இன்னும்
எத்தனை ஆண்டுகள்?
மனிதன் வாழ முடியாத நிலையை நோக்கி நகரும் பூமி!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்
வரை தென்மேற்கு பருவ மழை காலம். ஆனால், ஜூலை மாதம் ஆகியும் சென்னையில் வெயில் தகிக்கிறது.
கோடை காலம் நீண்டுள்ளதுடன் வெப்பத்தின் அளவும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தின்
தென் மாவட்டங்களிலோ வழக்கத்துக்கு முன்பே தென்மேற்கு பருவமழைத் தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி
மாவட்டத்தில் எப்போதையும்விட இந்த வருடம் அதிக மழை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள்
நிரம்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 700 கி.மீ.க்குள் எவ்வளவு வித்தியாசம்? தமிழகம் மட்டுமல்ல
உலகம் முழுக்க இதுதான் நிலை. பருவநிலை தாறுமாறாகச் சீர்குலைந்து கிடக்கிறது. என்ன செய்வது
எனத் திகைத்துத் தடுமாறுகின்றன நாடுகள்!
ஒரு பக்கம் வறட்சியின் கோரப்பிடி, இன்னொரு பக்கம் வரலாறு
காணாத மழை. பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் பருவம் தவறிப் பெய்கிறது மழை. இதனால்
எப்போது வெள்ளாமையைத் தொடங்குவது என்பதைக் கணிக்க முடியாமல் திணறுகிறார்கள் விவசாயிகள்.
கடும் வெயில் காரணமாக இரவாகியும் குறையாமல் இருக்கிறது அனல் காற்று. இந்த வருடம் இந்தியாவில்
கடும் வெயிலில் 2000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளார்கள். தற்போது பாகிஸ்தானில்
அடிக்கும் வெயிலில் பலி எண்ணிக்கை 1300-ஐ கடந்துவிட்டது. என்ன ஆனது பூமிக்கு? பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள
இந்தக் கிரகிக்க முடியாத திடீர் திடீர் மாற்றங்களுக்கு என்ன காரணம்? இந்நிலை தொடர்ந்து
நீடிக்குமா?
“கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலையில் ஏற்பட்டுள்ள
இந்த மாற்றங்களுக்குப் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதுதான் முக்கியக் காரணம்.
இது, வெயில் மற்றும் மழை அளவுகளை தாறுமாறாக மாற்றமடையச் செய்திருப்பதுடன் மோசமான பாதிப்புகளையும்
ஏற்படுத்துகிறது’’ என்கிறார், அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும்
தக அமைவு ஆராய்ச்சி மையப் பேராசிரியர் ராமச்சந்திரன்.
![]() |
பேரா. ராமச்சந்திரன் |
பூமியின் வெப்பநிலை இப்படி அதிகரித்திருப்பதற்குக்
காற்று வெளியில் நாம் ஏற்படுத்திருக்கும் மாசுக்கள்தான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘’பூமியை வட்டமாகக் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர்வை
போலக் காற்றுவெளி மண்டலம் சுற்றியிருக்கிறது. இதனை விஞ்ஞானிகள் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்
என்கிறார்கள். பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பதால் மட்டுமல்ல குறைந்தாலும் பிரச்சினைதான்.
பூமியைச் சுற்றியிருக்கும் கோள்களில் மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் குளிர் உள்ளது. இந்தக்
குளிரில் இருந்தால் நம் நிலை என்னவாகும்? கருகி கருவாடு ஆகிவிடுவோம். மற்ற கோள்களில்
உள்ளது போல் மைனஸ் டிகிரியில் குளிர் செல்லாமல், பூமியின் வெப்ப அளவை சமச்சீராக வைத்திருப்பதில்,
கிரீன் கவுஸ் வாயுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
பூமி, தன் மீது விழும் சூரிய வெப்பத்தை மீண்டும்
விண்வெளிக்கே திருப்பி அனுப்பும். இது கிரீன் ஹவுஸ் வாயு மண்டலம் வழியாக விண்வெளிக்குக்
கடத்தப்படும். இப்படிக் கடத்தப்பட்டு விட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. இது நடந்தால்
சாயங்காலம் ஆனதும் வெப்பக் காற்று குறைந்துவிடும். இரவு 9 – 10 மணி ஆகும்போது
குளிரத் தொடங்கிவிடும். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே 11 மணிக்கு போர்வையைப் போர்த்திக்கொண்டு
தூங்கியவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று நிலமை தலைகீழாகிவிட்டது.
15 டிகிரி செல்சியஸ் என்ற சராசரி வெப்ப நிலையைவிட
இன்று 27 சதவிகிதம் அதிகமாகிவிட்டது. நடு இரவு ஆகியும் வெப்பச் சலனம் உள்ளதற்கு இதுதான்
காரணம். அதிகரித்துள்ள வெப்பத்தை ஏசி போன்ற கண்டுபிடிப்புகள் மூலம் மனிதன் சமாளிக்கிறான்.
விலங்குகள், தாவரங்கள்
உட்பட்ட மற்ற உயிரினங்கள் என்ன செய்யும்? காட்டில் யானைகள் ஈர மண்ணை வாரி தன் மீதே
கொட்டுகிறது. ஆனால், இப்படி யானைகளால் எத்தனை வருடங்கள் சமாளிக்க முடியும்? இப்போதே பல உயிரினங்களும்
தாவரங்களும் வெப்பத்தைத் தாக்குபிடிக்க முடியாமல் அழிந்துவிட்டன. பல அழிந்து வருகின்றன’’
என்கிறார் பேரா. ராமச்சந்திரன்.
1800ஆம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியில்
இருந்தே கிரீன் ஹவுஸ் வாயுக்களில் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்றாலும் 1990க்குப்
பிறகுதான் இதன் ஆபத்தை விஞ்ஞானிகள் உணர்ந்தார்கள். அப்போது தொடங்கி இது சம்பந்தமான
ஆய்வுகள் உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன. பூமியின் வெப்பநிலை அதிகமாவதற்குப் பெருமளவு
காரணம் நாம் பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி உட்பட்ட எரிசக்தியும் காடுகள்
அழிக்கப்படுவதும்தான் என்பது விஞ்ஞானிகள் முடிவு.
நிலக்கரி, பெட்ரோல் எரிபொருள்கள் எரிக்கப்படும் போது
கரியமில வாயு வெளியாகிறது. காடுகளை அழிக்கும் போது மித்தேன் வாயுக்கள் வெளியாகிறது.
நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களை அதிகளவில் பயன்படுத்தும் போது நைட்ரைட் ஆக்சைட்
போன்ற வாயுக்கள் உற்பத்தியாகிறது. இப்படி இயற்கைக்கு மாறாக அதிக அளவு உற்பத்தியாகும்
கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், குளோரா புளோரா கார்பன் போன்ற வெப்ப வாயுக்கள்* காற்று
வளி மண்டலத்தில் அதிகமாகி பூமி திருப்பி அனுப்பும் வெப்பத்தைத் தடுக்கின்றன.
இந்த நான்கு வாயுகளை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுத்துவது
என்பதுதான் இன்று நம் முன் உள்ள சவால். இன்றைய நிலையில் உலகின் ஒட்டு மொத்த எரிசக்தித்
தேவை நிலக்கரி, பெட்ரோலியப்
பொருள்கள் மற்றும் எரிவாயுக்களின் மூலமே நிவர்த்திச் செய்யப்படுகிறது. இந்த மூன்றின்
பயன்பாடும் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பதுதான் நிஜம்.
ஆனாலும், இவற்றை
இப்பொழுது பயன்படுத்துவது போலத் தொடர்ந்தும் நாம் பயன்படுத்தினால் உலகின் எதிர்காலமே
கேள்விக்குள்ளாகும் என்பதும் நிதர்சனம்.
பூமி சூடாவதன் பாதிப்புக்கள் முதலில் கடலில் தெரிந்தது.
பூமியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மொத்தத்தையும் மதிப்பீடு
செய்துள்ள ஆய்வு ஒன்று, பூமி வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக, தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியன்
டன்கள் எடையளவுக்கு இக்கண்டம் பனிக்கட்டியை இழந்துவருகிறது என்று தெரிவித்துள்ளது.
ஒரு சில நூற்றாண்டுகளில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
“அது நிகழ்ந்தால் உலகத்தில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துவிடும்’’
என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தெரிவித்திருந்தது. இதனால், சிறு தீவுகளும் கடற்கரையை
ஒட்டிய நகரங்களும் நீரில் மூழ்கும். வெப்பமடையும் போது தண்ணீர் விரிவடையும் தன்மை கொண்டது.
அதனாலும் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும்.
‘’பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு, கடல் மட்டம் உயர்வது
எல்லாம் இணைந்து பருவநிலைகளில் தாறுமாறான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கடல் நீர் மட்டம்
அதிகரிக்கும் போது அவற்றில் ஏற்படும் புயல்களின் தீவிரமும் அதிகரிக்கிறது. தென்மேற்கு
பருவமழை ஜூன் - செப்டம்பர் மாதங்களிலும் வட மேற்கு பருவமழை அக்டோபர் - டிசம்பர் மாதங்களிலும்
ஆக 6 மாதங்களில் இந்தியாவில் மழை இருக்கும். இப்போது இந்தியாவில் சராசரி மழை அளவு குறையவில்லை.
ஆனால், 6 மாதங்களில்
55 – 60 நாட்களில்
விட்டுவிட்டுப் பெய்ய வேண்டிய மழை 25 நாட்களில் மொத்தத்தையும் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகிறது.
இதனால், அந்தத் தண்ணீரை உறிஞ்ச பூமிக்கு அவகாசம் இல்லாமல் மொத்தமும் கடலுக்குச் செல்கிறது’’ என்கிறார்
பேராசிரியர் ராமச்சந்திரன்.
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம்
15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு ஜூன்
3ஆம் தேதியே தொடங்கிவிட்டது. “இப்படிச் சரியான காலத்தில் மழை பெய்யாமல், பிந்தியோ முந்தியோ
பெய்வது விளைச்சலைப் பாதிப்பதுடன் பயிர் வளர்ச்சியையும் பாதித்துள்ளது. இதனால், களைப்பெருக்கம் அதிகமாகி
பராமரிப்புச் செலவு அதிகமாகும்’’ திண்டுக்கல் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை
வேளாண் பொறியாளர் ஜான் பிரிட்டோ ராஜ்.
பருவநிலை மாற்றத்தால், இந்தியாவில்
2030ஆம் ஆண்டு 10 சதவீதம் அளவுக்கு அரிசி உற்பத்தி குறையும்; அடுத்த 20 ஆண்டுகளில்
20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை இழக்க நேரிடும். இந்த நூற்றாண்டின் இறுதியில்
48 சதவீதம் உணவு தானிய உற்பத்தி குறையும். கடல் நீர் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் கடல்
பகுதியில் இருந்த மீன்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. எனவே, மீன்கள் கிடைப்பதும்
தடைபடும். இன்றைய சூழலில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்தால், 50 லட்சம் டன் கோதுமை
உற்பத்தியை இழக்க நேரிடும் என்கின்றன புள்ளிவிபரங்கள்.
‘’இந்நிலையில், பூமி வெப்பநிலை அதிகரிப்பு பற்றிச்
சும்மா பூச்சாண்டி காட்டுகிறார்கள் எனக் கிண்டல் செய்பர்களும் இருக்கிறார்கள். பூமி
வெப்பநிலை அதிகமாவது மெதுமெதுவாக நிகழும் ஒன்றே. அதன் பின்விளைவுகள் படிப்படியாக வேகமடையும்.
அதை நாம் உணரத் தலைப்படும்போது, எல்லாம் கையை மீறிச் சென்றுவிட்டிருக்கும் என்பதுதான்
நிதர்சனம். எனவே,
இதற்கு மாற்று வழிகளை நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இப்போது உடனடியாக
எரிசக்தி சிக்கனம்,
ஜீரோ கார்பன் எனர்ஜி, கார்பனை உட்கொள்ளுதல், குப்பைகள் மேலான்மை
ஆகிய நான்கு வழிகளையும் நாம் செய்தே ஆகவேண்டும்’’ என்கிறார் பேரா.
ராமச்சந்திரன்.
உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளும் பருவநிலை மாற்ற
விஷயத்தில் கவனம் செலுத்தி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட இலக்கைத்
தீர்மானித்துச் செயல்பட்டும் வருகின்றன. இந்தியா தனது பங்களிப்பாக, 2020ஆம் ஆண்டிற்குள்
எட்ட வேண்டிய இலக்கை அடைவதற்கான செயல் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள்
புதிப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மூலம் 1.75 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும்
350 மில்லியன் டன் கரியமில வாயு வெளியாவது கட்டுப்படுத்தப்படும். இது இந்தியா, உலகிற்கு அளிக்கக்கூடிய
மிகப்பெரிய பங்களிப்பாகும்.
‘’நாடுகள் பங்களிப்புடன் தனி மனிதர்களின் பங்களிப்பும்
இதில் முக்கியமானது’’ என்கிறது ஐ.நா. சபை. எனவே, நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியும் எனத் திட்டமிடுவோம்*; செயல்படுத்துவோம்.
பூமியின் எமனாகும் நான்கு வாயுக்கள்!
கார்பன்டை ஆக்சைட் எனப்படும் கரியமில வாயுதான் பூமியின்
வெப்பநிலையை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பூமியைச் சுற்றியுள்ள காற்று வளிமண்டலத்தில்
கார்பனின் சராசரி அளவு 274 – 374 பிபிஎம் (PPM). பத்து லட்சத்தில் 274 பங்கு. தொழிற்புரட்சிக்கு
முன்னர், அதாவது, 18ஆம் நூற்றாண்டின்
இறுதிக் காலம் வரை பூமியைச் சுற்றியிருந்த காற்று வளிமண்டலத்தில் கார்பனின் அளவு
280 பிபிஎம் மட்டுமே இருந்தது. இது 1957இல் 350 பிபிஎமாக அதிகரித்தது. 2000இல் 400
பிபிஎம் அளவானது. நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் போன்றவை எரிக்கப்படுவதால்
ஏற்படும் புகை காரணமாகத்தான் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைட் அளவு அதிகரிக்கிறது.
இதே நிலை தொடருமானால், 2100ஆம் ஆண்டில் காற்று மண்டலத்தில் கார்பனின் அளவு 540 - 970 பிபிஎம்
அளவு உயர்ந்துவிடும் எனக் கணிக்கப்படுகிறது. அந்நிலைக்குச் சென்றால் பூமிக்கு ஏற்படும்
அழிவை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கார்பன்டை ஆக்சைடை அடுத்து பூமி வெப்ப அளவு அதிகரிக்கக்
காரணமாக இருப்பது,
மீத்தேன். வெப்பத்தை உண்டாக்குவதில் இது கரியமிலவாயுவை விட இருமடங்கு
சக்தி கொண்டதாகும். தற்போது காற்று மண்டலத்தில் மீத்தேனின் அளவு 1783 பிபிஎம் உள்ளது.
இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிஎம் அதிகம். நிலக்கரி மற்றும்
பெட்ரோலியப் பொருட்கள் எரிக்கப்படுவதாலும் நெல் வயல்கள், கால்நடை கழிவுகள், அழுகிய நிலையில்
இருக்கின்ற குப்பைக் கூளங்கள் ஆகியவற்றில் இருந்தும் 60 சதவிகிதம் மீத்தேன் உற்பத்தி
ஆகின்றது. சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கிய ஈரமான நிலம், கரையான்கள் ஆகியவற்றில் இருந்து மீதமுள்ள
40 சதவிகிதம் உற்பத்தியாகின்றது. காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை மீத்தேன்
தங்கியிருக்கும்.
கரியமில வாயுவைவிட 200 மடங்கு வெப்பத்தை உண்டாக்கும்
தன்மையுடையது நைட்ரஸ் ஆக்சைட். தற்போது காற்று மண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடின் அளவு
318.6 பிபிஎம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட 9 பிபிஎம் அதிகம்.
வாயுமண்டலத்தில் இதன் ஆயுட்காலம் சுமார் 150 ஆண்டுகள்.
குளேரா புளோரா கார்பன் என்பது ஒரு வகையான வேதியியல்
பொருள். இதில் பலவகை உண்டு. இருப்பினும் CFC11, CFC12 ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குளிர்சாதனம்
மற்றும் இதன் சார்புடைய சாதனங்களில் இவை பயன்படுத்தப்படுகிறது. இவை காற்று மண்டலத்தில்
பல ஆண்டுகள் தங்கி கரியமில வாயுவைவிட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை உருவாக்கும் சக்தி
படைத்தது. மேலும்,
ஓசோன் படலத்தை அழித்து, புற ஊதாக் கதிர்களைப் பூமியின் மீது விழச்செய்து, உயிரினங்களுக்கு
அதிகப் பாதிப்பையும் உண்டாக்கக்கூடியவை.
நம்மால் முடியும்?
ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன் எரிகற்கள் விழுந்ததில்
பூமியின் 96 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. இன்று நாம் சினிமாவில் மட்டும்
பார்க்கும் டைனோசர்கள் அழிந்த்து அப்போதுதான். அதற்கடுத்து அதுபோன்ற ஒரு பெரும் அழிவுக்கான
அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது பூமியில் வெப்பநிலை அதிகரிப்பது. டைனோசர் கதை விரைவில்
யானைக்கு நிகழலாம் என்கிறார்கள். இதனைத் தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளில் நம்மால்
முடிந்த பங்களிப்புகள்.
- சிக்னலில் நிற்கும் போது வாகன என்ஜினை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் எரிப்பதை குறைக்கலாம்.
- தேவையில்லாமல் எரியும் லைட்களை ஆஃப் செய்வது, குறைவான வோல்டேஜ் LED லைட்களைப் பயன்படுத்துவது போன்றவை மூலம் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கலாம். தேவைப்படாத நேரங்களில் மின்சாதனங்களை அணைத்துவிட வேண்டும். இதனால், மின்சாரத் தயாரிப்புக்காக நிலக்கரி எரிக்கப்படுவது குறையும்.
- நம்மால் முடிந்தளவு மரங்கள் நடலாம். ஒரு மரம் 4 கிலோ கார்பன் டை ஆக்சைடை உட்கொள்ளும். 4 கிலோதானே என நினைக்காதீர்கள். 4 கிலோ கார்பன் டை ஆக்சைட் என்பது உங்கள் பெட்ரூமில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.
- மக்கும் குப்பை, மக்காத குப்பை எனக் குப்பையைப் பிரித்து மேலாண்மை செய்வதன் மூலம் மீத்தேன் வாயுக்கள் உற்பத்தியாவை தடுக்கலாம்.
- காகித பயன்பாட்டைக் குறையுங்கள். பிரிண்ட் அவுட் எடுக்கும்போது இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள்.
- காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், பயோ டீசல் போன்றவை பயன்பாட்டின் மூலம் ஜீரோ கார்பன் எனர்ஜிக்குப் பங்காற்றலாம். அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லும்போது சைக்கிளிலோ நடந்தோ செல்லலாம்.
- முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். கடைகளுக்குச் செல்லும் போது ஒரு பையுடன் செல்லுங்கள். பாலிதின் பொருட்கள் எரிக்கப்படும் போது உருவாகும் கார்பன் டை ஆக்சைட்தான் பூமியின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முதலிடம் பிடிக்கிறது.
(புதிய தலைமுறை, 16 ஜூலை 2015 இதழில் பிரசுரமானது)