சத்யஜித் ரேயின் ஆசை!
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே, முக்கியமான ஒரு எழுத்தாளரும்கூட. ரேயின் திரைப்படங்கள், ஓவியங்கள், இசைக் கோர்வைகளைப் போலவே ரேயின் எழுத்துகளும் அவரது கலை மேதமையின் வெளிப்பாடுகளாக உள்ளன. பெரும்பாலும் சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காவும்தான் ரே எழுதியிருக்கிறார். அவற்றில் பிரசித்தமானவை ஃபெலுடா வீரசாகசக் கதைகள். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை. கலைப்பட இயக்குநராக நாமறிந்த சத்யஜித் ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம் இது!
1965இல் தொடங்கி தன் இறுதி காலம் வரைக்கும் மொத்தம் முப்பத்தைந்து ஃபெலுடா சாகசக் கதைகளை எழுதியுள்ளார், ரே. அவரது சிறந்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இந்தக் கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்பது, தொடர்ந்து எழுதுவதை அவர் முக்கியமாகக் கருதியிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. குறிப்பாக, கடைசி ஃபெலுடா கதை அவரது இறுதி நாள்களில் எழுதப்பட்டு, அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. வங்காளத்தில் எழுதப்பட்ட இந்தக் கதைகள், சத்யஜித் ரே காலகட்டத்திலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இப்பொழுது, கிழக்கு பதிப்பகம் முப்பத்தைந்து ஃபெலுடா கதைகளையும் தமிழில் கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள மேற்கு வங்க தகவல் நிலையத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் வீ.பா. கணேசன், இம்மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார்.
இதில் விசேஷம் என்னவென்றால், தன் எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என சத்யஜித் ரே விரும்பி இருக்கிறார் என்பதுதான். மொழிபெயர்ப்பாளர் வீ.பா. கணேசன், வங்காளத்தில் பணிபுரிந்த காலங்களில் ரேயுடன் நேரடியாக பழகியவர். சென்னை ஃபிலிம் சொசைட்டி மிகவும் செயலூக்கத்துடன் இருந்த காலகட்டத்தில் அதில் இருந்தவர்களுள் கணேசனும் ஒருவர். மிருனாள் சென்னின் “சினிமா: ஒரு பார்வை’, ஜோதிபாசுவின் சுயசரிதை உள்பட பல புத்தகங்களை ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதில் “சினிமா: ஒரு பார்வை’ தமிழ் மொழிபெயர்ப்பை ரேயிடம் காட்டிய போதுதான் இப்படி ஒரு ஆசையை வெளியிட்டாராம் ரே. துரதிர்ஷ்டவசமாக தன் ஆசை நிறைவேறுவதைப் பார்க்க இப்பொழுது ரே இல்லை. சத்யஜித் ரே இருந்த போதே, இந்திரன் அவரைப் பற்றி எழுதிய ஒரு சிறு நூல் தமிழில் வந்திருந்தது. அதையும் ரே அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. இத்தனைக்கும் அக்காலகட்டத்தில் அவர் அடிக்கடி சென்னை வந்துபோய் கொண்டிருந்திருக்கிறார். அவரது திரைப்படங்களின் தொழில்நுட்ப வேலைகள் பெரும்பகுதி சென்னையில்தான் நடந்துள்ளன.
குழந்தைகள், சிறுவர்கள் மீதான சத்யஜித் ரேயின் அக்கறையும் கரிசனமும் நாம் நன்கறிந்தது. அவரது முக்கியமான சிறுவர்கள் திரைப்படங்களே அதற்கு சாட்சி. இதன் வேர், ரேயின் அப்பா வழி தாத்தா உபேந்திர கிஷோர் ரேயிடம் இருந்து தொடங்குகிறது. உபேந்திர கிஷோர் ரே, ‘சந்தேஷ்’ என்ற சிறுவர்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். அவரது காலத்துக்குப் பிறகு ரேயின் தந்தை சுகுமார் ரே அந்தப் பத்திரிகையை நடத்தினார். ஆனால், பொருளாதார இழப்புகள் காரணமாக தொடர்ந்து நடத்த முடியாமல் இடையிலேயே நிறுத்திவிட்டார். சத்யஜித் ரே வளர்ந்து, பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு நல்ல நிலைக்கு வந்தபிறகு 1961ஆம் வருடம் ‘சந்தேஷ்’ பத்திரிகையை மீண்டும் தொடங்கி, தன் இறுதிகாலம் வரைக்கும் நடத்தினார். இந்த ‘சந்தேஷ்’இல் தான் ஃபெலுடா என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, துப்பறியும் கதைகள் எழுதினார் சத்யஜித் ரே.
முதல் ஃபெலுடா கதை ‘டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்’ 1965ஆம் வருடம் வெளியானது. அப்பொழுது தொடர்ந்து ஃபெலுடா கதைகள் எழுதும் திட்டம் எதுவும் ரேயிடம் இல்லை. ஆனால், “டார்ஜீலிங்கில் ஒர் அபாயம்’ கதைக்கு வங்காள வாசகர்கள் மத்தியில் கிடைத்த உற்சாக வரவேற்பு, அவரை தொடர்ந்து எழுதத் தூண்டியது. அடுத்த வருடமே இரண்டாவது மற்றும் மூன்றாவது ஃபெலுடா கதைகளான “மகாராஜாவின் மோதிரம்’, ‘கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்’ ஆகியவற்றை எழுதினார். அடுத்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் 1970இல் தொடங்கி 1992 வரைக்கும், வருஷம் ஒன்று அல்லது இரண்டு வீதம் விடாமல் எல்லா வருடங்களும் எழுதியிருக்கிறார். 1992 ஏப்ரல் 23இல் ரே காலமானார். கடைசி ஃபெலுடாக் கதையான “மாய உலகின் மர்மம்’ அவரது மறைவுக்குப் பிறகு 1995ஆம் வருடம் வெளியானது.
‘சந்தேஷ்’ இதழில் இக்கதைகள் வெளியான போது அதற்கான படங்களையும் சத்யஜித் ரே வரைந்துள்ளார். ரே அடிப்படையில் ஒரு ஓவியர்; சாந்தி நிகேதன் கலாபவனத்தில் ஓவியத்தை முறையாகப் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களும் கிழக்கு பதிப்பகம் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளன.
சிறுவயது முதல் துப்பறியும் கதைகள் மீது சத்யஜித் ரேக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்திருக்கிறது. பள்ளிக்கூட நாட்களிலேயே ஹெர்லக் ஹோம்ஸ் கதைகள் முழுவதும் படித்து முடித்திருக்கிறார். ஒருவகையில் இந்த ஆர்வம்தான் வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என்று அழைக்கப்பட்ட ஃபெலுடா கதாபத்திரத்தை உருவாக்கவும் காரணமாக இருந்திருக்கும். துப்பறியும் நிபுணரான ஃபெலுடாவும், அவரது ஒன்றுவிட்ட சகோதரன் தபேஷும், துப்பறியும் கதை எழுத்தாளர் லால்மோகன் பாபுவும் தான் இக்கதைகளின் பிரதான பாத்திரங்கள். இதில் தபேஷ் சொல்வது போல் எல்லாக் கதைகளையும் ரே எழுதியுள்ளார். அசாத்திய புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை வீச்சு, குழப்பமான மர்ம முடிச்சுகளையும் திறம்பட அவிழ்க்கும் திறன் ஆகியவற்றுடன் மெல்லிய நகைச்சுவை உணர்வும் கொண்டவராக ஃபெலுடா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார், ரே. ஃபெலுடாவின் ஒவ்வொரு செயலும் தபேஷுக்கு வியப்பூட்டுகின்றன. இந்த வியப்பு, படிக்கும் நம்மையும் பற்றிக்கொள்கிறது என்பதுதான் ரே எழுத்தின் சாகசம்.
சத்யஜித் ரேயின் முக்கியமான சிறுவர் திரைப்படங்களான ‘ஜொய் பாபா ஃபெலுநாத்’, ‘சோனார் கெல்லா’ ஆகியவை முறையே ‘பிள்ளையாருக்குப் பின்னே ஒரு மர்மம்’, ‘தங்கக் கோட்டை’ ஆகிய ஃபெலுடா கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவைதான். ரேயின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் சந்தீப் ரேயும் சில ஃபெலுடா கதைகளை திரைப்படமாக எடுத்துள்ளார்.
சிறுவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும்தான் ஃபெலுடா வரிசை கதைகளை சத்யஜித் ரே எழுதியுள்ளார். என்றாலும், பெரியவர்களும் இக்கதைகளை விரும்பிப் படிக்கிறார்கள்; படிக்கலாம். தமிழில் ‘க்ரைம் ஸ்டோரி’ என நமக்கு அறிமுகமாகி இருக்கும் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை ஃபெலுடா வீர சாகசக் கதைகள். சிறுவர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்கலாம்; அவ்வளவு நாகரிகம்!
No comments:
Post a Comment