30 January 2010

முகங்கள்

ஸ்ரீ ஏ.கே.ராமாநுஜம்
(1929-1993)

தமிழை உலகில் பெருமைப்படுத்தியவர்

தளவாய் சுந்தரம்


1999ஆம் ஆண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக் கான 'சாகித்ய அகாதமி விருது' மறைந்த திரு. ஏ.கே. ராமாநுஜம் அவர்களுக்கு 'தி கலெக்ஷன் ஆஃப் போயம்ஸ்' புத்தகத்திற்காக வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட ராமாநுஜத்தின் மனைவி திருமதி மாலி டேனியல்ஸ் பரிசுத்தொகை ரூபாய் இருபத் தைந்தாயிரத்தைச் சென்னையில் செயல்பட்டு வரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு நூலக வளர்ச்சி நிதியாகக் கொடுத்தார். மேலும், சுமார் 2000 புத்தகங்களடங்கிய ராமாநுஜத்தின் வாழ்நாள் புத்தகச் சேகரிப்புகளையும் அவர் அந்த நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். ஏ.கே.ராமாநுஜம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூலக வளர்ச்சி நிதிக்காக கொடுக்கப் பட்டுள்ள 'சாகித்ய அகாதமி விருது' பரிசுத்தொகை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறந்த உலக இலக்கிய நூல்கள் வாங்கப் பயன்படுத்தப்படும்’ என்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக (அப்போதைய) இயக்குநர் திரு. எஸ்.தியடோர் பாஸ்கரன் கூறினார். ஏ.கே. ராமாநுஜம் வாழ்நாளில் செய்து வந்த பணியின் நீட்சிபோல் அதனை நினைவுகூரும் வகையில் அமைந்துவிட்ட இச்செயல் ராமாநுஜத்தை மிகச் சரியான முறையில் பெருமிதப்படுத்தக்கூடியது. அதனையொட்டி தமிழ் பத்திரிகைகளுக்கு கொடுக்க ‘ஏ.கே. ராமாநுஜம் பற்றி ஒரு பத்திரிகை செய்திக் குறிப்பு’ தயா ரித்துத் தரும்படி திரு.தியடோர் பாஸ்கரன் என்னைக் கேட்டுக்கொண்டார். அப்பொழுது நான் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பணியாற்றி வந்தேன். அந்தக் குறிப்புதான் இது. (ஏ.கே.ராமாநுஜம் பற்றியத் தகவல்களைத் தேடுபவர்களுக்கு இது பயன்படக்கூடும் என இதை இங்கே ஏற்றி வைக்கிறேன்.)

1929இல் மைசூரில் பிறந்த ஏ.கே.ராமாநுஜத்தின் பூர்வீகம் தமிழ்நாடு. ஆங்கில இலக்கியம், மொழியியல் ஆகிய துறைகளில் முறையே பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வை முடித்ததும் அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் பண்பாடு, மொழி யியல் ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். மற்றும் ஹார்வர்ட், கலி போர்னியா, பரோடா, விஸ்கான்ஸின், பெர்கிலியே, மெக்சிகன் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்கங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூகச் சிந்தனைக் குழுவில் ஏ.கே.ராமா நுஜம் ஓர் உறுப்பினர்.

நாட்டார் வழக்காற்றியல், இந்திய இலக்கியம், மொழியியல் ஆகியவை குறித்து ராமாநுஜம் எழுதியிருக்கும் கட்டு ரைகள் உலகின் பல முன்னணி ஆராய்ச்சி இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. கன்னடம், தமிழ் ஆகிய மொழி களில் இருந்து ராமாநுஜம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தி ருக்கும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் முதலியன அறுபது தொகுதிகளாக உள்ளன. தமிழ்ச் சங்ககாலக் கவிதைகள், புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் முக்கிய நாவலான 'சம்ஸ்காரா' ஆகியவை அவற்றில் அடங்கும். மேலும், பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் ராமாநுஜம் எழுதியிருக்கிறார். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் இந்திய இலக்கியம் குறித்துத் தெற்காசிய ஆய்வு மையம் வெளியிட்ட தொகுதிகளின் இணைப் பதிப்பாசிரியராக இருந்து அத்தொகுதிகள் வெளிவரக் காரணமாக இருந்தார். ஆங்கிலத்தில் வெளி வந்த 'இந்திய நாட்டுப்புறக் கதைகள்' தொகுதியும் இவரின் முயற்சியினாலும் உழைப்பாலும் வெளிவந்ததுதான்.


ஏ.கே.ராமாநுஜம் அவருடைய வாழ்நாளில் செய்து முடித்திருப்பவை தமிழ்ச் சூழலில் தனி ஒருவரால் மட்டும் செய்ய முடியக்கூடியவையா இவ்வளவும், எனும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியன. அவர் ஒரு முறை சொன் னார்: ''எழுதுவதற்கான காலம் கடந்துவிட்டது. எஞ்சியிருப்பது மிகவும் குறைந்த நேரம்தான் என்கிற நினைப்பிலேயே எழுத வேண்டும்''. அவர் செய்யத் திட்டமிட்டி ருந்தவற்றுக்கும், கால வேகத்திற்குமான இடைவெளி அவரை மிகுந்த ஆயாசம் கொள்ளச் செய்தது. ஆனால், அவர் எப்பொழுதும் அது குறித்து மலைப்புக் கொண்டதில்லை. ஒரு வெறி கொண்டவர் போல் அனைத்தையும் செய்து முடித்துவிட வேண்டும் என்று செயல்பட்டார்.

தமிழ் உரைநடை மற்றும் கவிதைகளிலிருந்தும் ராமாநுஜம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேர்வு செய்தவை அவற்றின் தரம் சார்ந்தும் மொழிபெயர்ப்புத் தரம் சார்ந்தும் உலகின் மற்ற மொழி வாசகர்களிடையே தமிழ் மொழிக்குப் பெருமையை ஏற்படுத்தக்கூடியவை. சங்க காலக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது. குறுந்தொகையையும் நம்மாழ்வாரையும் பிரமிக்கத்தக்க வகையில் எளி மையுடன், நேர்மை யுடன் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். வெளி நாட்டு இலக்கியச் சூழலில் அந்தத் தொன்மையான படைப்புகளுக்குப் பரந்த அறிமுகத்தை ஏற்படுத்தி, தமிழை உலகத்தில் பெருமிதப்படுத்தினார்.

'தி இன்டீரியர் லன்ட்ஸ் கேப்', 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா' ஆகியவை அவருடைய மொழிபெயர்ப்புகளில் மேற்கத்திய வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டவை. 'தி இன்டீரியர் லன்ட்ஸ் கேப்' அகம் மற்றும் காதல் குறித்த குறுந்தொகைப் பாடல்களைக் கொண்டது. அது போலான கவிதைகளைச் சுவைத்தறியாத மேற்கத்திய வாசகர்களுக்கு அதன் பரவசம் மிகுந்த விந்தையானதாக இருந்தது. 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா' பத்தாம் நூற்றாண்டின் பக்திக் கண்டன இயக்கத்தைச் சேர்ந்த நான்கு கன்னடக் கவிஞர்களின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு. தான் அடிக்கடி விரும்பிப் படிக்கும் புத்தகங்களில் 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா'வும் ஒன்று என்று கவிஞர் ஆத்மநாம் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து ராமாநுஜம், ''அவர் என்னுடைய 'ஸ்பீக்கிங் ஆஃப் சிவா'வை விரும்பிப் படிப்பார் என்று கேள்விப்பட்டேன். பழங் காலத்தில் யாரோ எழுதிய கவிதைகள் என்னைப் பாதித்தன. அது பற்றி நான் எழுதியது இன்னொரு கவிஞனை பாதித்திருக்கிறது. இந்தத் தொடர்பு என்னை வியக்க வைக்கிறது'' என்றார்.

வெறும் சமஸ்கிருதத்தில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தை மற்ற இந்திய மொழிகளை நோக்கித் திருப்பியதில் ராமாநுஜத்துக்குப் பெரும் பங்குண்டு. குறிப்பாகத் தமிழை நோக்கித் திருப்பியதில் அவரது பங்கு முக்கியமானது. அதை அவர் மிகவும் மென்மையாக சத்தம் போடாமல் தனி ஒருவராகச் செய்தார். மற்றவரின் சத்தங்களையும் பொறுத்துக் கொண்டார். ஆனால், ஏ.கே.ராமாநுஜம் அடிப்படையில் ஒரு கவிஞர். ''தினம் ஒரு கவிதையாவது எழுதாமல் அவர் தூங்குவதில்லை'' என்று அவரை சிகாகோ பல்கலைக்கழகத்தில் சந்தித்த அனுபவம் குறித்து எழுத் தாளர் அம்பை குறிப்பிட்டிருக்கிறார். 'இரவு முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து எழுதி முடித்த கவிதைக்கு நகாசு வேலைகள் பார்த்துக் கொண்டிருப்பார். இடையில் யாராவது தொலை பேசியில் கூப்பிடுவார்கள். வேறு ஏதாவது விஷயம் இருக்கும். பேசிவிட்டு வந்து மீண்டும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து கொள்வார். கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து ஒரு சொல்லையே வெறித்துக் கொண்டிருப்பார். ஒரே ஒரு சொல் பற்றிக்கூட சந்தேகம் எழக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். வேலைகளை ஒத்திப்போடவும் மாட்டார். திருப்தி ஏற்படும் வரை அவர் கம்ப்யூட்டர் முன்னால் இருந்து எழுவதில்லை' என்று மேற்குறிப்பிட்ட கட்டுரையில் எழுத்தாளர் அம்பை குறிப்பிட்டிருக்கிறார்.

'அறுபது, எழுபதுகளில் ராமாநுஜம் சென்னை வரும் ஒவ்வொரு முறையும் தமிழ்க் கவிதைகளையும் கவிஞர்களையும் பரிச்சயம் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். எங்கள் சந்திப்புகளில், அவருடைய கவிதைகளை எங்களுக்கு வாசித்துக் காட்டுவார்; மொழியை, அதன் ஒளியலைகளைப் பிரக்ஞைபூர்வமாகப் பயன்படுத்தி, ஒரு கவிதையில் எவ்வாறு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சில கவிதைகள் மூலம் எங்களுக்கு உணர்த்துவார்' என்று கவிஞர் எஸ்.வைத் தீஸ்வரன் சென்னையில் ராமாநுஜத்தை சந்தித்தது குறித்து எழுதியிருக்கிறார். ஒரு பெரிய பல்கலைக் கழகப் பேராசிரியர் போல் இல்லாமல் அவரை எந்த ஒரு மாணவனும் மாணவியும் சுலபமாக அணுக முடியும் என்னும்படியே பழகினார். 'சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் குழு தமிழில் பேசிக்கொண்டு திரிவதும் மெளனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் என்று தமிழ் எழுத் தாளர்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருப் பதுமான சூழல், அவர் இருந்த காலங்களில் இருந்தது' என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

1976ஆம் ஆண்டு இந்திய அரசு ஏ.கே.ராமாநுஜத்துக்கு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்துக் கெளரவித்தது. 1988ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கான 'இராதாகிருஷ்ணன் மெமோரியல் லெக்ஸர்ஸ் பெலோஷிப்' இவருக்கு வழங்கப் பட்டது. 1990இல் ராமாநுஜம் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க அகாதமிக்குத் தேர்வு செய்யப்பட்டார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 'மாமன்னன் இராஜராஜன் விருது' சங்க இலக்கியங்களை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தமைக்காக இவருக்கு வழங்கப்பட்டது.

தொழில் நிமித்தம் அவர் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் விழிப்பி லும் உறக்கத்திலும் அவர் இந்தியாவைத்தான் நினைத்துக் கொண்டிருப்பார். பணி ஓய்வுக்குப் பின் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றும் பெரும் கனவு அவரை ஆட்கொண்டிருந்தது. அவருடைய கனவுகள் வடிவம் பெற்றிருக்குமெனில், அது தமிழுக்கு ஒரு கொடையாக அமைந்துவிட்டிருக்கும். ஆனால், அவருடைய கனவுகளை நிறைவேற்றும் செயல்களை அவர் துவங்கும் முன்பே அவரை மரணம் அணைத்துக் கொண்டது. 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி இருமல்நோய் கண்டு அவர் மாண்டு போனார்.

ஏ.கே. ராமாநுஜத்தின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள்: The Striders (Oxford 1966), Relations (Oxford 1971), Selected poems (Oxford 1976), Second sight (Oxford 1986), Hokkulalli Huvilla (No Lotus in the Novel, Dharwar 1969), Mattu ltara padugalu (And Other poems, Dharwar 1977), The Interior Landscape (indiana 1977), Speaking of Siva (Penguin classics 1973), Samskara (Oxford 1976), Hymns for the Drowning (Princeton 1981), Poems of Love and War (Columbia/UNESCO 1985).

3 comments:

இளமுருகன் said...

ஏ.கே.ராமானுஜம் பற்றி தெரிந்து கொள்ள மிக்க உதவியாய் இருந்தது.அயல் நாட்டில் தமிழ் வளர காரணமாய் இருந்தவரை நினைவு கூர்ந்து வணங்குகிறேன்
இளமுருகன் நைஜீரியா.

Perundevi said...

நல்ல அறிமுகம் தளவாய். எஸ். வைத்தீஸ்வரன் குறிப்பிட்டது: “ஒளியலைகளா?” இல்லை, “ஒலியலைகளா?”

clayhorse said...

இவருடைய "Poems of Love and War" எனக்கு மிகவும் பிடித்த நூல்.
நன்றி -- பாஸ்கி
http://baski-reviews.blogspot.com