03 April 2025

நேர்காணல்

என் மனைவி ஹேமா

ஸ்டெல்லா புரூஸ்



நான் ‘ஆனந்த விகடன்’ இதழில் பணியாற்றிய போது, எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் அவர்களை நேர்காணல் செய்து எழுதியது இது. அப்போது, ஸ்டெல்லா புரூஸ் மனைவி ஹேமா, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து வாரம் இருமுறை டயாலிஸிஸ் செய்யவேண்டிய நிலையில் இருந்தார். அதனை முன்னிட்டு இந்த நேர்காணல் செய்யப்பட்டது. 

‘‘ரொம்பவும் அற்புதமான, அழகான வாழ்க்கை எங்களுடையது. தகுதி, அந்தஸ்து, ஈகோ... இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு வாழணும்னு தீர்மானித்து வாழ்ந்தது. எந்த அட்டவணையும் குறிக்கோளும் கிடையாது; பதட்டம் இல்லை. சமைத்து சாப்பிடுவது, புத்தகங்கள் படிப்பது, இலக்கியம் பேசுவது, எழுதுவது, கோயில்கள், பாண்டிச்சேரி அன்னை ஆஸிரமம்... இப்படியே போய்க் கொண்டிருந்த வாழ்க்கை. கடந்த முப்பது வருஷமா என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு கேட்டா, சும்மா இருந்தோம்னுதான் சொல்லணும். பலரும் கனவு காண்கிற மாதிரியான ஒரு வாழ்க்கை. ஒருநாள் எல்லாமே சுக்குநூறாகச் சிதறிவிட்டது. 

நான் பிறந்தது கோட்டைப்பட்டி ஜமீன் என்ற பெரிய பணக்கார குடும்பத்தில். விருதுநகர் பள்ளிக்கூடத்திலும், பிறகு மதுரை அமெரிக்கன் காலேஜிலும் படித்தேன். அப்போ நிறைய இந்திப் படங்கள் பார்ப்பேன். ‘ஆவாரா’, ‘சங்கம்’... எல்லாம் மதுரையில் பார்த்துதான். எனக்குள்ள ஒரு இந்தி சினிமா ஓடிக்கொண்டே இருக்கும். அதன் பாதிப்பில் பம்பாய்தான் நமக்கான இடம், இந்தி சினிமாவில் போகலாம் என்று முடிவுசெய்து கல்லூரியைப் பாதியில் நிறுத்திவிட்டு பம்பாய் புறப்பட்டேன். ஆனால், சினிமாவுக்குப் போகிறேன் என்று சொன்னால் வீட்டுல விடமாட்டாங்க. எங்க தாத்தாவுக்குப் பம்பாயில் தொழில் இருந்தது. அதனைப் பார்த்துக்கொள்கிறேன்னு சொன்னேன். அப்போது எனக்கு 18 வயசு. ஆனா, என் மன அமைப்புக்கு பம்பாயும் தொழிலும் சரிப்பட்டு வரலை. மீண்டும் ஊருக்கு வந்து கொஞ்ச நாள் இருந்துவிட்டு, சென்னைக்கு வந்தேன். திருவல்லிக்கேணி, நல்லதம்பி கோவில் தெருவில் மேன்ஷனில் ரூம் எடுத்துத் தங்கினேன். கல்யாணம் செய்துகொள்ளாமல், வேலைகள்னு எதுவும் செய்யாமல் கடைசிவரை அப்படியே வாழ்க்கையை வாழ்ந்துவிடுவது என்பதுதான் என் திட்டம். என் முடிவுகள் அப்பாவை மிகவும் சங்கடப்படுத்தின. டி.வி.எஸ். எஜென்ஸி எடுத்து, கிண்டியில் ஒரு ஷோ ரூம் திறந்துத் தந்தார். சரின்னு அவருக்காக ஒப்புகொண்டு கம்பெனியைப் பார்த்துக்கொண்டேன். 

அப்போது, ஒரு காதல் துளிர்த்தது. நல்லதம்பி கோவில் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி அவள் வீடு. பஸ்ஸில் பார்த்ததுதான். 1ஆம் நம்பர் பஸ் பிடித்து, மவுண்ட் ரோட்டில் இறங்கி, வேற பஸ் பிடித்து நான் கிண்டி போவேன். அவள் பாரிஸ் போவாள். நிறையப் படித்த ஐயங்கார் குடும்பம்; மிகப் பிரமாதமான அழகி. எக்கச்சக்கமான பசங்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவங்களுக்கு மத்தியில் எனக்கு என்ன செய்வது, எப்படி அவளை அணுகுவதுன்னு தெரியலை. அவளுக்காக பாரிஸ் வரைக்கும் போய், அங்கிருந்து கிண்டி போகத் தொடங்கினேன். சாயங்காலமும் இதே மாதிரி. அதுதவிர வேற வேலைகளே இல்லை. கம்பெனி நம்ம கம்பெனிதான. எனவே, நினைச்ச நேரத்துக்கு திறக்கலாம், அடைக்கலாம். ஒரு நாள் பஸ்ஸில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவள் ஹேண்ட் பேக்கைத் திறந்து, கர்சிப்பை எடுத்து சீட்டில் போட்டுவிட்டு பிறகு கையால் அதைக் கிழே தள்ளினாள். எனக்கு என்னைத் தள்ளியது மாதிரி இருந்தது. உடனே பஸ்ஸில் இருந்து இறங்கிவிட்டேன். அன்று ஷோ ரூம் போகலை. 

அப்புறம் 8 மாதங்கள் அவளைப் பார்க்கவில்லை. ஒருநாள் தங்கைக்குப் புடவை வாங்குனும்னு மைலாப்பூரில் கடைக்குள் நுழைந்தால்... நான் காலமெல்லாம் காத்திருந்த பேரழகு... எதிர்பார்க்காத இடத்தில் என் எதிரே உட்கார்ந்திருந்தது. எப்படி ஒருவருக்கொருவர் ஹலோ சொல்லிக்கொண்டோம் என்பது ஆச்சரியம்தான். நான், ‘‘தங்கைக்குப் புடவை வாங்க வந்தேன்’’ என்றேன். அவள், ‘‘எங்க பெரியம்மா ஆத்துல கல்யாணம். பட்டு வாங்க வந்தோம்’’ என்றாள். அப்ப, ‘‘என்ன உங்க ஆபிஸ்ல வேலை பார்க்கிறவரா’’ன்னு அவள் பெரியம்மா கேட்டாள். ‘‘இல்லை தெரிஞ்சவர்’’னு சொன்னாள். எனக்கு பயங்கர சந்தோஷம்! கடையில் இருந்து போகும்போது திரும்பி என்னைப் பார்த்தாள். அதில் ஒரு செய்தி இருந்தது. 

வழக்கமாக தங்கைக்கு புடவை வாங்குவதைவிட அதிக விலையில் ஒரு புடவை வாங்கி, கடை பில்லோட பின்பக்கமே, ‘டியர் பிரண்ட். முக்கியமான விஷயம் உன்னுடன் பேச வேண்டியிருக்கிறது. பத்து நிமிஷம். ஆபீஸ் முடிந்து வரமுடியுமா’ன்னு எழுதினேன். அடுத்த நாள் பஸ்ஸில் அவளுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அவள் புடவையை எடுத்து பேக்குக்குள் வைத்துக்கொண்டாள். அன்னைக்கும் நான் பஸ்ஸைவிட்டு கிழே இறங்கிவிட்டேன்! 

அம்மா, அப்பா, தம்பி, தங்கைகளைப் பார்ப்பதுக்காக அடிக்கடி நான் ஊருக்குப் போவேன். அதை வைத்து, ஊரில் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்று சந்தேகப்பட்டு, என்னிடமே கேட்டுவிட்டாள். அவளிடம் இருந்து அந்த வார்த்தையை நான் எதிர்பார்க்கவில்லை. இதில பெரிய முரண் என்னன்னா? அதன்பிறகு அவள் திருமணமாகி ஜெர்மனி போனாள். அங்கே போய் பார்த்தால், மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இதுதான் ‘அது ஒரு கனாக்காலம்’ நாவல். 

அந்த காதலுக்குப் பிறகு சுத்தமாக லௌகீக வாழ்க்கையில் எனக்கு பிடிப்பு இல்லாமல் ஆகிவிட்டது. தொழில், குடும்பம் எல்லாத்துல இருந்தும் வெளியேறிவிட்டேன். கிண்டி ஷோ ரூமை மூடிவிட்டேன். சம்பாதிப்பதுக்குன்னு நான் கடைசியா செய்த வேலை அதுதான். அப்புறம் எழுத்துகள் மூலமாக கொஞ்சம் பணம் வந்தது. சினிமா கதை விவாதங்களுக்குக் கூப்பிடுவார்கள். அப்புறம் டி.வி. சீரியல்கள்... இது எல்லாமே நான் எதிர்பாராமல், என் முனைப்பு இல்லாமல் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள். வீட்டில் இருந்து என் பங்குக்கு வந்த பணத்தை, பிரித்து வங்கிகளில் டெபாஸிட் செய்துவிட்டேன். அதிலிருந்து வரும் வட்டியில் கடைசிவரை வாழ்க்கையை ஓட்டுவது என முடிவுசெய்து கொண்டேன். அப்புறம் ஒவ்வொரு ஞானிகளா தேடிப் போவது, அவர்களது புத்தகங்களைப் படிப்பது, உரைகளைக் கேட்பது... என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. மேன்ஷன் நண்பர்கள், ‘‘ஓய்வுபெற்ற வயதான ஆள்மாதிரி இருக்கீங்களே’’ன்னாங்க. பதினெட்டு வருஷம் அந்த மேன்ஷனில் இருந்தேன். 

எதிர்பாராமல்தான் நான் கதைகள் எழுதத் தொடங்கினேன். ‘விகடன்’ பாலசுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்ததுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பம். என் நெருங்கிய தோழியின் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை, அவள் கேட்டுக்கொண்டதால் ஒரு திரைக்கதையாக எழுதினேன். அதன்பிறகு அவள் அமெரிக்கா போய்விட்டாள். அந்தத் திரைக்கதை அப்படியே இருந்தது. அதனை நாவலாக எழுதலாம் என தோன்றியது. ‘நான் இப்படியொரு நாவல் எழுதும் திட்டம் வைத்திருக்கிறேன். அதனை ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர்கதையாக பிரசுரிக்க முடியுமா?’ என்று நாலு வரியில் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘எழுதி அனுப்புங்கள்’ என்று உடனே பதில் வந்தது. ஒரு மாதத்தில் எழுதி முடித்தேன். அதுதான், ‘ஒருமுறைதான் பூக்கும்’ நாவல். என் முதல் தொடர்கதை. அடுத்த வருஷம் ‘அது ஒரு கனாக்காலம்’; ‘மீண்டும் அந்த ஞாபகங்கள்’னு தொடர்ந்து எழுதினேன். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் என் எழுத்துகள். 

‘ஒருமுறைதான் பூக்கும்’ நாவலைப் படித்துவிட்டு ஹேமான்னு ஒரு பொண்ணு எனக்குக் கடிதம் எழுதினாங்க. தொடர்ந்து என் எல்லாக் கதைகளையும் பற்றி விடாமல் எழுதிக்கொண்டே இருந்தாங்க. ஒருநாள், ‘உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். ஜே. கிருஷ்ணமூர்த்தி எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தி பிடிக்கும்னு ஆனந்தவிகடனில் எழுதியிருந்தாங்க. அவரைப் பற்றி உங்ககிட்ட பேச விரும்புறேன்’னு எழுதியிருந்தாள். சந்தித்தோம். இரண்டு, மூன்று வருடங்கள் நண்பர்களாக இருந்தோம். அதன்பிறகு சேர்ந்து வாழலாம் என முடிவுசெய்தோம். அப்ப எனக்கு 46 வயசு; அவளுக்கு 32. கோயில் பட்டாச்சார்யார் பரம்பரையில் வந்தவள். கடலூர் பக்கத்தில் திருவந்திபுரம் என்னும் ஊர். வைஷ்ணவ இலக்கியம் தொடங்கி, சமகால கவிதைகள் வரைக்கும் எக்கச்சக்கமாக படித்திருந்தாள். ஞானக்கூத்தன் மிகவும் பிடித்தக் கவிஞர். ஆரம்பகால ‘கணையாழி’யில் கவிதைகள் எழுதி இருக்கிறாள். மத்திய அரசு வேலை கிடைத்தது. அங்கிருந்த ஊழல்களைப் பார்க்கப் பிடிக்காமல் பத்தே நாளில் வேலையை விட்டுவிட்டாள். 

எங்க அம்மாவுக்கு ஹேமா பற்றி கடிதம் எழுதினேன். அம்மா, 10 பவுனில் ஒரு தாலி செய்து என் தம்பியிடம் கொடுத்து அனுப்பினார்கள். அதை ஹேமா கையில் கொடுத்தேன். வாங்கி, அவளே கழுத்தில் போட்டுக்கொண்டாள். இதோ 18 வருடங்கள் ஓடிவிட்டது. மிகவும் அமைதியான வாழ்க்கை. நினைச்சா புறப்பட்டு திருப்பதி போவோம். கும்பகோணம் போய் நாலு நாட்கள் இருப்போம். திருச்சி, சமயபுரம், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் கைலாசநாதர்... இப்படியே கோயில், கோயிலா போய்க்கொண்டே இருப்போம். பண்டிகை, உற்சவங்கங்களுக்குப் போகமாட்டோம். கோயில் பிரகாரங்கள், தனித்த அமைதி... பிடிக்கும். நிறைய புத்ததகங்கள் வாங்குவோம். வயதான காலத்தில் செங்கோட்டை பக்கத்தில் இளஞ்சி என்ற கிராமத்தில் செட்டிலாவது எனத் திட்டமிட்டிருந்தோம். அந்த ஊரில் அமைதியான முருகன் கோவில் ஒண்ணு இருக்கு. பக்கத்திலேயே குளிக்க குற்றாலம். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டோம். குழந்தை பிறந்தால், பிறகு அதன்கூடவே எல்லா ஆசாபாசங்களும் ஒவ்வொன்றாக வரும். 

ஹேமாவோட தங்கைதான் எழுத்தாளர் பிரேமா ஞானேஸ்வரி. நிறையக் கதைகள், நாவல் எழுதியிருக்காங்க. அவங்களுக்கு இருதயத்தில் பிரச்னை இருந்தது. எனவே, கல்யாணம் செய்துகொள்ளாமல் எங்ககூடவே இருந்தாங்க. சென்ற வருடம்தான் காலமானாங்க. அது ஹேமாவை அசைத்துவிட்டது. மனதளவில் மிகவும் பலவீனமாகிவிட்டாள். அம்மா வழியில் இவள்தான் கடைசி தலைமுறை. இவளோடு அந்தப் பரம்பரை முடிகிறது. ரொம்ப கவனமா இருப்பாள். வைஷ்ணவ சம்பிரதாயத்துப் படிதான் சாப்பாடு. கடுமையான உழைப்பாளி. பிரச்சினைன்னு எதுவுமே கிடையாது. போன வருஷம் நவம்பர் ஆரம்பத்துல திடிரென்று கடுமையான ஜூரம் வந்தது. அப்ப, ‘ஹெவி டோஸ் ஆன்டிபயாடிக்’ கொடுத்தாங்க. அன்னைக்கு இரவு சிறுநீரோட ரத்தமாகப் போனது. பதறி ஆஸ்பத்திரி போனோம். ஐ.சி.யு.க்கு மேலே சி.சி.யு. என்று ஒண்ணு இருக்கு. அங்கே அட்மிட் செய்துவிட்டார்கள். பத்து நாட்கள் அங்கே இருக்க வேண்டியிருந்தது. பல்வேறு பரிசோதனைகள், ஓட்டங்கள்... கடைசியில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது என்றார்கள். இப்போ, டயாலிஸிஸ் பண்ணிகொண்டே இருக்கிறோம். வாரத்துக்கு இரண்டுமுறை செய்யவேண்டும். டயாலிஸிஸ்ங்கிறது ஒரு முடிவு இல்லாத விஷயம். உடம்பு பலவீனமாகிக்கொண்டே போகிறது. அதைத் தேத்த ஊசிகள், மருந்துகள்... அப்புறம் அதனால் உண்டாகும் இன்பெக்ஸன். உடனே ஆண்டிபயாடிக் ஹெவி டோஸ் கொடுக்கிறார்கள். இப்படியே கொஞ்சம், கொஞ்சமா செலவு கூடிக்கொண்டே போகிறது. 

கொஞ்ச நாளில் நல்ல முன்னேற்றம் இருந்தது. சரியாயிரும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். திடீரென்று பின்னடைவு. மூச்சு வாங்கியது... மிகவும் இதமாக, சந்தோஷமா போய்க்கொண்டிருந்த வாழ்க்கை! முழுக்க சிதைந்து விட்டது. ஒரு மனிதனுக்கு சாபம் கொடுப்பதாக இருந்தால் இந்த நோயைக் கொடுக்க சொல்லலாம். அந்தளவுக்கு கொடுமையான விஷயம். 

மனைவி ஹேமாவுடன் ஸ்டெல்லா புரூஸ்

இந்த ஆறு மாதத்தில், டிவியை ஆன் செய்ததில்லை. பத்திரிகைகள் பார்க்கவில்லை. நான் பன்னிரெண்டு கிலோ குறைந்திருக்கிறேன். அவள் 20 கிலோ குறைந்திருக்கிறாள். சரியான சாப்பாடு கிடையாது, தூக்கம் கிடையாது. ஸ்டெல்லா புரூஸ் என்கிற கம்பீரம், அமைதி... எல்லாம் விழுந்து நொறுங்கிவிட்டது. சமாளித்து விடுவோம், நாமே சரி செய்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் யாரிடமும் எங்கேயும் உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. சில உறவினர்கள், நண்பர்கள் அவர்களாக உதவினார்கள். பணக் கஷ்டங்களைவிட தனிமைதான் பெரிய வேதனையாக இருக்கிறது. நாங்கள் இரண்டு பேர்தான் வீட்டில். குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்ற முடிவு தவறோ என்று இப்போது தோன்றுகிறது. 

வயதான காலத்துக்கு என்று திட்டமிட்டு வைத்திருந்த, வங்கி டெபாஸிட்கள் காலியாகிவிட்டது. இவ்வளவு செலவுகளைச் செய்வதுக்கு பேசாமல் போய்சேர்ந்துடலாம்னு மனசுல குழப்பம், சங்கடம், அழுகை... ஒருநாள் தற்கொலைக்கு முயற்சித்தாள். இப்ப எங்களிடம் கையில் எதுவுமே இல்லை, நம்பிக்கையும் இல்லை. இதில் இருந்து சீக்கிரம் விடுதலை வேண்டும்கிறதுதான் என் ஒரே வேண்டுதல். மரணம் சம்பவிக்கனும் அல்லது நோய்க்கு முடிவு வேண்டும். அது தள்ளிக்கொண்டே போக, என் நம்பிக்கைகள் எல்லாம் தளர்ந்து நொறுங்கிவிட்டேன். என்ன செய்வதுன்னே தெரியலை’’ என்று நம் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார் ஸ்டெல்லா புரூஸ். அவர் குரல் உடைந்திருந்தது. கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள்!


No comments: