Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

03 April 2025

நேர்காணல்

என் மனைவி ஹேமா

ஸ்டெல்லா புரூஸ்



நான் ‘ஆனந்த விகடன்’ இதழில் பணியாற்றிய போது, எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் அவர்களை நேர்காணல் செய்து எழுதியது இது. அப்போது, ஸ்டெல்லா புரூஸ் மனைவி ஹேமா, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து வாரம் இருமுறை டயாலிஸிஸ் செய்யவேண்டிய நிலையில் இருந்தார். அதனை முன்னிட்டு இந்த நேர்காணல் செய்யப்பட்டது. 

‘‘ரொம்பவும் அற்புதமான, அழகான வாழ்க்கை எங்களுடையது. தகுதி, அந்தஸ்து, ஈகோ... இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு வாழணும்னு தீர்மானித்து வாழ்ந்தது. எந்த அட்டவணையும் குறிக்கோளும் கிடையாது; பதட்டம் இல்லை. சமைத்து சாப்பிடுவது, புத்தகங்கள் படிப்பது, இலக்கியம் பேசுவது, எழுதுவது, கோயில்கள், பாண்டிச்சேரி அன்னை ஆஸிரமம்... இப்படியே போய்க் கொண்டிருந்த வாழ்க்கை. கடந்த முப்பது வருஷமா என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு கேட்டா, சும்மா இருந்தோம்னுதான் சொல்லணும். பலரும் கனவு காண்கிற மாதிரியான ஒரு வாழ்க்கை. ஒருநாள் எல்லாமே சுக்குநூறாகச் சிதறிவிட்டது. 

நான் பிறந்தது கோட்டைப்பட்டி ஜமீன் என்ற பெரிய பணக்கார குடும்பத்தில். விருதுநகர் பள்ளிக்கூடத்திலும், பிறகு மதுரை அமெரிக்கன் காலேஜிலும் படித்தேன். அப்போ நிறைய இந்திப் படங்கள் பார்ப்பேன். ‘ஆவாரா’, ‘சங்கம்’... எல்லாம் மதுரையில் பார்த்துதான். எனக்குள்ள ஒரு இந்தி சினிமா ஓடிக்கொண்டே இருக்கும். அதன் பாதிப்பில் பம்பாய்தான் நமக்கான இடம், இந்தி சினிமாவில் போகலாம் என்று முடிவுசெய்து கல்லூரியைப் பாதியில் நிறுத்திவிட்டு பம்பாய் புறப்பட்டேன். ஆனால், சினிமாவுக்குப் போகிறேன் என்று சொன்னால் வீட்டுல விடமாட்டாங்க. எங்க தாத்தாவுக்குப் பம்பாயில் தொழில் இருந்தது. அதனைப் பார்த்துக்கொள்கிறேன்னு சொன்னேன். அப்போது எனக்கு 18 வயசு. ஆனா, என் மன அமைப்புக்கு பம்பாயும் தொழிலும் சரிப்பட்டு வரலை. மீண்டும் ஊருக்கு வந்து கொஞ்ச நாள் இருந்துவிட்டு, சென்னைக்கு வந்தேன். திருவல்லிக்கேணி, நல்லதம்பி கோவில் தெருவில் மேன்ஷனில் ரூம் எடுத்துத் தங்கினேன். கல்யாணம் செய்துகொள்ளாமல், வேலைகள்னு எதுவும் செய்யாமல் கடைசிவரை அப்படியே வாழ்க்கையை வாழ்ந்துவிடுவது என்பதுதான் என் திட்டம். என் முடிவுகள் அப்பாவை மிகவும் சங்கடப்படுத்தின. டி.வி.எஸ். எஜென்ஸி எடுத்து, கிண்டியில் ஒரு ஷோ ரூம் திறந்துத் தந்தார். சரின்னு அவருக்காக ஒப்புகொண்டு கம்பெனியைப் பார்த்துக்கொண்டேன். 

அப்போது, ஒரு காதல் துளிர்த்தது. நல்லதம்பி கோவில் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி அவள் வீடு. பஸ்ஸில் பார்த்ததுதான். 1ஆம் நம்பர் பஸ் பிடித்து, மவுண்ட் ரோட்டில் இறங்கி, வேற பஸ் பிடித்து நான் கிண்டி போவேன். அவள் பாரிஸ் போவாள். நிறையப் படித்த ஐயங்கார் குடும்பம்; மிகப் பிரமாதமான அழகி. எக்கச்சக்கமான பசங்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவங்களுக்கு மத்தியில் எனக்கு என்ன செய்வது, எப்படி அவளை அணுகுவதுன்னு தெரியலை. அவளுக்காக பாரிஸ் வரைக்கும் போய், அங்கிருந்து கிண்டி போகத் தொடங்கினேன். சாயங்காலமும் இதே மாதிரி. அதுதவிர வேற வேலைகளே இல்லை. கம்பெனி நம்ம கம்பெனிதான. எனவே, நினைச்ச நேரத்துக்கு திறக்கலாம், அடைக்கலாம். ஒரு நாள் பஸ்ஸில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவள் ஹேண்ட் பேக்கைத் திறந்து, கர்சிப்பை எடுத்து சீட்டில் போட்டுவிட்டு பிறகு கையால் அதைக் கிழே தள்ளினாள். எனக்கு என்னைத் தள்ளியது மாதிரி இருந்தது. உடனே பஸ்ஸில் இருந்து இறங்கிவிட்டேன். அன்று ஷோ ரூம் போகலை. 

அப்புறம் 8 மாதங்கள் அவளைப் பார்க்கவில்லை. ஒருநாள் தங்கைக்குப் புடவை வாங்குனும்னு மைலாப்பூரில் கடைக்குள் நுழைந்தால்... நான் காலமெல்லாம் காத்திருந்த பேரழகு... எதிர்பார்க்காத இடத்தில் என் எதிரே உட்கார்ந்திருந்தது. எப்படி ஒருவருக்கொருவர் ஹலோ சொல்லிக்கொண்டோம் என்பது ஆச்சரியம்தான். நான், ‘‘தங்கைக்குப் புடவை வாங்க வந்தேன்’’ என்றேன். அவள், ‘‘எங்க பெரியம்மா ஆத்துல கல்யாணம். பட்டு வாங்க வந்தோம்’’ என்றாள். அப்ப, ‘‘என்ன உங்க ஆபிஸ்ல வேலை பார்க்கிறவரா’’ன்னு அவள் பெரியம்மா கேட்டாள். ‘‘இல்லை தெரிஞ்சவர்’’னு சொன்னாள். எனக்கு பயங்கர சந்தோஷம்! கடையில் இருந்து போகும்போது திரும்பி என்னைப் பார்த்தாள். அதில் ஒரு செய்தி இருந்தது. 

வழக்கமாக தங்கைக்கு புடவை வாங்குவதைவிட அதிக விலையில் ஒரு புடவை வாங்கி, கடை பில்லோட பின்பக்கமே, ‘டியர் பிரண்ட். முக்கியமான விஷயம் உன்னுடன் பேச வேண்டியிருக்கிறது. பத்து நிமிஷம். ஆபீஸ் முடிந்து வரமுடியுமா’ன்னு எழுதினேன். அடுத்த நாள் பஸ்ஸில் அவளுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அவள் புடவையை எடுத்து பேக்குக்குள் வைத்துக்கொண்டாள். அன்னைக்கும் நான் பஸ்ஸைவிட்டு கிழே இறங்கிவிட்டேன்! 

அம்மா, அப்பா, தம்பி, தங்கைகளைப் பார்ப்பதுக்காக அடிக்கடி நான் ஊருக்குப் போவேன். அதை வைத்து, ஊரில் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்று சந்தேகப்பட்டு, என்னிடமே கேட்டுவிட்டாள். அவளிடம் இருந்து அந்த வார்த்தையை நான் எதிர்பார்க்கவில்லை. இதில பெரிய முரண் என்னன்னா? அதன்பிறகு அவள் திருமணமாகி ஜெர்மனி போனாள். அங்கே போய் பார்த்தால், மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இதுதான் ‘அது ஒரு கனாக்காலம்’ நாவல். 

அந்த காதலுக்குப் பிறகு சுத்தமாக லௌகீக வாழ்க்கையில் எனக்கு பிடிப்பு இல்லாமல் ஆகிவிட்டது. தொழில், குடும்பம் எல்லாத்துல இருந்தும் வெளியேறிவிட்டேன். கிண்டி ஷோ ரூமை மூடிவிட்டேன். சம்பாதிப்பதுக்குன்னு நான் கடைசியா செய்த வேலை அதுதான். அப்புறம் எழுத்துகள் மூலமாக கொஞ்சம் பணம் வந்தது. சினிமா கதை விவாதங்களுக்குக் கூப்பிடுவார்கள். அப்புறம் டி.வி. சீரியல்கள்... இது எல்லாமே நான் எதிர்பாராமல், என் முனைப்பு இல்லாமல் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள். வீட்டில் இருந்து என் பங்குக்கு வந்த பணத்தை, பிரித்து வங்கிகளில் டெபாஸிட் செய்துவிட்டேன். அதிலிருந்து வரும் வட்டியில் கடைசிவரை வாழ்க்கையை ஓட்டுவது என முடிவுசெய்து கொண்டேன். அப்புறம் ஒவ்வொரு ஞானிகளா தேடிப் போவது, அவர்களது புத்தகங்களைப் படிப்பது, உரைகளைக் கேட்பது... என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. மேன்ஷன் நண்பர்கள், ‘‘ஓய்வுபெற்ற வயதான ஆள்மாதிரி இருக்கீங்களே’’ன்னாங்க. பதினெட்டு வருஷம் அந்த மேன்ஷனில் இருந்தேன். 

எதிர்பாராமல்தான் நான் கதைகள் எழுதத் தொடங்கினேன். ‘விகடன்’ பாலசுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்ததுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பம். என் நெருங்கிய தோழியின் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை, அவள் கேட்டுக்கொண்டதால் ஒரு திரைக்கதையாக எழுதினேன். அதன்பிறகு அவள் அமெரிக்கா போய்விட்டாள். அந்தத் திரைக்கதை அப்படியே இருந்தது. அதனை நாவலாக எழுதலாம் என தோன்றியது. ‘நான் இப்படியொரு நாவல் எழுதும் திட்டம் வைத்திருக்கிறேன். அதனை ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர்கதையாக பிரசுரிக்க முடியுமா?’ என்று நாலு வரியில் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘எழுதி அனுப்புங்கள்’ என்று உடனே பதில் வந்தது. ஒரு மாதத்தில் எழுதி முடித்தேன். அதுதான், ‘ஒருமுறைதான் பூக்கும்’ நாவல். என் முதல் தொடர்கதை. அடுத்த வருஷம் ‘அது ஒரு கனாக்காலம்’; ‘மீண்டும் அந்த ஞாபகங்கள்’னு தொடர்ந்து எழுதினேன். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் என் எழுத்துகள். 

‘ஒருமுறைதான் பூக்கும்’ நாவலைப் படித்துவிட்டு ஹேமான்னு ஒரு பொண்ணு எனக்குக் கடிதம் எழுதினாங்க. தொடர்ந்து என் எல்லாக் கதைகளையும் பற்றி விடாமல் எழுதிக்கொண்டே இருந்தாங்க. ஒருநாள், ‘உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். ஜே. கிருஷ்ணமூர்த்தி எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தி பிடிக்கும்னு ஆனந்தவிகடனில் எழுதியிருந்தாங்க. அவரைப் பற்றி உங்ககிட்ட பேச விரும்புறேன்’னு எழுதியிருந்தாள். சந்தித்தோம். இரண்டு, மூன்று வருடங்கள் நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு சேர்ந்து வாழலாம் என முடிவுசெய்தோம். அப்ப எனக்கு 46 வயசு; அவளுக்கு 32. கோயில் பட்டாச்சார்யார் பரம்பரையில் வந்தவள். கடலூர் பக்கத்தில் திருவந்திபுரம் என்னும் ஊர். வைஷ்ணவ இலக்கியம் தொடங்கி, சமகால கவிதைகள் வரைக்கும் எக்கச்சக்கமாக படித்திருந்தாள். ஞானக்கூத்தன் மிகவும் பிடித்தக் கவிஞர். ஆரம்பகால ‘கணையாழி’யில் கவிதைகள் எழுதி இருக்கிறாள். மத்திய அரசு வேலை கிடைத்தது. அங்கிருந்த ஊழல்களைப் பார்க்கப் பிடிக்காமல் பத்தே நாளில் வேலையை விட்டுவிட்டாள். 

எங்க அம்மாவுக்கு ஹேமா பற்றி கடிதம் எழுதினேன். அம்மா, 10 பவுனில் ஒரு தாலி செய்து என் தம்பியிடம் கொடுத்து அனுப்பினார்கள். அதை ஹேமா கையில் கொடுத்தேன். வாங்கி, அவளே கழுத்தில் போட்டுக்கொண்டாள். இதோ 18 வருடங்கள் ஓடிவிட்டது. மிகவும் அமைதியான வாழ்க்கை. நினைச்சா புறப்பட்டு திருப்பதி போவோம். கும்பகோணம் போய் நாலு நாட்கள் இருப்போம். திருச்சி, சமயபுரம், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் கைலாசநாதர்... இப்படியே கோயில், கோயிலா போய்க்கொண்டே இருப்போம். பண்டிகை, உற்சவங்கங்களுக்குப் போகமாட்டோம். கோயில் பிரகாரங்கள், தனித்த அமைதி... பிடிக்கும். நிறைய புத்ததகங்கள் வாங்குவோம். வயதான காலத்தில் செங்கோட்டை பக்கத்தில் இளஞ்சி என்ற கிராமத்தில் செட்டிலாவது எனத் திட்டமிட்டிருந்தோம். அந்த ஊரில் அமைதியான முருகன் கோவில் ஒண்ணு இருக்கு. பக்கத்திலேயே குளிக்க குற்றாலம். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டோம். குழந்தை பிறந்தால், பிறகு அதன்கூடவே எல்லா ஆசாபாசங்களும் ஒவ்வொன்றாக வரும். 

ஹேமாவோட தங்கைதான் எழுத்தாளர் பிரேமா ஞானேஸ்வரி. நிறையக் கதைகள், நாவல் எழுதியிருக்காங்க. அவங்களுக்கு இருதயத்தில் பிரச்னை இருந்தது. எனவே, கல்யாணம் செய்துகொள்ளாமல் எங்ககூடவே இருந்தாங்க. சென்ற வருடம்தான் காலமானாங்க. அது ஹேமாவை அசைத்துவிட்டது. மனதளவில் மிகவும் பலவீனமாகிவிட்டாள். அம்மா வழியில் இவள்தான் கடைசி தலைமுறை. இவளோடு அந்தப் பரம்பரை முடிகிறது. ரொம்ப கவனமா இருப்பாள். வைஷ்ணவ சம்பிரதாயத்துப் படிதான் சாப்பாடு. கடுமையான உழைப்பாளி. பிரச்சினைன்னு எதுவுமே கிடையாது. போன வருஷம் நவம்பர் ஆரம்பத்துல திடிரென்று கடுமையான ஜூரம் வந்தது. அப்ப, ‘ஹெவி டோஸ் ஆன்டிபயாடிக்’ கொடுத்தாங்க. அன்னைக்கு இரவு சிறுநீரோட ரத்தமாகப் போனது. பதறி ஆஸ்பத்திரி போனோம். ஐ.சி.யு.க்கு மேலே சி.சி.யு. என்று ஒண்ணு இருக்கு. அங்கே அட்மிட் செய்துவிட்டார்கள். பத்து நாட்கள் அங்கே இருக்க வேண்டியிருந்தது. பல்வேறு பரிசோதனைகள், ஓட்டங்கள்... கடைசியில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது என்றார்கள். இப்போ, டயாலிஸிஸ் பண்ணிகொண்டே இருக்கிறோம். வாரத்துக்கு இரண்டுமுறை செய்யவேண்டும். டயாலிஸிஸ்ங்கிறது ஒரு முடிவு இல்லாத விஷயம். உடம்பு பலவீனமாகிக்கொண்டே போகிறது. அதைத் தேத்த ஊசிகள், மருந்துகள்... அப்புறம் அதனால் உண்டாகும் இன்பெக்ஸன். உடனே ஆண்டிபயாடிக் ஹெவி டோஸ் கொடுக்கிறார்கள். இப்படியே கொஞ்சம், கொஞ்சமா செலவு கூடிக்கொண்டே போகிறது. 

கொஞ்ச நாளில் நல்ல முன்னேற்றம் இருந்தது. சரியாயிரும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். திடீரென்று பின்னடைவு. மூச்சு வாங்கியது... மிகவும் இதமாக, சந்தோஷமா போய்க்கொண்டிருந்த வாழ்க்கை! முழுக்க சிதைந்து விட்டது. ஒரு மனிதனுக்கு சாபம் கொடுப்பதாக இருந்தால் இந்த நோயைக் கொடுக்க சொல்லலாம். அந்தளவுக்கு கொடுமையான விஷயம். 

மனைவி ஹேமாவுடன் ஸ்டெல்லா புரூஸ்

இந்த ஆறு மாதத்தில், டிவியை ஆன் செய்ததில்லை. பத்திரிகைகள் பார்க்கவில்லை. நான் பன்னிரெண்டு கிலோ குறைந்திருக்கிறேன். அவள் 20 கிலோ குறைந்திருக்கிறாள். சரியான சாப்பாடு கிடையாது, தூக்கம் கிடையாது. ஸ்டெல்லா புரூஸ் என்கிற கம்பீரம், அமைதி... எல்லாம் விழுந்து நொறுங்கிவிட்டது. சமாளித்து விடுவோம், நாமே சரி செய்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் யாரிடமும் எங்கேயும் உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. சில உறவினர்கள், நண்பர்கள் அவர்களாக உதவினார்கள். பணக் கஷ்டங்களைவிட தனிமைதான் பெரிய வேதனையாக இருக்கிறது. நாங்கள் இரண்டு பேர்தான் வீட்டில். குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்ற முடிவு தவறோ என்று இப்போது தோன்றுகிறது. 

வயதான காலத்துக்கு என்று திட்டமிட்டு வைத்திருந்த, வங்கி டெபாஸிட்கள் காலியாகிவிட்டது. இவ்வளவு செலவுகளைச் செய்வதுக்கு பேசாமல் போய்சேர்ந்துடலாம்னு மனசுல குழப்பம், சங்கடம், அழுகை... ஒருநாள் தற்கொலைக்கு முயற்சித்தாள். இப்ப எங்களிடம் கையில் எதுவுமே இல்லை, நம்பிக்கையும் இல்லை. இதில் இருந்து சீக்கிரம் விடுதலை வேண்டும்கிறதுதான் என் ஒரே வேண்டுதல். மரணம் சம்பவிக்கனும் அல்லது நோய்க்கு முடிவு வேண்டும். அது தள்ளிக்கொண்டே போக, என் நம்பிக்கைகள் எல்லாம் தளர்ந்து நொறுங்கிவிட்டேன். என்ன செய்வதுன்னே தெரியலை’’ என்று நம் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார் ஸ்டெல்லா புரூஸ். அவர் குரல் உடைந்திருந்தது. கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள்!


25 December 2015

சென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்

எந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது?

(புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது)


கன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் பற்றிய பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக ஆறுகள் பக்கம் வசிப்பவர்கள், தன் வீட்டுக்குள் பெருக்கெடுத்த மழை நீர் எங்கெல்லாம் இருந்து வந்தது? சென்னைக்குள் மட்டுமல்லாமல் சென்னைக்கு வெளியேயும் எங்கெல்லாம் மழை பெய்யும்போது தாங்கள் கவனமாக இருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகிறார்கள். சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சிறிய, பெரிய ஏரிகள் எத்தனை? எந்தந்த ஏரிகளின் உபரி நீர் எந்த ஆறுகள் வழியாக செல்கிறது? அந்த ஆறுகள் சென்னைக்குள் எந்தந்தப் பகுதிகள் வழியாகச் செல்கிறது? ஒரு பருந்துப் பார்வை.

சென்னையைச் சூழ்ந்துள்ள ஏரிகள்


செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி, புழல், மதுராந்தகம் போன்ற பெரிய ஏரிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் 3 மாவட்டங்களிலும் சிறியதும் பெரியதுமாக கிட்டத்தட்ட 4000 ஏரிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 1995, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1823 ஏரிகள் தவிர மற்றவை சென்னைக்குள்ளேயே உள்ளன.

இந்த மூன்று மாவட்டங்களில் பெய்யும் மழை மட்டுமல்லாமல் வேலூர் மாவட்டம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்யும் மழை நீரும் பாலாறு உள்பட பல்வேறு ஆறுகள், ஓடைகள் வழியாக இந்த ஏரிகளுக்கு வருகிறது. ஆனால், இந்த எல்லா ஏரிகளின் உபரி நீரும் சென்னை நோக்கி வருவதில்லை. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் வட்ட ஏரிகளின் உபரி நீர், தென்னேரியில் கலந்து, அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாய் வழியாகச் சென்று, பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. சங்கிலி தொடராக இணைக்கப்பட்டுள்ள உத்திரமேரூர், கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளின் நீர், கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது. மதுராந்தகம் ஏரி உபரி நீர் மீண்டும் கிளியாற்றுக்கு சென்று ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. பாலாற்றில் கலப்பவை அப்படியே கடலுக்குச் செல்கிறது. இதுபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1000 ஏரிகளின் உபரி நீர் கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. மீதமுள்ள சுமார் 2000 ஏரிகளின் உபரி நீர் சென்னைக்குள் நுழைந்தும் சென்னையை ஒட்டி உரசியும் சென்று கடலுடன் கலக்கிறது.

அடக்கமான அடையாறு


அடையாறு பாதை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாகாணியம் மலையம்பட்டு ஏரியில் உற்பத்தியாகும் அடையாறு காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் 42.5 கிமீ தூரம் பயணித்து பட்டினப்பாக்கம் அருகிலும் முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது. தமிழகத்தின் மற்ற ஆறுகளைவிட வித்தியாசமான ஆறு இது. மேட்டிலிருந்து சரிவை நோக்கி பாயும் ஆறுகளின் ஓட்டத்துக்கு மாறாக பெரும்பாலான பகுதிகளில் ஒரே தளமாக உள்ளது அடையாறு. இதன் காரணமாக இந்த ஆற்றில் ஓடும் நீர் மற்ற ஆறுகள் போல் இல்லாமல் நின்று நிதானித்து மெதுவாகவே கடலுக்குச் சென்று சேரும்.

அடையாறுக்கு அதிகளவு தண்ணீர் கொடுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி கடல் மட்டத்திலிருந்து 62 அடி உயரத்தில் உள்ளது.  அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து, சென்னை வெளிவட்டச் சாலையை தொடும்போது, கடல் மட்டத்திலிருந்து 35 அடிக்கு இறங்குகிறது. தொடர்ந்து மேலும் சரிந்து மீனம்பாக்கம் அடையும்போது கடல் மட்டத்திலிருந்து 12 அடி இறங்கிவிடுகிறது.

இனிமேல்தான் பிரச்சினை. மீனம்பாக்கத்துக்குப் பிறகு கடலைச் சேர்வது வரைக்குமான அடையாறு பயணம் மிகச் சிரமமானது. மீனம்பாக்கத்துக்குப் பிறகு பல இடங்களில் 10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது அடையாற்றின் படுகைகள். இதனால், தங்கு தடையின்றி செல்ல வேண்டிய தண்ணீர், பல இடங்களில் தேங்கி அப்பகுதிகளை நிறைத்த பின்னரே அடுத்த இடத்திற்கு நகர்கிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 12 அடிக்குத் தாழ்ந்த அடையாறு, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்புகையில், அதிக தண்ணீர் வரும் போது, 35 அடி உயரம் வரை தேங்கிய பின்பே வழிய நேர்கிறது. விமான நிலையத்தைவிட்டு வெளியேறி நந்தம்பாக்கம் வரும்போது 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. ஆனால், அடுத்துவரும் ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாறு படுகை 30 அடி உயரமாக இருக்கிறது. எனவே, நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து காசி தியேட்டர் பாலம் வரும்போது, ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாறு படுகை உயரம் வரை நின்று தேங்குகிறது. காசி தியேட்டர் பாலம் தாண்டி திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி 12 அடி, அன்னை வேளாங்கண்ணி பள்ளி மற்றும் கல்லூரியை ஒட்டி வரும்போது 28 அடி, சைதாப்பேட்டை பாலத்தை நெருங்கும் முன் 12 அடி, பாலத்தைக் கடந்து ‘டர்ன்பல்ஸ் சாலைபாலத்தை அடுத்து மீண்டும் 28 அடி என ஏறி இறங்கியே இருக்கிறது அடையாற்றுப் படுகை. இதனால் உயரமான இடங்களில் எல்லாம் தேங்கியே நகர வேண்டும். திடீர் நகரில் கடல்மட்டத்திற்கு சமமான நிலையை அடையும் அடையாறு, அங்கிருந்து கடல்வரை முழுக்க தேங்கியே வழிகிறது.

அடையாற்றின் சராசரி கொள்ளளவு 39,000 கன அடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 70,000 கனஅடி. அடையாற்றின் ஏற்ற இறக்கப் பயணம், ஆக்கிரமிப்பால் ஆற்றின் கொள்ளளவு குறைந்துள்ளது புரிந்துகொள்ளப்படாமல் அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதான் இந்த வருடம் சென்னையை அடையாறு மூழ்கடிக்க காரணம் என சில நீரியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சென்னையில் அடையாறு வழித்தடம்


குன்றத்தூர்அனகாபுத்தூர்மதனந்தபுரம்பொழிச்சலூர்மீனம்பாக்கம் விமான நிலையம்ராணுவப்பகுதி, மணப்பாக்கம், ராமாவரம், கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், அடையார்

அடையாறுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது?


ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், இரும்புலியூர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், கண்ணந்தாங்கல், மாம்பாக்கம், வெங்காடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், சீக்கராயபுரம், சோமங்கலம், அமரமேடு, குன்றத்தூர், கோவூர், மாங்காடு, பெரியபணிச்சேரி, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, காவனூர், பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் அடையாறு வழியாகச் சென்றுதான் கடலில் கலக்கிறது. மேலும் பாப்பான் கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம் இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், ஒரத்தூர் ஓடை ஆகிய கால்வாய்கள் வழியாக வடியும் நீர்களும் அடையாறுக்கு வந்து சேர்கின்றன.

கூவம் ஆற்றின் வழியிலுள்ள ஜமீன்கொரட்டூர் அணைக்கட்டு, கூவம் நீர் எப்போதும் கடலுக்கு செல்லும் வகையிலும்ஷட்டர்கள் திறந்தால் பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆக கூவத்திலிருந்து ஒரு பகுதி தண்ணீரும் அடையாறுக்கு வரும்.

இவை தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறு வாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 19 சதவிகிதமும் அடையாற்றில் கலக்கும்.

பெருமைக்கார கூவம்


கூவம் பாதை
வேலூர் மாவட்டத்தில் ஓடும் கல்லாறு, சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் கூவம், கொசஸ்தலை என இரு ஆறுகளாகப் என பிரிகிறது. இதில் கூவம் திருவள்ளூர் மாவட்டத்தில் 40 கி.மீ. பயணம் செய்து பருத்திப்பட்டு அணையைக் கடந்து சென்னைக்குள் நுழைகிறது. சென்னைக்குள் 32 கிமீ பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் கலந்ததால் இதற்கு கூவம் என்னும் பெயர் வந்தது. 

‘தென்னிந்தியாவின் தேம்ஸ்’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பெருமை வரலாறு உடையது கூவம். இரண்டாயிரம் ஆண்டுகளாக கூவம் ஆற்றில் வாணிகம் நடந்து வந்திருக்கிறது. ரோமானியர்கள் இந்த ஆற்றில் பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்வளவு கலாச்சார புகழை தாங்கி நிற்கும் கூவம், 1960-க்குப் பிறகுதான், நமது தவறான நீர் மேலாண்மைக் காரணமாக சீர்கெடத் தொடங்கியது.

கூவத்தின் சராசரி கொள்ளளவு 19,500 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 22,000 கனஅடி. அடையாறு அளவுக்கு இல்லாவிட்டாலும், சென்னையின் ஏற்ற இறக்கமான நிலமட்டம் காரணமாக கூவமும் நின்று நிதானித்துதான் கடல் நோக்கி செல்கிறது.

சென்னையில் கூவம் வழித்தடம்


பருத்திப்பட்டு(ஆவடி)பூவிருந்தவல்லி, திருவேற்காடு, வானகரம்நெற்குன்றம்பாடிக்குப்பம், என்.எஸ்.கே. நகர்செனாய் நகர்சேத்துப்பட்டுஎழும்பூர், ஸ்பர்டேங்க், சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பாலம்

கூவம் நதிக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது?


திருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் உபரி நீரும், கூவத்தின் தாய் நதியான கல்லாறு நீரில் ஒரு பகுதியும் கூவத்தில் செல்லும். இது தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 27 சதவிகிதம் கூவம் ஆற்றில் கலக்கும்.

கூவத்தின் சகோதரி கொசஸ்தலை


கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் பாதை
வடசென்னையில் ஓடும் ஆறு கொசஸ்தலை. ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகிவேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கம் வழியாகத் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழைந்து, எண்ணூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது கொசஸ்தலை ஆறு. ஒரு பகுதி தண்ணீர் சீமாவரம் ஆற்றின் வழியாகவும் கடலுக்குச் செல்கிறது. இதன் நீளம் சுமார் 136 கிமீ.

கேசாவரம் அணைக்கட்டில் இரண்டாகப் பிரியும் கல்லாறு கிளைகளில் இதுவும் ஒன்று, மற்றொன்று கூவம். கொசஸ்தலை ஆற்றின் பாதையில்தான் பூண்டி நீர்த்தேக்கம் உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டலம், ஞாயிறு, சடையங்குப்பம், பூண்டி உள்ளிட்ட 550 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆறு வழியாகத்தான் கடலுக்குச் செல்கிறது. இந்த ஆற்றின் சராசரி கொள்ளளவு 1,10,000 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 1,25,000 கனஅடி.

சென்னையை உரசி செல்லும் ஆரணி


வடசென்னையை ஒட்டியும் உரசியும் பாய்வது ஆரணி ஆறு. ஆந்திர மாநிலத்தில் நகரி மலையடிவாரத்தில் உருவாகிறது. தமிழகத்துக்குள் நுழைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 131 கிமீ பயணித்துப் பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செழியம்பேடு, எளாவூர், காட்டேரி உள்ளிட்ட 461 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆற்றில்தான் செல்லும்.

சென்னையின் வடிநீர் கால்வாய்கள்


பக்கிங்காம் கால்வாய்
அடையாறு, கூவம், கொசஸ்தலை தவிர ஓட்டேரி நல்லா, பக்கிங்காம், விருகம்பாக்கம் – அரும்பாக்கம், கொடுங்கையூர், வீராங்கல், கேப்டன் காட்டன், வேளச்சேரி உள்ளிட்ட 9 பெரிய கால்வாய்களும் சுமார் 500 சிறிய கால்வாய்களும் சென்னைக்குள் ஓடுகின்றன.
கடல் கொந்தளிக்கும்போது வெளியேறும் தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாக வந்து விடுவதை தடுக்கவும், மழைநீர் வடிகாலாகவும், நீர் வழி போக்குவரத்துக்காகவும் பிரிட்டீஷார் ஆட்சியில் செயற்கையாக அமைக்கப்பட்டது பக்கிங்காம் கால்வாய். ஆந்திராவின் நெல்லூர் தொடங்கி, தமிழகத்தில் கடலூர் வரை, கடற்கரையில் இருந்து ஓரிரு கிலோமீட்டர் உள்வாங்கி, சென்னை வழியாக இந்தக் கால்வாய் செல்கிறது. சென்னையில் மட்டுமே 48 கி.மீ தூரம் பக்கிங்ஹாம் கால்வாய் பயணிக்கிறது. ஆரணி, கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகிய ஆறுகள், ஓட்டேரி நல்லா கல்வாய் தவிர திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள் உபரிநீரும் பக்கிங்காம் கால்வாயை கடந்துதான் கடலுக்குச் செல்கின்றன. இவை தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 29 சதவிகிதமும் பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது.

மறைந்துபோன பாடி, வில்லிவாக்கம் ஏரிகளிலிருந்து தொடங்கும் ஓட்டேரி நல்லா கால்வாய் அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், புரசைவாக்கம், ஒட்டேரி, வியாசர்பாடி, புலியந்தோப்பு வழியாக பக்கிம்காம் கால்வாய் வரை சென்னைக்குள் 10.2 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. மறைந்துபோன விருகம்பாக்கம் ஏரியிலிருந்து தொடங்கும் விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய் நுங்கம்பாக்கம் கூவம் ஆறு வரை சென்னைக்குள் 6.36 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. கொடுங்கையூர் கால்வாய், கொளத்தூர் ஏரி முதல் பங்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வீராங்கல் ஓடை, ஆதம்பாக்கம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.78 கி.மீட்டரும்; கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி ஏரியிலிருந்து தண்டையார்பேட்டை பக்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வேளச்சேரி கால்வாய், வேளச்சேரி ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.14 கி.மீட்டரும் சென்னைக்குள் ஓடுகிறது.

சென்னையைக் காப்பாற்றிய ஆறுகள்


கடல் மட்டத்திற்கு கிட்டத்தட்ட சம்மாக இருக்கும் சென்னையின் நில மட்டம் இந்த வருடம் சென்னை மழையில் பாதிப்புகள் பற்றிய விவாதங்களில் அச்சத்துடன் பார்க்கப்பட்டது. இது எப்போதும் ஆபத்தானதுதானா? ஆனால், இதே காரணம்தான் சென்னையை ஒருமுறை பேரழிவில் இருந்து காப்பாற்றவும் செய்துள்ளது. 2004 டிசம்பர் சுனாமியில், மற்ற தமிழக கடலோரப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது சென்னை குறைவான பாதிப்புகளையே அடைந்தது. அதற்குக் காரணம் சென்னைக்குள் ஓடும் ஆறுகள் வடிகாலாகச் செயல்பட்டதுதான். சென்னையைக் காப்பாற்றிய ஆறுகளை பத்தே வருடத்தில் சென்னையைக் கொல்லும் ஆறாக மாற்றியது யார் தவறு?



23 August 2014

சென்னை சுவடுகள்

சென்ட்ரல் ரயில் நிலையம் கடிகாரம்!


ஒரு ஆள் மட்டும் ஏறுவதற்குதக்க, சுரங்கப் பாதை மாதிரியான குறுகலான படிக்கட்டு; சுற்றிக் கொண்டே செல்லும் படிக் கட்டுகளில், ஆங்காங்கே இருக்கும் துளைகள் வழியாக மெல்லிசாக கசிகிறது வெளிச்சம். ‘‘ஸார், பார்த்து வாங்க. சில இடங்களில் கல் பெயர்ந்திருக்கும்’’ என்ற குரலுக்கு பயந்து, இருளில் தடவித் தடவி ஊர்ந்துகொண்டே ஏறத் தொடங்கினால், கொஞ்ச நேரத்தில் மெலிதாக அந்தச் கேட்கிறது... ‘‘டிக், டிக், டிக்....’’. மேலே செல்லச் செல்ல கூடிக் கொண்டே வரும் இந்த சத்தம்தான், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உச்சியில் நான்கு பக்கமும் பார்த்தவாறு இருக்கும் கடிகாரத்தின் இதயத் துடிப்பொலி.

சென்னையின் அடையாளமே சென்ட்ரல் ரயில் நிலையமும் இந்தக் கடிகாரமும்தான். சினிமாக்களில், கிராமங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களைக் காட்ட, சென்டரல் ரயில் நிலையம் முன்பு வைத்து தவறாமல் ஒரு ஸீன் எடுப்பார்கள். சென்னைவாசிகளுக்கு இன்னும் நெருக்கம்... கையில் வாட்ச் கட்டியிருந்தாலும், சென்ட்ரலைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் நிச்சயம் இதில் மணி பார்ப்பார்கள். இந்தக் கடிகாரத்தை வைத்து தங்கள் வாட்ச்சின் நேரத்தையே சரிசெய்து கொள்வார்கள். அந்தளவுக்கு துல்லியமானது சென்ட்ரல் கடிகாரத்தின் நேரம். சென்னை சரித்தரத்தில், கிட்டத்தட்ட 135 வருடங்கள் ஒரு மௌன சாட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தக் கடிகாரம்.

மேலே, உச்சியில் விசாலமாக இருக்கும் ஒரு அறைதான் கடிகாரத்தின் உட்பகுதி. இரண்டு மூலைகளிலும் 180, 275 கிலோ வீதம் இரண்டு எடைக்கற்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து தொடங்கி, குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன கம்பிகள். நடுவில் நெல் கதிரடிக்கும் மிஷின் அளவுக்கு ஒரு பெரிய இயந்திரம். நாம் ஒரு கடிகாரத்தின் உட்பகுதியில் இருக்கிறோம் என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு குட்டி தொழிற்சாலை மாதிரி இருக்கிறது கடிகாரம்.

இந்தக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்வதற்கு என்றே, ‘கிளாக் மெக்கானிக்என்று ஒரு பதவி தென்னக ரயில்வேயில் முன்பு இருந்திருக்கிறது. இப்போது, சீனியர் செக்ஷன் இன்ஜினியராக இருக்கும் சத்தியமூர்த்திதான் கடிகாரத்தைக் கவனித்துக் கொள்கிறார்.

‘‘கடந்த இருபது வருஷங்களா நான்தான் பார்த்துக் கொள்கிறேன். நான்கு பக்கமும் தெரியும் கடிகாரங்களுக்கு இந்த ஒரே இயந்திரம்தான். 1870ம் ஆண்டு ‘GILLETT & BLAND MANUFACTURERS’ என்ற லண்டன் கம்பெனியில் தயாரிக்கப்பட்டது இது. 1873ம் வருஷம் ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், சென்ட்ரல் ரயில் நிலையம் 1900ல்தான் கட்டப்பட்டது. இடையில் 25 வருடங்கள் வேறு எங்கோ இருந்திருக்க வேண்டும். அனேகமாக, சென்னையின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ஸ்டேசனில் இருந்திருக்கலாம். சென்ட்ரல் ஸ்டேசன் கட்டும்போது, அண்ணாசாலையில் குதிரையில் செல்லும் ஆங்கிலேயர்கள் மணி பார்ப்பதுக்கு வசதியாக, அவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறார்கள். கிழக்கு பக்கம் உள்ளக் கடிகாரத்தை அக்காலங்களில் கடற்கரையில் இருந்து பார்க்க முடியுமாம். பத்து வருடங்களுக்கு ஒரு முறை இதற்கு மேஜர் சர்வீஸ் செய்வோம். மற்றபடி 135 வருஷமா எந்த பிரச்னையும் இல்லாம ஓடிக்கொண்டிருக்கிறது. உயரத்தில் பறக்கும் கழுகுகள் ஓய்வெடுப்பதற்காக, அடிக்கடி இதன் முள் மேல் வந்து உட்காரும். அப்போது, அந்தக் கழுகின் எடையையும் தூக்கிக்கொண்டே முள் சுற்றும். அந்தளவுக்கு பலமானது.’’ தன் வீட்டு செல்ல வளர்ப்பு பிராணியைப் பற்றி சொல்வது போல், அவ்வளவு ஆசையுடன் பேசுகிறார் சத்தியமூர்த்தி.

கடிகாரம் கீயில் தான் இயங்குகிறது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை, இரண்டு கீகள் கொடுக்க வேண்டும். ஒன்று, கடிகார முள் சுற்றுவதற்காக; மற்றொன்று மணியோசைக்காக. ஒவ்வொன்றையும் 300 முறைகள் சுற்றவேண்டும்! கடிகார இயந்திரம் உள்ள அறைக்கு கீழுள்ள அறையில் இரண்டு மணிகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. ‘‘இப்போதும் சென்னையில் இரவு வாகனங்களின் இரைச்சல் எல்லாம் அடங்கி, நிசப்தமாக இருக்கும் போது 5 & 8 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் இதன் பெல் சத்தம் கேட்கும். நடுநிசியில் தேவி தியேட்டர் பக்கம் போனால், கடல் அலைகள் சத்தத்துடன் கால் மணிக்கு ஒரு முறை அடிக்கும் பெல் சத்தமும் கேட்கலாம். இந்தியாவுக்கே பெருமைக்குறிய விஷயம் இந்தக் கடிகாரம். அதனுடன் சம்பந்தப்பட்டவன் என்பதில் எனக்கு பெருமை, சந்தோஷம்’’ எனக்கூறும் சத்தியமூர்த்திக்கு, தான் ஓய்வுபெற்ற பிறகு, இதே அளவு வாஞ்சையுடன் கடிகாரத்தைக் கவனித்துக்கொள்ளும் வேறு யார் வருவார்கள் என்பதுதான் இப்போதையக் கவலை.

சத்தியமூர்த்தி
சென்னை சென்டரல் ரயில் நிலையம் கடிகாரம் போல நான்கு பக்கமும் முகப்புகள் உள்ளக் கடிகாரங்கள், மேலும் பல சென்னையில் உள்ளன. அனைத்துமே ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டவை; நூற்றாண்டு சரித்திரம் உடையவை. சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் இருக்கும் கடிகாரம் 1813ம் ஆண்டும், தலைமைச் செயலகத்தில் செயின்ட் மேரிஸ் சர்ச்சில் இருக்கும் கடிகாரம் 1824ம் ஆண்டும், ஜெமினி பாலம் அருகே கதீட்ரல் சர்ச்சில் உள்ள கடிகாரம் 1828ம் ஆண்டும், ஆன்டர்சன் சர்ச்சில் இருக்கும் கடிகாரம் 1851ம் ஆண்டும் கொண்டுவரப்பட்டவை. சத்தியமூர்த்தி போன்ற ஆசையுடன் பார்த்துக்கொள்ளும் நண்பன் இல்லாததால், இவற்றில் தலைமைச் செயலக கடிகாரம் ஐந்தரையில் நிற்கிறது.

‘‘இந்தக் கடிகாரங்கள், நமது பழமையின் பெருமைகள். அவற்றை பாதுகாப்பது நமது சந்ததிகளுக்கு நாம் அளிக்கும் அன்பளிப்பு’’ என்கிறார் சத்தியமூர்த்தி.

(2007ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியானது. இப்போது கடிகாரத்தின் வயது 142. சத்தியமூர்த்தி பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். சத்தியமூர்த்து கவலைப்பட்டது போல் நிகழாமல் தற்போதும் யாரோ பொறுப்பாக பார்த்துக்கொள்கிறார்கள். யார் என்று தெரியவில்லை.)

14 September 2010

ஆவணக்காப்பகம்

சென்னை இலக்கிய சங்க நூலகம்
(Madras Literary Society Library)

தளவாய் சுந்தரம்

சென்னையில் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமணைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தினுள் நுழைந்து, சிறிது தூரம் சென்றதும், இடதுபக்கம் அந்த கட்டிடம் தென்படும். மிகவும் புராதனமான கட்டிடம். இந்தோ - பிரேசியன் கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்டது. அந்த கட்டிடத்துக்கு முன்னால் வந்து நின்றால், கால இயந்திரத்தில் பயணம் செய்து, தற்காலத்தில் இருந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின்னால் போய்விட்டது மாதிரி இருக்கிறது. அந்த புராதனமான கட்டிடம், புதுப்பிக்கப்படாமல் இருக்கும் அதன் பழமையான தோற்றம், சுற்றிலும் உள்ள மரங்கள், மண் தரை. . . நிச்சயம் சென்னையில் இருக்கிறோம் என்ற உணர்வை அந்த இடம் தராது. எதற்கு இவ்வளவு பீடிகை, அந்த கட்டிடத்துக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா? இருக்கிறது. இந்த கட்டிடம்தான் இப்போது நாம் பேசப்போகும் விஷயத்தின் மையம். இங்கேதான் மிகவும் புகழ்பெற்றதும் இந்தியாவிலேயே மிகவும் பழமையான வாடகை நூலகமுமான சென்னை மாகாண இலக்கிய சங்க நூலகம் இயங்கி வருகிறது.

நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற விழுமியங்களுள் ஒன்று என்றும் இந்த நூலகத்தைச் சொல்லலாம். ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டதுக்கு சாட்சியாக, அடுத்துவரும் தலைமுறைகளுக்கு அந்த கதையை சொல்லும் விதமாக இந்த நூலகம் இப்போது இருக்கிறது. நமது நாட்டிலிருக்கும் மிகவும் பழமையான வாடகை நூலகம் (lending library) இதுதான். 1812ஆம் ஆண்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு பழமையான வாடகை நூலகம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. இந்த நூலகம் தமிழகத்தில் இருக்கிறது என்பதே தமிழகத்திற்கு பெருமைதான்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, சென்னை மாகாணத்தில் இருந்த சில கிழக்கிந்திய கம்பெனி படை வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்திருந்த மதபோதகர்கள் சிலர் ஆகியோர் இணைந்து சென்னை இலக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ராயல் ஏசியாடிக் சொசைட்டி என்ற ஆங்கிலேயர்களின் அமைப்பு பம்பாய், கல்கத்தா, சென்னை என்று அக்காலத்தில் எல்லா முக்கிய நகரங்களிலும் இருந்திருக்கிறது. இதில் சென்னையிலிருந்த ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஒரு பகுதிதான் சென்னை இலக்கிய சங்கம். இச்சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ராயல் ஏசியாடிக் கழகத்தின் துணையுடன்தான் நடைபெற்று வந்துள்ளன.

சென்னை இலக்கிய சங்கத்தை உருவாக்கியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம் ஒரு நூலகம் வேண்டும் என்ற எண்ணம். இரண்டாவது காரணம் அந்த நூலகத்தில் கூடி தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது மற்றும் பகிர்ந்து கொள்வது, கலந்து பேசி விவாதிப்பது. இவை எல்லாவற்றுக்குமான ஒரு சங்கமாக இதனை திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களின் பொழுது போக்குக்காகவும் பயனுள்ள வழியில் அறிவை செலவழிப்பதுக்காகவும் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர வாசிப்புத் தன்மையுடைய ஆங்கிலேயர்கள் தங்களுக்கிடையே நுட்பமான தகவல்களை பரிமாரிக் கொள்வதுக்கான களமாகவும் இந்நூலகம் இருந்துள்ளது. மாண்டீத், மில்லர், அன்னிபெசன்ட் அம்மையார் போன்றவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். மொத்தத்தில் அனைவருமே ஐரோப்பியர்கள்தான். இரண்டே இரண்டு இந்தியர்கள்தான் தொடக்கத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். இரண்டு பேர்தான் உறுப்பினராக இருந்த இந்தியர்கள் என்றதும் இந்தியர்களுக்கு அறிவைப் பெருக்குவதில் நாட்டம் இல்லை என்று கருதிவிட வேண்டாம். அதற்கு காரணம் இருக்கிறது. அக்காலத்தில் எல்லோரும் நினைத்தவுடன் சென்னை இலக்கிய சங்க உறுப்பினராகிவிட முடியாது. அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகள் இருந்திருக்கிறது. அந்த நூலகமே வெள்ளைக்காரர்களுக்காக உருவாக்கப்பட்டதுதானே. எனவே இந்தியர்கள் உறுப்பினராவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.

தங்கள் சொந்த தேசத்தில் இருந்து நீண்ட தூரத்தில் இருந்த பிரிட்டீஷ்காரர்களின் ஹோம் சிக்க்கும் இந்த நூலகம் உருவாக ஒரு காரணம் என்று சொல்லலாம்.

தொடக்கத்தில் சென்னை கோட்டையின் பின்பகுதியில் (பழைய தலைமைச் செயலகம் அமைந்திருந்த இடம்) இருந்த இடத்தில் இந்த நூலகம் இருந்திருக்கிறது. அதன்பிறகு 1875ஆம் ஆண்டு சென்னை கோட்டையின் பின்பகுதியில் இருந்த நூலகத்தை இப்போது கன்னிமாரா நூலகம் இருக்கும் பகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள். 1906ஆம் ஆண்டு, டி.பி.ஐ. வளாகத்தில் இப்போது நூலகம் இருக்கும் கட்டிடம் கட்டப்பட்டு நூலகம் இங்கே இடம்பெயர்ந்திருக்கிறது. சென்னை அரசின் பொதுப்பணித்துறை இந்த கட்டிடத்தைக் கட்டி நூலகத்துக்காக அர்ப்பணித்துள்ளது. இந்நூலகத்திற்கென்றே சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இப்போதுள்ள வாடகை நூலகங்களைப் போல் வீட்டிலேயே புத்தகங்களைக் கொண்டு கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் அதனைப் பின்பற்றுகிறார்கள். நீங்கள் உங்களுக்குத் தேவையான புத்தகத்தை குறிப்பிட்டு விட்டீர்கள் என்றால் போதும். புத்தகத்தை உங்கள் வீட்டிலேயே கொண்டு வந்து தருகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆங்கிலேயர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் விதிகள் தளர்த்தப்பட்டு இந்தியர்கள் அதிகமாக உறுப்பினராக வகை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது இந்தியர்கள் பலர் இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறார்கள். 1868ஆம் ஆண்டு உள்ள பதிவேட்டில் திருவாங்கூர் மகாராஜா, ரங்கநாத முதலியார் ஆகியோர் இந்த நூலகத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுபாஷ் சந்திரபோஷ், நீதிக்கட்சியைச் சேர்ந்த வரதராஜ முதலியார், ராஜமன்னார், எழுத்தாளர் எஸ்.பாலாம்மாள், டாக்டர் சுப்பராயன், நாட்டியக் கலைஞர் ருக்மணி தேவியின் கணவர் ஜி. எஸ். அருண்டேல், ஏ.எல்.ராமசாமி முதலியார் ஆகியோர் உறுப்பினராகியிருக்கிறார்கள். இவர்கள் உறுப்பினராக இருந்ததுக்கான ஆவணங்களை இப்போதும் நூலகத்தில் பார்க்கலாம். சுபாஷ் சந்திரபோஷ் இந்த நூலகத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்த கடிதம் அவர் கையெழுத்தில் இன்னும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பிரிட்டீஷ்காரர்கள் ஒவ்வொருவராக தங்கள் நாட்டுக்குத் திரும்பத் தொடங்கினார்கள். அப்படி திரும்பியவர்களின் இந்த நூலகத்தின் உறுப்பினராக இருந்தவர்களும் உண்டு. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நூலகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த நூலகத்தின் பொற்காலமும் கொஞ்சம் கொஞ்மாக மங்கத் தொடங்கியது. இப்போது இந்த நூலகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பார்த்தாலே அதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 180 பேர்!

என்றாலும் இப்போதும் இது ஒரு சிறப்பு வாய்ந்த நூலகம் என்பதில் சந்தேகம் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் சென்னை இலக்கியச் சங்கத்தின் செயலாளராக இருந்த மாண்டித் மெக்பைல் என்ற ஆங்கிலேயர் சென்னை இலக்கிய சங்கம் குறித்தும் இந்த நூலகம் குறித்தும் ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதனை படித்தால் ஆச்சர்யத்தில் நம் கண்கள் விரிந்து விடும். அவ்வளவு பெருமைகள் கொண்டது இந்த நூலகம். 1906ஆம் ஆண்டு அந்த சிறு வெளியீடு வெளியாகியுள்ளது. மாண்டீத் அக்காலத்தில் சென்னை மாகாண முக்கியஸ்தர்களில் ஒருவர். சென்னையில் ஒரு சாலைக்கு மாண்டீத் பெயர் வைக்கப்பட்டது. இப்போதும் சென்னையில் அந்த சாலை மாண்டீத் சாலை என்றுதான் அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே அவரது முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

மாண்டீத் வெளியிட்டது சிறுகுறிப்புதான் என்றாலும் சென்னை இலக்கிய சங்க நூலகத்தைப் பொறுத்தவரைக்கும் மிக முக்கியமான ஒரு ஆவணம் அது. அக்குறிப்பேட்டில் உள்ள தகவல்கள்தான் இந்த நூலகத்தின் ஆரம்ப செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ள இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி. 1812ஆம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்ட போது நூலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் புத்தகங்கள், நூலகத்தைப் பராமரிக்க ஒரு ஆண்டுக்கு செலவாகும் மூவாயிரம் ரூபாய், உறுப்பினர்கள் கடைபிடிக்கக்கூடிய விதிமுறைகள், சந்தா விபரங்கள் உட்பட எல்லாவற்றையும் பற்றி இந்த குறிப்பேட்டில் மாண்டீத் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலகத்தின் இன்னொரு சிறப்பு, அறிஞர் தோட்டக்காடு ராமகிருஷ்ணபிள்ளை இந்த நூலகத்தின் நூலகராக இருந்திருக்கிறார் என்பது.

‘MADRAS JOURNAL OF LITRATURE AND SCIENCE' என்ற பருவ இதழையும் சென்னை இலக்கிய சங்கம் நடத்தி வந்துள்ளது. சென்னை பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது சமஸ்கிருத வகுப்பில் அதிகமும் ஜெர்மன்காரர்கள்தான் சேர்ந்திருக்கிறார்கள். அந்த ஜெர்மன்காரர்கள் இந்த பத்திரிகையின் வெளியீட்டில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். 1833ஆம் ஆண்டு இந்த இதழின் முதல் பிரதி வெளியாகியுள்ளது. அன்று முதல் 1984ஆம் ஆண்டு வரை சுமார் அறுபது வருடங்கள் தொடர்ந்து இந்த இதழ் வெளியாகியுள்ளது. அக்காலகட்டத்தில் வெளிவந்த முக்கியமான இதழ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இதழில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ‘LAND CRABS IN MADRAS' (நண்டுகளின் கூடாரம் சென்னை), ‘சேலம் மாவட்டத்திலுள்ள முற்காலத்திய நடுகல்கள்', ‘மலபார் மாவட்டம் - வயநாடு' போன்ற ஆராய்ச்சி கட்டுரைகள் மிக முக்கியமானவை. இந்த இதழின் தொகுப்பு இந்த நூலகத்தில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் சென்னை இலக்கிய சங்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆவணமும் இங்கே இருக்கிறது. அது அழகிய கையெழுத்தில் கைப்பட எழுதப்பட்டு, பிறகு தட்டச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டு ஆவணப்படி, அப்போது ஒன்றரை இலட்சம் புத்தகங்களுக்கு மேல் இந்த நூலகத்தில் இருந்திருக்கிறது. இப்போது சுமார் 80,000 புத்தகங்கள், 1000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள், பல அறிய புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் இங்கு உள்ளன. இவை எல்லாமே கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய அரிய ஆவணங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியான சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், ஆராய்ச்சி நூல்கள், தத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள், ஆன்மீக நூலகள், புவியியல் நூல்கள் எல்லாம் இங்கே உள்ளன.

ஜெனே ஆஸ்டின், பால்ஸாக், செர்வாண்டிஸ், வில்லியம் பிளேக், மேத்திவ் அர்னால்ட், ராபர்ட் லூயிஸ், வால்ட் வில்ட்மன், மார்க் ட்வைன், தாமஸ் கார்டி, ஸ்டீவன்ஸன், டென்னிசன், ரஸ்ஸல், வெல்ஸ் போன்ற முக்கிய ஆசிரியர்களின் அனைத்து புத்தகங்களும் இங்கே உள்ளது. குறிப்பாக இந்த புத்தகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட இந்த எழுத்தாளர்களின் வாழ்நாளிலிலேயே வெளிவந்த முதல் பதிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள விதம், புத்தக அலமாரிகள் ஆகியவையற்றை இப்போது வேறு எந்த நூலகத்திலும் பார்க்க முடியாது. 20அடி உயரமுள்ள 10 உயரமான புத்தக அலமாரிகள் 8க்கும் மேற்பட்ட அடுக்குகளில் ஒன்றன்மீது ஒன்றாக உள்ளன. மேலே இருக்கும் புத்தக அலமாரியில் இருந்து புத்தகத்தை எடுக்க ஏணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒன்றரை லட்சம் புத்தகங்கள் என்பதாயிரம் ஆனதில் இருந்து பல புத்தகங்கள் சிதைந்து போயிருக்கின்றன என்று தெரிய வருகிறது. இப்போதும் கூட பல புத்தகங்கள் சிதைந்த நிலையில்தான் உள்ளன. புத்தகங்களின் நிலையைப் பொறுத்து, மிகவும் மோசமான நிலையில் இருப்பவை, பரவாயில்லாமல் இருப்பவை, நல்ல நிலையில் இருப்பவை என்று அவற்றை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். இதில் மிக மோசமான நிலையில் இருக்கும் புத்தகத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதனை பாதுகாப்பதா அல்லது வெளியே கொடுத்து விடுவதா என முடிவு செய்கிறார்கள். இப்படி தேவையில்லை என்று கழிக்கும் புத்தகங்களை எதாவது கல்லூரி அல்லது பள்ளி நூலகங்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். சமீபத்தில் கூட இப்படி சென்னை ஐ.ஐ.டி. நூலகத்திற்கு அதிக புத்தகங்களை கொடுத்திருக்கிறார்கள். இப்படி கொடுக்கும் போது அந்த புத்தகத்தின் ஆசிரியரின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதற்கு மாற்றுப் பிரதி வாங்கி வைக்கவும் செய்கிறார்கள்.

இப்போது இந்த நூலகம் கணினிமயப்படுத்தப் பட்டும் வருகிறது. கணினியில் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒறு புத்தகத்தை தேடி எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த நூலகத்தில் ஒரு தமிழ் புத்தகங்கள் இல்லை என்பது கொஞ்சம் சங்கடத்துக்குறிய விஷயம்தான். எல்லா புத்தகங்களும் பிரஞ்சு, ஜெர்மன், இலத்தின், ஆங்கிலம் ஆகிய மொழி புத்தகங்கள்தான். ஆங்கிலேயர்கள் அவர்களுக்காக உருவாக்கிய நூலகம் என்பதால், அவர்களுக்குப் பயன்படக்கூடிய புத்தகங்களை மட்டுமே வாங்கி வைத்துள்ளார்கள். ஆனால் இனிமேல் தமிழ் புத்தகங்கள் வாங்கி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக நூலகர் உமா மகேஸ்வரி சொல்கிறார். யாராவது நன்கொடையாக புத்தகங்கள் கொடுக்க முன்வந்தாலும் அதனையும் பெற்றுக் கொள்வார்களாம்.

இங்கே இருக்கும் அரிய ஆவணங்கள் பற்றி பேசத் தொடங்கினால் நாள் முழுக்க பேசிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன. எனவே நாம் சில மிக முக்கியமான ஆவணங்கள் பற்றி மட்டும் பேசலாம். முதலில் இங்கே இருக்கும் 1858ஆம் ஆண்டு வெளியான உலக வரைபடம் பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த உலக வரைபடம் மிகவும் பிரசித்திப் பெற்றது. பல்வேறு மடிப்புகளாக உள்ள அந்த வரைபடம் விரித்தால் மிகவும் பெரியதாக இருக்கிறது. இரண்டு பேர் படுப்பதுக்கான பாய் மாதிரி இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இது போல் முப்பதுக்கும் மேற்பட்ட வரைபடங்கள் உள்ளன. 1898ஆம் வெளியான ‘HISTORY OF BUCKINGHAM CANELS PROJECT' என்ற ஒரு பெரிய புத்தகம் உள்ளது. இரண்டு பேர் சேர்ந்துதான் அதனை தூக்கிவைத்து விரித்து பார்க்க வேண்டும். பஞ்சகாலத்தில் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம், பக்கிங்காம் கால்வாய் திட்டம். அந்த திட்டம், கால்வாயின் வரைபடம் எல்லாம் இந்த புத்தகத்தில் உள்ளன. இங்கே இருக்கும் கங்கை கால்வாய் வரைபடமும் ஒரு முக்கியமான ஆவணம். இதுபோல் முப்பதுக்கும் மேற்பட்ட அரிய வரைபடங்கள் உள்ளன.

அரிய புத்தகங்களைப் பொறுத்தவரைக்கும் ‘ARISTOTELIS OPERATMNIA' என்ற புத்தகம் இங்கே இருப்பதிலேயே மிக பழமையான புத்தகம். 1509ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகியுள்ளது. கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழியில் உள்ள இந்த புத்தகம் மேற்கத்திய கலைகள் பற்றி முனைவர் பட்டத்துக்காக அளிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை. லியார்னார்டோ டாவின்ஸி, மைக்கலாஞ்சலோ போன்ற முக்கியமான மேற்கத்திய கலைஞர்களின் படைப்புகள் குறித்து இதில் உள்ளது. ‘TRAVELS IN INDIA AND TREATIES IN FAR EAST' என்ற புத்தகம் இங்கே இருக்கும் அடுத்த பழமையான புத்தகம். JOHN BAPLISTA என்பவர் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். 1680ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகியுள்ளது. வேறும் பல புத்தகங்கள் தேட தேட கிடைத்துக் கொண்டே இருக்குமாக இருக்கலாம்.

புத்தகங்கள், வரைபடங்கள் மட்டுமல்லாமல் அந்தகால புகைப்படங்களும் இங்கே உள்ளன. இதில் ஆங்கிலேய கேப்டன் டி. டிரைட் எடுத்த புதுக்கோட்டை, மதுரை புகைப்படங்கள் முக்கியமானவை. 1858ஆம் ஆண்டைச் சேர்ந்தவை அந்தப் புகைப்படங்கள். அவற்றைப் பார்ப்பது ஒரு பிரமாதமான அனுபவம். மிகவும் அறிய காட்சிகள். அந்த காலத்தில் மதுரையும் புதுக்கோட்டையும் எப்படி இருந்திருக்கும் எனத் தெரிந்தகொள்ள இன்றைக்கு இருக்கும் மிக முக்கியமான ஆவணங்கள் இவை. இவ்வகையில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலகம் இது. பல முனைவர் பட்டத்துக்கான விஷயங்கள் இந்த நூலகத்தில் தூங்கிக்கொண்டிருக்கின்றன.

சரி, இவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலமா?

பார்க்கலாம். அதற்கு உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினராவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும் உறுப்பினராக சேரலாம். தனிநபர் வருட சந்தா ஐநூறு ரூபாய். உறுப்பினர் ஒரே நேரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். நிறுவன உறுப்பினர் சந்தா 1500 ரூபாய். உறுப்பினராகும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் நான்கு புத்தகங்கள் வீதம் எட்டு புத்தகங்கள் எடுத்துக் கொள்ளலாம். இப்போது 180 தனிநபர்களும் நான்கு நிறுவனங்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

என்.எஸ்.ராமஸ்வாமி அவர்கள் எழுதிய ‘MADRAS LITRARY SOCIETY: A HISTORY 1812 - 1984' என்ற புத்தகம் இந்த நூலகம் மற்றும் சென்னை இலக்கிய சங்கம் பற்றி மிகவும் விரிவாக பதிவு செய்துள்ள ஒரு புத்தகம். 148 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம்தான் இது. இப்போது அச்சில் இந்த புத்தகம் இல்லை. சென்னை இலக்கிய சங்க நூலகத்தில் மட்டும் ஒரு பிரதி இருக்கிறது. தேவைப்படுபவர்கள் இங்கே சென்று நகல் எடுத்துக்கொள்ளலாம்.

2000த்தில் நான் சென்ற போது, முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் எம்.கோபால கிருஷ்ணன், சென்னை இலக்கிய சங்கத்தின் சேர்மனாக இருந்தார். மோகன்குமார் செயலாளராக இருந்தார். மேலும் ஹேமலதா ராமமணி, சி.ராமகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அதிகார்¢கள் வி.கிருஷ்ணன், கே.ஹரிபாஸ்கர் மற்றும் பி.எஸ்.சோமசுந்தரம், கே.ஆராவமுதன், ஹெச்.சி.ரேட்டன், வி.கே.மோகன், எம்.ராமன் ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தார்கள். மொத்தம் ஆறு பேர் வேலை பார்த்தார்கள். உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடையின் மூலம்தான் இந்த நூலகம் இன்னும் மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து வருகிறது. உறுப்பினர்கள் சந்தாவிலிருந்து வரும் வருமானத்தில் இருந்துதான் இங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள். பொதுப்பணித்துறையின் கீழ் இருக்கும் நூலக கட்டிடத்துக்கு மிகவும் குறைந்த அளவிலான வாடகையை மட்டுமே அரசாங்கம் பெற்றுக்கொள்கிறது. அது ஒருவகையில் இந்த நூலகத்திற்கு பெரிய ஆறுதல். உமா மகேஸ்வரி என்பவர் நூலகராக இருக்கிறார். 1994 முதல் இவர் இந்த நூலகத்தில் வேலை பார்க்கிறார். ”சென்னை இலக்கிய சங்கம் நூலக கட்டிடத்தை புணரமைக்கவும் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள அறிய புத்தகங்களுக்கு மாற்று புத்தகங்களை வாங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், சிறப்பான ஒரு நூலகமாக இதனை மாற்ற வேண்டுமானால், நிறைய தெரிந்து கொள்ளவேண்டும், நமது பெருமையாக இருக்கும் இந்த நூலகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மவர்களுக்கு வரவேண்டும். இன்னும் நிறைய பேர் இந்த நூலகத்தை பயன்படுத்த முன்வர வேண்டும்” என்றார் உமா மகேஸ்வரி.

(பழ.அதியமான் அவர்கள் கேட்டுக்கொண்டதால், ‘சென்னை, ஆல் இந்தியா ரேடியோ’வில் வாசிக்க இந்தக் கட்டுரையை 2002இல் எழுதினேன். வாசித்து கேட்கும்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டக் கட்டுரையில் இப்போது மிகச் சிறு மாறுதல்கள் செய்திருக்கிறேன். கறுப்பு வெள்ளைப் படங்கள்: மதுரை)