30 January 2010

முகங்கள்

ஸ்ரீ ஏ.கே.ராமாநுஜம்
(1929-1993)

தமிழை உலகில் பெருமைப்படுத்தியவர்

தளவாய் சுந்தரம்


1999ஆம் ஆண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக் கான 'சாகித்ய அகாதமி விருது' மறைந்த திரு. ஏ.கே. ராமாநுஜம் அவர்களுக்கு 'தி கலெக்ஷன் ஆஃப் போயம்ஸ்' புத்தகத்திற்காக வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட ராமாநுஜத்தின் மனைவி திருமதி மாலி டேனியல்ஸ் பரிசுத்தொகை ரூபாய் இருபத் தைந்தாயிரத்தைச் சென்னையில் செயல்பட்டு வரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு நூலக வளர்ச்சி நிதியாகக் கொடுத்தார். மேலும், சுமார் 2000 புத்தகங்களடங்கிய ராமாநுஜத்தின் வாழ்நாள் புத்தகச் சேகரிப்புகளையும் அவர் அந்த நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். ஏ.கே.ராமாநுஜம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூலக வளர்ச்சி நிதிக்காக கொடுக்கப் பட்டுள்ள 'சாகித்ய அகாதமி விருது' பரிசுத்தொகை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறந்த உலக இலக்கிய நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படும்’ என்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக (அப்போதைய) இயக்குநர் திரு. எஸ்.தியடோர் பாஸ்கரன் கூறினார். ஏ.கே. ராமாநுஜம் வாழ்நாளில் செய்து வந்த பணியின் நீட்சிபோல் அதனை நினைவுகூரும் வகையில் அமைந்துவிட்ட இச்செயல் ராமாநுஜத்தை மிகச் சரியான முறையில் பெருமிதப்படுத்தக்கூடியது. அதனையொட்டி தமிழ் பத்திரிகைகளுக்கு கொடுக்க ‘ஏ.கே. ராமாநுஜம் பற்றி ஒரு பத்திரிகை செய்திக் குறிப்பு’ தயா ரித்துத் தரும்படி திரு.தியடோர் பாஸ்கரன் என்னைக் கேட்டுக்கொண்டார். அப்பொழுது நான் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பணியாற்றி வந்தேன். அந்தக் குறிப்புதான் இது. (ஏ.கே.ராமாநுஜம் பற்றியத் தகவல்களைத் தேடுபவர்களுக்கு இது பயன்படக்கூடும் என இதை இங்கே ஏற்றி வைக்கிறேன்.)

1929இல் மைசூரில் பிறந்த ஏ.கே.ராமாநுஜத்தின் பூர்வீகம் தமிழ்நாடு. ஆங்கில இலக்கியம், மொழியியல் ஆகிய துறைகளில் முறையே பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வை முடித்ததும் அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் பண்பாடு, மொழி யியல் ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். மற்றும் ஹார்வர்ட், கலி போர்னியா, பரோடா, விஸ்கான்ஸின், பெர்கிலியே, மெக்சிகன் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்கங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூகச் சிந்தனைக் குழுவில் ஏ.கே.ராமா நுஜம் ஓர் உறுப்பினர்.

நாட்டார் வழக்காற்றியல், இந்திய இலக்கியம், மொழியியல் ஆகியவை குறித்து ராமாநுஜம் எழுதியிருக்கும் கட்டு ரைகள் உலகின் பல முன்னணி ஆராய்ச்சி இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. கன்னடம், தமிழ் ஆகிய மொழி களில் இருந்து ராமாநுஜம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தி ருக்கும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் முதலியன அறுபது தொகுதிகளாக உள்ளன. தமிழ்ச் சங்ககாலக் கவிதைகள், புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் முக்கிய நாவலான 'சம்ஸ்காரா' ஆகியவை அவற்றில் அடங்கும். மேலும், பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் ராமாநுஜம் எழுதியிருக்கிறார். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் இந்திய இலக்கியம் குறித்துத் தெற்காசிய ஆய்வு மையம் வெளியிட்ட தொகுதிகளின் இணைப் பதிப்பாசிரியராக இருந்து அத்தொகுதிகள் வெளிவரக் காரணமாக இருந்தார். ஆங்கிலத்தில் வெளி வந்த 'இந்திய நாட்டுப்புறக் கதைகள்' தொகுதியும் இவரின் முயற்சியினாலும் உழைப்பாலும் வெளிவந்ததுதான்.


ஏ.கே.ராமாநுஜம் அவருடைய வாழ்நாளில் செய்து முடித்திருப்பவை தமிழ்ச் சூழலில் தனி ஒருவரால் மட்டும் செய்ய முடியக்கூடியவையா இவ்வளவும், எனும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியன. அவர் ஒரு முறை சொன் னார்: ''எழுதுவதற்கான காலம் கடந்துவிட்டது. எஞ்சியிருப்பது மிகவும் குறைந்த நேரம்தான் என்கிற நினைப்பிலேயே எழுத வேண்டும்''. அவர் செய்யத் திட்டமிட்டி ருந்தவற்றுக்கும், கால வேகத்திற்குமான இடைவெளி அவரை மிகுந்த ஆயாசம் கொள்ளச் செய்தது. ஆனால், அவர் எப்பொழுதும் அது குறித்து மலைப்புக் கொண்டதில்லை. ஒரு வெறி கொண்டவர் போல் அனைத்தையும் செய்து முடித்துவிட வேண்டும் என்று செயல்பட்டார்.

தமிழ் உரைநடை மற்றும் கவிதைகளிலிருந்தும் ராமாநுஜம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேர்வு செய்தவை அவற்றின் தரம் சார்ந்தும் மொழிபெயர்ப்புத் தரம் சார்ந்தும் உலகின் மற்ற மொழி வாசகர்களிடையே தமிழ் மொழிக்குப் பெருமையை ஏற்படுத்தக்கூடியவை. சங்க காலக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது. குறுந்தொகையையும் நம்மாழ்வாரையும் பிரமிக்கத்தக்க வகையில் எளி மையுடன், நேர்மை யுடன் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். வெளி நாட்டு இலக்கியச் சூழலில் அந்தத் தொன்மையான படைப்புகளுக்குப் பரந்த அறிமுகத்தை ஏற்படுத்தி, தமிழை உலகத்தில் பெருமிதப்படுத்தினார்.

'தி இன்டீரியர் லன்ட்ஸ் கேப்', 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா' ஆகியவை அவருடைய மொழிபெயர்ப்புகளில் மேற்கத்திய வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டவை. 'தி இன்டீரியர் லன்ட்ஸ் கேப்' அகம் மற்றும் காதல் குறித்த குறுந்தொகைப் பாடல்களைக் கொண்டது. அது போலான கவிதைகளைச் சுவைத்தறியாத மேற்கத்திய வாசகர்களுக்கு அதன் பரவசம் மிகுந்த விந்தையானதாக இருந்தது. 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா' பத்தாம் நூற்றாண்டின் பக்திக் கண்டன இயக்கத்தைச் சேர்ந்த நான்கு கன்னடக் கவிஞர்களின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு. தான் அடிக்கடி விரும்பிப் படிக்கும் புத்தகங்களில் 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா'வும் ஒன்று என்று கவிஞர் ஆத்மநாம் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து ராமாநுஜம், ''அவர் என்னுடைய 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா'வை விரும்பிப் படிப்பார் என்று கேள்விப்பட்டேன். பழங் காலத்தில் யாரோ எழுதிய கவிதைகள் என்னைப் பாதித்தன. அது பற்றி நான் எழுதியது இன்னொரு கவிஞனை பாதித்திருக்கிறது. இந்தத் தொடர்பு என்னை வியக்க வைக்கிறது'' என்றார்.

வெறும் சமஸ்கிருதத்தில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தை மற்ற இந்திய மொழிகளை நோக்கித் திருப்பியதில் ராமாநுஜத்துக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாகத் தமிழை நோக்கித் திருப்பியதில் அவரது பங்கு முக்கியமானது. அதை அவர் மிகவும் மென்மையாக சத்தம் போடாமல் தனி ஒருவராகச் செய்தார். மற்றவரின் சத்தங்களையும் பொறுத்துக் கொண்டார். ஆனால், ஏ.கே.ராமாநுஜம் அடிப்படையில் ஒரு கவிஞர். ''தினம் ஒரு கவிதையாவது எழுதாமல் அவர் தூங்குவதில்லை'' என்று அவரை சிகாகோ பல்கலைக்கழகத்தில் சந்தித்த அனுபவம் குறித்து எழுத் தாளர் அம்பை குறிப்பிட்டிருக்கிறார். 'இரவு முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து எழுதி முடித்த கவிதைக்கு நகாசு வேலைகள் பார்த்துக் கொண்டிருப்பார். இடையில் யாராவது தொலை பேசியில் கூப்பிடுவார்கள். வேறு ஏதாவது விஷயம் இருக்கும். பேசிவிட்டு வந்து மீண்டும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கொள்வார். கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து ஒரு சொல்லையே வெறித்துக் கொண்டிருப்பார். ஒரே ஒரு சொல் பற்றிக்கூட சந்தேகம் எழக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். வேலைகளை ஒத்திப்போடவும் மாட்டார். திருப்தி ஏற்படும் வரை அவர் கம்ப்யூட்டர் முன்னால் இருந்து எழுவதில்லை' என்று மேற்குறிப்பிட்ட கட்டுரையில் எழுத்தாளர் அம்பை குறிப்பிட்டிருக்கிறார்.

'அறுபது, எழுபதுகளில் ராமாநுஜம் சென்னை வரும் ஒவ்வொரு முறையும் தமிழ்க் கவிதைகளையும் கவிஞர்களையும் பரிச்சயம் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். எங்கள் சந்திப்புகளில், அவருடைய கவிதைகளை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார்; மொழியை, அதன் ஒளியலைகளைப் பிரக்ஞைபூர்வமாகப் பயன்படுத்தி, ஒரு கவிதையில் எவ்வாறு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சில கவிதைகள் மூலம் எங்களுக்கு உணர்த்துவார்' என்று கவிஞர் எஸ்.வைத் தீஸ்வரன் சென்னையில் ராமாநுஜத்தை சந்தித்தது குறித்து எழுதியிருக்கிறார். ஒரு பெரிய பல்கலைக் கழகப் பேராசிரியர் போல் இல்லாமல் அவரை எந்த ஒரு மாணவனும் மாணவியும் சுலபமாக அணுக முடியும் என்னும்படியே பழகினார். 'சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் குழு தமிழில் பேசிக்கொண்டு திரிவதும் மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் என்று தமிழ் எழுத் தாளர்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருப் பதுமான சூழல், அவர் இருந்த காலங்களில் இருந்தது' என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

1976ஆம் ஆண்டு இந்திய அரசு ஏ.கே.ராமாநுஜத்துக்கு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்துக் கெளரவித்தது. 1988ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கான 'இராதாகிருஷ்ணன் மெமோரியல் லெக்ஸர்ஸ் பெலோஷிப்' இவருக்கு வழங்கப் பட்டது. 1990இல் ராமாநுஜம் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க அகாதமிக்குத் தேர்வு செய்யப்பட்டார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 'மாமன்னன் இராஜராஜன் விருது' சங்க இலக்கியங்களை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தமைக்காக இவருக்கு வழங்கப்பட்டது.

தொழில் நிமித்தம் அவர் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் விழிப்பி லும் உறக்கத்திலும் அவர் இந்தியாவைத்தான் நினைத்துக் கொண்டிருப்பார். பணி ஓய்வுக்குப் பின் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றும் பெரும் கனவு அவரை ஆட்கொண்டிருந்தது. அவருடைய கனவுகள் வடிவம் பெற்றிருக்குமெனில், அது தமிழுக்கு ஒரு கொடையாக அமைந்துவிட்டிருக்கும். ஆனால், அவருடைய கனவுகளை நிறைவேற்றும் செயல்களை அவர் துவங்கும் முன்பே அவரை மரணம் அணைத்துக் கொண்டது. 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி இருமல்நோய் கண்டு அவர் மாண்டு போனார்.

ஏ.கே. ராமாநுஜத்தின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள்: The Striders (Oxford 1966), Relations (Oxford 1971), Selected poems (Oxford 1976), Second sight (Oxford 1986), Hokkulalli Huvilla (No Lotus in the Novel, Dharwar 1969), Mattu ltara padugalu (And Other poems, Dharwar 1977), The Interior Landscape (indiana 1977), Speaking of Siva (Penguin classics 1973), Samskara (Oxford 1976), Hymns for the Drowning (Princeton 1981), Poems of Love and War (Columbia/UNESCO 1985).

25 July 2009

படித்ததில் பிடித்தது


தோற்றோடிப்போன குதிரை வீரன்

செழியன்

ஒரு புலி வீரன் இலங்கை இராணுவத்தை கண்டால், ஒரு கைகுண்டை எப்படி இராணுவத்தின் மீது எறிவது என்பது பற்றி சிந்திக்கலாம்; அல்லது இரவோடு இரவாக வீதியில் இரகசியமாகத் தாட்டுவைத்த கண்ணி வெடியை, எந்த செக்கனில் சரியாக வெடிக்க வைத்தால் எத்தனை இராணுவம் விழும் என்று மிகத் தீவிரமாக சிந்திக்கலாம். இதற்கும் மேலாக எந்த இடத்தில் கட்டியணைத்து தனது தற்கொலை குண்டை வெடிக்க வைக்கலாம் என்றுகூட அந்த வீரன் ஆலோசிக்கலாம். என்னுடைய நிலைமை இந்த எளிமையான அளவு கோல்களுக்குள் எல்லாம் அடங்காத விநோதமான பரிமாணங்களைக் கொண்டது. இலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி குதித்து தப்பி ஓடுவது என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. ஒரு புலி வீரனின் நுட்பங்கள் எவ்வாறு எனக்குத் தெரியாதோ, அதுபோல என்னுடைய நுட்பங்கள் அந்த வீரனுக்குத் தெரியாது என்று நம்புகின்றேன்.

இலங்கை இராணுவத்தை கண்டால் எப்படி தப்பி ஓடுவது என்பது, ஒரு குண்டை அவர்கள் மீது எறிவதைவிட மிகக் கடுமையான காரியம். இதற்கு முதலில் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தின், இராணுவத்தினரின் உளவியல் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தினர் பல காரணங்களுக்காக யாழ்பாணத்து தெருக்களில் வாகனங்களில் திரிவார்கள். திடீரென சிகரட் வாங்குவதற்காக அவர்கள் பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அணிவகுத்து செல்வார்கள். அந்த சமயத்தில் அவர்கள் யாரையும் வலிந்து கட்டி கைது செய்யும் மனநிலையில் இருக்கமாட்டார்கள். எவ்வளவு விரைவாக சிகரட்டை வாங்கிக்கொண்டு, மிக பாதுகாப்பாக மீண்டும் தமது இருப்பிடத்திற்கு திரும்பி தம் அடிப்பது என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் அவர்களை நாம் எங்காவது வீதியில் இடுக்கு முடுக்காக சந்தித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். பல சமயம் இந்த சிகரட் வாங்கும் சமாசாரத்திற்காக; இலங்கைச் சமாதான செயலகம், ஐனாதிபதி, யுத்த மந்திரி, நோர்வே, ஐ.நா. சபை என்று வரிசையாக ஒருவருக்கும் தெரியாமல் ஒரு மணிநேர யுத்த நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. தமிழர்கள் மனிதாபிமானவர்கள் என்பதற்கு இந்த யுத்த நிறுத்தங்கள் எளிமையான உதாரணம்.

ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தாக்குப் பிடித்து; இந்த கண்ணிவெடி தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், கிரனைட் தாக்குதல்கள், திடீர் துப்பாக்கித் தாக்குதல்கள் எல்லாவற்றையும் சமாளித்து உயிரோடும் இருக்கின்ற இராணுவத்தினர் நிறையப் பேர் உள்ளனர். இவர்களுக்கு இதற்குப் பரிசாக இரண்டு வார விடுமுறை கொடுக்கப்படும். தனது மனைவியை, பெற்றோரை, சகோதரர்களைப் பார்ப்பதற்கு மிக்க ஆசையாக அவர்கள் புறப்படும் போது மொத்த இராணுவ முகாமே சந்தோசத்தில் ஆழ்ந்துவிடும். தமது நண்பர்களை பயணம் அனுப்ப, யாழ் இரயில் நிலையத்திற்கு, இராணுவத்தினர் வெகு மகிழ்சியாக அணிவகுத்து வேகமாக வருவார்கள். இந்த சமயத்திலும் எங்களைக் கண்டால் ஒரு அணிலை, ஒரு எலியை பார்ப்பது போல பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். கைது செய்கின்ற எண்ணம் துளியும் கிடையாது.

இதற்கு மாறாக, எப்போதாவது மிக அமைதியாக, மிக மெதுவாக ஒரு நத்தையைப் போல, ஒரு ஆமையைப் போல இராணுவ வாகனங்கள் வீதிகளில் வருகின்றன என்றால்- அதுதான் மிக ஆபத்தானது. இந்தச் சமயத்தில் வழியில் அகப்படுகின்றவர்களை சுடவேண்டும் என்று இராணுவத்தினருக்குத் தோன்றினால் சுட்டுத்தள்ளுவார்கள். பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் பிடித்து வண்டியில் ஏற்றுவார்கள். அடிக்க வேண்டும் என்று தோன்றினால் அடித்து எறிந்து விடுவார்கள். ஒரு சிலையை, ஒரு பெண்ணை சிதைக்க வேண்டும் என்று தோன்றினால் சிதைத்து விடுவார்கள். இதற்கும் எல்லாம் அப்பால் வேறு விடயங்களும் உள்ளன. இராணுவத்திடம் இருந்து தப்ப இந்த உளவியல் மிக முக்கியம்.

அந்த நாட்களில் தமிழ் மக்களுக்கு இலங்கை இராணுவத்தைப் பிடிக்காது. மக்களுக்கு மட்டுமல்ல, நாய்கள், பூனைகள், பறவைகள், சந்திர சூரியர் என்று ஒருவருக்கும் இராணுவத்தை பிடிக்காது. நாம் வீட்டில் இருந்து புறப்பட்டுவிட்டால் வழி நெடுக மக்கள் தகவல் தந்து கொண்டேயிருப்பார்கள். “தம்பி சந்தியில ஆமி நிற்குது, கவனம்.’’ “தம்பி இப்பத்தான் ஆமிக்காரன்கள் யாழ்ப்பாணம் போறாங்கள். திரும்பி வருவாங்கள், கவனம்.’’ “தம்பி சுண்ணாகத்தை சுத்தி வளைச்சு ஆமி நிற்குதாம்.’’ “தம்பி அச்சுவேலியில இரவில இருந்து ஆமி நிற்குது. பண்டிதரை கொன்டிட்டாங்களாம்.’’ ­- இப்படி செய்திகளை மக்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

ஒரு நாள் பலாலி வீதியில், யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர் ஓட்ட, பின்னால் நான் இருக்க சென்று கொண்டிருந்தோம். கோண்டாவில் டிப்போவைத் தாண்டி சில யார் தூரம் சென்றபோது, திடீர் என்று எதிர்திசையில் இருந்து எம்மை நோக்கி, பலாலி வீதியால் ஒரு இராணுவப் பேரணி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததை இருவரும் கண்டோம். அந்த பேரணியின் முதல் வாகனமே ஒரு ஆமட் கார். சட்டென்று மோட்டார் சைக்கிளை நண்பர் நிறுத்தினார். சில கணங்கள் என்ன செய்வது என்று குழப்பம். குறுக்கே பாய்ந்து செல்வதற்கு ஒரு குறுக்கு ஒழுங்கையும் அந்த இடத்தில் இல்லை. “தோழர் தோளை இருக்க பிடிச்சுக் கொள்ளுங்கள்’’ என்று அவர் சொல்ல, நான் பிடிக்க, நமது வாகனம் சர் என்று வந்த வழியே கணநேரத்தில் திரும்பி, எதிர்திசையில் ஓடியது. இவ்வாறு நாம் திரும்பி ஓடியதைக் கண்டதும் ஆமட் கார் ‘விர்’ என்று இராமர் விட்ட அம்பு போல புறப்பட்டு வந்ததை காணமுடிந்தது. இராணுவம் சுட முன்னர் ஏதாவது விபத்து நிகழ்ந்து விடலாம் என்று எனக்குத் தோன்றியது. அந்த அளவு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடியது. கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு ஒரு இருபது செக்கனில் வந்திருப்போம். அந்த இடத்தில் இடது புறம் இருந்ததுதான் அன்னுங்கை ஒழுங்கை. அதில் திரும்பி எமது மோட்டார் சைக்கிள் ஓடியது. இன்னம் ஒரு எட்டு செக்கன் கடந்திருக்கும். ‘சர்’, ‘சர்’ என்று துப்பாக்கிக் குண்டுகள் வந்து நமக்கு ஒரு பக்கமாக விழுந்தன. உண்மையில் அவையெல்லாம் எனது முதுகில் விழுந்திருக்க வேண்டும். எங்களைப் பிடிப்பதற்காக மிக வேகமாக வந்த ஆமட் கார் அந்த ஒழுங்கையில் திரும்பியபோது, மதிலோடு மோதிக்கொண்டது. அந்த இடத்தில் இருந்து அவர்கள் சுட்ட குண்டுகள் குறி தவறி எனது வலது பக்கத்தில் விழுந்தன. இதற்கிடையில் அந்த ஒழுங்கையில் ஏற்கெனவே பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் பதட்டம் அடைய, நாமோ வேகமாக சென்று மறைந்துவிட்டோம். “நம்ப பிள்ளையள்தான் தப்பிப் போகுது’’ என்று சனங்கள் தமக்குள் பேசிக்கொண்டாலும், யாருமே இராணுவத்திற்கு எந்தத் தகவலும் சொல்லவேயில்லை.

இன்னொரு நாள், மத்தியானம் தாண்டி ஒரு மணி இருக்கலாம். வெய்யில் எரித்துக் கொண்டிருந்தது. நிலாவரையில் இருந்து இராச வீதி வழியாக சைக்கிளில் கோப்பாயை நோக்கி சென்று கொண்டிருந்தேன். சைக்கிளில் ஒரு பிளாஸ்டிக் பை. அது நிறை, ஓடியோ கசெட்டுகள். அந்த கசெட்டுகளில் அமைப்புக் கூட்டத்தில் நடந்த முக்கிய விடயங்கள் பதிவாகி இருந்தன. பொதுவாக இராணுவத்தினர் பலாலி வீதியையே பாவிப்பார்கள். இராச வீதியை பாவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், பாருங்கள் இதுதான் வீரர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். இராச வீதியால் இராணுவம் வந்தால் என்ன செய்வது என்றே மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. நான் தப்பி ஓடுவது மட்டுமல்ல, நான் காவிக்கொண்டு செல்கின்ற கசெட்டுகளையும் நான் காப்பாற்ற வேண்டும். அதில் பல தகவல்கள் இருந்தன. எனவே, இராணுவம் வந்தால் முதலில் சைக்கிளில் தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பையை அப்படியே கிழித்து எடுத்துக்கொண்டு ஓட வேண்டும் என்று தீர்மானித்து, அந்தப் பையின் கழுத்தில் ஒரு கையை இருக்கமாக வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தேன்.

ஒரு ஐந்து நிமிட நேரத்தில், தூரத்தில் பச்சையாக, கட்டையாக ஒரு வண்டி மிக மெதுவாக வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சந்தேகமில்லை, அது இராணுவத்தின் ஒரு ஆமெட் கார். பையை கிழித்து கையில் எடுத்துக்கொண்டேன். சைக்கிளை அப்படியே ஓரமாக போட்டுவிட்டு, வாழைத்தோப்பு வழியாக ஓடத் தொடங்கினேன். என்ன ஓட்டம் அது? உயிருக்காக ஓடுகின்ற ஓட்டம் இருக்கிறதே, அது ஒலிம்பிக் ஓட்டத்தை விட வேகமானது. வெகு தூரம் ஓடிய பிறகு, மிளகாய்த் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களைக் கண்டேன். ஓடிவந்து கொண்டிருந்த என்னை அதிசயமாகப் பார்த்தார்கள். “ஆமி’’, “ஆமி’’ என்று வாய் குளறியது. உடனேயே தங்களுடைய வேலையை எல்லாம் விட்டுவிட்டு, என்னை பாதுகாக்கத் திரண்டார்கள். ஒரு இடத்தில் இருக்கச் சொன்னார்கள்; இன்னொருவர் தண்ணீர் கொண்டுவந்து தந்தார்; இராணுவம் துரத்திக்கொண்டு தோட்ட வழியாக வருகின்றதா இல்லை போய்விட்டதா என்று பார்த்து வர ஒருவர் சென்றார்.

இலங்கை இராணுவம் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது என்றும், அந்த வீதியால் வந்த அனைவரையும் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றுவிட்டனர் என்றும் சில நிமிடங்களில் செய்தி வந்தது. “தோழர் சரியாய் பயந்து விட்டார்’’ என்று யாரோ சொன்னார்கள். “தோழர் எங்க போக வேண்டும்?’’ என்று வேறு யாரோ கேட்டார்கள். “தோழர் இருக்கிற இடம் எனக்குத் தெரியும். நான் கொண்டு போய் விடுறன்’’ என்று ஒரு இளைஞர் முன்வந்தார். நம்ப மாட்டீர்கள், அவரை நான் முன்னை பின்னை பார்த்தது கிடையாது. என்னிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல், சரியாக நான் பாதுகாப்பாக தங்கியிருந்த அந்த வீட்டுக்கு என்னை தனது சைக்கிளில் கொண்டு வந்து சேர்த்தார் அந்த நண்பர். இப்படித்தான் அந்தக் காலத்தில் மக்களுக்கும் எங்களுக்குமான உறவு இருந்தது.

இந்த சம்பவங்களுக்கு எல்லாம் முன்னதாக ஒரு விடயம் நடந்தது. அதுதான் எனக்கும் இலங்கை இராணுவத்திற்குமான முதல் சம்பவம். 1980களில் ஒரு நாள் வவுனியா பொறுப்பாளரான ஐயா தோழர் தமிழ்நாட்டுக்குப் போகவேண்டி யாழ்ப்பாணம் வந்தார். சென்னைக்குப் போவது என்றால் கடவுச்சீட்டு இருக்க வேண்டும், அதில் இந்திய விசா இருக்கவேண்டும். அதற்கு மேலாக ஒரு விமான சீட்டு இருக்கவேண்டும். இது ஒன்றும் அவரிடம் கிடையாது. இது எதுவும் இல்லாமல் தமிழகத்திற்கு போகலாம், வரலாம்; விரும்பினால் தமிழகத்திலேயே தங்கலாம் என்பது அவருக்குத் தெரியும்.

தமிழ்நாட்டுக்கு போவதற்கு சிலர் கொழும்பு இரத்மானலா விமான நிலையத்திற்குச் செல்வார்கள். சிலர் பலாலி விமான நிலையத்துக்குச் செல்வார்கள். கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் தலைமன்னார் கப்பல் நிலையத்திற்குச் செல்வார்கள். இது தமிழ் விடுதலைப் போராளிகளுக்கு சரிப்பட்டு வராது. அவர்கள் இதற்கு முதலில் வடக்கில் உள்ள ஏதாவது ஒரு கடற்கரைக்குச் செல்லவேண்டும். மயிலிட்டியில் இருந்து குறைந்தது வாரத்துக்கு இருமுறை தமிழ்நாட்டுக்கு படகு செல்லும். அந்த படகில் ஏறினால் தமிழக கரையோரமாக அமைந்த வேதாரணியத்தில் இறங்கலாம். அந்த ஊரில்தான் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் கோயில் கதவு திறக்கவும், மூடவும் தேவார திருப்பதிகங்கள் பாடிய கோயில் உள்ளது.

ஐயாத் தோழரை வழியனுப்ப சுகுத் தோழர் சென்றார். இவர்களையும் இன்னும் சிலரையும் மயிலிட்டி கடற்கரையில் வைத்து இலங்கை இராணுவம் கைது செய்தது. அதனைத் தொடர்ந்து என்னையும், சில நண்பர்களையும் இராணுவத்தினர் தேடி வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அதனால் வீட்டில் இரவில் நான் தங்குவதில்லை. இரண்டு மாதம் இப்படி நகர்ந்தது. ஒரு நாள் யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்னர் நடந்த ஒரு கண்ணிவெடித் தாக்குதலை அடுத்து பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து யாழ்ப்பாண நகரத்தில் பல அப்பாவி பொதுமக்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். பலரை அரைகுறை உயிருடன் சைக்கிள், சைக்கிள் டயருடன் சேர்த்து சந்திகளில், வீதிகளில் வைத்து எரித்தனர். யாழ்- பல்கலைக்கழக மாணவன் கேதீஸ்வரனும் இப்படி எரிக்கப்பட்டவர்களில் ஒருவன். இந்த புகைப்படங்களை எல்லாம் எமது தோழர் அசோக், ஒரு அசாராத் துணிவுடன் துணிந்து நின்று, படங்கள் எடுத்து தர, அதை நாம் பிரதிகள் எடுத்து, இலங்கையில் உள்ள எல்லா வெளிநாட்டு தூதரகங்களுக்கும் அனுப்புவதற்காக கவரில் இட்டு, விலாசங்களை எழுதி தயாரிப்பு வேலைகளை செய்தோம். இந்த வேலைகள் முழுதும் இரவு பத்து மணி வரை எனது வீட்டில் நடந்தது. அடுத்த நாள் தபாலில் அனுப்ப முத்திரை செலவுக்காக சுமார் 3000 ரூபாய்க்கு மேல் பணமும் இத்தோடு இருந்தது. எல்லா வேலைகளும் முடிந்து தோழர்கள் போனபின்னர், நானும் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இன்னொரு வீட்டுக்குச் செல்லவேண்டும். சரியான களைப்பாக இருந்ததால் சற்ற நேரம் கழித்து போகலாம் என்று கண்ணயர்ந்து விட்டேன்.

அதிகாலை, ஒரு இரண்டு மணி இருக்கும். வித்தியாசமான சத்தங்களும் யாரோ நிறையப் பேர் வீட்டை சுற்றி வளைத்து நிற்பது போலவும் ஒரு உணர்வு எனது தந்தையாருக்கு ஏற்பட்டது. மெதுவாக எழுந்து, மின் விளக்கைப் போடாமல் கண்ணாடி வழியாகப் பார்த்த போது, தெருவில் பல இராணுவ வண்டிகளும், வாசலிலும் வீட்டைச் சுற்றியுமாக துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் நின்று கொண்டிருந்ததை அவர் கண்டார். சிறிதுநேரத்தில் வீட்டுக்கதவை தட்டிய இராணுவத்தினர், கதவைத் திறக்கும்படி மிரட்டினார்கள். திறந்ததும் அப்பாவைத் தள்ளிக்கொண்டு ‘தட’, ‘தட’ என்று இராணுவத்தினர் வீட்டுக்குள் புகுந்தனர்.

ஆறு அறை, ஒரு பெரிய வரவேற்பறை, சமையல் அறை, இரண்டு மலசல கூடம், ஒரு குளியல் அறை, வளவுக்குள் இருந்த மாமரம், தென்னை மரம், கொய்யா மரம், மாதுளை மரம், கறுவேற்பிளை மரம் என்று எல்லா மரங்களில் தேடியும், இதற்கும் மேல் ஓட்டுக்கு மேல் ஏறிப்பார்த்தும் இராணுவத்தினரால் என்னைப் பிடிக்க முடியவில்லை. “தம்பி, இந்த அறைக்குள்ளதானே படுத்துக்கிடந்தான். எங்க போட்டான்’’ என்று எனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே ஆச்சரியம். வந்த இராணுவத்தினர், என்னை சரணடையுமாறு கூறிவிட்டு, எனது தம்பிமார் இருவரையும் கைது செய்துகொண்டு போய்விட்டனர். அடுத்த நாள் ஊரெல்லாம் பெரிய வதந்தி பரவியது. “இராணுவம் துரத்த, துரத்த, ஆறு அடி உயர மதிலை குதிரை போல் பாய்ந்து குதித்து சிவா தப்பிவிட்டான்’’ என்று.

உண்மையில் இவன் ஒரு வீரன்தான் என்று, அதற்கு பிறகுதான் ஊரில் என்னை பெண்களும் முதியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளும் சற்று மரியாதையாகப் பார்க்கப் பழகினார்கள். அதற்குப் பிறகு, ஒரு குதிரை வீரன் போல, குதிரை இல்லாவிட்டாலும் கூட சைக்கிளில் பறந்து திரிந்தேன். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அதை சொல்லாவிட்டால் மக்களுக்கு இழைத்த பெரும் துரோகமாக ஆகிவிடும். அன்று எனக்கு தூக்கக் கலக்கமாக இருந்தபோதும், ‘வீட்டிலேயே படுத்து நித்திரை கொள்’ என்று மனம் சொன்னாலும், இன்னுமொரு பக்கம் ‘வீட்டில் தங்காதே’ என்று உள்மனம் எச்சரித்தது. எந்த நேரமும் இராணுவம் வரலாம். எனவே, சோம்பல் படாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிடு என்று அந்த குரல் கூறிக்கொண்டே இருந்தது. இதனால், இரவு ஒரு பன்னிரெண்டு மணிபோல் வீட்டைவிட்டு நான் பின் கதவு வழியாக வெளியேறிவிட்டேன்.

(காலம் (இதழ் எண் 32, ஜூன் - ஆகஸ்ட் 2009) இதழில் வெளிவந்தது. செழியன், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு நாடகப் பிரதியும் வெளிவந்துள்ளது.)

28 March 2009

படித்ததில் பிடித்தது


தாவோ தேஜிங்
லாலோ ட்சு
தமிழில்: சி.மணி


அழகாயிருப்பது ஆழகு என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
விகாரம் தோன்றுகிறது.
நன்மையை நன்மை என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
தீமை தோன்றுகிறது.

எனவே, இருத்தல்
இருத்தலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது
எளிமை
கடினத்தைத் தோற்றுவிக்கிறது.
நீட்டத்திலிருந்து
குறுக்கத்தைப் பெறுகிறோம்,
அளவை வைத்து;
உயரத்திலிருந்து
பள்ளத்தை வேறுபடுத்துகிறோம்,
இடத்தை வைத்து;
ஒலியதிர்வு
ஒலியை இசைவுபடுத்துகிறது;
இவ்வாறு,பின்னது
முன்னதைத் தொடர்கிறது.

எனவே, ஞானி
தன் பணியைத் தொடர்கிறான்
செயல்படாமையை மேற்கொண்டு;
எனவே, அவன் தன் போதனைகளைப்
போதிக்கிறான், சொற்கள் இல்லாமல்.

(க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘தாவோ தேஜிங்' புத்தகத்தில் இருந்து. புகைப்படம்: இயான் லாக்வுட்)