30 January 2009

படித்ததில் பிடித்தது

கவிதை


உறங்கிக் கொண்டிருக்கிறேன்

ஜெ. பிரான்சிஸ் கிருபா



நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
என் தூக்கத்தின் கதவுகளை தலையால் முட்டாதீர்கள்
ஒரு கையால் வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்
மறு கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்
மேலும் கைகள் இருந்தால் கடவுளாகிக் கொள்ளுங்கள்
எனக்கொன்றும் வருத்தமில்லை
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

வேலு தம்பி வந்தால் என்ன
வில்வரத்தினம் வந்தால் என்ன
தமிழ்ச்செல்வன் வந்தால் என்ன
சிவரமணி வந்தால் என்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

குண்டுகள் விழட்டும்
தோட்டாக்கள் வெடிக்கட்டும்
தமிழன் உடல் தாறுமாறாய் கிழியட்டும்
தமிழச்சி முலையை நாய் கவ்விச் செல்லட்டும்
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

நாடுகள் கூடட்டும்
மாநாடுகள் பேசட்டும்
வீடுகள் அற்றவர்கள்
காடுகள் சேரட்டும்
தடைகளை போடட்டும்
தவிடு பொடியாக்கட்டும்
எனக்கென்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

அவர்கள் சூழட்டும்
கூடி நின்று பதுங்கு குழியில் மோலட்டும்
இறந்து கொண்டிருப்பவர்கள் காயங்களில்
உப்பு எரியட்டும்
அம்மா என்று பிளந்த வாயிலும்
மூத்திரத் துளிகள் உதிரட்டும்
எனக்கென்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

கிராமம் நகரம் யாவும் மரணம்
என்றான தேசத்தில்
ஒரு பெட்டை நாய்கூட
வாழ அஞ்சுகிற கொடுமையான வீதியில்
இலைகளோ கிளைகளோ
வாய்பொத்திக் கொள்ளும் பொழுது
இரவானால் என்ன பகலானால் என்ன எனக்கு?
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

சிவகாம சுந்தரியம்மன் நடை திறப்புக் காண
மனசுக்குள்ளேயே போய்க் கொண்டிருக்கிறார்கள்
பவானியும் செல்வியும் மைதிலியும் மதுசூதனனும்
நடை திறந்தால் என்ன மூடினால் என்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

போர்தான் தேநீர்
போர்தான் சிற்றுண்டி
போர்தான் சோறு
போர்தான் வாழ்வு
போர்தான் மரணம் என்றான நிலத்தில்
தமிழ் நதியாக ஓடட்டும்
கடல் மணியாக ஒலிக்கட்டும்
எனக்கென்னநான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

விழிக்கும்போது
என் கல்லறை வெடிக்கும் ஓசையை
காதுள்ளவர்கள் கேட்கலாம்
கண்ணுள்ளவர்கள் பார்க்கலாம்

('உயிர் எழுத்து', ஜனவரி 2009 இதழில் பிரசுரமாகியுள்ள கவிதை)

05 November 2008

ஆல்பம்


சந்திப்பு


சென்னை இலக்கியச் சந்திப்புகளில், அதன் பிறகு இன்று வரை அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று பெருமைகொள்ளும் விதமான ஒரு அபூர்வமான நிகழ்வு இது. சி.எல்.எஸ். அமைப்பு சென்னையில் நடத்திய இந்திய எழுத்தாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்டது. எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் சேகரிப்பில் இருக்கிறது. முதல் வரிசையில்; வெள்ளை வேஷ்டி சட்டையில் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பவர்: க.நா. சுப்பிரமணியம்; நான்காவதாக நிற்பவர்: கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த்; அடுத்து நடுவில் கையை கட்டிக்கொண்டு நிற்பவர் ஆர்.கே. நாராயண், கருப்பு கோட்டுடன் நிற்பவர்: ஆங்கில எழுத்தாளர் ராஜாராவ்; இரண்டாவது வரிசையில்: இடதுபக்கம் இருந்து இரண்டாவதாக நிற்பவர்: சிவபாதசுந்தரம்; மூன்றாவது வரிசையில்: இரண்டாவது நிற்பவர்: சி.சு. செல்லப்பா. மற்றவர்கள் தெரியவில்லை. யாராவது, தெரிந்தவர்கள் சொன்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

18 September 2008

தொடர் - அறிமுகம்


உலகைப் பாதித்த கற்பனை மனிதர்கள்

ராஜகோபால்
தளவாய் சுந்தரம்

"மனிதன் ஒரு நாணல். இயற்கையில் உள்ளவற்றில் மிகவும் பலகீனமானவன் அவனே. ஆனால், அவன் ஒரு சிந்திக்கும் நாணல். சிந்தனையில்தான் மனிதனின் பெருமை பொதிந்துள்ளது. மனிதனின் மீட்சிக்கு நாம் நமது கற்பனை, சிந்தனை தவிர வேறொன்றையும் சார்ந்திருக்க முடியாது."
- பாஸ்க்கால்

பாஸ்க்காலின் உலகப் புகழ்பெற்ற இந்த மேற்கோள், நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளது. ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தின் போதும் நெருக்கடியின் போதும் ஏதோவொரு கற்பனை பாத்திரத்தை நினைத்துக் கொள்கிறான். அக்கதாபாத்திரம்தான் அவன் வாழ்க்கையை வழி நடத்துகிறது. நம் அன்றாட பேச்சு வழக்கில்கூட இக்கற்பனை பாத்திரங்கள் எளிதாக ஊடுறுவி விடுகிறார்கள். "அவனொரு ஒநாய்; டிராகுலா!", "அவனுக்கு பெரிய அரிச்சந்திரன்னு நினைப்பு!" போன்ற வாக்கியங்கள் கற்பனை நம் வாழ்க்கையை பாதித்தற்கான தடயங்கள். அரிச்சந்திரன் நாடகம் காந்தியின் வாழ்க்கையில் நிகழ்த்திய பாதிப்பை நாம் அறிவோம். நண்பர்கள், உறவினர்கள் போலவே இந்தக் கற்பனை மனிதர்களும் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அப்படி மிகவும் அதிகமாக இந்த உலகைப் பாதித்த, எப்போதுமே இந்த உலகில் வாழ்ந்திராத கற்பனை மனிதர்களைப் பற்றிய தொடர் இது.

முதலில்... டிராகுலா!

(விகடன் புக் கிளப் உறுப்பினர்களுக்காக வெளியிடப்படும் ‘விகடன் புக்ஸ்’ இதழில் ராஜகோபாலுடன் இணைந்து எழுதியது இது. நான் விகடன் நிறுவனத்தில் இருந்து விலகிய பிறகு இதனை தொடர முடியவில்லை. இப்பொழுது, இந்த பிளாக்கில் தொடரும் திட்டம்.)