17 July 2025

நேர்காணல்

தண்ணீர் விட்டா வளர்த்தோம்...

லட்சுமண ஐயர்

 



நான் ‘ஆனந்த விகடன்’ இதழில் பணியாற்றிய போது, சுதந்திர போராட்ட தியாகி கோபிச்செட்டிப்பாளையம் லஷ்மண ஐயர் அவர்களை நேர்காணல் செய்து எழுதியது இது...

 

இடுங்கிய கண்களில் எப்போதும் வழியும் கருணை. வார்த்தைகளில் அன்பின் கதகதப்பு. தொன்னூறு வயதிலும் துவளாத கம்பீரம். வாழ்க்கை முழுதும் தீராத தியாகம்... இதுதான் லட்சுமண ஐயர்!

கோபிசெட்டிப்பாளையத்தில் இறங்கி, ‘‘ஐயர் வீடு எங்க இருக்கு..?’’ என்றால் அந்த பழைய பிரமாண்டமான வீட்டிற்கு அழைத்துப் போய் விடுகிறார்கள். அத்தனை விசாலமாக பழமையின் அழகில் மிளிரும் அந்த இல்லத்தில் குடும்பத்தோடு வாழ்கிறார் லட்சுமண ஐயர்.    

‘‘நம்மகிட்டே எதுக்குங்க பேட்டியெல்லாம்... காந்தியடிகளின் எளிமைக்கும் தியாகத்துக்கும் முன்னால் நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒண்ணுமேயில்லை தம்பி.’’ அடக்கமாக அவர் சிரிப்பதை பார்க்கவே அதிசயமாக இருக்கிறது. ‘‘சரி... நீங்க கேட்குறீங்க. மக்களுக்கு நாலு நல்ல விஷயம் போய் சேர்ந்தா சரி...’’ என பேச ஆரம்பிகிறார்.

‘‘எங்க அப்பா காங்கிரஸ்காரரு. ‘‘சுதந்திரப் போராட்டத்துக்கு நிறைய இளைஞர்கள் தேவைப்படுது, அதுல கலந்துகிட்டு நாட்டுக்காகப் பாடுபடுறா’’ன்னு அப்பா சொன்னாக. அப்ப எனக்கு 10 வயசு. இங்க, சுத்துப்பட்டு கிராமங்கள்ல கதர் இயக்கத்தை பரப்புறதுக்காக உழைச்சேன். ஆனா, காந்தியடிகளைப் பார்த்தபோது, ‘‘சுதந்திரத்துக்காக போராட நிறைய ஆட்கள் இருக்காங்க. ஹரிஜனங்களுக்காக வேலை செய்யத்தான் ஆள் இல்லை. நீங்க அவங்களுக்காக பாடுபடுங்க’’ன்னு சொன்னார். அன்னையில இருந்து, தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட சமூக அவலத்தை மாற்றுவது தான் என் வாழ் நாள் கடமையின்னு செஞ்சிகிட்டு இருக்கேன்.

1933ஆம் வருடம் நடந்த முதல் சட்டசபைத் தேர்தல்ல, ராஜாஜி கட்சியில நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆனாக. அப்பாவைப் பார்க்க நிறையத் தலைவர்கள் வருவாக. நேரு, சுபாஷ் சந்திரபோஷ், சத்தியமூர்த்தி, வினோபாஜி, ராஜாஜி, காமராஜர், பெரியார், பக்தவச்சலம் எல்லா அரசியல் தலைவர்களும் இந்த வீட்டுக்கு வந்திருக்காக. அவங்க சுத்துப்பட்டு கிராமங்கள்ல அரசியல் கூட்டங்கள் நடத்தப்போகும் போது நானும் போவேன். வளர்ந்த பிறகு, நானே தனியா தலைவர்களை அழைச்சிட்டு வந்து கூட்டங்கள் நடத்த ஆரம்பிச்சேன். அப்ப, எங்கே போகனும்னாலும் கோபிப் பகுதிகள்ல பஸ் வசதி கிடையாது. அதுனால ஊர், ஊராக பாரதியார், நாமக்கல் கவிஞர் பாடல்களைப் பாடிக்கொண்டே நடந்து செல்வோம். காலையில் 10 மணிக்கு புறப்படுவோம். சாயங்காலம் எந்த ஊர்ல இருக்கமோ, அந்த ஊர் சாவடியில தங்கி, பொங்கி சாப்பிட்டுட்டு, ஊருக்குள்ள போய் கூட்டங்கள் போடுவோம். அரசாங்கத்துக்கு பயந்து, மக்கள்லாம் எங்கள் பக்கத்தில் வரமாட்டாக. தூரத்தில் நின்னு கேட்பாக. எனவே, அவர்களுக்கு கேட்கனும்னு சத்தம்போட்டு பேசுவோம்.

