09 September 2015

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்

சாதனையா ஜாலி டூரா?
(புதிய தலைமுறை, 25 மே 2015 இதழில் பிரசுரமானது)

பிரதமர் நரேந்திர தாமோதரதாசு மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், அரசியல் தலைவர்கள் பிரஸ் மீட் முதல் ஃபேஸ்புக் பதிவுகள் வரை, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமான கேலியும் கிண்டலுமான பகிர்தல்கள், பாஜகவினர் பதில் எனப் பரபரப்பு விவாதங்கள் நடக்கிறது. பிரதமராகப் பதவியேற்றது முதல் இதுவரை 18 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார், மோடி. வரும் நாட்களில் மேலும் பல நாடுகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணங்கள் எதிர்கட்சிகள் சொல்வது போல் ஜாலி ஊர் சுற்றல்தானா அல்லது பாஜகவினர் வாதமான நாட்டுக்காகவா? ஓர் அலசல்!

நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முதலாகச் சென்ற வருடம் ஜனவரி மாதம் பூட்டான் சென்றார். அதனைத் தொடர்ந்து சீசெல்ஸ், மொரீசியஸ், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, தென்கொரியா உட்பட 18 நாடுகளுக்கு ஓராண்டில் இதுவரை பயணம் செய்துள்ளார். சிங்கப்பூருக்கு மட்டும் இரண்டு முறை பயணம் செய்துள்ளார். அதாவது, சராசரியாக இரண்டு மாதங்களுக்கு மூன்று நாடுகள் பயணம். வரும் நாட்களில் அடுத்து மாதம் பங்களாதேஷ், ஜூலை 7 – 10இல் ரஷ்யா, ஜூலை 11இல் துர்க்மெனிஸ்தான், நவம்பர் 15 – 16இல் துருக்கி என மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்வதைப் பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கும் சிங்கப்பூருக்கும் மோடி இரண்டாவது முறையாகப் பயணம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணங்களின் தேதி இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என நாங்கள் ஆவலுடன் உள்ளோம்என அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்புக் குறித்துப் பிரதமர் அலுவலகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த அழைப்பை ஏற்றால், மோடி சென்ற நாடுகள் பட்டியலில் பிரிட்டனும் சேர்ந்துகொள்ளும்.

பிரதமரானது முதல் இப்படித் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களில் மோடி இருப்பது குறித்த விமர்சனங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறியதாகத் துவங்கியது, இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது. டிவிட்டர், ஃபேஸ்புக், பிளாக், வாட்ஸ் அப் என எல்லா இடங்களிலும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்தான் இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது. இப்பயணங்களில் மோடி எடுத்துக்கொள்ளும் செல்ஃபியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மோடி அதிகமும் வெளிநாடுகளில்தான் இருக்கிறார். வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையிடையே இந்தியா வருகிறார்என ஒருவர் ட்விட் செய்துள்ளார் என்றால், அதனை, ‘வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர் மோடி விடுமுறையைக் கழிக்க இந்தியா வருகைசில நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது...எனக் கிண்டல் செய்கிறது, ஷெக்சிக்கந்தர் என்பவர் டிவிட். செல்ஃபி எடுக்குறதுக்காக வெளிநாடு போகிற ஒரே பிரதமர் நம்ம மோடிஜி மட்டும்தான்என்கிறது இன்னொரு ட்விட். சமூக வலைதளங்களில் நிலைமை இப்படியிருந்தால் இன்னொரு பக்கம் வைகோ, ராகுல், சீதாராம் யெச்சூரி, மம்தா, அஜித்சிங் எனப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்துத் தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார்கள்.

நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட மோடி அளவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லவில்லைஎன்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த மதிமுகக் கட்சித் தலைவர் வைகோ, ‘மோடி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறார்என்று கேட்கிறார்.

மோடி, உள்நாட்டில் இருப்பதைவிட வெளிநாடுகளில்தான் அதிகம் இருக்கிறார். வெளிநாடுகளில் போய் உள்நாட்டு விவகாரத்தைப் பற்றிப் பேசுகிறார். வறட்சி மற்றும் பருவம் தவறி பெய்த மழை காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் சேதமடைந்து வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். அதற்கு உரிய இழப்பீடு கேட்டு மத்திய அரசை எதிர்த்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். அவர்கள் பிரச்சினை குறித்துக் கேட்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடியோ வெளிநாட்டு பயணங்களில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்என்கிறார், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சித் தலைவர் அஜித்சிங்.

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களில் காட்டும் ஆர்வத்தையும் நேரத்தையும் கொஞ்சம் உள்நாட்டில் பயணம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். அப்பொழுதுதான் நமது நாட்டில் மக்கள் வேதனையில் வாடும் நிலையை அவர் தெரிந்துகொள்ள முடியும்என்கிறார், பீகார் முதல்வர் நிதீஷ்குமார்.

ராகுல் காந்தி, 56 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பி பின், கூடுதல் பலத்துடன் மோடியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஒவ்வொரு முறையும் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை. அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலும் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளைச் சந்திக்காதது ஏன்?’’ என்று பாராளுமன்றத்தில் ராகுல் எழுப்பிய கேள்வியால் கடும் அமளி ஏற்பட்டது.
ராகுல்காந்திக்குப் பதில் சொன்ன, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ‘நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமரை விமர்சிப்பதாஎனக் கேள்வி எழுப்பினார். மேலும், ‘தேசத்தின் வளர்ச்சிக்காகவே பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால், ஒரு சிலர் எதற்காக வெளிநாடு செல்கின்றனர், அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதே தெரியாத அளவுக்கு உள்ளதுஎன ராகுல்காந்தியை மறைமுகமாகத் தாக்கவும் செய்தார்.

வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்க, பாரதிய ஜனதா கட்சிக்குள் இருந்தும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. வாஜ்பாய் தலைமையிலான அரசில் பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி, ‘மோடி அரசு இலக்கில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. வெளிநாட்டுக் கொள்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை மோடி செய்யவில்லை. செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை உருவாக்குவதில்தான் இந்த அரசு கவனமாக உள்ளதுஎனக் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமை, ஓராண்டு ஆட்சி பற்றித் தொடர் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு வரும் இந்நேரத்தில், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மீதான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதே அவர்களுக்குப் பெரும்பணியாக இருக்கப் போகிறது. இந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒராண்டு சாதனைகள் பற்றிப் பேச முடியாது என்ற யதார்த்தத்தை அவர்களும் உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இப்போதே சமூக வலைதளங்களில் அதனைப் பாஜகவினர் தொடங்கியும் விட்டார்கள்.

வெளியூறவூக் கொள்கைகளை வலுப்படுத்துவதிலும் இ மேக் இன் இந்தியாதிட்டத்திலும் அதிகக் கவனம் செலுத்தி வரும் மோடி, இதற்காகவே வெளிநாட்டுப் பயணங்கள் செல்கிறார்என்கிறார்கள் பாஜகவினர். மேலும், ‘நமது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தித் தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டவர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அணுகுமுறையைப் பின்பற்றியே நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. இரு தரப்பு வர்த்தகம், கலாசார உறவு, பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்தியாவில் செல்வந்த நாடுகளின் முதலீடு, சிறிய நாடுகளுக்கு இந்தியாவின் உதவி என மோடியின் பயணத் திட்டத்தில் தெளிவான வரையறைகள் காணப்படுகின்றன. இந்தப் பயணங்களில் அந்தந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் பல முதலீடுக்கான ஒப்பந்தங்களும் அடங்கும். வெளிநாட்டுப் பயணங்களின் பயன்பாடு பற்றி அறியாத, வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியில் கொண்டுள்ள பங்களிப்பை அறியாதவர்கள்தான், மோடியின் பயணங்களைச் சுற்றுலா நோக்குடன் எள்ளி நகையாடுகின்றனர். மோடி பயணம் செய்துள்ள நாடுகளின் பட்டியலைக் காணும் எவரும், தெளிவான இலக்குடன் அவரது பயணம் அமைந்து வருவதை உணர்வர்என்கிறது பாஜகவினர் வாட்ஸ் அப் பிரசாரம்.

நாட்டிற்கு வருமானத்தையும் பொருளாதாரத்தையும் முதலீடுகளையும் கொண்டு வருவதற்காகவே பிரதமர் வெளிநாடு செல்கிறார்’’ எனக் கூறும் பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன், ‘மோடி ஒன்றும் கள்ளத்தோணி ஏறிக் காணாமல் போகவில்லைஎன மோடியின் பயணங்களை விமர்சித்த வைகோவை மறைமுகமாகச் சாடுகிறார்.

பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களால் நமது நாட்டிற்கு 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்திருக்கிறது. கடன்பாக்கி வைத்துப் பழக்கப்பட்ட நாடு, இன்று மங்கோலியாவுக்கு 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் உதவி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மேலும், நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும். உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும்என்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் பூட்டானுடன் தொடங்கியது. அதன்மூலம், பூடான் மீது சீனா வல்லாதிக்கம் செலுத்த முடியாதவாறு பாசவலையை இறுக்கியது இந்தியா. அடுத்துப் பிரேசில் சென்றார். மோடியின் ஆலோசனைப்படி, பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, இந்தியாவின் மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்க வேண்டிய, அதேசமயம் நம்மிடம் இருந்து வெகுவாக விலகிப் போயிருக்கும் நேபாளத்திற்கு மோடியின் பயணம் அமைந்தது. நேபாளத்துக்கு இந்தியா அறிவித்த பல கோடி ரூபாய் கடனுதவிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பங்களிப்புக்கான ஒப்பந்தங்கள் அந்த நாட்டுடனான நமது உறவை வலுப்படுத்தின. குறிப்பாக இந்திய எதிர்ப்பையே நோக்கமாகக் கொண்ட மாவோயிஸ்ட் தலைவர் பிரசாண்டாவே மோடியின் வருகையையும் அதனால் விளைந்த நன்மைகளையும் வரவேற்றார். நான்காவதாக மோடி பயணம் செய்த நாடு ஜப்பான். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் சீனா தொடர்ந்து நெருடலான அண்டை நாடாக உள்ள நிலையில், ஜப்பான் பயணத்தைச் சீனாவுக்கு எதிரான ராஜதந்திரப் பயணமாக மோடி அமைத்துக்கொண்டார்என ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தையும் மோடியின் சாதனைகளாக முன்வைக்கிறது, பாஜகவினர் வாட்ஸ் அப் கட்டுரை.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் ஓராண்டு ஆட்சி குறித்துக் கூறியுள்ளது, பாஜகவினர் வாதத்துக்கு வலு சேர்க்கிறது. "அமெரிக்காவில் நிலவிய முதலீட்டாளர்கள் மந்த நிலையை அந்நாட்டு முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் மாற்றியமைத்தார். பொருளாதாரத்தைச் சீரமைக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றிக் கண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை நரேந்திர மோடி என்பவர் 'வெள்ளை குதிரையில் வந்த ரோனால்ட் ரீகன்' போலவே பார்க்கப்பட்டார். மோடி தலைமையிலான அரசின் மீது நாட்டின் மக்கள் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த அதீத நம்பிக்கை, எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேற்றுவதற்குச் சாத்தியம் இல்லாதது. இருப்பினும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதலீட்டை ஈர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. முதலீட்டாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் நிலையை அரசு கூர்ந்து கவனித்துக் கையாளுகிறதுஎன்கிறார் ரகுராம் ராஜன். அதேநேரம், முதலீட்டை ஈர்ப்பது மற்றும் வரிவிதிப்பு இரண்டுக்கும் இடையே இருக்கும் முரண் குறித்தும் கருத்து தெரிவித்த ரகுராம் ராஜன், ‘வரி விதிப்பிலும் இந்த அரசு கவனத்தோடு செயல்பட்டு இருக்கலாம். வணிகச் சூழலில் வரிவிதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார்.

ஆனால், மோடி பயணங்களின் சாதனையாகப் பாஜகவினர் முன்வைப்பவற்றைச் சீதாராம் யெச்சூரியும் ராகுல்காந்தியும் மறுக்கிறார்கள். மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் முதலாளிகளுக்கானது மட்டுமே. அதனால் ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாதுஎன்கிறார் ராகுல்காந்தி.

இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரையில், மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு கடைப்பிடித்த அதே கொள்கையைத்தான், தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசும் பின்பற்றி வருகிறது. ஆனால், இதற்கு முன்பிருந்த பிரதமர்களைவிட, மிக அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மோடி மேற்கொள்கிறார். இவரது வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நலனுக்கானவை அல்ல. அவை அதிகமும் அமெரிக்க நலன் சார்ந்தவையாகவே உள்ளன. எனவே, இந்தப் பயணங்களால் நாட்டுக்கு நிச்சயம் உறுதியான நன்மை எதுவும் கிடைக்காது. இது கவலையளிக்கக் கூடியதுஎன்கிறார் சீதாராம் யெச்சூரி.

சரி, இந்த விமர்சனங்கள் பற்றிப் பிரதமர் மோடி என்ன சொல்கிறார்?

தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து, தொடர்ந்து கிண்டல் செய்து எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி நிலையிலும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த மோடி, சீன பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியாக இந்திய சமுதாயத்தினருடன் கலந்துரையாடிய போது முதன்முறையாக இதுபற்றிப் பேசினார். ஜெர்மனி, பிரான்ஸ், கனடா நாடுகளுக்குச் சென்றபோதே என் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. வெளிநாடு செல்வதுதான் மோடியின் முக்கிய வேலை என்கிறார்கள். உழைக்காமல் இருந்தால் குறை கூறலாம். தூங்கிக் கொண்டிருந்தாலும் குறை கூறலாம். ஆனால், எனது துரதிர்ஷ்டம், ஓய்வில்லாமல் உழைப்பதை குறை கூறுகிறார்கள். மக்களுக்கு அதிகமாக உழைப்பதை குற்றம் என்று கூறினால், அந்தக் குற்றத்தை 125 கோடி இந்தியர்களுக்கு மீண்டும் மீண்டும் நான் செய்வேன்.

செலவை குறைப்பதற்காகவே ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நான் பயணம் செல்கிறேன். பதவியேற்ற பிறகான இந்த ஓராண்டில் நான் ஒருநாள் கூட விடுமுறை எடுத்துக்கொண்டது கிடையாது. இரவு பகலாக உழைக்கிறேன். ஓய்வெடுத்தாலோ சுற்றுலாவுக்குச் சென்றாலோ என்னால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. நான் அனுபவமில்லாதவன். பிரதமராகப் பதவியேற்றபின், தினமும் பல விஷயங்களைக் கற்று வருகிறேன். வெளிநாடு பயணங்களையும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்துகிறேன். வளர்ந்து வரும் நாடுகள் பற்றி 20 ஆண்டுக்கு முன் முன்னேறிய நாடுகள் கண்டு கொண்டதில்லை. ஆனால், இப்போது காலம் மாறி வருகிறது. இதற்கு இந்தியா தயாராகி வருகிறது. உலகுக்கு இந்தியா அளிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்பதை என் பயணங்களில் உணர்கிறேன்.

மக்களவை தேர்தலுக்கு முன், மோடி யார்? அவருக்கு வெளியுறவு கொள்கைகள் பற்றி என்ன தெரியும்? என்று விமர்சித்தனர். இப்போது எனப் பயணங்களை விமர்சிக்கின்றனர். இந்தப் பயணங்களை நான், ஐந்தாவது ஆண்டில் செய்திருந்தால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். முதல் ஆண்டிலேயே செய்துள்ளதால்தான் இவ்வளவு விமர்சனங்கள். ஆனால், இதனால்தான் உலகம் இந்தியாவைத் திரும்பிப் பார்த்துள்ளது. எனது பயணங்கள், அந்தந்த நாடுகளுடான இந்திய உறவை வலுப்படுத்தியுள்ளது. இந்தப் பயணங்களில் நான் விதைத்த விதைகள், வளர்ச்சியடைவதற்குக் கால அவகாசம் தேவைஎன்கிறார், மோடி.

ஆனால், ‘மோடியின் பயணங்களில் பல ஒரு பிரதமர் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவை. சில அதிகாரிகள் மட்டத்திலேயே முடிந்துவிடக்கூடியவை. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையின் பலனாக விளைந்தவை. அவற்றை மோடி தனது தனிப்பட்ட சாதனைகளாக முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்கிறார்கள் மோடி பயணங்களை விமர்சிப்போர்.

No comments: