01 September 2015

புத்தகம் அறிமுகம்

புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு!


ஊரடங்கு உத்தரவு - பி.என்.எஸ். பாண்டியன்விலை ரூ. 200/-வெளியீடு: வெர்சோ பேஜஸ்3 முதல்தளம்விமானத் தளச் சாலைமுத்துலிங்கம் பேட்டைபுதுச்சேரி – 605008தொலைபேசி: 9894660669மின்னஞ்சல்: versopages@gmail.com

பாண்டிச்சேரி என்றாலே, தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு மதுதான் நினைவுக்கு வரும். மதுவிலக்கு போராட்டங்கள் குறித்த சமீப விவாதங்கள் அனைத்திலும்கூடப் பாண்டிச்சேரி பெயர் தவறாமல் அடிபடுகிறது. ஆனால், இது பாண்டிச்சேரியின் ஒரு முகம்தான். அதன் இன்னொரு முகம், இரண்டாயிரம் ஆண்டுகள் செழுமையான வரலாறும் பண்பாடும் கொண்டது. அரவிந்தர், அனந்தரங்கம்பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், வ.வே.சு. ஐயர் எனப் பல ஆளுமைகளைப் பெற்றடுத்த/அரவணைத்து ஆதரித்த மண்ணாக மிகச் சமீபகால வரலாறுகளில்கூடப் பாண்டிச்சேரி பெருமையுடன் இடம்பெறுகிறது. ‘பேரமைதியின் பிறப்பிடம்’ என்று பாண்டிச்சேரியைச் சொல்கிறார் அரவிந்தர். இந்த இரண்டு முகங்கள் தவிர இன்னொரு முகமும் பாண்டிச்சேரிக்கு இருக்கிறது. அந்த மூன்றாவது முகம், ‘காலம், புதுவையை உராய்ந்து அல்லது இடித்து நகர்த்தும் போதெல்லாம், சிலிர்த்து எழும். ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும்’’ என்பார், புதுச்சேரி தந்த எழுத்தாளர் பிரபஞ்சன். அப்படி, சிலிர்ந்தெழுந்து புதுச்சேரி உருவாக்கிய ஒரு சமீப கால வரலாற்றைப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.

புதுச்சேரியிலும் தமிழர்கள்தான் வாழ்கிறார்கள் என்றாலும், அதற்கென்று தனித்துவமான வரலாறும் பண்பாட்டுச் செழுமைகளும் இருக்கின்றன. புதுச்சேரியின் மிகத் தொன்மையான வரலாறு 2ஆம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அக்கால உரோம மாலுமிகளின் செலவுக் குறிப்பேடான செங்கடல் செலவுஎன்னும் கையேட்டில், ‘பொடுகெ’ எனப்படும் சந்தை குறித்து உள்ளது. இந்த இடம் புதுச்சேரியிலிருந்து 2 கிமீ தொலைவில், தற்போது அரியாங்குப்பத்தின் பகுதியாக உள்ள, அரிக்கமேடுதான். 1944இலிருந்து 1949 வரை அரிக்கமேட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் ரோமானிய மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன. இதன்மூலம், கி.பி. 1ஆம் நூற்றாண்டில் இந்த இடம் முக்கிய வணிக மையமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டது.
1673 பிப்ரவரி 4 முதல் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. தமிழகம் உட்பட இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தபோது, புதுச்சேரி மட்டும் பிரெஞ்சுக்காரர்கள் கையில்தான் இருந்தது. ஆங்கிலேயர்கள் போல் வெறும் ஆட்சியாளர்களாகவும் வியாபாரிகளாகவும் இல்லாமல், புதுச்சேரி மக்களின் அன்றாட வாழ்வோடு பிரெஞ்சுக்காரர்கள் நெருக்கமாக இணைந்திருந்ததன் விளைவு, பிரெஞ்ச் பண்பாட்டுடனும் வாழ்வியல் கூறுகளுடனும் உணர்வுபூர்வமாகப் பிணைக்கப்பட்டார்கள் புதுச்சேரி மக்கள். இது தமிழர்களிடயே புதுச்சேரிக்காரர்களின் தனிச் சிறப்புக்கு காரணம்.

1947இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் புதுச்சேரி பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. இந்நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 1954 நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரிக்கு விடுதலை அளிக்கப்பட்டது. ஆனாலும், பிரான்ஸ் - இந்தியா ஒப்பந்தப்படி, யூனியன் பிரதேசம் என்ற தனி அந்தஸ்துடன் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தது. பாண்டிச்சேரி தவிர நாகப்பட்டினம் அருகேயுள்ள காரைக்கால், ஆந்திராவின் காக்கி நாடாவுக்கு அருகேயுள்ள ஏனாம், கேரளாவின் கோழிக்கோட்டுக்கு அருகேயுள்ள மாஹே என வெவ்வேறு பகுதிகளில் உள்ள இந்த நான்கு பகுதிகளும் சேர்ந்ததுதான் புதுச்சேரி யூனியன் பிரதேசம். அந்தந்தப் பகுதிகளின் தன்மைக்கேற்ப கூடுதல்குறைவாக வாழும் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகளுடன் இன்னமும் பிரெஞ்சு பாஸ்போர்ட் வைத்துள்ள சிறுபான்மை இந்திய வம்சாவளி அல்லாதவர்களும் இந்த யூனியனில் வாழ்கின்றனர். 1954இல் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு விலகும்போது பிரான்ஸ் அரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி அதன் குடிமக்களாக நீடிக்க விரும்பியவர்களின் சந்திதியினர் இவர்கள்.

யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரியை தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகப் புதுச்சேரி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். புதுச்சேரி போலவே யூனியன் பிரதேசங்களாக இருந்த இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா ஆகியவற்றுக்கு 197172இல் இந்திய அரசாங்கம் முழு மாநிலத் தகுதி வழங்கியது. ஆனால், புதுச்சேரி மக்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு மாறாக இன்னொரு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது.

பிரஞ்சுக்காரர்கள் வசம் இருந்த புதுச்சேரி பகுதிகளை, 1954ஆம் ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கும் போது, நேரு கையொப்பமிட்ட பிரெஞ்ச இந்திய ஒப்பந்தம்புதுச்சேரியை வேறொரு மாநிலத்துடன் இணைக்க வேண்டுமானால் அங்குள்ள மக்களது கருத்தை அறிய வேண்டும் என்று சொல்கிறது. இந்த வரலாற்று உடன்படிக்கையை மாற்றியமைக்க முயன்றது மத்திய அரசு. ஒன்றுடன் ஒன்று இணையாமல் துண்டு துண்டாகக் கிடக்கும் புதுச்சேரியின் நான்கு மாவட்டங்களையும், அந்தப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் மாநிலத்தோடு இணைத்துவிடும் முயற்சி 1978ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாகப் பாண்டிச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இருவரும் இதில் முக்கியப் பங்கு வகித்தார்கள். அப்போது சென்னை வந்திருந்த மொரார்ஜி தேசாய், “புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்துவிடலாமா என ஆலோசித்து’’ வருவதாகச் சொன்னார். இது புதுச்சேரி மக்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

முதலில் ஆர்ப்பாட்டங்கள், பந்த் என அமைதியான வழியில்தான் போராட்டங்கள் ஆரம்பித்தன. தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், வியாபாரிகள், அனைத்துக் கட்சி தொண்டர்கள் என எல்லோரும் இப்போராட்டங்களில் கலந்துகொண்டார்கள். ஜனவரி 26 குடியரசு தின விழாவையும் அணிவகுப்பையும்கூட அரசு ஊழியர்களும் பொதுமக்களும் புறக்கணித்தார்கள். ஆனால், மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்காமல் தன் முடிவில் உறுதியாக நின்ற அரசு, மக்கள் எழுச்சியை ஆயுதப் போலீஸ் துணைகொண்டு அடக்க நினைத்தது. கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அரசு அடக்குமுறையும் தீவிரமானது. தமிழகத்தில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் குவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. மில் தொழிலாளி ஒருவரும் கல்லூரி மாணவர் ஒருவரும் பலியானார்கள். ஆனாலும், அஞ்சாமல் போராட்டம் வலுவடையவே பாண்டிச்சேரியில் மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. 10 நாட்கள் தனியாத போராட்டத்துக்குப் பிறகு அரசு பணிந்தது. மக்கள் வெற்றிபெற்றார்கள்.

இரண்டு உயிர்கள் பலி, எண்ணற்ற இழப்புகள், சேதம், பாலியல் வன்முறை என மனித உரிமை மீறல் அனைத்தையும் இந்தப் பத்து நாட்களில் புதுச்சேரி மக்கள் அனுபவித்துள்ளார்கள். ஆனாலும், இந்தப் போராட்டம் குறித்த ஒரு விரிவான பதிவு இல்லாத சூழலே இருந்து வந்தது. இந்தக் குறையை இந்தப் புத்தகம் மூலம் போக்கியிருக்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பி.என்.எஸ். பாண்டியன்.

பி.என்.எஸ். பாண்டியன்
போராட்டக் காரணம், போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் யார் யார், தில்லி தலைவர்கள் மனோபாவம், காவல்துறை அத்துமீறல், சமரசப் பேச்சுவார்த்தை என அனைத்து விவரங்களையும் கள ஆய்வுகள் மூலமாகவும், அந்நாளைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் மூலமாகவும், அரசியல் சாட்சியங்கள் மற்றும் போராட்டக் களத்தில் காவல் அரணாக நின்றவர்களின் நேரடி வாக்குமூலங்கள் மூலமாகவும் ஆதாரங்களைத் திரட்டி இந்த நூலை எழுதியுள்ளார் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரி மக்கள் தலைவர் வ.சுப்பையா, புதுச்சேரியின் சரித்திர பூர்வ உண்மைகளை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய விரிவான மடல்; அதன் விளைவாய் நாடாளுமனர் உறுப்பினர்கள் பூபேஸ்குப்தா, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, வை.கோபால்சாமி போன்றோர் போராட்டத்துக்கு ஆதரவாய் நாடாளுமன்றத்தில் பேசியது; குடியரசு தின புறக்கணிப்புப் படங்கள், சட்டமன்ற உறுப்பினர் உரைகள் போன்ற அக்கால ஆவணங்கள் தேடி தொகுத்து ஒரு வரலாற்று நூலாசிரியர் கடமையையும் பொறுப்புடன் செய்திருக்கிறார். பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும், ‘பிரெஞ்சிந்திய புதுச்சேரி - ஒரு பார்வைஎன்ற குறிப்பு, புதுச்சேரி மக்கள் அரசியலைப் புரிந்துகொள்ள ஆதாரமாய் அமைகிறது.

மண்ணின் மைந்தர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதின் காரணமாகப் புதுச்சேரி மண் இன்றளவும் யூனியன் பிரதேசமாகத் தனி இயல்புடன் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி உருவாகவில்லை என்றால் இணைப்பு நிகழ்ந்திருக்கும். தமிழகத்தின் ஒரு தாலுகாவாகவோ பேரூராட்சியாகவோ அல்லது ஒரு மாவட்டமாகவோ புதுச்சேரி உருமாறி இருக்கும்என்கிறார் இந்நூலில், பாண்டியன்.

போராட்ட காலகட்டத்தில் பள்ளிச் சிறுவனாக இருந்த நூலாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக்கி ஒரு புனைவின் சுவாரஸ்யத்துடன் எழுதியுள்ளது இதன் சிறப்பு. இதன்மூலம் ஒரு புதினம் போலப் பத்து நாட்கள் போராட்டத்தை நம் கண் முன்னால் மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டுகிறது, இந்த வரலாற்றுப் புதையல்.

புதிய தலைமுறை, 20 ஆகஸ்ட் 2015 இதழில் பிரசுரமானது.

No comments: