இந்த கொள்ளைகளை கண்டுக்காம அனுமதிக்குது. கொத்து வேலைக்காரன், பஸ் கண்டக்டர், சாதாரணக் கூலித் தொழிலாளி போன்றவங்கதான் இங்க குடிக்க வர்றாங்க. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசுகிற சோசலிஷ அரசாங்கம் தன் குடிமக்களையே பன்றியைவிடக் கேவலமா நடத்துகிறதை டாஸ்மாக் பார்ல பார்க்கலாம்.

"எப்படி இத்தனைக் கொடுமைகளையும் குடிமகன்கள் பொறுத்துகிறாங்க? குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும்? குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி? குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார்? அரசாங்கம்தானே. இந்த முரண்பாடு உண்மையிலேயே எனக்குப் புரியமாட்டேங்குது.”

"ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால், நீங்க வருவீங்களா?”

"சினிமாவுக்கு எழுதுகிற எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க; என் மிது மரியாதை வெச்சிருக்காங்க. நானும் அவங்க மேல மரியாதை வெச்சிருக்கேன். எனக்குத் தெரிந்து பிரமாதமான எழுத்தாளனாக வந்திருக்கக்கூடிய அனேகம் பேர் உதவி இயக்குநர்களாக சினிமாவில் இருக்காங்க.

"பல இயக்குநர்கள், அவர்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்னு என்னைச் சொல்றாங்க; சந்தோஷம். ஆனால், அப்படிச் சொல்கிற பெரும்பாலான சினிமாக்காரங்க, தொடர்ந்து என் படைப்புகளில் இருந்து திருடுறாங்க என்பதுதான் வருத்தத்துக்குறிய விஷயம். ஊர்ல சொல்வாங்க... பிள்ளையில்லாதவன் சொத்துன்னு. நம்மூர் சினிமாக்காரங்களுக்கு தமிழ் நாவல்களும் சிறுகதைகளும் பிள்ளையில்லாதவன் சொத்து மாதிரி. வேண்டியதை, வேணும்கிற போது எடுத்துக்கிறாங்க. அந்தப் படைப்புக்கு சொந்தக்காரனிடம் அனுமதி பெறவேண்டும்; உரிய அங்கீகாரம் கொடுக்கனும்; அதற்கான விலையைக் கொடுக்கனும்னு எதுவுமே கிடையாது. கி.ராஜநாராயணனுக்குப் பிறகு தமிழ் சினிமாக்காரங்களால அதிகம் கொள்ளையடிக்கப்பட்ட எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.

"என் படைப்புகளில் வேண்டியதை அவங்க எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு காட்சியை எடுத்துக்கொண்டால்கூட அதற்கான அங்கீகராத்தையும் ஊதியத்தையும் எனக்குத் தரணும் என்றுதான் நான் கேட்கிறேன். ஒரு காட்சியில் தலையைக் காட்டிக்கிட்டுப் போறவனுக்கு கூட சம்பளம் கொடுத்தாகனும். ஒரு பாட்டு காசுகொடுக்காம வாங்க முடியுமா? ஆனால், அந்தக் காட்சியை எழுதினவனுக்கு அது அவனுக்கு சொந்தம்கிற அங்கீகாரம்கூட இல்லை. நண்பர், தெரிந்தவர், மரியாதைக்குறிய எழுத்தாளர் என்று சொல்லிகிட்டு இப்படி புறவாசல் வழியா எடுத்துக்கொண்டு போவது திருட்டு இல்லாமல் வேற என்ன? கடந்த இருபது வருஷமா இந்தத் திருட்டை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதுக்கான அரசியல், பொருளாதார பின்புலம் எனக்குக் கிடையாது. நானோ அன்றாடம் காய்ச்சி. என் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல்தான் ‘சொல்ல மறந்த கதை’ சினிமாவாக வந்தது. ‘அக்ரிமெண்ட்’ போட்டு, முறையா உரிமையை வாங்கிதான் தங்கர்பச்சான் செய்தார். படம் வந்தபோது, ‘இது நாஞ்சில் நாடனின் நாவலைத் தழுவியது’ என ஆரம்பத்துல கார்ட் போட்டிருந்தார். தியேட்டரில் நானே பார்த்தேன். ஆனால், பிறகு டி.வி.யில் இதுவரை ஐந்துமுறை அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். ஆரம்பத்துல இருந்த அந்தக் கார்டைக் காணோம். இப்பவும் என் ஆத்மார்த்தமான நண்பர்தான் தங்கர்பச்சான். ஏன் எனக்கு இதைச் செய்தார்? எனக்கு நியாயமாகச் சேரவேண்டிய அங்கீகாரத்தை எப்படி ஒரு சக படைப்பாளியே மறுக்கலாம். இது எவ்வளவு நாணயக் குறைவானக் காரியம். எத்தனைக் கோடி செலவழித்துப் படம் எடுக்குறாங்க. எழுத்தாளனுக்கு உரிய பணத்தையும் அங்கீகாரமும் ஏன் கொடுக்க மாட்டேங்கிறீங்க?

"என் சிறுகதைத் தொகுப்பு புதிதாக வந்தால், குறைந்தது நூறு பிரதிகளாவது உதவி இயக்குநர்கள் வாங்குவாங்க. வாசிக்கிறப்ப கிடைக்கிற இலக்கிய அனுபவத்துக்காக அவங்க வாங்கலை. பழையது எல்லாவற்றையும் திருடியாச்சு, புதிசா என்ன திருடலாம் எனப் பார்க்குறாங்க. இதிலிருந்து எந்தக் காட்சியைச் சுடலாம், எந்த ஐடியாவை எடுத்துக் கொள்ளலாம் என்ற மோசடி உத்தியோடுதான் படிக்கிறாங்க. இந்த அடிப்படை நேர்மை, நாணயம் இல்லாத ஒருவர் எப்படி கலைஞனாக இருக்க முடியும்? எப்படி ஒரு நல்லக் கலைப் படைப்பை அவனால் சமூகத்துக்கு தந்துவிட முடியும்? சினிமாக்காரங்ககூட பேசிக்கொண்டிருக்கவே எனக்கு பயமாக இருக்கு. நாம பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பு எடுத்துக்கிறாங்க. அடுத்த சினிமாவில் அது காட்சியா வந்துவிடும்.

"ஒருத்தன் எனக்குப் போன் பண்ணுகிறான்... ‘’நான் இன்னார் இயக்குநரின் இன்னார் அஸிட்டென்ட் பேசுகிறேன். வெள்ளாளச் சமூகத்தில் தாலி அறுத்தா என்ன சடங்கு செய்வாங்க?’. கன்சல்டன்ஸிக்காக கூப்பிடுகிறான். ஒரு பல் டாக்டருக்கு போன் பண்ணி, ‘’எனக்கு பல் வலி. என்ன மாத்திரை சாப்பிடனு”ம்னு கேட்க முடியுமா? ‘’சொத்துல சின்ன பிரச்னை இருக்கு. என்ன பண்ணலாம்‘’னு வக்கிலுக்கு போன் பண்ண முடியுமா? அதற்கு கூலி கொடுக்கனும். ஆனால், எழுத்தாளனிடம் மட்டும் இலவசமா கவுன்சிலிங் செய்யலாம். வெள்ளாளச் சமூகத்தின் சடங்குகள் பற்றி என் புத்தகத்துல நிறைய இருக்கு. அதைத் தேடிப் படிக்கக்கூட அவனுக்கு நேரம் இல்லை. ஆனால், நான் எந்த ஊர்ல, என்ன வேலையில இருப்பனோங்கிறதைப் பத்தி கவலையே படாம போன் பண்ணுகிறான். இப்படிப்பட்டவங்க எந்த சமூக அநீதிக்கு எதிராப் போராட முடியும்? எந்தக் கலையை நிறுவிற முடியும்? அரசியல்வாதிகளைக் குறை சொல்ல இவங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? அரசியல்வாதிகளைவிட எந்தவகையில் இவங்க மேலானவங்க. இன்றைக்குக் காலையில் பேப்பரில் படித்தேன்... ஒரு இயக்குநர் திருட்டு விசிடி விற்பதைப் பிடித்திருக்கிறார். ஏன்யா, உன் படத்தின் விசிடி விற்றா அது திருட்டு; என் கதையில் இருந்து இரண்டு காட்சியை உருவினா அது திருட்டு இல்லையா? நீ செய்கிற அதே செயலைத்தானே அவனும் செய்கிறான். நான் தொழில்துறையில் இருந்தவன். ஏழு முதல் எட்டு சதவிகிதம் லாபம்தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், இவங்க வட்டி மட்டுமே பதினைந்து சதவிகிதம் கொடுக்கிறாங்க. என்றால், எவ்வளவு லாபம் எதிர்பார்க்கிறாங்கன்னு கணக்கிடுங்க.”

"ஆரம்பத்துல இருந்தே நாஞ்சில் வட்டார மொழி எழுத்தாளரா அடையாளம் காணப்படுறீங்க. தொடக்க காலங்களில், வட்டார மொழிகளில் எழுதுவதை தமிழின் தனித்தன்மை சிதைத்துவிடும் என்று தமிழறிஞர்கள் விமர்சித்தார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?”

"அறிஞர்ங்கிறவன் யாரு? எழுதப்பட்டவைகளைத் தொகுத்து தன் அறிவைப் பெருக்கிக் கொண்டவன். ஆனால், கலைஞன் தன் அனுபவத்தின் மூலமாக வாழ்வில் இருந்து பெறுகிறவன். எனவே, அறிஞன் மாதிரி கலைஞனால் வாழ்வைப் பார்க்க முடியாது. அறிஞர்களின் முக்கியத்துவத்தை நான் மறுக்கலை. இப்படி மொழியை தண்ணீரிலும் அமிலத்திலும் போட்டுக் கழுவி, அவிச்சி சுத்தம் பண்ணி, பொதுத்தமிழ்ல எழுதனும்னு சொல்கிற அறிஞர்களுக்கு ஒரு அரசியல் இருக்கு. தமிழை செம்மொழி ஆக்க தோள் கொடுக்கிறவங்க நாங்கதான்னு மார்தட்டிக்கிறாங்க இவங்க. ஆனால், உண்மை நிலவரம் என்ன? தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களும் அறியாத ஆயிரக்கணக்கான சொற்கள் நம் வட்டார மொழிகள்ல இன்னும் இருக்கு. இந்தச் சொற்களைப் பாதுகாத்து, பதிவு பண்றது வட்டார மொழி எழுத்துகள்தான். மொழிங்கிறது ஒரு வாழ்க்கை. தஞ்சை, செம்புலம், நாஞ்சில்னு ஒவ்வொரு புலத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை அந்த வட்டார மொழியிலதான் சொல்லமுடியும்.

"எங்கள் ஊர்ல ‘இளநீர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ‘கருக்கு’ன்னுதான் சொல்லுவோம். பனைமர மட்டை ஓரங்களில் கருப்பா ஒரு பகுதி இருக்கும். அதை வச்சி எதையும் வெட்டலாம். அதையும் கருக்குன்னுதான் சொல்லுவோம். மேலும், கருக்கு அருவான்னே ஒரு அருவா இருக்கு. எங்கே, எந்த இடத்துல சொல்றேங்கிறதை வச்சி வாசகர்கள் அதை புரிஞ்சிக்கிறாங்க. அப்புறம் ஏன் நான் உன்னுடைய வசதிக்காக, சௌகரியத்துக்காக என்னுடைய சொல்லை மாத்திக்கனும். மொழியை சுத்தம் பண்ணி எழுதினா, அதனுடைய உயிர்த் தன்மை செத்துப் போயிடும். அதன்பிறகு, மறைமலையடிகளும் மு.வ.வும் எழுதின தமிழைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

"ஒவ்வொரு படைப்பாளியும், காலத்தால் அழிந்துவிடச் சாத்தியமுள்ள ஆயிரக்கணக்கான சொற்களைப் புடிச்சி வைச்சிருக்கான். இப்படி, படைப்பாளிதான் தமிழை செம்மொழி ஆக்குகிறான்; அறிஞர்களோ, பேராசிரியர்களோ ஆக்கலை. அறிஞர்கள், சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் மட்டுமே திரும்பத், திரும்ப ஆராய்ச்சிப் பண்ணி தமிழை செம்மொழி ஆக்கமுடியாது. சமகால இலக்கியத்துல என்ன நடக்குன்னு பார்க்கனும்.”

"இது அவசர யுகம். பரபரப்பா இருந்தால்தான் சம்பாதித்து வாழ முடியும்கிற நிலை. இதில் ஒருவர் ஏன் இலக்கியம் படிக்கனும்?”

"புத்தகம் படித்தும் இசை கேட்டும் ரிலாக்ஸாகப் பழகிக் கொள்ளாத ஒரு சமூகம், நாற்பது வயசுல சைக்கியாட்ரிஸ்ட் அல்லது ஆன்மிகவாதிகள்கிட்டேதான் போகனும். எதிர்காலத்துல இந்தியாவில் சைக்கியாட்ரிஸ்டுக்கு அமோகமான பிஸினஸ் இருக்கு.”

சந்திப்பு: தளவாய் சுந்தரம்
படங்கள்: சித்ரம் மத்தியாஸ்

(ஆனந்த விகடன் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. இதன் சுருக்கமான வடிவம் ஆனந்த விகடன் இதழிலும் கொஞ்சம் விரிவான பகுதி விகடன் இணையதளத்திலும் வெளியானது)

04 September 2007

நேர்காணல்

லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்

''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்"

2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்டிருந்த ஒரு பிற்பகலில், அம்பத்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் லா.ச.ராமாமிருதத்தின் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டதும், சாலையைப் பார்த்து திறந்திருந்த அவருடைய அறைக்கு அழைத்து சென்றார். பார்ப்பதற்கு குழந்தைமைக்குத் திரும்பிவிட்ட வயதானவர்களைப் போல் இருந்தார் லா.ச.ரா. கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போது, ஞாபக அடுக்கிலிருந்து மேலெலும்பி வரும் நினைவுகள், ஒன்றையொன்று முட்டி மோத, உணர்ச்சி தழும்பலில் திளைத்து, குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டே, தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் போல் புன்முறுவல் செய்கிறார். சில நேரங்களில் அழுதுவிடுகிறார். குரல் உடைகிறது. ஆனால் உற்சாகமாக இருக்கிறார். ''எழுதவேண்டும் என்னும் ஆர்வம் தனியாமல் இருக்கிறது. உடல்தான் ஒத்துழைப்பதில்லை'' என்றார் எங்களிடம். எனவே, அவர் சொல்லச்சொல்ல மகன் சப்தரிஷி எழுதிக் கொடுக்கிறார். லா.ச.ராமாமிருதத்துக்கு வாழ்க்கை இன்னும் கசக்கவில்லை என்பதுதான் விஷேசம். எவர் பேரிலும், எதன் பேரிலும் வருத்தங்களும் குற்றச்சாட்டுகளும் அவருக்கு இல்லை. லா.ச.ரா.வின் மருமகள் தந்த காப்பியை ''முதலில் குடியுங்கள்" என்றுவிட்டு அவருக்குள் ஆழ்ந்தார்.

'புதர்', 'அபிதா', 'கல் சிரிக்கிறது', 'பிராயச்சித்தம்', 'கழுகு' ஆகியவை லா.ச.ரா.வின் முக்கியமான நாவல்கள். 'பாற்கடல்', 'சிந்தாநதி' ஆகிய இரண்டு வாழ்க்கை வரலாற்று நூலையும், 'முற்றுப்பெறாத தேடல்', 'உண்மையான தரிசனம்' ஆகிய இரண்டு கட்டுரைத் தொகுதிகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் லா.ச.ராமாமிருதம் எழுதியுள்ளார். காப்பி குடித்து முடிந்தும், ''டேப் ரிக்கார்டரை ஆன் செய்யுங்கள்'' என்றுவிட்டு, அறைக்கு வெளியேப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினார்.

''முதலில் இந்த 'டேப் ரிக்கார்டரு'க்காக, நான், உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு, பேட்டி என்றாலும் என் பாஷையிலேயே வரவேண்டும். குறித்துக் கொண்டு போய், நான் சொல்லாதவற்றை எல்லாம் எழுதி, நான் சொன்ன சிலவற்றை விடவும் வேறு செய்துவிட்டு, அது ரொம்ப ஆபத்தான சமாச்சாரம். அது மாதிரி அனேக நேரங்களில் நேர்ந்துவிடுகிறது. நாசம் செய்து விடுகிறார்கள். அதன்பிறகு பேட்டிகளே கொடுக்கக்கூடாது என்றிருப்பேன். அப்படி எல்லோரிடமும் நான் சொல்லிவிட முடியுமா? நான் சாதாரண ஆள்; பெரிய இடங்களை எல்லாம் பகைத்துக் கொள்ள முடியாதய்யா!

"அப்புறம் முன்னெச்சரிக்கையாக நான் சில விசயங்களை சொல்லி விடுகிறேன். எப்போதும், இது போன்ற பேட்டிகளின் போது, வழக்கமாக கேட்கிற கேள்விகளை, நீங்கள் என்னிடமும் கேட்பதில் பிரயோசனம் இல்லை. எனக்கு இப்போது என்பத்தாறு வயதாகிறது. கடந்த என்பத்தைந்து வருடங்களில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். எனவே, என் வயதுக்கான முதிர்ச்சியில், இப்போது என் மனதில் இருக்கிற விஷயங்களைப் பற்றிதான், நான் பேசவேண்டும் என்று விரும்புகிறேன். கொஞ்சம் அரூபமான சிந்தனைகளாக அவை இருக்கலாம்; நம்பிக்கைகள் சிதறிப் போய் இருக்கலாம். மேலும், சில புதியதாக வந்த நம்பிக்கைகள். நான் இப்போது தெரிந்து கொள்ள வேண்டியது உங்கள் பத்திரிகை இவற்றைத் தாங்குமா?"

''தாங்கும்."

''வெரிகுட். எனக்கு இந்த பேட்டிகளில் எல்லாம் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. எனக்கு எல்லாம் ஆகிவிட்டது. கிடைக்க வேண்டிய பாராட்டுகள், அங்கீகாரம், பரிசுகள் எல்லாம் கிடைத்து விட்டன. இனிமேலும் எனக்கு என்ன ஆகவேண்டும்? அதற்காக நான் உங்களை மதிக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் உங்கள் காரியமாக என்னிடம் வருகிறீர்கள்; நான் என் காரியமாக உங்களிடம் பேசுகிறேன்; அவ்வளவுதான். இனி நீங்கள் கேட்க வேண்டியவற்றைக் கேளுங்கள்."

"முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள். எப்படி இருக்கிறீர்கள்?"

"எனக்கு இப்போது என்பத்தாறாவது வயது நடக்கிறது. இந்த வயதுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். புத்தி இன்னும் ஸ்தம்பித்துப் போய் விடவில்லை. நன்றாகத்தான் இருக்கிறது. நான் மொத்தமாக முப்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இப்போதும்கூட தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன். எனது பதிப்பாளர், வானதி திருநாவுக்கரசு, ரொம்ப ஆச்சர்யப்பட்டு போய்விட்டார். இந்த வருடம் என்னுடைய மூன்று புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.

"என் ஊர் லால்குடி. ராமேஸ்வரம் போய் தவம் இருந்து பிறந்தவன் நான். என் அம்மா, எனக்காக, இடது கையால் சாப்பிட்டிருக்கிறாள். நான், எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படித்திருக்கிறேன். மெட்ராஸில்தான் படித்தேன். 1937-ம் ஆண்டு நான் எழுத ஆரம்பித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வசதிக்காகத்தான் இந்த வருடத்தைச் சொல்லுகிறேன். மற்றபடி நான் இருபது வயதிலிருந்து எழுதி வருகிறேன் என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், அதற்கு முன்பே எழுத ஆரம்பித்தாகி விட்டது. பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டேன் என்று ஞாபகம். அதற்காக ஒவ்வொரு சமயத்திலும், அப்போதைக்கு ஞாபகத்திலிருக்கும் படி, ஒவ்வொரு வருடத்தையும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாதில்லையா? உண்மையில் பார்க்கப் போனால், இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் தள்ளிப் போய்தான் பார்க்க வேண்டும். அவ்வளவு தூரத்து சமாசாரம் அவைகள். இந்த அறுபத்தைந்து வருடத்தில் இருநூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாறுகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இவைகள்தான் என் மொத்தப் படைப்புகள். என் புத்தகங்கள் நன்றாக விற்கின்றனவா, இல்லையா என்பது பற்றிக்கூட எனக்கு அக்கறை கிடையாது.

"என்னுடைய படைப்புகளில் அனேகம், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பாகிச் சென்றிருக்கின்றன. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகி இருக்கின்றன. 'புற்று' கதையைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்த போது, எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இப்போது, 'கதா' நிறுவனத்தார் என்னுடைய நாவல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேர்வு செய்துள்ளார்கள். அந்த அம்மா (கீதா, கதா நிறுவனர்) போன் பண்ணினாங்க; அப்புறம் மொழிபெயர்ப்பை அனுப்பினாங்க. அது எப்போது வருமோ, அல்லது வராதோ! எனக்கு அது பற்றியும் ஒன்றும் தெரியாது. ஏதோ 'அக்ரீமெண்ட்' வந்தது. நான் கையெழுத்துப் போட்டு அனுப்பியிருக்கிறேன். அவ்வளவுதான்.

"நான் 'இங்கிலீஷில்' நன்றாக எழுதுவேன். மொழிபெயர்ப்பேன். ஆனால் இப்போது எனக்கு உடம்பில் அதற்கான தெம்பு இல்லை. அந்த நேரத்துக்கு 'ஒரிஜினலாக' எழுதலாமே என்று எனக்கு எண்ணம். என்னைப் பற்றி இரண்டு பேர் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். காப்ரில்லா ஜெய்சிங்கர் பராலுதின் என்று ஒரு ஜெர்மன் 'லேடி'. அவள் இத்தாலியில் பேராசிரியராக இருக்கிறாள். மூன்று டாக்டர் பட்டங்கள் பெற்றிருக்கிறாள். அவள், என்னைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாள். '‘The Incomparable Writer Ramamirtham’ என்பது புத்தகத்தின் தலைப்பு. விலை ஆயிரத்து முந்நூறு ரூபாயோ, என்னமோ. எனக்கு ஒரு பிரதி கொடுத்திருக்கிறாள். அவள் என்கிட்ட சொன்னாள், ''இப்போது நான், எங்கேப் போனாலும், உங்களைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறேன்'' என்று. நிறைய பேசுகிறாள் அவள். ஆங்காங்கே, அவள் பேசியவற்றை எல்லாம், எனக்கு அனுப்பித் தந்திருக்கிறாள். ''இப்போது உங்களைப் பற்றி அந்தப் பக்கத்தில் எல்லோரும் முழித்துக் கொண்டிருக்காங்க. ரொம்ப பிரமாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களுக்கு உங்கள் எழுத்துக்களில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது'' என்று சொன்னாள். இது காரணமாகத்தான் எனக்கு இந்த வருடம் நிறைய விருதுகள் வருகின்றன என்று நினைக்கிறேன்.

"எனக்கு வராத நோயே இல்லை. இப்போது கால் போய் விட்டது. எனவே, ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். பழைய வேகத்துடன் செயல்பட முடியவில்லை. முன்பு வருடத்துக்கு ஒரு முறை, அல்லது இரண்டு முறை வெளியே கிளம்பி விடுவேன். எங்காவது போய் பதினைந்து, இருபது நாட்கள் இருந்துவிட்டு வருவேன். அதிகமும் குற்றாலம், தென்காசி, மதுரை தான் போவேன். அங்கெல்லாம் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருக்கிறார்கள். நல்ல சாப்பாடு கிடைக்கும்; நல்ல பேச்சுகள் இருக்கும்."

"உங்கள் குடும்பம் பற்றி சொல்ல முடியுமா? அப்பா, அம்மா, மனைவி, மகள், மகன்கள், மருமகள்கள் எல்லோரையும் பற்றி. . . குறிப்பாக இவர்களில், உங்கள் மேல் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியர் யார் என்றும்..."

''அம்மாதான் என் மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவள். வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதை எனக்கு அவள்தான் கற்றுக் கொடுத்தாள். அம்மாவுக்கு வாழ்க்கையில் கசப்பே கிடையாது. ஆனால், மிகவும் கசந்த வாழ்க்கை அவளுடையது. ஆனால், கசக்கவில்லை அவள். நான், பக்கத்திலிருந்து கண்ணால் பார்த்தவன்தானே. அவள் மாதிரிதான் நானும் இருக்கிறேன். எவ்வளவோ ஏமாற்றங்கள், அவளுக்கு நேர்ந்தது போலவே எனக்கும் நேர்ந்திருக்கிறது. அதற்காக நான் ஒன்றும் பயப்படவில்லை.

"அம்மாவுக்கு நாற்பத்தைந்து வயது... அப்பா, ஐம்பது வயதுகூட ஆகவில்லை. டக்கென்று போய்விட்டார். 'ஹார்ட் அட்டாக்'. அப்பா, பள்ளிக்கூட வாத்தியார். அப்போது முப்பாத்தாறு, முப்பத்தேழு ரூபாய் சம்பளம். ''என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது'' என்று அம்மா கையில் மொத்தத்தையும் கொடுத்து விடுவார். அவள் கை நல்ல கை. பசு மாடு வளர்த்தாள், தோட்டம் போட்டாள்; எல்லா நன்றாக வந்தது. சீக்காளி ஆம்படையான். அவள் ஒழுங்காக அவரைப் பார்த்துக் கொண்டாள். காதலினால் பார்த்தாள் என்று இதனை நான் சொல்ல வரவில்லை. கடமைதான் இது. அவளே சொன்னாள்: ''வேண்டியது பண்ணியாகிவிட்டது, உங்க அப்பாவுக்கு. அப்புறம் எனக்கு ஒன்றும் கடன் இல்லைப்பா. எனக்கு இதைப் பண்ணலையே என்று எந்த குற்றமும் கிடையாது.'' கொஞ்ச நேரம்தான் அழுதாள்.

"அப்பா, என் மேல் மிகவும் பிரியமாக இருந்தார். தினமும் இரவு ஏழு மணிக்கு சாப்பாட்டை முடித்துவிட்டு, முற்றத்தில் வந்து உட்கார்ந்திருப்போம். நிறைய கதைகள் சொல்வார். நான் தப்பும் தவறுமாக சொல்லும் எல்லாவற்றையும், சரிதான் என்பது போல் கேட்டுக் கொண்டிருப்பார். அம்மா, ''நீங்கள் அவனை கெடுத்துவிடுவீர்கள்'' என்பாள். ஆனாலும் அவர், என்னிடம் என்றும் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. ஒருமுறை அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன். அன்று இரவு படுக்கையில், ''ஏண்டா ராமாமிருதம், உன்னை அடிக்க வேண்டுமென்று எனக்கு விருப்பமா என்ன. இரத்தம் கொட்டுகிறதடா உள்ளே'' என்று சொன்னார். தினமும் சேர்ந்துதான் படுத்திருப்போம்.

"நான், என் தாய், தந்தையரைத் தவிர வேறு எவரையும் வணங்க வேண்டியது இல்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். ''பொம்மனாட்டிகள் பற்றி உன்னுடன் பேச வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நீயே அதனையெல்லாம் தெரிந்து கொள்வாய். என்னைப் போல், ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இரு, போதும்'' என்று சொன்னார் அப்பா. நான் அவரைப் போல் இருந்தேனா, இல்லையா? எனக்குத் தெரியவில்லை. ஆனால், எந்தக் கெட்ட பழக்கமும் எனக்குக் கிடையாது.

"எனக்கும், என் மனைவிக்கும் இடையில் பன்னிரெண்டு வயது வித்தியாசம். கல்யாணம் நடந்த போது எனக்கு முப்பது, அவளுக்குப் பதினெட்டு. கல்யாணம் முடிந்து ஐம்பத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது, அவள் ஆரோக்கியமாக இருக்கிறாள். நான் கிழவனாகி விட்டேன். ஆனால், அன்று பார்த்த போது, எவ்வளவு அழகாக என் மனதில் பட்டாளோ, அவ்வளவு அழகாகத்தான் இப்போதும் எனக்கு அவள் இருக்கிறாள். கன்னாபின்னாவென்று நான்கு இடங்களில் சலனப்படுகிறவர்கள், இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்களைச் சேர்ந்தவன் இல்லை. அவர்களை எல்லாம் பார்த்துவிட்டு, ஏதோ என்னை அண்டி வந்துவிட்டாள் என்று நான் இவளைப் பற்றி நினைக்கிறேன். ஐயோ, நான் இப்படி பேசுகிறேனே என்று நினைக்காதீர்கள். இந்தம்மா பெரிய பண்ணையாருடைய பேத்தி; நான் சாதாரண வாத்தியார் வீட்டுப் பிள்ளை. எப்படியோ கல்யாணம் நடந்துவிட்டது. என்னை நம்பி அவளுடைய மனுஷாளையெல்லாம் விட்டுவிட்டு வந்துவிட்டாள். இவ்வளவு காலமும் எங்களுக்குள் இருந்த எவ்வளவோ பிரச்னைகளையும் கடந்து வந்துவிட்டோம். அவளுடைய அண்ணன் வீடு, இங்கே பக்கத்தில்தான் இருக்கிறது. அங்கு போகமாட்டேன் என்கிறாள். ''போய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வாடி'' என்றாள், கேட்கமாட்டேன் என்கிறாள். இது பொம்மனாட்டிகளுக்கே உரிய தனிப்பட்ட ஒரு அம்சம்! அந்த மாதிரி அவர்களால் உடனே 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டு போய்விட முடிகிறது. ஆண்களால் இது முடியாது. எதையாவது பொறுக்கிக் கொண்டே இருப்பான். அழகாகட்டும், விசுவாசங்களாகட்டும் பெண்கள் தனிதான். விசுவாசங்கள் மாறும். பிள்ளைகள் பிறந்து விட்டால் அங்கேப் போய்விடுகிறது. ''என்னதான் சொன்னாலும், உங்களை அனுப்பிவிட்டுதான் போவேன்'' என்று ஒரு நாள் சொன்னாள். ''பிள்ளைகளிடம் உங்களை நான் ஏன் விடவேண்டும்.'' இப்படி ஒரு 'சென்டிமெண்ட்'. நமக்கு ஒரு தோழி இருக்கிறாள். நம் பக்கத்திலேயே இருக்கிறாள் என்ற தைரியத்தை இது எனக்கு ஏற்படுத்துகிறது. என் மனைவியிடம் மூட்டை, மூட்டையாகப் புடவைகள் இருக்கின்றன. அவ்வப்போது பீரோவைத் திறந்து, அவற்றை எண்ணி, எண்ணிப் பார்த்துக் கொள்கிறாள். எடுத்துப் பார்க்கிறாள்; பிறகு உள்ளே வைக்கிறாள்; மறுபடியும் எடுக்கிறாள்; மறுபடியும் உள்ளே வைக்கிறாள். என்ன, என்னல்லாமோ செய்து கொண்டிருக்கிறாள். அவ்வளவு புடவைகள் அவளிடம் இருக்கின்றன. அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அந்தக் காசு எல்லாம் என்னுடையதுதான். அது, வேறு சமாச்சாரம். என் தாய்க்கு இந்தக் கஷ்டம் எதுவுமே இருந்ததில்லை. அவள் ஒரு வார்த்தை சொல்வாள்: ''எனக்கு இந்த வயதில் என்னடா வேண்டும்.''

"எனக்கு இரண்டு பையன்கள். ஒருவன் சிங்கப்பூரில் இருக்கிறான். இன்னொருவன், சப்தரிசி. இங்கேதான் இருக்கிறான். இப்போது வந்திருக்கிறான். இரண்டு நாட்கள் இருப்பான், போய் விடுவான். அவர்கள், அவர்கள் காரியத்தை அவரவர்கள் தான் செய்யவேண்டும். சப்தரிசிக்கு எப்போதும் பசித்துக் கொண்டே இருக்கும். கொடுத்து வைத்தவன். இவன்தான் என்னுடைய அம்பிகாபதி. என் எழுத்தில் என்னை விட அதிகம் துவைந் திருக்கிறான். அனேக நேரங்களில் இவன் சொன்னால், நான் சொன்ன மாதிரி.

"ஏதோ என் வரையில் எல்லாம் ஆகிவிட்டது. என் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டேன். மனைவிக்கு மூன்று தாலி கட்டிவிட்டேன். இது ரொம்ப அபூர்வமாகத்தான் நடக்கக் கூடியது. இப்போது இவர்கள், நினைத்த நேரத்துக்கு அவர்கள் எதிர்பார்க்கிற நிகழ்ச்சி 'டிவி'யில் வரவில்லை என்றால், ஒடிந்துபோய் விடுகிறார்கள். அந்த மாதிரியெல்லாம் எனக்கு ஒன்றுமே கிடையாது. 'டிவி'யாவது, மண்ணாங்கட்டியாவது. எவன் கண்டான் அதை. ''ஏண்டா, எனக்கு என்ன வேண்டும். உடுக்க இரண்டு புடவை, சாப்பாடு. அது எனக்குக் கிடைக்கிறதே'' என்பாள் என் தாய். அதற்கே கஷ்டப்பட்டவள். எல்லோரும் கொஞ்சம் கஷ்டப்படனும். பசி என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். 'நன்றாக சாப்பிடு, நன்றாக தூங்கு, கொஞ்சம் பசித்திரு'' என்று நான் எப்போதோ எழுதியிருக்கிறேன். கொஞ்சம்தான் பசிக்க வேண்டும். அதிகம் பசிக்கக் கூடாது. பசி என்றால் என்னவென்று தெரிந்திருந்தால் போதும், அவ்வளவுதான். சந்தோசமாக இருந்தால் சந்தோசமாக இருப்போம். இல்லை என்றாலும் அதனால் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது. நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அழகான எண்ணங்கள் நமக்கு இருக்கின்றன. நாம்தான் அந்த எண்ணங்களை உருவாக மாற்றவேண்டும். எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம். அவ்வளவுதான் எனக்கு வாழ்க்கையைப் பற்றி தெரிந்தது எல்லாம். எனக்கு நீ, உனக்கு நான். இதுதான் வாழ்க்கை எனக்கு அளித்த உபதேசம்."

"சிறுவயதிலேயே எழுத்தாளன் ஆகவேண்டும் என்ற தீர்மானம் உங்களுக்கு இருந்ததா?"

"இல்லை. எழுதி புகழ் அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. ஆனால், எழுதாமலும் என்னால் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் குடும்பத்துக்கு பைசா மிகவும் தேவையாக இருந்தது. அதனால், அப்போது அதற்காக எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம் காசின் மேல் ருசி விட்டுவிட்டது. என்னுடைய சாதனை என்னவென்றால், நான் எழுதி எதுவுமே வீணாக ஆனதில்லை என்பதுதான். எல்லாம் பிரசுரமாகிவிட்டது. யாராவது ஒருவர் நமக்கு குருவாக வேண்டும். தி.ஜ.ரங்கநாதன் தான் எனக்கு குரு. ''நீ எதை எழுதினாலும் போடுகிறேன்டா'' என்று அவர் சொன்னார். உயிர் என்னுடைய எழுத்தில் இருந்தது என்று அவர் அடையாளம் கண்டுகொண்டு விட்டார். ''நீ என்னைவிட நன்றாக எழுதுகிறேடா'' என்பார். அப்படி சொல்கிறவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள். இப்போது போட்டியும் பொறாமையும் எரிச்சலும் குரோதமும் மிகவும் அதிகமாகி விட்டன. யாரோடு யார் பொறாமைப்படுவது என்பதுகூட இல்லாமல் ஆகிவிட்டது."

"சிறுவயதில் உங்களைச் சுற்றியிருந்த சூழலின் எந்தக் கூறுகள், ஒரு எழுத்தாளனாக நீங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்று இப்போது பிரித்துப் பார்க்க முடியுமா?"

"நான் கிராமத்தில் வளர்ந்தேன். லால்குடியில் இல்லை; காஞ்சிபுரம் பக்கத்தில், என் அப்பா வேலை செய்த அய்யம்பேட்டை என்ற கிராமத்தில். அங்கு குயவர்களின் வீட்டோடு வீடாக எங்களுக்கு ஒரு வீடு கிடைத்தது. இரண்டு ரூபாய் வாடகை. பெரிய முற்றம் அந்த வீட்டுக்கு இருந்தது. முற்றத்தின் ஒரு பக்கம் நீளமான சுவர்; அதனையொட்டி அடுப்பு; விறகுக் கட்டைதான். ஒரேயொரு அறை. எத்தனையோ முறை பாம்பு வந்திருக்கிறது. நட்டுவாக்கில் வரும். ஏதோ கடிக்காமல் விட்டதால் நாங்கள் தப்பித்து விட்டோம். இடி இடிக்கும். உடனே, அம்மா அர்ச்சுனனின் நாமத்தைச் சொல்வாள். நான் அப்படியே அவளோடு ஒட்டி ஒடுங்கிக் கொண்டிருப்பேன். இது வீட்டின் சூழ்நிலை. அப்போது, என்னைச் சுற்றி இருந்தவர்கள் கலங்கம் இல்லாதவர்கள்; நேர்மையானவர்கள். விடிகாலையில் பத்து மணிக்குத் தொடங்கி, இரவு பத்து மணி வரைக்கும் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வாழ்வின் மொத்த தத்துவத்தையும் அங்கே பார்த்தேன். அவர்களிடம்தான் பிரியம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொண்டேன். அவர்களுடைய பாஷை மிகவும் காட்சி பூர்வமானதாக இருக்கும். அந்த மொழி என் எழுத்து மொழியை பெருமளவில் தீர்மானித்திருக்கிறது.

"எல்லோரும் சொல்கிறார்கள்: ''சில நேரங்களில், சில காட்சிகள் அப்படியே நம் மனதில் விழுந்து விடுகிறது.'' பொம்மனாட்டிகள் ஈரப் புடவையைக் கட்டிக் கொண்டு, படியில் ஏறிக்கொண்டிருக்கும் காட்சி, அப்படியே என் மனதில் இருக்கிறது. என்னுடைய கதைகளிலும் இக்காட்சி அடிக்கடி வரும். தி.ஜ.ர., ''ஏண்டா, இது அடிக்கடி வருகிறதே'' என்பார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. சில காட்சிகள் அப்படி நம் மனதில் பதிந்து விடுகின்றன. நான் கெட்டுப் போகவில்லையேத் தவிர, கெட்ட எண்ணங்கள் எனக்கு இல்லாமல் இல்லை. 'செக்ஸ்' இல்லாமல் எதுதான் உண்டு? பெரிய பக்தியின் மூர்க்கமே செக்ஸ்தான். காமத்தால் உடலில் ஏற்படும் அவஸ்தைகள் எல்லாவற்றையும் நான் எழுத்தில் வடித்திருக்கிறேன். ஆனால், சமுதாயத்துக்கு விரோதமாக நான் என்றும் எழுதியது கிடையாது. சந்தோஷமாக, ஒற்றுமையாக இருப்பது பற்றிதான் நான் எழுதுகிறேன். அதுதான் எனக்கு தோன்றவும் செய்கிறது."

"உங்கள் எழுத்து மொழி பற்றி, 'மிகவும் விசேஷமானது, சங்கீதம் போன்றது, புரியாதது' என்று பல்வேறு விதமான விமரிசனக் கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதனையெல்லாம் இப்போது நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?"

"நான் ஜனரஞ்சகமான எழுத்தாளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு, அப்படியே, அதனாலேயே பிரபலமாகி விட்டவன். ஏதாவது புரியும்படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்து விட்டது என்று, என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்து விடுவார்கள். இரண்டு, மூன்று பேர் சொல்லிவிட்டார்கள்; எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்? ராமாமிருதம், ராமாமிருதமாகத்தான் இருக்க முடியும்.

"நான் எழுதியவைகள் எந்த அளவுக்கு நிற்கும், நிற்காது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ''நிற்பதற்காகத்தான் நான் எழுதுகிறேனா?'' என்று கேட்கப்படுகிற ஒவ்வொரு சமயத்திலும், ''நான் அதற்காக எழுதவில்லை. நான் எப்போதுமே எனக்காகத்தான் எழுதுகிறேன்'' என்று சொல்லி வந்திருக்கிறேன். இதுதான் நிஜமும்கூட. ''எனக்காகத்தான் எழுதுகிறேன் என்றால், ஏன் பத்திரிகையில் பிரசுரிப்பானேன். நீயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே'' என்று ஒரு கட்சி பேசினால், அதனை ஒரு கட்சியாகவே நான் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

"என்னுடைய எழுத்தில் சங்கீதத்தின் ஈடுபாடு இருக்கிறது. சங்கீதம், ஓவியம், எழுத்து போன்ற எல்லா கலைகளும் எதை நோக்கி நகர்கின்றன? மௌனத்தை நோக்கிதான். மௌனம்தான் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கும் போது இடையில் திடிரென்று பேச்சு நின்றுவிடும். அற்புதமான கணங்கள் அவை. மனது நிறைந்து போவது போல் இருக்கும். அதே சமயம், என்ன நேரப் போகிறதோ என்ற பயமும் இருக்கும். ஆனால், அனேக நேரங்களில், மௌனத்தை நோக்கிப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, எழுத்தாளன் நிறையப் பேசுகிறான். நான் நிறையப் பேசுகிறேன். ஒருவர் மனதைத் தொட்டு, ''அட இது எனக்கு நேர்ந்ததாச்சே; இதை ஏன் என்னால் எழுத முடியவில்லை. இந்த ஆள் எழுதியிருக்கிறானே! என் மனதில் ஓசையை எழுப்புகிறானே'' என்று வாசகன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள், அது போலான எழுத்தைத்தான் நான் நல்ல எழுத்து என்று நினைக்கிறேன். ''உங்கள் எழுத்து புரியவில்லையே'' என்று என்னிடமே வந்து சொல்கிறார்கள். புரியவேண்டும் என்பது அவசியமா என்ன? இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்குப் புரிந்துவிட்டுப் போகிறது. எழுத்தாளனுக்கே அவன் எழுதுபவைகள் எல்லாம் புரிகிறது என்று நீங்கள் கண்டீர்களா? புரியாமல்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் இப்போது என்ன கெட்டுப் போய்விட்டது."

"மொழியின் கவித்துவம் மற்றும் நுட்பம் காரணமாக நீங்கள் மௌனியுடன் ஒப்பிடப்பட்டுள்ளீர்கள். இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?"

"மௌனி, இங்குப் பேசப்படும் அளவுக்கு முக்கியமான எழுத்தாளரில்லை என்ற எண்ணம்தான் எனக்கு இருக்கிறது. க.நா.சு. போன்றவர்கள் தொடர்ந்து பேசி, அதன் மூலம் அவர் முக்கியமானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். மேலும், அவர் மிகவும் குறைவாகத்தானே எழுதியிருக்கிறார். மௌனி, ஒரு முறை என் வீட்டுக்கு வந்திருந்தார். இங்கே, இப்படி எனக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தார். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார். அவர், ''நீங்கள் ராமாமிருதத்தைப் படித்திருக்கிறீர்களா?'' என்று மௌனியைக் கேட்டார். ''நான் படித்ததும் இல்லை. படிக்கப் போவதும் இல்லை'' என்று மூஞ்சியில் அடிக்கிற மாதிரி பதில் சொன்னார் மௌனி. அவர் படிக்காவிட்டால் போகிறார். அது பற்றி எனக்கு வருத்தம் இல்லை. அவசியமும் இல்லை. ஆனால், அந்த மனிதன் இப்படி பேசவேண்டிய அவசியம் என்ன? எனக்குத் தெரியவில்லை.

"மௌனி தண்ணீர் போடுவார் என்று நினைக்கிறேன். நான் சொல்கிற இந்தத் தண்ணீர் வேற. அழிந்து போகிறவர்கள் எல்லோரும் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். அக்கிரமங்களை செய்கிறவர்கள் செய்யட்டும். நான் செய்யவில்லை என்பதாலேயே மற்றவர்களும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பது சரியில்லை. ஆனால், ஒரு 'கேரக்டர்' இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தீவிரமான எண்ணங்கள், ஏதாவது ஒன்றின் மீது இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் நிச்சயம் பெரிய நஷ்டம்தான்."

"மொழி பற்றிப் பேசியதன் தொடர்ச்சியாக கேட்கிறேன், உங்கள் மொழியும் கதைகளும் வாசிக்கும் போது ஒரு 'மிஸ்டீரியசான' அனுபவத்தை அல்லது உணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. உங்கள் வாழ்வில் அதுபோன்ற அனுபவத்தை எதிர் கொண்டிருக்கிறீர்களா?''

"பலமுறை அதுபோல் நேர்ந்திருக்கிறது. இரண்டை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் ஞானமூர்த்தி நகரில் இருந்தபோது, என் வீட்டில் இடிந்த பகுதிகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தோம். மதியம் வேலைக்காரர்கள் எல்லோரும் சாப்பிட போய்விட்டார்கள். நான் படுத்திருந்தேன். திடீரென்று எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியது. நான் எழுந்து நின்றேன். நான் தனியாக எழுந்து கொள்கிறேன். ஆனால், என் உடம்பு அங்கேயே படுத்துக் கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்துக்கொண்டே நான் நின்று கொண்டிருக்கிறேன். ரொம்ப 'பியூட்டிபுல்'ப்பா. இப்படி ஒரு சுகமான பாவமா. இந்த உடம்பு எவ்வளவு பெரிய சுமையாக இருக்கிறது தெரியுமா? அப்படியே மிதந்து போகிற சமயத்தில், இப்படித்தான் இருக்குமோ சாவு என்று, உடம்பைப் பார்த்துக்கொண்டு தனியாக நிற்கும் போது தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஐய்யோ! இது ரொம்ப நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால், அதற்குள் சாப்பிட சென்றவர்கள் திரும்பி வரும் சப்தம் கேட்டது. உடனே அது உள்ளே புகுந்துவிட்டது. உடம்பை விட்டு வெளியே வந்து, உடம்பை பார்த்துக் கொண்டு நின்ற அது, என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அது மூச்சா, பிராணனா, ஞாபகச்சக்தியா, நானா அல்லது எல்லாவற்றோடும் சேர்ந்த பரம்பொருளா? ஒன்றும் தெரியவில்லை. இதனை ஒரு பெரியவரிடம் சொன்னபோது, உடனே அவர் என் காலைத் தொட்டுக் கும்பிட்டார். இதெல்லாம் பெரிய சித்தி. அது எல்லோருக்கும் கிடைக்காது. ஆசைப்பட்டால் உடனே கிடைத்துவிடுமா? ஆனால், என் ஞாபகத்தில் இருக்கிறது அது. அதனை என்னால் அழிக்கவே முடியாது."

"வேறு எதாவது. . ."

"அதுவும் ஞானமூர்த்தி நகரில் இருக்கும் போதுதான் நிகழ்ந்தது. ஒரு நாள் வாசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர் வந்தார். ''நம்பர் பதிமூன்றில் கண்டக்டராக இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. எங்க அம்மாவுக்கு கண்ணில் 'கேட்ராக்ட்' ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறோம். அதுபோல் உங்களுக்கும் செய்யவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது'' என்று சொன்னார். ''சரி, அழைத்துக்கொண்டு போங்கள்'' என்று சொன்னேன்.

"என்கூட என் குழந்தைகள், பொம்மனாட்டி யாரும் வரவில்லை. அவர் அழைத்துக்கொண்டு போனார். பரிசோதனைகள் முடிந்தவுடனே, டாக்டர் சொன்னார்: ''இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் ஆபரேசன் செய்து கொள்ளவில்லை என்றால், உங்கள் இடது கண் பஸ்டாகிவிடும். 'ப்ளாக் கேட்ராக்ட்' வந்திருக்கிறது உங்களுக்கு. இடது கண் பஸ்டாகிவிட்டது என்றால் வலது கண்ணும் பஸ்டாகிவிடும். உடனே நீங்கள் ஆபரேஷன் செய்து கொள்ளவேண்டும்.'' பண்ணிவிட்டார். உறவுக்காரர்கள் எல்லோரும் விஷயம் தெரிந்து வருவதற்குள், ஆபரேஷன் முடிந்துவிட்டது. வீட்டுக்கு திரும்பி வந்த பிறகும், தொடர்ந்து ஒரு வாரம் அந்த கண்டக்டர் வந்தார். ஆரஞ்சு, ஆப்பிள் என்று எதாவது பழங்கள் வாங்கிக்கொண்டு வருவார். அப்புறம் காணாமல் போனவர்தான், இன்றைய தேதி வரைக்கும் வரவில்லை! அதற்கு முன்னாடியும் எப்போதும் அவர் வந்ததில்லை. கண் கொடுப்பதற்காகவே வந்தவர் போல், வந்து சென்றுவிட்டார்!

"அவர் எதற்காக வந்தார், வந்ததும் ஏன் அவருக்கு இதைக் கேட்கவேண்டும் என்று தோன்றியது, நான் எப்படி உடனே சம்மதித்தேன், டாக்டர் வேறு உடனே ஆபரேசன் செய்யனும் என்றார். பிறகும் ஒரு வாரம் தொடர்ந்து வந்தவர், அப்புறம் ஏன் வரவேயில்லை? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலே தெரியாமல், இப்போதும் நான் இந்தக் கண்களால்தான், தொடர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் நன்றி செலுத்த வேண்டியது சமயங்களுக்கா, நபர்களுக்கா? எனக்குத் தெரியவில்லை."

"நீங்கள் ரிஷிகேஸ் சென்றபோது, அங்கே உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்காக மீண்டும் ஒருமுறை அதனை சொல்லமுடியுமா?"

"அதனை எல்லோரும் ஏற்கெனவே கேட்டிருப்பாங்கதானே!"

"இப்போது வயதும் அனுபவமும் ஏறிய நிலையில், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, அந்த அனுவத்தை எப்படி திரும்பிப் பார்க்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்."

"ஐய்யோ! அதுதான் விஷயம். எவ்வளவு காலம் ஆனால் என்ன, அலுக்கவே அலுக்காது. அப்போது அலுவலக வேலையாக டில்லிக்கு போயிருந்தேன். அங்கு சென்றதும் ரிஷிகேஸ் போகணும் என்று ஆசை ஏற்பட்டுவிட்டது. போனேன். பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறோம். கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாள். அங்கே இறங்கினால் அந்த சிலிர்ப்பே நெருப்பாக இருக்கிறது. அங்கே குளித்தேன். நீலமாக இருக்கிறது. டில்லியில் பாலத்தின் மீது போய்க் கொண்டிருக்கும் போது கீழே பார்த்தேன். யமுனா ஓடிக் கொண்டிருக்கிறாள். அப்படியே சுழிக்கிறாள். பயங்கரமாக இருக்கிறது. ரொம்பக் கோபக்காரி போல. இவளே கோபக்காரி என்றால் கங்கை எவ்வளவு பெரிய கோபக்காரியாக இருப்பாள். ஆனால், யமுனாதான் பெரிய கோபக்காரி என்று சொல்கிறார்கள். போகட்டும். இமயமலைத் தொடர், ரிஷிகேஸிலிருந்து ஆரம்பமாகி விடுகிறது. இமயமலைத் தொடர் இங்கே ஆரம்பமாகிறது என்று தெரிந்து கொள்ளும்போதே, ரொம்ப சந்தோஷம் ஏற்படுகிறது. மேலே பார்த்தால் ஒருவிதமான மந்தகாரமான சூழ்நிலை. மேகங்கள் வெள்ளையாகக் குட்டி குட்டியாகப் போகிறது. துள்ளித் துள்ளி போகிறது. ஆட்டுக்குட்டி மாதிரி இருக்கிறது; துள்ளுகிறது. மனதில் நாம் என்னத்தையெல்லாம் நினைக்கிறோமோ, அப்பொழுதே அதனை நாம் ஆக்கவும் செய்கிறோம். அது மாதிரியான சமயங்கள், எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கிறது. நம்மால் செய்ய முடியாதது என்ன என்ற ஆச்சர்யமும் நம்பிக்கையும் அந்த சமயத்தில் ஏற்படுகிறது. நம் உள்ளே இருக்கும் இந்த அற்புத சக்திகள் எல்லாவற்றையும் நாம் வெளியேக் கொண்டுவர வேண்டும். மேகங்கள் நகர்ந்து கொண்டிருப்பதை, அப்படியே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டே நின்றேன். திடீரென்று என்னை புகைமண்டலம் சூழ்ந்து கொண்டது. பனி என்று நினைக்கிறன். அப்போது அந்த நிலமை, என்னைப் பதப்படுத்துகிறதய்யா, பதப்படுத்துகிறது. வெறும் புகை. உடனே கற்பனை சிருஷ்டி செய்கிறது, ரிஷிகள் பயணம் செய்கிறார்கள். அவர்களை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் கேட்கிறேன். 'சச்ஜோதி, ஜோதி, ஜோதி, ஸ்வாகா' என்று காதில் கேட்கிறது. அந்தப் புகையானது, கோமக் குண்டலப் புகையாக மனதில் உருமாறுகிறது.
"இது எல்லாம் என்ன? நாம் நினைத்துக் கொள்வதுதான். மற்ற எல்லோருக்கும் தோன்றுகிறதா என்ன? இல்லையே. 'சென்சிட்டிவ்னஸ்' என்பது சிலரிடம்தான் அதிகமாக இருக்கிறது. அது எழுத்தாளர்களிடம் நிறையவே இருக்கிறது; இருக்கவேண்டும். என்னுடைய எழுத்துக்கு ஏற்றார்ப் போன்ற 'சென்சிட்டிவிட்டி' எனக்கு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போன்ற அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ரிஷிகேஸில் உடனே நான் நினைத்துக் கொண்டேன். எனக்கு அம்பாளுடைய நினைப்புதான் வருகிறது. அம்பாள் என்றால் யார்? அம்மாதான் அம்பாள். ரிஷிகேஸில் ஒரு பல்லக்கு மேகத்துக்கு இடையே நகர்கிறது. திரைபோட்ட பல்லக்கு திரையில் இருந்து ஒரு கண் எட்டிப் பார்க்கிறது. ஒரே ஒரு கண் மட்டும்தான். ராஜகுமாரி என்னை எட்டிப் பார்க்கிறாள். அந்த அளவுக்கு மனது போகுதய்யா... எனக்கு உடம்பெல்லாம் அலரிப் போய்விட்டது. பூமியில் என்னுடைய கால் இல்லை. நானே என்னை இழந்து நிற்கிறேன். எனக்கு நான் வேண்டும். ஆனால் அப்போது அங்கே இல்லை நான். மனைவி, குழந்தைகள் எல்லோரையும் மெட்ராஸில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். என்றால் எப்படி, என்னை நான் இழந்துவிடமுடியும். பயம் வந்துவிட்டது. பக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும் கத்துகிறார்கள். சோடா கொடுக்கிறார்கள். பதறிப் போய்விட்டார்கள். அவர்களுடைய பாஷையில் என்னமோ பேசுகிறார்கள். எனக்கு என்ன புரிகிறது? அவனை நான் பார்த்துவிட்டேன என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? சில தருணங்களில், அவளே ஏமாந்து விடுகிறாள். மாட்டிக்கொண்டு விடுகிறாள். நான் அவளிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது, அவள் என்னிடம் மாட்டிக்கொண்டு விட்டாள். அவளை என்னால் அவ்வளவு சுலபமாக விடுவித்துவிட முடியாது. அது இந்த லோகம் சம்பந்தப்பட்டது இல்லை. அதே நேரத்தில் இல்லையென்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.''

''ஒரு கதை உங்களுக்குள் உருவாகும் புள்ளியிலிருந்து, ஒரு முழுமையான வடிவத்தை அடைவது வரைக்கும் உள்ள செயல் பற்றிச் சொல்லமுடியுமா?''

''கதை எங்கேத் தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மனது தளர்ந்துபோய், எங்கே நெகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அங்கே கவித்துவம் ஏற்படுகிறது. 'சிந்காநதி'யில் ஒரு அத்தியாயம், 'my dark Gazzle of the night' என்று ஆரம்பிக்கிறது. ஏன் இப்படி ஆரம்பித்தீர்கள் என்று என்னைக் கேட்டால், எனக்குத் தெரியாது. என்னமோ தோன்றியது, அப்படி தொடங்குகிறேன். தொடங்கிய பிறகு, அதன் பாட்டுக்கு, அது போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கதையில் ஒருவன், எதையோ, இப்படி கையில் தூக்கிக்கொண்டு போகிறான். உடனே, 'பறவையின் ஒடிந்த சிறகு போல்' என்று எழுதினேன். ஏன் இப்படி வந்தது என்று என்னைக் கேட்டால், எனக்கு எப்படித் தெரியும்! அது வந்துவிட்டது, அவ்வளவுதான். 'symbathy.'

"ஒருமுறை நாசூக்காக பேசுவது பற்றி எழுதவேண்டும். ஆனால், எனக்கு உவமானம் கிடைக்கவே இல்லை. தூங்கிவிட்டேன். அது பற்றி நான் கவலைப்படவில்லை. எது பற்றியுமே நான் கவலைப்படுவது இல்லை. இதனை நான் திரும்பத் திரும்ப பலமுறை சொல்லிக் கொள்கிறேன். தூக்கத்தில், 'மாம்பூவை காம்பு ஆய்வது போல்' என்று ஒரு கரித்துண்டு சுவற்றில் எழுதிக் கொண்டே செல்கிறது. இதனை கதையில் அப்படியே சேர்த்துவிட்டேன். இதற்கு நான் பொறுப்பாக முடியுமா? எழுத்தாளன், அவன் எழுதும் எல்லாவற்றுக்கும் பொறுப்பாக முடியாது. அவன் வழியாக வெளிப்படுவதுக்காக, சில சமயங்களில், சில தாதுக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. சமயம் வந்தவுடன் அது வெளிப்படுகிறது. இவன் மூலமாக நான் வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்; இந்த எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். எப்போது, எதில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்படுகிறதோ, அந்த ஈடுபாடுதான் உங்களுடைய அனுபவம். உங்களுடைய முஸ்தி, விடுதலை, குறிக்கோள், அதிர்ஷ்டம், பாக்கியம் எல்லாம். 'கழுகு' எழுத பத்து வருஷம் ஆனது; 'அபிதா', இரண்டு வருஷம்; 'புத்ர' இரண்டு வருஷம்; 'அஞ்சலி' எட்டு வருஷம்...

"நான் நேரத்தைப் பார்ப்பது கிடையாது. எழுதுவதற்காகத் தனியாக இடம் தேடுவது கிடையாது. நீங்கள் பேசிக் கொண்டிருந்தாலும், நான் எழுதிக் கொண்டே இருப்பேன். டீ தேவையில்லை, டேபிள் தேவையில்லை, பேப்பரும் பேனாவும் மையும் மட்டும் போதும். எந்த நிமிஷம் ஆரம்பிக்க வேண்டுமோ, அந்த நிமிஷம் ஆரம்பிக்க முடியும். அதனாலேயே என்னைக் கோவில் மாடு என்றுகூடச் சொல்வார்கள்.''

''மற்ற தமிழ் எழுத்தாளர்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் மீது உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, வித்தியாசப்பட்டு நிற்கிறது. 'அபிதா' நாவல் சிறந்த உதாரணம். 'அபிதா'வுக்கு பின்னாடி தேங்கி நிற்கும், காதலித்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்.''

''எனக்கு காதலுடன் சம்பந்தப்பட்டும் சம்பந்தப்படாமலும் இருக்கிறது. சிவனுடைய நெற்றிக் கண் சூடு தகிக்கும்; அது போல்தான் காதல். அதாவது அந்த அனுபவம். அதனை நான், அனு+ பவம் என்று இரண்டாக பிரிக்கிறேன். அனு என்றால், ரகசியம் என்று பொருள். பவம் என்றால், ரகசியமான அனுபவம் அல்லது உணர்ச்சி. அதனால்தான் காதலை ஒருவராலும் முழுமையாக சொல்லிவிட முடியாமல் இருக்கிறது. காதல் என்பது ஒருவிதமான உணர்ச்சி. அதனை மனிதர்களுடன் சம்பந்தப்படுத்தக் கூடாது. காதல் என்பது நேர்ந்து கொண்டே இருக்கிறது. அபிதா நிஜமானவள்தான். இப்போது இறந்து போய்விட்டாள். காலமாகும் போது வயது என்பது. ''நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கிறாயா'' என்று நாங்கள் பேசிக் கொண்டது கிடையாது. அவள் இன்னொருத்தன் பொண்டாட்டி. எட்டு வயதில் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் அறிவோம். நான் அவளைப் பற்றி எழுதுவதாக இருக்கிறேன். அபிதாவைப் பற்றி இன்னொரு அபிதா. காதலிக்கும் மனுஷாளையே, எப்போதும் தொடர்ந்து காதலித்துக் கொண்டும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. அது ஒரு தருணம், மகத்தான ஒரு விபத்து. 'A tremendous accident'

"நாம் கல்யாணம செய்து கொள்ளப்போகும் பொம்மனாட்டியைப் பார்த்து, ''நான் உன்னைக் காதலிக்கிறேன்'' என்று சொல்ல முடியுமா? சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை. என்ன ஆகுமென்றால் ''அட, என்னடா இது இப்படிக் கல்யாணம் செய்து மாட்டிக்கொண்டு விட்டோமே'' என்று தோன்றும். ஒருநாள், நான் பார்த்தேன்... அப்போது நான் மிகவும் சின்னப் பையன். அவள்... அவனுடைய பொண்டாட்டியோ, வைப்பாட்டியோ எனக்குத் தெரியாது. அவளை, அவன் எட்டி உதைக்கிறான். அவள் அவனுடைய காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். ''ஏண்டா இவங்க இப்படி இருக்காங்க'' என்று நான் எண்ணினேன். நம்முடைய சம்பிரதாயத்தில் இது போன்ற, ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்தி வைத்திருக்காங்க. எதை விட்டாலும், உன்னை நான் விடமாட்டேன் என்று. இந்த காலத்தில் இதெல்லாம் கிடையாது. இந்த காலத்து மனுஷாளைப் பற்றி, நான் பேசவும் இல்லை. பொம்மனாட்டிக்குப் புருஷன் ஏன் முக்கியம் என்றால், பிறந்த வீட்டிலிருந்து கழட்டி விட்டிடுகிறாங்க. நாத்து நடுகிறது மாதிரிதான். ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்தில் பிடுங்கி நடுவது போல். இப்படி ஒருவர் வாழ்க்கையில் இன்னொருவர் வந்து புகுந்து கொள்வது போன்ற நிலமை ஏற்படக்கூடாது. இவனுக்குத் தனியாக ஒரு வாழ்க்கை, அவளுக்குத் தனியாக ஒரு வாழ்க்கை என்று இருக்கவேண்டும்.''

''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்'' என்று எங்கேயோ நீங்கள் குறிப்பிட்டதாக ஞாபகம். இப்போதும் அப்படித்தான் இருக்கிறீர்களா?''

''ஆமாம். இப்போதும் சொல்கிறேன், நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்தான். அழகு என்பதை தனியாக வரையறுத்துவிட முடியாது. அந்தந்த சமயத்தில மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் அழகு. எனக்கு பதினெட்டு, பத்தொன்பது வயது இருக்கிற சமயத்தில், அப்போது காஞ்சிபுரம் பக்கத்து கிராமத்தில் ஒரு நண்பி இருந்தாள். அவளைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. திடிரென்று ஒரு நாள், அவளைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆவல் ஏற்பட்டுவிட்டது. நான் கிளம்பி ஓடுகிறேன். போய்ச் சேரும்போது இருட்டிவிட்டது. எப்படியோ, விசாரித்து, விசாரித்து அவள் வீட்டைக் கண்டு பிடித்துவிட்டேன். கதவைத் திறந்து உள்ளேப் போனேன். அவள் படுத்துக் கொண்டிருந்தாள். உடம்பு வயதேறி தளர்ந்துவிட்டது. என்னைப் பார்த்த மாத்திரத்தில், ''அட ராமாமிருதம் வந்தியாப்பா, எப்ப வந்த'' என்றாள். நான் அதிர்ந்து போய்விட்டேன். இது ஞாபக சக்தியில் சேர்த்தியா, அல்லது எப்போதுமே நான் அவளுடைய எண்ணத்தில இருந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமா; அல்லது அவர்களுக்கே உரித்தான ரத்தத்தோடு ரத்தமாக கலந்த ஒரு சம்பந்தமா? எனக்குத் தெரியவில்லை. அவள் எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள்? ஒரு நிமிடத்தில், ''நான்தான் ராமாமிருதம்'' என்று சொல்லக்கூட வழியில்லாமல் செய்துவிட்டாளே! இந்தத் தருணம் இருக்கிறதே, அதுதான் எனக்கு முக்கியம். இதைத்தான் நான் சௌந்தர்ய உபாஷகன் என்று சொல்கிறேன்.

"சமயம் என்பது ஒரு மூகூர்த்த வேளை. எவ்வளவோ விதமான வேதியியல் பொருட்கள் அதில் ஒன்று சேர்கிறது. முன்ஜென்மம், ஞாபகம், ஞாபகமே இல்லாத நிலை, திடீரென்று ஏற்படக்கூடிய இராசாயணம். அந்த சமயத்தில் நாம் நம்முடைய வசத்திலேயே இல்லை. எனக்குத் தோன்றுகிறது, சாவு நிகழும் சமயத்தில் கிட்டத்தட்ட இதுபோல்தான் இருக்கும் என்று.''

''இந்த என்பத்தாறு வயதில், உங்களுக்கு தெரிந்தவர்களில், உயிரோடு இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட, இறந்தவர்கள் எண்ணிக்கைதான் நிச்சயம் அதிகமாக இருக்கும். நிறைய பேரின் - நண்பர்களின், உறவினர்களின் - மரணங்களைப் பார்த்திருப்பீர்கள். இப்போது மரணம் குறித்த உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது?''

''என்னுடைய முப்பத்தைந்து வயதிலிருந்தே மரணம் என் அண்டை விட்டுக்காரனாக இருக்கிறான். தொடர்ந்து தெரிந்தவங்களில் யாராவது ஒருத்தர் போய்கொண்டே இருக்காங்க. என் தம்பி போய்விட்டான், தங்கச்சி போய்விட்டாள், இன்னொரு தங்கை விதவையாகி விட்டாள், நண்பர்கள் போய்விட்டார்கள். போக வேண்டியவர்கள் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். போனவர்கள் திரும்புவதும் கிடையாது. ஆனால், உறவினர்களைவிட நண்பர்கள் போகும்போது பார்த்துக் கொண்டிருப்பதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. என் பங்குக்கு வாழ்க்கையின் கோப்பையில் என்ன என்ன இருந்ததோ, அது எல்லாவற்றையும் நான் பருகியாகிவிட்டது. இப்போது நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒன்றே ஒன்றைத்தான். ஒரு நாடகமேடை போன்ற இந்த அமைப்பில், எந்தப் பக்கமாக நான் வெளியேறப் போகிறேன் என்பதுதான் அது. அல்லது நடுவிலேயே போகப் போகிறேனா? எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. பயமும் இருக்கிறது. அதே சமயத்தில் பயம் இல்லையென்றும் சொல்லவேண்டும். பயந்தால் அது என்னை விட்டுவிடப் போகிறதா என்று ஒரு தெம்பும் இருக்கிறது. என்னுடைய வேலை என்ன? எதற்கு இங்கே வந்தேன்? எழுத்து என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. காலம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும். அது யாருக்காகவும் காத்திருக்காது. நான் இப்போது பேசிக்கொண்டே இருக்கிறேன். எந்த சமயத்தில் முடிவு வரும் என்று தெரியவில்லை. அதனால் அந்த அவசரத்திலேயே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்த வரைக்கும் என்ன சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லிவிட வேண்டும் என்னும் அவசரத்தில் பேசுகிறேன். ஆனால் எதுவும் என்னுடையதில்லை. நீ எதனையும் எடுத்துக் கொண்டு போகமுடியாது. எடுத்துக்கொண்டு எங்கேதான் போவே! கையில் காசு இல்லையே! காசு இருந்தாலும்தான், எங்கேப் போய என்ன பண்ணமுடியும்?

"ஒருமுறை என் தம்பி இங்கே வந்திருந்தான். என்னிடம் அவன் கேட்டான்: ''ஏண்டா நாம் வாழ்ந்து விட்டோமே, இத்தனை நாளும். நாம் என்னத்தை சாதித்திருக்கிறோம். நீயாவது ஒரு எழுத்தாளன். நான் என்ன பண்ணியிருக்கிறேன். எனக்கு ஒன்றும் தெரியலையே''. உடனே எனக்கு ஒரு திகில் ஏற்படத்தான் செய்தது. இப்போது நான் என்னதான் எழுதியிருந்தாலும், மக்களுக்கு மறதி ஜாஸ்தி. தி.ஜானகிராமனை இப்போது யார் கொண்டாடுகிறார்கள். ஏன் த.நா.குமாரசுவாமியையே இப்போது யாருக்கு நினைவிருக்கிறது. கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி பெயர்களை யார் சொல்கிறார்கள்? பெயர்களை குறிப்பிட்டு சொல்வது அவ்வளவு முறையல்ல. அதனால் நான் இதனை அத்துடன் விட்டுவிடுகிறேன். இப்படியாக என்னதான் செய்து, என்ன பிரயோஜனம் என்று தோன்றுகிறது.''

''பக்கத்து மாநில எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது, தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம், விருதுகள் எல்லாம் குறைவுதான். பலருக்கும் அது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது. உங்களுக்கு எப்படி இருக்கிறது?''

''விருதுகள் என்று கணக்கிட்டால் பத்து, பன்னிரெண்டு வாங்கியிருக்கிறேன். சாகித்ய அகாதமி, கலைமாமணி... இப்படியே போய் கொண்டே இருக்கும். சங்கராச்சாரியார், பெரியவர், ஒரு விருது கொடுத்திருக்கிறார். நான் கொஞ்சம் அதனை பெரியதாகத்தான் நினைக்கிறேன். அவருக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய எழுத்தில் ஆன்மிகத்தின் சாயல் இருப்பதால், அவர் கொடுத்திருக்கிறார். அப்பறம் ஞானபீட விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப் பட்டிருக்கிறேன். நான் பிராமணன், அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது. எனவே இங்கே தி.மு.க. ஆட்சியில், எனக்கு எந்த விருதும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஜெயலலிதா இருந்ததால் கலைமாமணி கிடைத்தது. அது கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? நான் அதையெல்லாம் போட்டுக் கொள்வதே கிடையாது. டாக்டர் பட்டம் வேறு, யாரோ ஒருவர் கொடுத்திருக்கிறார். இதற்கும் மேல் மற்றவர்களால் எனக்கு என்னதான் தந்துவிட முடியும்.''

''உங்கள் எழுத்துக்களைப் படித்துவிட்டு வாசகர்களிடம் இருந்து வந்த எதிர்வினைகள் பற்றி...''

''ஞானமூர்த்தி நகரில் இருக்கும் போது ஒருவர் வந்தார். என் கையை பிடித்தார். கண்ணில் ஒத்திக் கொண்டார். அழுகிறார், அழுகிறார், அரைமணி நேரமாகத் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். அப்புறம் நான் வருகிறேன் என்றுவிட்டு போய்விட்டார். எதுக்கு வந்தார்? என்ன சொல்ல வந்தார்? என்ன சொன்னார்? அழுகை மூலமாக, அவர் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டாரா? தெரியவில்லை. இன்னொருவர் வந்தார், இலங்கையிலிருந்து. ''உங்களைப் பார்க்கவேண்டும் என்று முப்பது வருடமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் பார்க்காமலேயே செத்துப்போய் விடுவேனோ என்று நினைத்தேன். அகதியாக இந்த ஊருக்கு வந்தேன். அகதியாக வந்தாலும் உங்களை பார்த்துவிட்டேன்'' அப்படின்னார். இன்னொரு ரசிகர், ''நீங்க ஏன் டாய்லெட்டுக்கு தண்ணீர் ஊத்துகிறேள். நான் வந்து ஊத்துகிறேனே'' என்றார். இது என்ன அநியாயமாக இருக்கிறது.''

''கடைசியா...''

''எழுத்துக்கோசரம் நான் எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை. என் இஷ்டப்படிதான் எழுதி வந்திருக்கிறேன். அப்படி எனக்கு எழுதவும் முடிந்திருக்கிறது. இனிமே காசு வந்து, எனக்கு என்ன ஆகவேண்டும்? எனக்கு எல்லாமே கிடைத்துவிட்டது. சோறுதான் இப்போதைக்கு வேண்டும். அதுவும் என்னால் அதிகம் சாப்பிடக்கூட முடியாது. வயிறு குறுகிப் போய்விட்டது. கை கால் ஓய்ந்துவிட்டது. உங்களைப் போல், யாராவது ஒருவர் வந்து பேட்டி கேட்கிறார்கள். கேட்டால் உடனே கட்டாயம பேசியாக வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? அவசியமே கிடையாது. ஆனால் என்னமோ, மரியாதைகளை மட்டும் விடுவதற்கு இன்னும் நான் தயாராக இல்லை. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்பறம் நீங்களே, ''அவருக்கு வயதாகிவிட்டது. அவரைப் போய் தொந்தரவு செய்யவேண்டாம்'' என்று விட்டுவிடுவீர்கள். இல்லையென்றால் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார் என்று நினைப்பீர்கள். ஆனால் எப்போது, நான் சொல்வது உங்களுக்கு அலுக்காமல் போகிறதோ, அப்போது வரைக்கும் நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன்."
சந்திப்பு: தளவாய் சுந்தரம்
படங்கள்: புதூர் சரவணன்
('குமுதம் ஜங்ஷன்' பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதன் சுருக்கமான வடிவம் 'ஜங்ஷன்' இதழில் வெளியானது. )