1940இல ‘வெள்ளையனே வெளியேறு இயக்க’த்தில கலந்துகொண்டதுக்காக என்னைக் கைது பண்ணி, வேலூர் சிறையில அடைச்சாக. 4 வருடங்கள் 9 மாதங்கள் தண்டனை. என் மனைவி, மாமானார், மாமியார் எல்லாரும் ஜெயிலுக்குப் போயிட்டாக. இடையில, என் தங்கை கல்யாணம் வந்தது. அதுக்காக பரோலில் வெளியே வந்தவன், மீண்டும் ஜெயிலுக்குப் போகாமல் நேராக வார்தா போய் காந்தியடிகளைப் பார்த்தேன். ‘‘தப்பு பண்ணிட்டீக. உடனே போய் சரண்டர் ஆகிருங்க’’ன்னார் காந்தி. எனவே, திரும்ப ஜெயிலுக்கு போய் முழு தண்டனை காலமும் அங்க இருந்தேன். அப்ப காந்தி, ‘‘ஹரிஜனங்களுக்காக வேலைகள் செய்ங்க’’ன்னார். எனவே, ஜெயில்ல இருந்து திரும்பினதும், ஹரிஜன மக்களை அழைச்சுட்டு போய், ‘‘சாலைகள், குடிநீர் கிணறுகள், குளம் போன்ற பொது இடங்கள் எல்லா மக்களுக்காவும்’’ என்ற கோஷத்தோடு கோபி குடிநீர் கிணற்றுல தண்ணீர் எடுத்தோம். மேல்ஜாதியைச் சேர்ந்தவக எங்களைத் தடுத்தாங்க. நான் நீதிமன்றத்துக்கு சென்றேன். ரொம்ப நாட்கள் வழக்கு நடைபெற்றது. கடைசியில் நான் தான் ஜெயித்தேன்.’’ வயதாகிவிட்டதால் நினைவுகள் தப்ப, காலக் குழப்பத்துடன் பேசும் லட்சுமண ஐயர்,

இந்தியாவிலேயே முதன் முதலாக கோபிச் செட்டிபாளையத்தில் மனிதர் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு எதிராக போராடி அதை நீக்கியதற்காக தேசிய விருது பெற்றவர். தலித் மாணவர்களுக்கான இலவச ஐ.டி.ஐ., அனாதை இல்லம், மாணவர்கள் விடுதி ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

‘‘வசதி இல்லாத, நல்லா படிச்ச மூன்று தலித் மாணவர்களை எங்க வீட்டு மாடியில தங்க வைத்து படிக்க வைச்சேன். மூன்று மாணவர்கள் அப்புறம் ஐந்து பேர் ஆனாக. அதன்பிறகு ஏழு... இப்படி அதிகமாகிக் கொண்டே வந்ததால, ஹரிஜன மாணவர்களுக்குன்னு ஒரு ஹாஸ்டல் தொடங்கினேன். 1952இல காலரா வந்தபோது, எல்லோரும் பயந்து போய்ட்டாக. அப்ப, தோட்டிகளை எல்லாம் கூட்டிட்டு வந்து, ஊருக்குள்ள தனியா வீடுகள் கட்டி கொடுத்தேன். ஹரிஜனங்களுக்காக நான் ஒவ்வொன்னா செய்யச் செய்ய, என் சொந்தங்களுக்குள்ல எனக்கு எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டே வந்திச்சி. கடைசியில தலித்துகளை வீட்டுகள்ள வைத்து சாப்பாடு போடுறேன்னு என்னை ஜாதி பகிஸ்காரம் பண்ணிட்டாக. ‘‘உங்க தம்பி பண்ற காரியத்தைப் பாரு’’ன்னு அக்காவை அவங்க மாப்பிள்ளை வீட்டைவிட்டு துரத்திட்டாக. அப்புறம், 9 வருஷம் அக்கா எங்க வீட்டுல தான் இருந்தாக. பிறகு, சமாதானம் ஆகி, ராமேஸ்வரம் போய் தீட்டைக் கழிச்ச சேர்த்துகிட்டாக. ஏற்கனவே சமூகத்துல நடைமுறையா இருக்கிறதை மாற்றனும்னு இறங்கினா, இப்படி எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதை யதார்த்தமா எடுத்துகிட்டு நான் எனக்கு சரின்னு பட்டதைத் தொடர்ந்து செய்தேன்.

1951-54, 1989-94 இரண்டு முறை கோபிச்செட்டிப்பாளையம் நகரசபை சேர்மனா இருந்திருக்கேன். எங்களுக்கு, இந்தப் பக்கம் காவேரியில இருந்து அனந்தசாகர் வரைக்கும் கோபியைச் சுற்றி மொத்தம் 650 ஏக்கர் நிலம் இருந்திச்சி. வைரவிழா மேல்நிலைப்பள்ளி, வேளாளர் ஹாஸ்டல், பழனியம்மாள் பள்ளி, டி.எஸ்.சாரதா வித்யாலயா, ஸ்ரீராமபுரம் ஹரிஜன காலனி, தோட்டிகள் ஹரிஜன காலனி, விவேகானந்தர் ஐ.டி.ஐ. எல்லாத்துக்கும் அதுல இருந்து நிலம் கொடுத்தது தான். கோபி டவுனில் மட்டும் 40 ஏக்கர் நிலம் தர்மமாகக் கொடுத்திருக்கேன்’’ என்று சொல்லும் லட்சுமண ஐயருக்கு, இப்போது அவர் குடியிருக்கும் வீடு கூட சொந்தம் கிடையாது என்பது தான் பெரிய முரண். ஆனால், அதுபற்றி அவரிடம் துளியும் வருத்தம் இல்லை.

‘‘பாதி தர்மமா கொடுத்தது; பாதி வியாபார நஷ்டத்துல போயிடுச்சி. இப்ப ஒரு சென்ட் நிலம் இல்ல. இந்த விடு வங்கிக் கடன் பாக்கிக்காக ஏலத்தில் வந்தப்ப, ஏலம் எடுத்தவர் என்னைப் பற்றி கேள்விப்பட்டு வீட்டை எனக்கே திருப்பி கொடுத்திட்டாக. என் பெயருக்கு எழுதி வச்சா திரும்பவும் காலி செய்துருவேன்னு என் மனைவி பெயருக்கு எழுதி வச்சிட்டாக’’ என்று சிரிக்கும் லட்சுமண ஐயருக்கு, இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள்.

‘‘பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்காம, எல்லாத்தையும் காலி பண்ணிட்டோமேன்னு வருத்தமா இல்லையா’’ என்றால், ‘‘அவுக வேணும்னா, முயற்சி பண்ணி சம்பாரிச்சிக்க வேண்டியதுதான்’’னு சிரிக்கிறார்.

ஐந்து மாணவர்களுடன் லட்சுமண ஐயர் தொடங்கிய டி.எஸ்.ராமன் மாணவர்கள் விடுதி, பாய்ஸ் ஹாஸ்டல், கேர்ள்ஸ் ஹாஸ்டல்னு  வளர்ந்திருக்கிறது. 60 மாணவர்களும் 60 மாணவிகளும் தங்கிப் படிக்கிறார்கள். ‘‘முன்ன மாதிரி வசதி இல்லாததால இந்த ஹாஸ்டல்கள், ஐ.டி.ஐ.யை நடத்துறது கஷ்டமா இருக்கு. சுதந்தரப் போராட்ட தியாகிகள் பென்ஷன் வாங்கக்கூடாதுங்கிற வைராக்கியத்தை குறைச்சுகிட்டு பென்ஷன் வாங்றேன். அது ஹாஸ்டலுக்கு உதவியா இருக்கு. இப்போ, அரசாங்கம் ஒரு மாணவனுக்கு, ஒரு நாளைக்கு 5 ரூபாய் 25 காசு கொடுக்கிறாக. அது பத்தாதுதான். ஆனா, அதுவரைக்கும் தர்றாகளேன்னு சந்தோஷமா வாங்கிக்கிறோம். 90 வயசு ஆயாச்சு, போதும்னு தோணுது. ஒய்வு எடுக்கனும். ஹாஸ்டல், ஐ.டி.ஐ.க்கு யாராவது நல்லவங்க பொறுப்பு எடுத்துகிட்டாங்கன்னா அப்படியே விட்டுடலாம்னு இருக்கேன். காந்தி கொடுத்த கடமையை நல்லபடியா செஞ்சிருக்கோம்கிற சந்தோஷம் இருக்கு. என் ஹாஸ்டல்ல படிச்ச நிறைய பேர், பல்வேறு இடங்களில் நல்ல பதவிகள்ல இருக்காங்க’’ என்றவரிடம், ‘‘தலைவர்களுடன் நீங்க இருக்கிற புகைப்படங்கள் இருக்கிறதா’’ எனக் கேட்டால், ‘‘பத்து வயதில் இருந்தே நான் ஊழியம் செய்துவருகிறேன். இப்படி நீங்க வருவீங்க; என்னைப் பற்றி பத்திரிகையில எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தா அந்தக் காரியங்களைச் செஞ்சேன். சமூகக் கடமைன்னு செஞ்சேன். சுதந்திரப் போராட்டத்தப் பத்தி எழுதுங்க; என்னைப் பற்றி வேண்டாம்’’ என்கிறார்.

லஷ்மண ஐயர் புகைப்படம்: புதுவை இளவேனில்

No comments: