ஒரு ஆள் மட்டும் ஏறுவதற்குதக்க, சுரங்கப் பாதை
மாதிரியான குறுகலான படிக்கட்டு; சுற்றிக் கொண்டே
செல்லும் படிக் கட்டுகளில்,
ஆங்காங்கே
இருக்கும் துளைகள் வழியாக மெல்லிசாக கசிகிறது வெளிச்சம். ‘‘ஸார், பார்த்து வாங்க.
சில இடங்களில் கல் பெயர்ந்திருக்கும்’’ என்ற குரலுக்கு பயந்து, இருளில் தடவித் தடவி ஊர்ந்துகொண்டே ஏறத் தொடங்கினால், கொஞ்ச நேரத்தில்
மெலிதாக அந்தச் கேட்கிறது... ‘‘டிக், டிக், டிக்....’’. மேலே செல்லச்
செல்ல கூடிக் கொண்டே வரும் இந்த சத்தம்தான், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உச்சியில் நான்கு
பக்கமும் பார்த்தவாறு இருக்கும் கடிகாரத்தின் இதயத் துடிப்பொலி.
சென்னையின் அடையாளமே சென்ட்ரல் ரயில் நிலையமும் இந்தக்
கடிகாரமும்தான். சினிமாக்களில், கிராமங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களைக் காட்ட, சென்டரல் ரயில்
நிலையம் முன்பு வைத்து தவறாமல் ஒரு ஸீன் எடுப்பார்கள். சென்னைவாசிகளுக்கு இன்னும்
நெருக்கம்... கையில் வாட்ச் கட்டியிருந்தாலும், சென்ட்ரலைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் நிச்சயம் இதில் மணி
பார்ப்பார்கள். இந்தக் கடிகாரத்தை வைத்து தங்கள் வாட்ச்சின் நேரத்தையே சரிசெய்து
கொள்வார்கள். அந்தளவுக்கு துல்லியமானது சென்ட்ரல் கடிகாரத்தின் நேரம். சென்னை
சரித்தரத்தில், கிட்டத்தட்ட 135 வருடங்கள் ஒரு
மௌன சாட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தக் கடிகாரம்.
மேலே,
உச்சியில்
விசாலமாக இருக்கும் ஒரு அறைதான் கடிகாரத்தின் உட்பகுதி. இரண்டு மூலைகளிலும் 180, 275 கிலோ வீதம்
இரண்டு எடைக்கற்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து தொடங்கி, குறுக்கும்
நெடுக்குமாக செல்கின்றன கம்பிகள்.
நடுவில் நெல் கதிரடிக்கும் மிஷின் அளவுக்கு ஒரு பெரிய இயந்திரம். நாம் ஒரு
கடிகாரத்தின் உட்பகுதியில் இருக்கிறோம் என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு குட்டி
தொழிற்சாலை மாதிரி இருக்கிறது கடிகாரம்.
இந்தக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்வதற்கு என்றே, ‘கிளாக் மெக்கானிக்’ என்று ஒரு பதவி தென்னக ரயில்வேயில் முன்பு
இருந்திருக்கிறது. இப்போது,
சீனியர் செக்ஷன்
இன்ஜினியராக இருக்கும் சத்தியமூர்த்திதான் கடிகாரத்தைக் கவனித்துக் கொள்கிறார்.
‘‘கடந்த இருபது வருஷங்களா
நான்தான் பார்த்துக் கொள்கிறேன். நான்கு பக்கமும் தெரியும் கடிகாரங்களுக்கு இந்த
ஒரே இயந்திரம்தான். 1870ஆம் ஆண்டு ‘GILLETT
& BLAND MANUFACTURERS’
என்ற லண்டன்
கம்பெனியில் தயாரிக்கப்பட்டது இது. 1873ஆம் வருஷம் ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கொண்டு
வந்திருக்கிறார்கள். ஆனால்,
சென்ட்ரல் ரயில்
நிலையம் 1900இல்தான்
கட்டப்பட்டது. இடையில் 25 வருடங்கள் வேறு
எங்கோ இருந்திருக்க வேண்டும். அனேகமாக, சென்னையின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ஸ்டேசனில்
இருந்திருக்கலாம். சென்ட்ரல் ஸ்டேசன் கட்டும்போது, அண்ணாசாலையில் குதிரையில் செல்லும்
ஆங்கிலேயர்கள் மணி பார்ப்பதுக்கு வசதியாக, அவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறார்கள். கிழக்கு பக்கம்
உள்ளக் கடிகாரத்தை அக்காலங்களில் கடற்கரையில் இருந்து பார்க்க முடியுமாம். பத்து
வருடங்களுக்கு ஒரு முறை இதற்கு மேஜர் சர்வீஸ் செய்வோம். மற்றபடி 135 வருஷமா எந்த
பிரச்னையும் இல்லாம ஓடிக்கொண்டிருக்கிறது. உயரத்தில்
பறக்கும் கழுகுகள் ஓய்வெடுப்பதற்காக, அடிக்கடி இதன் முள் மேல் வந்து உட்காரும். அப்போது, அந்தக் கழுகின்
எடையையும் தூக்கிக்கொண்டே முள் சுற்றும். அந்தளவுக்கு பலமானது.’’ தன் வீட்டு செல்ல
வளர்ப்பு பிராணியைப் பற்றி சொல்வது போல், அவ்வளவு ஆசையுடன் பேசுகிறார் சத்தியமூர்த்தி.
“கடிகாரம் கீயில் தான் இயங்குகிறது. மூன்று
நாட்களுக்கு ஒரு முறை, இரண்டு ‘கீ’கள் கொடுக்க வேண்டும். ஒன்று, கடிகார முள் சுற்றுவதற்காக; மற்றொன்று மணியோசைக்காக. ஒவ்வொன்றையும் 300 முறைகள்
சுற்றவேண்டும்! கடிகார இயந்திரம் உள்ள அறைக்கு கீழுள்ள அறையில் இரண்டு மணிகள்
தொங்கிக்கொண்டிருக்கின்றன. ‘‘இப்போதும்
சென்னையில் இரவு வாகனங்களின் இரைச்சல் எல்லாம் அடங்கி, நிசப்தமாக
இருக்கும் போது 5 & 8 கிலோமீட்டர்
தூரம் வரைக்கும் இதன் பெல் சத்தம் கேட்கும். நடுநிசியில் தேவி தியேட்டர் பக்கம்
போனால், கடல் அலைகள்
சத்தத்துடன் கால் மணிக்கு ஒரு முறை அடிக்கும் பெல் சத்தமும் கேட்கலாம்.
இந்தியாவுக்கே பெருமைக்குறிய விஷயம் இந்தக் கடிகாரம். அதனுடன் சம்பந்தப்பட்டவன்
என்பதில் எனக்கு பெருமை, சந்தோஷம்’’ எனக்கூறும்
சத்தியமூர்த்திக்கு, தான் ஓய்வுபெற்ற
பிறகு, இதே அளவு
வாஞ்சையுடன் கடிகாரத்தைக் கவனித்துக்கொள்ளும் வேறு யார் வருவார்கள் என்பதுதான்
இப்போதையக் கவலை.
![]() |
சத்தியமூர்த்தி |
‘‘இந்தக்
கடிகாரங்கள், நமது பழமையின்
பெருமைகள். அவற்றை பாதுகாப்பது நமது சந்ததிகளுக்கு நாம் அளிக்கும் அன்பளிப்பு’’ என்கிறார்
சத்தியமூர்த்தி.
(2007ஆம் ஆண்டு ஆனந்த
விகடனில் வெளியானது. இப்போது கடிகாரத்தின் வயது 142. சத்தியமூர்த்தி பணியிலிருந்து
ஓய்வுபெற்றுவிட்டார். சத்தியமூர்த்து கவலைப்பட்டது போல் நிகழாமல் தற்போதும் யாரோ பொறுப்பாக
பார்த்துக்கொள்கிறார்கள். யார் என்று தெரியவில்லை.)
No comments:
Post a Comment