12 August 2016

மொய் விருந்து

ஒரே நாளில் கோடீஸ்வரன்!

(புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.)


ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி, பொங்கல், பால் குடம், தீமிதி, கூழ் என மக்கள் கூட்டம் கூட்டமாய்த் திருவிழா மனநிலையில் இருப்பார்கள். அம்மன் கோவில்களில் கொடியேற்றப்படும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் நடைபெறும். ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் பெண்கள் அவ்வையாருக்கு விரதப் பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளி வரலட்சுமி விரதம். பெண்கள் 108, 1008 குத்து விளக்குப் பூஜைகள் செய்வார்கள். காவேரி பாயும் பகுதிகள் முழுக்க ஆடிப்பெருக்கு. இன்னொரு பக்கம், ஆடிப்பட்டம் தேடி விதை என்று விவசாயிகள் வெள்ளாமையைத் துவங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து பெண்ணைத் தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். மேலும் ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, வியாபார நிறுவனங்கள் அறிவுக்கும் ஆடிக் கழிவு என மாதம் முழுக்கக் கொண்டாட்டங்கள்தான். இவைகளுடன் இன்னொரு கொண்டாட்டமும் சேர தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஆடி இன்னும் விசேஷமானது. அது மொய் விருந்து!

ஆடி மாதம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சுற்று வந்ததுமே பேருந்து நிலையம், சாலை, கடை வீதி, கல்யாண மண்டபங்கள், கோயில்கள் என எங்கும் நிறைந்திருக்கும் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொள்கிறது. லோக்கல் பேருந்து பயணமே பிரமிப்பூட்டுகிறது. மடிப்பு கலையாத வெள்ளை வேட்டிச் சட்டையில் ஆண்கள் பக்கம் பளீர் என்றிருந்தால் பெண்கள் பக்கமோ பட்டு, கழுத்தை மறைக்கும் தங்க நகைகள் என ஜொலிக்கிறது. இரு சக்கர வாகனம், கார் எனச் சாலையில் பறப்பவர்கள் நிலையும் இதுதான். எல்லோருமே மொய் விருந்துகளுக்குச் செல்பவர்கள் அல்லது சென்றுவிட்டு திரும்புபவர்கள். ஒவ்வொரு ஊரில் டிஜிட்டல் பேனர்களில் குடும்பம் குடும்பமாகச் சிரித்துக்கொண்டே விருந்துக்கு அழைக்கிறார்கள். ஆடி மாதம் தொடங்கும் இந்தக் கொண்டாட்டம் ஆவணி கடைசி வரைக்கும் தொடருமாம். ஜுலை கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் பாதி வரை.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லாமல் தஞ்சாவூர், புதுக்கோட்டைப் பகுதிகளுக்கு மட்டும் இந்த மொய் விருந்து கொண்டாட்டம் எப்படி வந்தது?

வங்கிகள் போன்ற வருமானத்தைச் சேமித்து வைப்பதற்கான முறைகள் இல்லாத பழங்காலங்களில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் வந்தால், அதனை நடத்த ஒரு குடும்பத்துக்குத் திடீரென அதிகப் பணம் தேவைப்படும். அப்போது, அவர்களது நெருக்கடியை ஊரும் உறவும் பகிர்ந்துகொள்ளும் ஒரு பகுதியாகத்தான் மொய் பழக்கம் தொடங்கியிருக்க வேண்டும்.

கல்யாணம், காது குத்து, சடங்கு, புதுமனை புகுவிழா எனக் குடும்ப வைபவங்களுக்கு மொய் செய்யும் பழக்கம் எல்லா இடங்களிலும் போல்தான் தஞ்சை, புதுக்கோட்டைப் பகுதியிலும் தொடக்கக் காலங்களில் இருந்திருக்கிறது. ஆனால், இந்தப் பகுதி தண்ணீர் செழிப்புக் காரணமாக விவசாயம் நன்றாக நடந்து, மக்கள் கொஞ்சம் வசதி வாய்ப்புகளுடன் இருப்பதால், மற்ற பகுதிகளைவிட அதிகமாக மொய் செய்வார்கள். மற்றப் பகுதிகளில் 5, 10 ரூபாய் என மொய் இருந்த காலகட்டத்திலேயே இப்பகுதிகளில் 25, 50 ரூபாய்ச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படி, மொய் செய்த வகையிலேயே நம்முடைய பெரும்பணம் ஊரெல்லாம் விரவிக் கிடக்கும். இதனை எப்படித் திரும்ப வாங்குவது? நமது வீட்டில் கல்யாணம், காட்சி வரும்போது நாம் செய்த மொய்யை அவர்கள் திரும்பச் செய்வார்கள். ஆனால், நாம் செய்திருந்ததைவிட அவர்கள் குறைவாகச் செய்தால், அதனால் குழப்பங்கள் ஏற்படும். குறிப்பாக, இப்படி நிறையப் பேர் செய்துவிட்டால், ஒரு குடும்பம் லாபம் அடைந்து இன்னொரு குடும்பம் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுவிடும். மேலும், ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் என்றால், நான்கு பேர் கல்யாணத்துக்கும் 50 ரூபாய் வீதம் செய்திருப்போம். ஆக, நமது பணம் 200 ரூபாய் அந்தக் குடும்பத்திடம் நிற்கும். (இன்று குறைந்தது 500 ரூபாய் மொய் செய்கிறார்கள். அதன்படி இன்றைய கணக்கு 2000 ரூபாய்.) ஆனால், நமது வீட்டில் ஒரு நிகழ்ச்சி மட்டும் நடைபெற்று, அவர்கள் 50 ரூபாய் மட்டும் திரும்ப செய்துவிட்டாலும், நமக்கு நஷ்டம்தான். இதனால், ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையிலும், கால ஓட்டத்திலும் மொய் செய்வதில் சில வரைமுறைகள் உருவாகி வந்திருக்கிறது.

நமது பணம் மேற்படியார் கையில் சில வருடங்கள் இருந்திருக்கிறது. அந்தப் பணம் தொழிலோ விவசாயத்திலோ முதலீடு செய்து பெருகியிருக்க வேண்டிய பணம். எனவே, அதனைக் கணக்கிட்டு அவர்கள் திரும்பச் செய்யும்போது, செய்ததையே திரும்பச் செய்யாமல், அவர்கள் சக்திக்கு தகுந்தார்போல் கூடுதலாகச் செய்திருக்கிறார்கள். இதன் அடுத்தக்கட்டமாக, யார் யார் வீட்டுக்கு நாம் எவ்வளவு செய்திருக்கிறோம், நமக்கு யார் யார் எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை ஒரு சிறிய நோட்டுப் புத்தகங்களில் குறித்து வைத்து, அதனைப் பார்த்து, யாரும் பாதிப்படையாதபடி, மொய் செய்ததைக் கணக்கிட்டுத் திரும்பச் செய்யும் வழக்கம் உருவாகியிருக்கிறது. அதிலும் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டது.

ஒரு குடும்பத்துக்கு முதல்முறை மொய் செய்யும் போது புதுநடைஎனக் குறிப்பிட்டு கொடுப்பார்கள். அதே குடும்பத்தில் அடுத்து நிகழ்ச்சி வந்தால், ‘இரண்டாம் முறைஎன்று சொல்லிக் கொடுப்பார்கள்; இப்படி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் மூன்றாம் முறை, நான்காம் முறை எனச் சொல்லிக் கொடுப்பார்கள். மொய் கொடுத்தவர் வீட்டில் நிகழ்ச்சி வரும்போது, முதல் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள கடைசி நிகழ்ச்சி நோட்டை எடுத்து முதலில் பார்ப்பார்கள். பிறகு 3வது, 2வது, முதல் நிகழ்ச்சி என்ற வரிசையில் நோட்டைப் பார்ப்பார்கள். இதில் ஒரு நோட்டில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் அதற்கு முந்தைய நிகழ்ச்சி நோட்டுகளை எடுத்துப் பார்க்கமாட்டார்கள். எனவே, முதல் நிகழ்ச்சிக்கு செய்தால் அதன்பிறகு வரும் எல்லா நிகழ்ச்சிக்கும் தவறாமல் மொய் செய்துவிட வேண்டும். இடையில் ஒரு நிகழ்ச்சி தவறினால் அதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளுக்குச் செய்த மொய் திரும்ப வராது. எனவே, நம்மால் போக முடியாவிட்டாலும் ஒருவரிடம் கொடுத்துவிட வேண்டும்.

வேட்டைப்பெருமாள்
சரி, நாம் நிறையக் குடும்பங்களுக்கு மொய் செய்திருக்கிறோம். ஆனால், நம் வீட்டில் ஒரு வைபவமும் இல்லை என்றால் எப்படிச் செய்துள்ள மொய்களைத் திரும்பச் சேகரிப்பது. இந்நிலையில்தான் மொய் விருந்து என்னும் பழக்கம் உதயமானது. குழந்தைகள் இல்லாதவர் கல்யாணம், காதுகுத்து, சடங்கு என எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாது. இந்நிலையில் மொய் விருந்து நடத்துவார்கள். இவர்கள் யார், யாருக்கெல்லாம் மொய் செய்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோரையும் அந்த விருந்துக்கு அழைப்பார்கள். அவர்களும் தங்கள் வீட்டில் உள்ள நோட்டுகளைப் பார்த்து, கணக்கிட்டு, விருந்து சாப்பிட்டு மொய் செய்வார்கள். இதுதான் மொய் விருந்து உருவான கதை’’ என்கிறார், பேராவூரணி அருகேயுள்ள குன்றக்காடு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வேட்டைப்பெருமாள். இவர் மொய் விருந்துகளை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதும் திட்டத்துடன் கள ஆய்வுகள் செய்து வருகிறார்.

ஆனால் தற்போது, வீட்டில் விசேஷங்கள் நடத்திய குடும்பங்களும்கூட மொய் விருந்து நடத்துகிறார்கள். மேலும், ஒவ்வொரு குடும்பமும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியாக மொய் விருந்து நடத்துகிறது. இதனால், மொய் விருந்துகள் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே வந்து, இந்த வருடம் 1000 மொய் விருந்துகள் நடத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இதுவும் முந்தைய அனுபவங்கள் அடிப்படையில், மொய் கணக்கு வழக்குகள் மேலும் மேலும் முறைப்படுத்தப்பட்டு வந்ததன் ஒரு விளைவுதான்’’ என்கிறார், எழுத்தாளர் வேட்டைப் பெருமாள்.

பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. 1015 வருடங்களுக்குப் பின்னால் மொய் திரும்பிச் செய்யப்படும்போது அந்தப் பணத்தின் மதிப்பு மிகவும் இறங்கியிருக்கும். மேலும், நீண்ட காலங்கள் கணக்கு வழக்குகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கவும் முடியாது. எனவே, நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கொடுக்கல் வாங்கலை சரிசெய்துவிடுவோம் என்றாகிவிட்டது. அதாவது, நான்கு வருடத்துக்குள் நம் வீட்டில் நிகழ்ச்சி எதுவும் இல்லையென்றால் மொய் விருந்து நடத்துவார்கள். பிறகு அது, குடும்ப நிகழ்ச்சிகளுக்குச் செய்த மொய்யை திரும்ப வாங்குவதற்கு மட்டுமல்லாமல், மொய் விருந்துக்குச் செய்த மொய்யை திரும்ப வாங்குவதற்காகவும் என இப்போது எல்லாக் குடும்பத்தினரும் நான்கு வருடத்துக்கு ஒருமுறை எதாவது ஒரு குடும்ப நிகழ்ச்சி அல்லது மொய் விருந்து நடத்துகிறார்கள்.

பொதுவாக மொய் விருந்துகள் ஆடி, ஆவணி மாதங்களில்தான் நடைபெறும். இந்த நான்கு வருடங்களுக்குள் குடும்ப வைபவம் இருப்பவர்கள் மட்டும் இந்த மாதங்களில் அல்லாமல் குடும்ப வைபவத்தோடு சேர்த்து மொய் விருந்தையும் நடத்துவார்கள். அழைப்பிதழில் அது குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, கல்யாணத்துடன் நடத்தப்படும் மொய்விருந்து என்றால், ‘விருந்துண்டு மொய் பெய்து மணமக்களை வாழ்த்த வேண்டுகிறோம்என அழைப்பிதழில் போட்டிருப்பார்கள்’’ என்கிறார் வேட்டைப் பெருமாள்.

பழங்காலங்களில் மொய்க்கு இருந்தது போலவே, இப்போது மொய் விருந்துக்கும் சில வரைமுறைகள் இருக்கிறது. உதாரணமாக, 2010ஆம் ஆண்டு நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் மொய் செய்திருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 2011ஆம் ஆண்டு நீங்கள் நடத்தும் மொய் விருந்தில் அவர் திரும்ப 1000 ரூபாய் மொய் செய்துவிட்டு, மேற்படியார் புதுநடை எனக் குறிப்பிட்டு 250 ரூபாயோ அல்லது அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு கூடுதலோ செய்வார். 2011இல் நடத்தாமல் 2012ஆம் ஆண்டு நீங்கள் மொய் விருந்து நடத்தினால், 1000 ரூபாய் செய்துவிட்டு, மேற்படியார் புதுநடை 500 செய்வார். இப்படியே அதிகரித்து நான்காவது வருடம் மேற்படியார் புதுநடை 1000 ரூபாய் ஆகிவிடும். இதில் ஒவ்வொரு முறையும் மேற்படியார் புதுநடை அவரவர் சக்திக்குத் தகுந்தார் போல் அதிகமாக இருக்கும்.

இந்த மொய் வரிசையில் இருந்து விலக வேண்டும் என்று விரும்பினால், திரும்பச் செய்யும்போது மொத்தமாக 1100 செய்துவிட வேண்டும். மேற்படியார் புதுநடைஎனத் தனியாகக் குறிப்பிடவில்லை என்றால் மொய்யில் இருந்து முறித்துக்கொண்டு விட்டார் எனப் புரிந்துகொள்வார்கள். அதுபோல் மொய்யில் இருந்து விலக விரும்புகிறீர்கள். ஆனால், நீங்கள் செய்துள்ள மொய்கள் நிறைய இன்னும் பிரியாமல் இருக்கிறது என்றால், ஒரு மொய் விருந்து நடத்தி, அழைப்பிதழில், ‘போட்ட மொய் மட்டும் வாங்கப்படும்; புது மொய் தவிர்க்கவும்எனக் குறிப்பிட வேண்டும். நாம் சந்திந்த ஒவ்வொருவர் வீட்டிலும் பெரிய பெரிய பேரேடுகளில் மொய் கணக்கு வழக்குகள் குறித்து வைக்கப்பட்டுள்ளது. அனேகமாக எல்லாக் குடும்பங்களிலும் இப்படிப்பட்ட பேரேடுகள் இருக்கும் என்கிறார்கள்.

சரி, இவ்வளவு முறையான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் இருக்கிறதே, எல்லோரும் சரியாகப் பின்பற்றுவார்களா?

பெரும்பாலும் குழப்பங்கள் நடப்பதில்லை. முறைகளைப் பின்பற்றவில்லை என்றால் நாணயம் இல்லாத ஆள் என்று பெயராகிவிடும். நான்கு வருடம் என்னுடைய 1000 ரூபாயை வைத்துக்கொண்டு, வெட்கமே இல்லாமல் அதனையே திரும்பச் செய்துவிட்டுப் போகிறான் என்பார்கள். தங்கள் நாணயத்தைக் கெடுத்துக்கொள்ள யாரும் விரும்புவதில்லை’’ என்கிறார், திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, கீழாத்தூர், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், வடகாடு, சேந்தன்குடி மற்றும் இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்கள் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, ஆவணம், நெடுவாசல், வேம்பங்குடி, பைங்கால், குருவிக்கரம்பை, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மொய்விருந்து அதிகமாக நடத்தப்படுகிறது. இன்று மொய் குறைந்தது 500 ரூபாய் என்று ஆகிவிட்டது. அதற்கும் குறைவாகச் செய்தால் கெளரவக் குறைச்சல். இன்னார் இவ்வளவு செய்திருக்கிறாராம்’’ என மற்றவர்கள் பேச வேண்டும் என்பதற்காக 50 ஆயிரம், 1 லட்சம் ரூபாய் வரை மொய் செய்பவர்களும் இருக்கிறார்கள். 3 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வரைக்கும், அவரவர் செய்திருக்கும் சக்திக்கு தகுந்தார்போல் மொய் பிரிந்திருக்கிறது. நமக்கு எவ்வளவு பிரிந்திருக்கிறதோ அதனை அடுத்த நான்கு வருடத்துக்குள் திரும்பச் செய்ய வேண்டிருக்கும் என்பதால் அதனைக் கணக்கிட்டு தயாராக இருக்கிறார்கள். 3 கோடி ரூபாய் பிரிந்த ஒரு குடும்பம், அடுத்த நான்கு வருடமும் ஆடி, ஆவணி மாதங்களில் 2550 லட்சம் ரூபாய் வரைக்கும் திரும்ப மொய் செய்ய வேண்டியதிருக்கும்.

தமிழகம் முழுக்க, ஆரம்பக் காலங்களில் அந்தந்தக் கிராமங்களில் பந்தல்போட்டுக் கல்யாணம், காட்சி, காதுகுத்து என நடந்த குடும்ப வைபவங்கள் இப்போது பக்கத்து நகரங்களிலுள்ள கல்யாண மண்டங்களுக்கு நகர்ந்துவிட்டது போல், இப்பகுதியில் மொய் விருந்துகளும் கிராமங்களில் இருந்து பக்கத்து நகர மண்டபங்களுக்குச் சென்றுவிட்டது. மொய் விருந்து நடத்துவதற்கு என்றே தனியாக அரங்கங்களும் கட்டப்பட்டுள்ளன. வடகாடு, கீழாத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. ஒரு குடும்பம் தனியாக நடத்துவது மட்டுமல்லாமல், செலவுகளைக் குறைப்பதற்காக 45 குடும்பங்கள் சேர்ந்தும் மொய் விருந்து நடத்துகிறார்கள்.

மொய் பணத்தைப் போடும் குவளைச் சட்டியில் பூ, புதுத் துண்டு சுற்றி, கையில் ஒரு பேரேடுடன் மொய் பிரிப்பவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பெரிய குடும்பங்களில், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், ஒரே அரங்கத்தில் 1012 இடங்களில் உட்கார்ந்து மொய் பிரிக்கிறார்கள். அரங்கத்தின் வாசலில் விருந்து நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நின்று வரவேற்கிறார்கள். மொய் செய்ய வருபவர்களில் சிலர் கையில் நீளமான ஒரு தாளில் யாருக்கு எவ்வளவு திரும்பச் செய்ய வேண்டும் எனக் குறித்து வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒரே நாளில் பல இடங்களில் நடக்கும் விருந்துகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பதால், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, வீட்டிலுள்ள பழைய பேரேடுகளைப் பார்த்து, பட்டியலைத் தாயாரித்துவிட்டுதான் புறப்படுவார்களாம்.

“மொய் விருந்து என்றாலே அசைவ சாப்பாடுதான். குடும்ப நிகழ்ச்சிகளில் அசைவம் போடுவதில்லை என்பதால், கல்யாணத்தோடு சேர்த்து நடத்தப்படும் மொய் விருந்துகளில் மட்டும் சைவம் போடப்படும். ஆனால், சைவச் சாப்பாடு மொய் விருந்து என்றால் கொஞ்சம் ஆர்வக் குறைவாகத்தான் இருக்கும்’’ என்கிறார், திருச்சிற்றம்பலம் மாரிமுத்து.

காலையில் 10 மணி முதல் 1 மணி வரைதான் மொய் விருந்துகள் நடைபெறுகிறது. எனவே, மொய் செய்ய வேண்டியவர்கள் அதற்குள் வந்து செய்துவிட வேண்டும். 1 மணிக்கு கூட்டிக் கழித்து எவ்வளவு மொய் பிரிந்திருக்கிறது என்று நெருக்கமானவர்களுக்குத் தெரிவித்து விடுகிறார்கள். 1 மணிக்குப் பிறகு செய்யப்படும் மொய்கள் தனிப் பேரேடில் பின்வரவு எனக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், “அதற்கு மரியாதைக் குறைவு. மேலும், இதனைத் திரும்ப வாங்குவதும் சிக்கலுக்குள்ளாகும். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் இருந்து மொய் விருந்து அழைப்பு வந்தால், அவர்கள் எவ்வளவு மொய் செய்திருக்கிறார்கள் என, மொய் விருந்துப் பேரேடில்தான் பார்ப்பார்கள். அதில் பெயர் இல்லையென்றால் மட்டும்தான் பின்வரவு பேரேடை எடுத்துப் பார்ப்பார்கள். பின்வரவு பேரேடில் பெயர் இருந்தாலே, இவன் நமக்கு மரியாதை தரவில்லை; இவனுக்கு ஏன் நாம் மரியாதை தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும்’’ என்கிறார், வேட்டைப்பெருமாள்.

பத்திரிகை சரியாகச் சென்று கிடைக்காதவர்கள், தேதியை மறந்தவர்கள், பல்வேறு வேலைகள் காரணமாக வரமுடியாவர்கள், மொய் செய்யப் பணம் இல்லாதவர்கள் என எப்படியும் சில விடுபடல்கள் இருக்கும்தானே. இதனை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

இதற்காக மொய் விருந்து முடிந்தபிறகு வீட்டுக்குச் சென்று ஏற்கெனவே யார், யாருக்கு மொய் செய்திருக்கிறோம்; அவையெல்லாம் திரும்ப வந்துவிட்டதா எனப் பழைய பேரெடையும் புதுப் பேரேடையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்து, ‘மொய் பாக்கி லிஸ்ட்தயார் செய்வார்கள். பிறகு, ஓர் ஆளை நியமித்து அந்த வீடுகளில் சென்று வசூலிக்கச் சொல்லுவார்கள். இப்படி வரும் ஆள், “மொய் பாக்கி’’ என்று மட்டும்தான் சொல்லுவார். நாம் நமது வீட்டுப் பேரேட்டில் அவர்கள் எவ்வளவு செய்திருக்கிறார்கள் எனப் பார்த்து கொடுக்க வேண்டும். அப்போதும் கொடுக்க முடியாதவர்கள் இப்போது இல்லை பிறகு தருகிறேன் எனச் சொல்லுவார்கள். முடியும்போது கொடுத்துவிடலாம்.

ஆனால், 45 வருடங்களுக்கு மேலும் கொடுக்காமல் இருந்தால், சாலைகளில் வழியில் பார்க்கும்போது கேட்பார்கள். வருடங்கள் அதிகரிக்க, அதிகரிக்க மரியாதை குறையும். எனக்குத் தெரிந்த ஒருவர் 15 வருடங்களாகத் திரும்ப வராத மொய்யைக் கேட்டு, வாக்குவாதம் முற்றி, சண்டையாகி, காவல்துறை வழக்கு வரைக்கும் சென்றது. ஆனால், இப்படியாவது பெரும்பாலும் மிகக் குறைவுதான். குறிப்பிட்ட நபர் நெருக்கமானவராகவோ உறவினராகவோதான் இருப்பார் என்பதால், “அவன் நாணயம் அவ்வளவுதான்’’ என்று சொல்லி விட்டுவிடுவார்கள்.

இப்படி நாணயம் இல்லாத ஆள் என்று இப்பகுதியில் பெயரெடுத்தவர்கள் அதன்பிறகு வெளியே வட்டிக்கு கடன் வாங்குவது சிக்கலாகிவிடும். மொய்யைத் திரும்பச் செய்ய முடியாதவர், கடனை எப்படித் திரும்ப அடைப்பார் என யோசிப்பார்கள். எனவே, பெரும்பாலும் மொய்யை திரும்பச் செய்துவிடுவார்கள். செய்ய முடியாத சிலருக்கு உறவினர்கள், ஏதோ கஷ்டப்பட்டுவிட்டான், கைதூக்கிவிடுவோம் என உதவுவதும் நடக்கும்’’ என்கிறார் வேட்டைப்பெருமாள்.

குறிப்பிட்ட சாதியினர் என்றில்லாமல் எல்லாச் சாதியினரும் மொய் விருந்து நடத்துகிறார்கள். குடும்ப நிகழ்ச்சிக்கு உறவினர்கள் மட்டுமல்லாமல் நண்பர்கள், தெரிந்தவர்கள் என எல்லாச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருவதுபோல் மொய் விருந்துக்கும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அதுபோல் திரும்பச் செய்வதற்கும் வேறுவேறு சமூகத்தினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார்கள். இதில் இன்னொரு சுவாரசியம், முன்பின் தெரியாத ஒருவரும் மொய் விருந்து பற்றிக் கேள்விப்பட்டு வந்து மொய் செய்கிறார். அதுபோல் தெரியாதவர்களிடம் இருந்தும் ஒருவருக்கு மொய் விருந்து பத்திரிகைகள் வருகிறது. இப்போது சிலர் வாட்ஸ்அஃப்பிலும் அழைப்பிதழ்கள் அனுப்புகிறார்கள்.

“மொய் விருந்தில் பிரியும் பணம் நமது பணமல்ல; இதனைத் திரும்பச் செய்ய வேண்டும் என்ற தெளிவுடன், பணத்தைச் சரியாகக் கையாளக்கூடியவர்களுக்கு நிச்சயம் இது மிகப்பெரிய வாய்ப்புதான். வேறு எங்கும் இவ்வளவு பணம் வட்டியில்லாமல் கிடைக்காது. இப்படி மொய் விருந்தில் பிரியும் பணத்தைத் தொழில் முதலீடாக்கி மிகப்பெரிய அளவில் வளர்ந்த நிறையப் பேர்கள் இப்பகுதியில் இருக்கிறார்கள்.

மொய்ப் பணத்தைக் கொண்டு வீடு கட்டுவது, நிலம் வாங்கிப் போடுவது, வங்கியில் இருப்பு வைத்துக் கொள்வது என்று இறங்கிவிட்டால் பணம் முடங்கிப் போய்விடும். இதனால், தொடர்ந்து வருமானம் வரும் வகையில் முதலீடு செய்யலாம். நிலம் வாங்குவதாக இருந்தால் தென்னந் தோப்பு போன்ற நிரந்தர வருமானம் கிடைக்கும் நிலமாக இருந்தால் நல்லது’’ என்கிறார் மாரிமுத்து.

தற்போது இரண்டு மாதங்களுக்குள் 1000 மொய் விருந்துகள் நடப்பதாலும், ஒரே நாளில் நிறைய நிகழ்ச்சிகள் நடந்து, குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், அந்தந்தப் பகுதிகளில் மொய் விருந்து கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியில் மொய் விருந்தும் நடத்தும் தேதியை பதிவு செய்ய வேண்டும். சிலர் தேதி கிடைக்காது என்பதற்காக ஒரு வருடம் முன்பேகூடப் பதிவு செய்துவைத்து விடுகிறார்கள்.

கடந்த ஆண்டு (2014), அதிகபட்சமாக, ஆலங்குடி அருகே வடகாட்டில் கிருஷ்ண மூர்த்தி என்ற விவசாயி நடத்திய மொய் விருந்தில் இரண்டரை கோடி ரூபாய் மொய் பிரிந்துள்ளது. இந்த ஆண்டு (2015) நடைபெறும் 1000 மொய் விருந்துகளும் சேர்ந்து மொத்தம் 100 கோடி ரூபாய் பிரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்றவாரம், 19ஆம் தேதி, ஆலங்குடி அருகே கீழாத்தூரில் 12 பேர் மொய் விருந்து நடத்தினார்கள். இதில், அதே ஊரைச் சேர்ந்த எம். சுப்பிரமணியன் என்பவருக்கு ரூ. 17 லட்சம் வசூலானது. மற்றவர்களில் பி. ராஜா ரூ. 14.35 லட்சம், க. மருதன் ரூ.11.85 லட்சம், மு. கருணாகரன் ரூ. 12 லட்சம் என வசூலாகியுள்ளது. மொத்தமாக 12 பேருக்கும் சேர்த்து மட்டும் 1 கோடி ரூபாய்க்கு மேல் மொய் பிரிந்துள்ளது. மொய் விருந்தால் பந்தல்காரர், இலை வியாபாரி, அச்சகத்தார், அரிசி மண்டி, கறி கடை, ஜவுளிக்கடை உட்படப் பல நேரடித் தொழில்களும் சில மறைமுகத் தொழில்களும் பலனடைகிறது. அத்துடன் மொய்க் கணக்கு எழுதும் வகையில் ஏராளமான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 வரை கணக்கு எழுத 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள்.

பல குடும்பங்களின் பொருளாதார ஏற்றத்திற்கு உதவியிருப்பது போலவே, பலரது பொருளாதார வீழ்ச்சிக்கும் மொய் விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன என்றும் சொல்லப்படுகிறது. ஒரே நாளில் ஒரே ஊரில் பல மொய் விருந்துகள் நடைபெறும்போது, திருப்பிச் செய்யும் வகையில் ஒரே குடும்பத்திற்குப் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். அதற்காக வட்டிக்கு கடன் வாங்கிச் சிலர் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள் என்றும் சிலர் தற்கொலை வரைக்கும்கூடச் சென்றிருப்பதாகச் செய்திகள் வருகிறது.

ஆனால், “இவை எல்லாம் தவறான புரிதல்கள். மொய் விருந்து குறித்த ஊடகங்களின் தவறான சித்தரிப்பின் விளைவாக உருவானது. வங்கியில் வெறும் 25 ஆயிரம் கடன் வாங்கவே நடையாய் நடக்க வேண்டியுள்ளது. அதுவும், சொத்தையோ நகையையோ அடமானம் வைத்துதான் வாங்க முடியும். மேலும் வங்கி கடன், கிரிடிட் கார்ட் கடன் போன்றவை குண்டர்கள் வைத்து வசூலிக்கப்படுகிறது. அதனால், மனம் ஒடிந்து தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். அப்படியெதும் மொய் விருந்தில் நடப்பதில்லை. பெரும்பாலும் உறவினர்கள், தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பதால் அவர் நாணயம் அவ்வளவுதான் என விட்டுவிடுவார்கள்.

ஏழை, எளியவர்களுக்கு மொத்தமாக 23 லட்சங்கள் பணத்தைப் பார்ப்பது கஷ்டம். சிறுக சிறுக இவ்வளவு பணத்தைச் சேமிப்பதற்கான வழிமுறைகளும் அவர்களிடம் இல்லை. பங்குச் சந்தை, யூலிப், மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் போன்றவை உட்பட்ட எத்தனை முதலீடுகளில் போட்ட பணத்துக்கு உத்தரவாதம் உள்ளது? மொய் விருந்தில் அந்தப் பிரச்சினை இல்லை. இப்பகுதி மக்கள் தங்களது வருமானத்தின் ஒரு பகுதியைச் சிறுகச் சிறுக பலருக்கும் மொய்யாக எழுதுகிறார்கள். இவர்கள் மொய் விருந்து வைக்கும்போது அது மொத்தமாகத் திரும்பக் கிடைக்கிறது.

இதுபோல் சின்னக் கவுண்டர்போன்ற திரைப்படங்களின் தவறான சித்தரிப்பு காரணமாகவும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கை கொடுப்பதற்காக நடத்தப்படுவதுதான் மொய் விருந்து என்ற தவறான அபிப்ராயமும், மற்ற பகுதியினர் மத்தியில் உள்ளது. அது உண்மையல்ல. மொய் விருந்து இப்பகுதி மக்கள் மத்தியில் உயிரோடும் உணர்வோடும் அன்றாட வாழ்வோடும் கலந்த பாரம்பரிய பழக்கம்; கலாசாரப் பரிவர்த்தனை. மொய் கொடுக்கல் வாங்கல் ஒருவகையில் உறவும் நட்பும் நீடிக்க உதவுகிறது’’ என்கிறார் வேட்டைப்பெருமாள்.


தமிழகத்துக்குள் நமக்கு தெரியாமல்தான் எவ்வளவு ஆச்சர்யங்கள்!

1 comment:

KRISH.RAMADAS said...

வாழ்த்துக்கள் நண்பர். அருமையான தகவல் திரட்டு. குளித்தலை பகுதியில் இறப்பின் போது கூட ஒரு அண்டா வைத்து அதில் உரவினர்கள் மொய் செய்வதாக ஒரு புத்தகத்தில் படித்ததாக நினைவு. இந்த தொகை அவர்களின் சிரமத்தை குறைக்கும் என்பதற்காகவாம்.

உங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி.

WWW.FACE BOOK.COM/SITRITHAZHGALULAGAM
WWW.FACE BOOK.COM/krish.krdas